Wednesday, 2 April 2008

கிழக்க்கின் தேர்தல் குறித்த அரசாங்கத்தின் கனவு சிதறடிக்கப்படும் என முஸ்லீம்காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்கு மகிந்த அரசாங்கம் திட்டமிடுகிறது. அதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நாடாளுமன்றப் பதவியை துறந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்திருக்கிறது. திருகோணமலையில் தானும், மட்டக்களப்பில் பசீர் சேகுதாவுத்தும், அம்பாறையில் ஹசன் அலியும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசே தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முதன்மையாக முன்னெடுக்கவுள்ளது. இந்த அரசாங்கத்தை நம்பிப் பலன் ஏதும் ஏற்படப் போவதில்லை. முஸ்லீம் காங்கிரசில் இருந்து சிலர் விலகிச் சென்றிருந்தாலும் அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குறுகிய அரசியல் லாபங்களுக்காக அரசுடன் இணைந்துள்ளவர்களை தோற்கடி முஸ்லீம்காங்கிரஸ் தயாராகியுள்ளது.
அரசாங்கம் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை தமக்கு சார்பானவர்களைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு முஸ்லீம்காங்கிரஸ் ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டாது. அரசாங்கத்தின் கனவு சிதறடிக்கப்படும்;. அதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்திருப்பதாக தெரிவித்தார்.

வன்னிப் பகுதிகளுக்கு கடந்த பெப்ரவரி, மார்ச் மாதங்களில் உணவு, மருந்துப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துள்ளது

வன்னிப் பகுதிகளுக்கு கடந்த பெப்ரவரி, மார்ச் மாதங்களில் உணவு, மருந்துப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பேரவல நிலையை எதிர்கொள்ளும் இக்கட்டுத் தோன்றியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.

சிறிலங்ககாவில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் முக்கிய அரச சார்பற்ற அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் குழு வெளியிட்டுள்ள தனது வாராந்த அறிக்கையிலேயே இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களாகப் பெய்த மழை காரணமாக 4,025 ஏக்கர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என மாவட்டத்தின் அரச அதிபர் தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவினது பாதுகாப்பு நிலைமை தொடர்ந்தும் பதற்றமானதாகக் காணப்படுகின்றது. வட, தென் முன்னரங்குகளில் தொடர்ந்தும் துப்பாக்கி மோதல்கள் இடம்பெறுகின்றன. முன்னரங்க நிலைகளிலிருந்து ஆண்டான்குளம், தண்ணீர்முறிப்புக்குளம் மற்றும் நாயாறு பகுதிகளை நோக்கி எறிகணை வீச்சும் இடம்பெறுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த ஐந்து வயதிற்கும் குறைவான 500 குழந்தைகள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்பட்டுள்ளமையை மருந்துவமனை பதிவு செய்துள்ளது. செப்ரெம்பர் 3ஆம் திகதியிலிருந்து உயிலங்குளம் சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளது. மாந்தையில் மக்கள் இடம்பெயர்வு மாந்தை மேற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலப் பகுதியில் பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 1,600 குடும்பங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக பதிவு செய்யப் பட்டுள்ளனர் என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக இவர்கள் கிராமங்களுக்கு உள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர். பெப்ரவரி மாதம் தொடக்கம் ஓமந்தை சோதனைச் சாவடியூடாக பொதுமக்களின் பாவனைக்காக உணவுகளை எடுத்துச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கவில்லையென மார்ச் 26ஆம் திகதி கிளிநொச்சி அரச அதிபர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் உணவுப் பற்றாக் குறை காணப்படுவதாக பலநோக்கு கூட் டுறவு சங்கங்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தின் வடக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள சில கிராமங்களில் கோதுமை மாவிற்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்துக்கு என வவுனியாவில் சேமித்து வைக்கப்பட்ட 2008இன் முதல் காலாண்டிற்கான மருந்துகளை அங்கு கொண்டு செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கவில்லையென மாவட்ட சுகாதார அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ நிலையங்களில் காணப்படும் மருந்து பற்றாக்குறை இதன் காரணமாக மேலும் மோசமடைந்துள்ளது. வவுனியாவில் நிலைமை தொடர்ந்தும் பதற்றமானதாகக் காணப்படுகின்றது. மார்ச் 25ஆம் திகதி மன்னாரிலிருந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த 15 குடும்பங்கள் வவுனியா வந்தன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து சிறிய எண்ணிக்கையான மக்கள் கடல் மூலம் வந்து சேர்ந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்புகளின் புதிய நடைமுறையின் படி மாந்தை மேற்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரும் களிமோட்டை பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட முகாமில் இதுவரை 119 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன. இதேவேளை பூந்தோட்டம், சிதம்பரபுர முகாமில் உள்ள மக்களுக்கு கடந்த மூன்று மாதகாலமாக உலர் உணவு வழங்கப்படவில்லை. பாதுகாப்பு நிலைவரம் காரணமாக சில இடங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்புகள் பணியை இடைநிறுத்தியுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத

பாகிஸ்தானில் இருந்து பெருமளவு ஆயுதங்களை இலங்கை கொள்வனவு செய்ய உள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பாரிய எதிர்த்தாக்குதலை அடுத்து இலங்கை அரசாங்கம் ஒரு தொகை ஆயுதங்களை பாகிஸ்தானிடம் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத்தளத் தகவல் ஒன்றின் அடிப்படையில், இலங்கை இராணுவம் பாகிஸ்தானில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்று 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகளை பெற்றுக் கொள்ள உள்ளது. இதனையடுத்து இது குறித்து இந்திய அரசாங்க தரப்பில் அக்கறை செலுத்தப்பட்டுள்ளதாக
துகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் 25 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 81 மில்லிமீற்றர், 120 மில்லிமீற்றர், மற்றும் 130 மில்லிமீற்றர் ரக ஆயுதங்களையும் இலங்கை இராணுவம் பாகிஸ்தானிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை; இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல்
சரத் பொன்சேகா, இந்த ஆயுதங்களை தருவிக்கும் கோரிக்கையை பாகிஸ்தானிய இராணுவ தளபதியிடம் விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேண்;டுகோளை ஏற்றுள்ள பாகிஸ்தான், அவசர உதவி என்ற அடிப்படையில், பாகிஸ்தானில், பல்வேறு இடங்களில் உள்ள ஆயுதக் களஞ்சியங்களில் இருந்து போர் கழிவு செய்யப்பட்ட ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா 1999 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆம் ஆண்டுவரையிலான பகுதியில் சுமார் 50 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களையே கொள்வனவு செய்திருந்தது எனினும் அந்த ஆயுத அளவு தற்சமயம் கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், இலங்கை அரசாங்கத்திற்கு மோட்டார் குண்டுகள், ரேடியோ சாதனங்கள், கைக்குண்டுகள், தாங்கிகள், மற்றும் கடற்படைக்கான ஆயுதங்களை வழமையாக விநியோகம் செய்து வருகிறது.

இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்த இலங்கை அரசாங்கம் அதிகளவு ஆயுதங்களை கொள்வனவு செய்து வருவது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இந்தியா, இது இலங்கையில் போர் தற்போதைக்கு நிறைடையும் சாத்தியங்களை காட்டவில்லை என்றும் இந்தியாவுக்கு நீண்ட கால அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது .

இந்தியா 1994ம் ஆண்டில் திட்டமிட்டிருந்த அணுகுண்டு சோதனை, அமெரிக்காவின் நிர்பந்தத்தால் கைவிடப்பட்டதாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, 1974ம் ஆண்டு உலகமே வியக்கும் வண்ணம் அணுகுண்டு சோதனையை நடத்தியது. அதன்பின்னர் 1994ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்த திட்ட மிட்டிருந்ததாகவும், ஆனால் அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக, இத்திட்டம் கைவிடப்பட்டதாக, அணுசக்தி விஞ்ஞானி திரு.சந்தானம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அணுகுண்டு சோதனை முயற்சி அமெரிக்க செயற்கைக் கோள்களால் உளவு பார்க்கப்பட்டதாக தெரிவித்துள்ள விஞ்ஞானி திரு.சந்தானம், உடனடியாக அப்போதைய அதிபர் கிளிண்டன், பிரதமர் நரசிம்மராவை தொடர்பு கொண்டு இந்த திட்டத்தை நிறுத்தும்படி நிர்பந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் திரு. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், 1998ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனைகள் இருமுறை நடத்தப்பட்டதாகவும் விஞ்ஞானி திரு.சந்தானம் கூறியுள்ளார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில் இந்த புதிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த அரசாங்கம், தமிழர்களுக்கு இழைத்துள்ள அநீதியை இதுவரை எந்த அரசாங்கமும் இழைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்குகிழக்கு மாகாணத்தின் கிழக்குப் பிராந்தியத்தை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தம்pழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிப்பது தொடர்பில், கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில்

இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கிழக்கு பிராந்தியத்தை சிங்களமயப்படுத்தும் தனது நோக்கத்தை அடைவதற்காக அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் நிதி சேகரிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் கிழக்கு பிராந்தியத்தின் பல பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள அநீதியை இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை என ஆர்.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ, தான் மேற்கொள்ளும் எந்தவொரு அரசியல், இராணுவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின் போதும் சிங்கள தேசியவாத கொள்ளையை பின்பற்றுவதன் மூலம், தன்னை ஒரு சிங்கள தேசியவாதியாக அடையாளபடுத்தியுள்ளார். இதன் காரணமாகவே அரசாங்கம், 19 வருடங்களாக இலங்கை அரசியல் அமைப்பில் உள்ள மாகாணசபை முறைமையை அமுல்படுத்தவதை தவிர்த்து வருகிறது. நிலத் தொடர்பிலான அதிகாரம், தனியான காவற்துறை அமைப்பு போன்ற எத்தகைய ஏற்படுகளுமின்றி வடகிழக்கு மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

இது வரலாற்று ரிதியாக ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் சிங்கள தேசியவாதத்தை வெளிப்படுத்துகிறதென சம்பந்தன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். வடக்குகிழக்கு பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறும் இராணுவ ரீதியிலான தாக்குதல்களில், பெருமளவில் தமிழ் மக்களும் முஸ்லிம்;களுமே பாதிக்கப்படுகின்றனர்.

இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்த மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் அந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலை, அரசாங்க கட்டிடங்கள் உள்ளிட்ட பெருமளவிலான பொதுச் சொத்துக்களும்; சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை வடக்குகிழக்கில் மாத்திரமின்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் படுகொலைகள், ஆட்கள் காணாமற் போதல்கள் என்பவை அதிகமாக இடம்பெறுகின்றன. ஒட்டுக் குழுக்களின் உதவியுடன் இராணுவம் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளினால், தமிழ் மக்கள் பயங்கரவாத மயப்படுத்தப்படுவதுடன், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்வைக்காது பயனற்ற அரசியல் ஏற்பாடுகளை செய்வதற்கு ராஜபக்ஷ அரசாங்கம், நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு துணை இராணுவ குழுவான கருணா குழுவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

தமிழ் பேசும் சமூகத்தின் நீதியான அரசியல் இலக்குகளை இல்லாதொழிப்பதே ராஜபக்ஷ அரசாங்கத்தின் தெளிவான கொள்கையாக இருந்து வருகிறது. இந்தநிலையிலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனது அடிப்படை அரசியற் கொள்கைகளை விட்டுக் கொடுக்க விரும்பாத நிலையில், கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பகிஷ்கரிப்பது என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஆர்.சம்பந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கனனேடிய அதிகாரப்பகிர்வு முறை இலங்கைக்கு பொருந்தும் என கனேடிய் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை அறிக்கையிடுவதற்கென ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகம் ஒன்றை அமைப்பதை தாம் வரவேற்பதாக கனடா தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் பன்மைத்துவம்’ என்ற தலைப்பில் கனேடிய அரசாங்கம் தேசிய சமாதான பேரவையுடன் இணைந்து நடத்திய பிராந்திய மாநாடு ஒன்று கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டபோதே கனேடிய உயர்ஸ்தானிகர் இந்த கருத்தை வெளியிட்டார். இலங்கையில் நிலவும் யுத்தநிலைமை தொடர்பில், அங்கு பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமைகளைப் பேணும் அமைப்புக்கள் மற்றும்; பொதுமக்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கனடா கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிடப்பட்டார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையின் படி, மோதல்கள் காரணமாக 2008 ம் ஆண்டின் முதல் 6 வாரங்களில் மாத்திரம் 180 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 270 பேர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக மனித உரிமைகளை மதித்து, அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினருக்கும் கனடா அழைப்பு விடுப்பதாக உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார். குறிப்பாக சிறுவர்கள் மீதான வன்முறைகளை தாம் எதிர்ப்பதாக தெரிவித்த அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பிள்ளையான் அமைப்பு ஆகியன தம்மிடமுள்ள சிறுவர்களை விடுவிக்க வேண்டும் என கனேடிய அரசாங்கம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். அதிகார பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தை அடைவதற்கான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அவர் கேரிக்கை விடுத்தார். பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு இடமளிக்கக்கூடிய கனடாவின் அரசியல்முறைமையை ஒத்த மாதிரியை இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொள்ளமுடியும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினாh.;

கிழக்கு முதலமைச்சர் பிள்ளையானா? கிஸ்புல்லாவா?

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பிள்ளையானுக்கு வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். ரீ.எம்.வீ.பீ கட்சியினர் கிழக்கில் அதிகளவு ஆசனங்களை பெற்றுக்கொண்டால் மாத்திரமே அது சாத்தியம் என்ற தொனியில், நேற்று அரசாங்க பக்கம் தாவிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

4 லட்சம் ரூபாய் இருக்கிறதா? நிலவுக்கு அஸ்தியை அனுப்பலாம்!!

நெருங்கிய உறவினர்கள் இறந்து விட்டால், அவர்களின் அஸ்தியை, இமய மலையில் தூவுவதும், புண்ணிய நதிகளில் கரைப்பதும் வழக்கம். இனி அஸ்தியை, நிலவுக்கே அனுப்பி வைக்கலாம். இதற்கு ரூ.4 லட்சம் கட்டணம். அமெரிக்காவில், ஹூஸ்டனில் செயல்பட்டு வருவது செலஸ்டிஸ் நிறுவனம். 14 நாடுகளை சேர்ந்த, நூற்றுக்கணக்கான முக்கிய நபர்களின் அஸ்தியை இந்நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. தற்போது, நிலவுக்கு அஸ்தியை அனுப்பும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளது. இது குறித்து, நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் சாபெர் கூறியதாவது: அஸ்தி உள்ள சிறு கலசங்கள்,”ரோபோ லேன்டர்’ என்ற கலத்தில் வைக்கப்பட்டு, ராக்கெட் மூலம் நிலவுக்கு எடுத்து செல்லப்படும். அங்கு “ரோபோ லேன்டர்’கள் தரை இறக்கப்படும். ஒரு நபரின் அஸ்தியை நிலவுக்கு எடுத்து செல்ல, ரூ.4 லட்சம் கட்டணம். அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு சார்லஸ் சாபெர் கூறினார்.

தமிழக ரயில்களையும் தடுப்போம்-கன்னட ரக்ஷன வேதிகே

Narayanagowda
பெங்களூர்: கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு ரயில்களை ஓட விடாமல் தடுப்போம் என கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா கூறியுள்ளார்.

கெளடாவின் தலைமையில் இலக்கியவாதிகள், கன்னட பிரமுகர்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசியவர்கள்,

கர்நாடகாவின் நிலம், நீர் போன்றவற்றை ஆக்ரமிக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. தமிழகத்திற்கு எதிராக முழு அளவில் போராட்டம் நடத்த கன்னட இயக்கத்தினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றனர்.

நாராயண கெளடா பேசுகையி்ல்,

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு ரயில்களை ஓட விட மாட்டோம். நெடுஞ்சாலைகள் பந்த் நடத்துவோம். தமிழர்களின் நிறுவனங்களை நடத்த விடாமல் தடுப்போம்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்னவென்றால், ஓகேனக்கல் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றார்.

கன்னட சேனை:

அதே போல குமார் தலைமையிலான கன்னட சேனை என்ற அமைப்பின் கூட்டத்தில், ஓகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகத்துக்கு சாதகமான தீர்வு ஏற்படும் வரை தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் வாகனங்களை தடுத்து நிறுத்தவும்,

மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடுவது என்றும் முடிவெடுத்துள்ளனர்.

Tuesday, 1 April 2008

ஜஹான்கிர், சுசாந்த, நிலந்த ஆகியோரே மூதூரில் தொண்டு நிறுவனப் பணியாளர்களர்களை சுட்டுக்கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திருகோணமலை மூதூர் எக்சன் பெய்ம் தன்னார்வுத் தொண்டு பணியாளர்கள் 17 பேரையும் இலங்கையின்; இரண்டு காவல்துறையினரும் ஒரு ஊர்காவல் படையினருமே சுட்டுக்கொன்றதாக மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஜஹான்கிர் என்ற ஊர்காவல் படை சிப்பாயும், சுசாந்த மற்றும் நிலந்த ஆகிய காவல்துறையினருமே இந்த 17 பணியாளர்களையும் சுட்டுக்கொன்றதாக மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆண்டு 4 ஆம் திகதி இடம்பெற்ற இந்தக் கொலைகள் தொடர்பிலான தகவல்களை மூடி மறைக்குமாறு கொழும்பில் உள்ள உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மூதூரில் மோதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர், குறித்த 17 தன்னார்வு பணியாளர்களும் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தபோதும் அவர்களின் உயரதிகாரிகளின் உத்தரவுப்படி பணியாளர்கள் அங்கேயே தங்கியிருந்தனர்.
இந்தநிலையில் மோதல்கள் முடிவடைந்த பின்னர் காவல்துறையின் உயரதிகாரிகளான சரத் முல்லேரியாவ, மற்றும் சந்தன சேனாநாயக்க ஆகியோர் கொலையாளிகளிற்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். அதில் விசேட படையினருடன் அக்சன் பெய்ம் நிறுவன வளாகத்திற்குச் சென்று தமிழீழ விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் எனப் பார்க்குமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த கொலையாளிகள் தமது உயரதிகாரிகளிடம் சென்று பணியாளர்கள் அனைவரும் தமிழர்கள் எனப் பதிலளித்துள்ளனர்;. இதனையடுத்து கொமாண்டோக்கள் எக்சன் பெய்ம் நிறுவன வளாகத்தைச் சுற்றிவளைத்த நிலையில், பணியாளர்கள் 17 பேரும் காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டனர். இதன்போது தாம் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்றும் தமது தலைமையகம் கேட்டுக்கொண்டமைக்கு அமையவே தாம் மூதூர் அலுவலகத்தில் தங்கியிருந்ததாகவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் மேலும் அவர்கள் பதிலளிக்கவிடாமல் தடுத்த ஜஹான்கிர், சுசாந்த மற்றும் நிலந்த ஆகியோர் இவர்கள் அனைவரும் புலிகள் எனச் சத்தமிட்டனர். இதன் பின்னர் அவர்கள் மீது குறித்த மூன்று கொலையாளிகளும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன் பின்னர் மாலை 5 மணியளவில் காவல்துறை மையத்திற்குத் திரும்பிய குறித்த இரண்டு காவல்துறையினருக்கும் ஊர்காவல் படை சிப்பாய்க்கும், உயர் காவல்துறை அதிகாரிகளான முல்லேரியாவ மற்றும் சேனாநாயக்க ஆகியோர், வீரர்களுக்கு வழங்கப்படும் மரியாதையை வழங்கியதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொலையில் ஈடுபட்ட ஜஹான்கிரின் சகோதரன் ஏற்கனவே தமிழிழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர் என்பதும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலையில் இருந்த உதவி காவல்துறை அதிகாரிகளான ரொஹான் அபேவர்த்தன மற்றும் கபில ஜெயசேகர ஆகியோரின் உத்தரவுக்கு அமையவே இந்த 17 பணியாளர்களும் கொல்லப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஜெயசேகர என்ற காவல்துறை அதிகாரியே 17 பணியாளர்கள் கொல்லப்படுதற்கு முன்னர் திருகோணமலையில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் கொலைகளுக்கும் திட்டம் வகுத்தவர் என மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகரில் நேற்று இரவு 7 மணியளவில் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 8 முஸ்லிம்கள் உட்பட 12 பொதுமக்கள் காயமடைந்தனர். வண்ணார்ப்பண்ணை ஐந்து சந்திப்பகுதியி;ல் இராணுவ உடையில் சென்ற ஆயுததாரிகள் வீடு ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட முயற்சித்துள்ளனர். இதன் போது அங்கு சென்ற படையினர் பொதுமக்களை தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த பொதுமக்கள் யாழ்;ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படையினர் இந்த சம்பவத்தின் போது வீதியி;ல் சென்றோர்,வீடுகளில் இருந்தோர், வாகனங்களில் சென்றோர் ஆகியோர் தாக்கப்பட்டு;ள்ளனர். இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாண படைத்தலைமை விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருங்கன் வைத்தியசாலை வழாகத்தில் மோட்டார் குண்டு வீழ்ந்து வெடித்துள்ளது.

மன்னார் முருங்கன் வைத்தியசாலையின் மீது இன்று காலை மோட்டார் குண்டு வீழ்ந்து வெடித்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தின் மீதே மோட்டார் குண்டு வீழ்ந்து வெடித்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மோட்டார் குண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்தே செலுத்தப்பட்டதாக அரசாங்க படைத்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் விடுதலைப் புலிகள் இது குறித்து கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை

இதுவரை இல்லாத நட்டத்தில் சுவிஸ் வங்கி

உலக அளவில் இது வரை இல்லாத அளவு வர்த்தக நட்டம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் நாட்டின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான யூ பி எஸ் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வீட்டுக் கடன்கள் கொடுத்தது தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாகவே தமக்கு இந்த இழப்பு ஏற்பட்டதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 19 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக யூ பி எஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அந்த வங்கி 18 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடன்களை தள்ளுபடி செய்திருந்ததது. வங்கியின் தலைவர் மார்ஸெல் ஆஸ்பெல் அவர்கள் பதவி விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஐரோப்பாவின் மற்றொரு மிகப் பெரிய வங்கியான டாய்ட்ச் வங்கியும்(ஜெர்மன் வங்கி)கவலையளிக்கக் கூடிய புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் காரணமாக, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் சுமார் நான்கு பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படக் கூடும் என தாம் எதிர்பார்ப்பதாக டாய்ட்ச் வங்கி கூறியுள்ளது.

ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழகத்திற்கு பாடம் கற்பிக்கப்போவதாக கர்நாடக அரசியல் கட்சிகள் மிரட்டியுள்ளன.

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் , முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி கூறியிருப்பதாவது :

ஒகேனக்கல் கர்நாடகத்துக்கு சேர வேண்டுமா, இல்லை தமிழகத்துக்கு சேர வேண்டுமா என்பதை முடிவு செய்ய மீண்டும் சர்வே நடத்த வேண்டும்.

காவிரி, கிருஷ்ணா, ஒகேனக்கல் பிரச்சினைகளில் இப்போது நிலைமை நீருபூத்த நெருப்பாக இருக்கிறது.கன்னடர்களின் மனநிலைக்கு பணிந்து பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும்.

ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு பாடம் கற்பிக்கும் போராட்டத்தை மதசார்பற்ற ஜனதா தளம் தொடங்கி விட்டது. மத்திய அரசு இந்த பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இதில் உடனடியாக தலையிட வேண்டும்.

பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளால் இது போன்ற உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகர்களுக்கு எதிரான பிரச்சனையில் எப்போதும் முதலில் குரலெழுப்பும் கன்னட சளுவாலி தலைவர் வாட்டாள் நாகராஜ் இது தொடர்பாக கூறியிருப்பதாவது :

ஒகேனக்கல் கர்நாடகாவுக்கு சொந்தமானது.ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும்.இதுபற்றி மத்திய அரசு மீண்டும் சர்வே நடத்த வேண்டும்.

ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து இதே ரீதியாக நடந்து கொண்டால் ஊட்டி, ஈரோடு, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய நகரங்களை கர்நாடகாவுடன் இணைக்க கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவ்ர் கூறியுள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாவது:

கன்னடர்கள் பொறுமையானவர்கள்.தமிழ்நாட்டுக்கு பதில் சொல்வதற்கு சக்தி இல்லாமல் இல்லை. அதே பாணியில் பதில் அளிக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் மக்களின் உணர்வை தூண்டி விடும் வகையில் அறிக்கை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜனதா கட்சியோ , ஒகேனக்கல் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளது.

இதற்கிடையே ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. கர்நாடக அரசின் தலைமை செயலாளர் சுதாகர் ராவ் இதைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கி வருவதான குற்றச்சாட்டை உலகத் தமிழர் இயக்கம் மறுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கி வருவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை தாம் மறுப்பதாக உலகத் தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த அமைப்பைச் சேர்ந்த பிரபா தம்பிதுரை என்பவர் கனேடிய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமையை அந்த அமைப்பு கண்டித்துள்ளது.
இந்தக் கைதானது கனடாவில் உள்ள பெருந்தொகையான தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக கனாடாவில் இருந்து வெளியாகும் நெஷனல் போஸ்ட் செய்தித் தாள் குறிப்பிட்டுள்ளது. கனேடிய தமிழ் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை இந்தக் கைது தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிதி சேகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இத்தகையை கைதிகள் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு உதவும் வகையில் நிதி சேகரிப்பதை தடுக்கக் கூடிய கனேடிய பயங்கரவாத நிதியளிப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள முதலாவது நபராக தம்பிதுரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, பிரபா தம்பிதுரை கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பிய ஈழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பன்றிகளின் உதைபந்தாட்டம்.

coolswiss.com மிருகங்களுக்கிடையேயும் ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்டம்.

Rodolfo Langjahr என்பவர் நான்கு பன்றிகளை வைத்து மிருகங்களுக்கான ஐரோப்பிய கிண்ணத்திற்கான போட்டியில் பங்குபெறச் செய்வதற்காக பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அடுத்த வாரம் Frauenfeldல் முதல்தரமாக இந்நான்கு பன்றிகளும் உதை பந்தாட்டத்தில் களமிறங்க உள்ளன.ஆனால் 2008ல் ஆனியில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இந்த நான்கு பன்றிகளும் ஜெர்மன் நாட்டுப் பன்றிகளுடன் மோத உள்ளன. மிருகங்களுக்கான ஐரோப்பியக் கிண்ணத்தை சுவிஸ் நாட்டுப் பன்றிகள் வெற்றிஈட்டித் தட்டிக் கொள்ள எமது வாழ்த்துக்கள

சிறிலங்கா துணைத் தூதரக் தலையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து சிங்களத் திரைப்படத்தை அழிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன் வழக்கு

தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான "பிரபாகரன்" என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்தை கையகப்படுத்தி மத்திய அரசு அழிக்க வேண்டும் என்றும் அப்படத்தை சென்னை வண்ணக் கலையகத்திலிருந்து வெளியே எடுக்க சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு தலைமை நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தொல்.திருமாவளவன் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

- பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டதாக உள்ளது.

- இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலையால் லட்சக்கணக்கான தமிழர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் தமிழ்நாட்டிலும் அகதிகளாக அல்லற்படுகின்றனர். ஆனால் பிரபாகரன் என்ற பெயரிலான சிங்களத் திரைப்படத்திலோ, புலிகளின் போரினால் மிக மோசமான அகதி முகாம்களில் சிங்கள மக்கள் அவதிப்படுவதாக பொய்யாக சித்தரிக்கப்படுகிற காட்சிகள் உள்ளன.

- 3 தசாப்தகால இனப்போரின் வரலாற்றை தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்களும் வழக்குத் தொடர்ந்துள்ள நாமும் நன்கு அறிவோம்.

- கொத்து கொத்தாக சிங்களவர்கள் கொல்லப்படுவது போலவும் இடம்பெயருவதும் போலவுமான காட்சிகள் அனைத்துமே மிகப் பொய்யானவை மட்டுமல்ல பாரிய கற்பனையும் கூட.

- சில காட்சிகளில் "சிறார்களை" கொண்டு இனப்படுகொலை செய்துவதாகவும் காட்டப்பட்டுள்ளது. அதனைவிட மிக மோசமாக களமுனையில் கொல்லப்பட்ட சிறார்களுக்கு பாடசாலை சீருடைகளை அணிவித்து பள்ளிக்குழந்தைகளை இராணுவம் கொன்றதாக புலிகள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

செஞ்சோலை என்ற சிறார் காப்பகத்தின் மீது சிறிலங்கா வான்படையின் 16 வான்குண்டுகள் தாக்குதல் நடத்தியதால் 50-க்கும் மேற்பட்ட சிறார்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களை ஆயுதப் பயிற்சிக்குச் சென்ற சிறார்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியது.

ஆனால் ஐ.நா.வின் சிறார் அமைப்பான யுனிசெஃப், பாடசாலை சிறார்களே படுகொலை செய்யப்பட்டோர் எனக்கூறியது.

இப்படத்தில், சிறிலங்காவின் பொய்ப் பிரச்சாரத்தை தூக்கி நிறுத்தும் வகையிலேயே வன்மத்துடன் திட்டமிட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

- இப்படத்தின் நோக்கமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என்று இப்படத்தின் இணையதளத்திலே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று குமுதம் றிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

- இப்படத்தின் தொழில்நுட்பம் மற்றும் பதனீட்டுச் செயற்பாடுகளுக்கான பணிகள் ஜெமினி கலையகத்தில் நடைபெற்றது. இதற்கு எமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோது நிலைமையை சீராக்க காவல்துறையினர் அங்கு வந்தனர். காவல்துறை துணை ஆய்வாளர் முன்னிலையேயே பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. தமிழ்ப் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்படும் என்று படத்தின் இயக்குநர் துசாரா பீரிஸ் உறுதியளித்திருந்தார். கடந்த 27 ஆம் நாள் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு படம் திரையிடப்பட்டது.

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணனும் இந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் படம் இது என்று கருத்து தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு துசாரா பீரிஸ் கலந்து கொள்ளவில்லை.

- உலகத் தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் வகையிலான இப்படத்தை ஜெமினி வண்ணக் கலையகத்தை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்று கடந்த மார்ச் 28 ஆம் நாள் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினருக்கு முறைப்பாடு செய்திருந்தோம்.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்படைத் தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் ஜெமினி கலையகத்தினர், சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தினர் அப்படத்தின் பிரதிகளை தம்மிடமோ அல்லது தாம் குறிப்பிடும் நபர்களிடமோ ஒப்படைக்க வேண்டும் என்று மிகவும் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களினது உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு சிறிலங்கா துணைத் தூதரகம் இப்படியான செயற்பாடுகளை மேற்கொள்கிறது.

அப்படத்தின் பிரதிகளை வெளியே கொடுத்தால் பல இடங்களில் திரையிட வாய்ப்பு உண்டு. இது இலங்கையில் இன மோதலை மேலதிகமாக மிக மோசமாகத்தூண்டி விடும்.

அதனால் தமிழ்நாட்டில் 1980-களில் நடந்தது போன்ற உணர்வுமிக்க போராட்டங்களும் நடைபெறும்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டு பொதுமக்களினது இயல்பு வாழ்க்கை முற்றாக சீர்குலையும்.

இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிப்பதுடன் படத்தின் பிரதிகளை எவரிடமும் கொடுக்கக்கூடாது என்று ஜெமினி கலையகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

மேலும் சிறிலங்கா துணைத் தூதரகத்தின் அழுத்தங்களுக்கு அமைய மத்திய மற்றும் மாநில உள்துறைச் செயலர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெமினி கலையகத்திற்கு உத்தரவிடுவதைத் தடுக்க வேண்டும்.

அத்துடன் இப்படத்தின் பிரதிகள் மற்றும் மின்னனு பேக்கப் உள்ளிட்ட அனைத்துவகையானவற்றையும் மத்திய உள்துறைச் செயலகம் கைப்பற்றி அழிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடக் கோருகிறோம் என்று அதில் திருமாவளவன் கோரியுள்ளார்.

தொல்.திருமாவளவனுக்காக சட்டவாளர்கள் கோபிகிருஷ்ணா என்ற ஆர்வலன், பொன். இரவி என்ற இளந்திரையன், கே.பாலகிட்ணன் என்ற இளமாறன், இ. அங்கையற்கண்ணி, சிவலிங்கம், சுரேசு என்ற அகரன் ஆகியோர் இம்மனுவைத் தாக்கல் செய்தனர்.

பேரணி: பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் முடிவு

பெங்களூர்: கன்னட அமைப்புகள் நடத்தியுள்ள வெறித் தாக்குதலைக் கண்டித்து பெங்களூரில் அமைதிப் பேரணி நடத்த பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் தீர்மானித்துள்ளது.

பெங்களூரில் நேற்று தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் தாக்குதல் நடத்திய வன்முறைக் கும்பல், பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தையும் தாக்கி சேதப்படுத்தியது.

தமிழ் சினிமா ரத்து:

தியேட்டர்கள் அருகே இருந்த சில கடைகளும் தாக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைத் தாக்குதலால், பெங்களூர் நகரில் தமிழ்ப் படங்கள் திரையிடுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல தமிழக எல்லையில் உள்ள கர்நாடகப் பகுதியில் திரண்ட கன்னட வெறியர்கள், அங்கு தமிழகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இரு பேருந்துகளை சிறை பிடித்தனர்.

இந்த சம்பவங்களுக்கு பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், வன்முறையாளர்கள் மீது போலீஸார் ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. தமிழ்ச் சங்கத்தை சேதப்படுத்தும் நோக்கோடு அந்தக் கும்பல் வந்துள்ளது.

பெங்களூரில் வன்முறைக் கும்பல் நடத்தி வரும் செயல்களைக் கண்டிக்காமல் போலீஸார் செயலிழந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்திலும் கன்னட மொழி பேசுவோர் வசிக்கிறார்கள். அவர்களை தமிழர்கள் தாக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பதை கன்னடர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கு எதிரான இந்த வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.

பெங்களூர் வன்முறையை எதிர்த்துப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் சண்முக சுந்தரம்.

மைசூரிலும் போராட்டம்:

இதேபோல மைசூரில் உள்ள கே.ஆர்.சர்க்கிளில், கர்நாடக ரக்ஷண வேதிகேயை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழக தலைவர்கள் கண்டனம்:

அதே போல பெங்களூர் வன்முறை குறித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூர் வன்முறைக்கு பாஜகவினர்தான் காரணம் என ஜி.கே.வாசனும், மொழி வெறியர்கள்தான் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டு வருவதாக இல.கணேசனும் கூறியுள்ளனர்.

பெங்களூர்-ஒசூர் எல்லையில் தமிழக பஸ்கள் சிறைபிடிப்பு

கர்நாடக எல்லையில் 2 தமிழக பஸ்கள் அடுத்தடுத்து சிறைபிடிக்கப்பட்டன. இதனால் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

நேற்று ஓசூரில் தேன்கனிக்கோட்டைக்கு தமிழக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஆனைக்கல் வழியாக சென்ற அந்த பஸ் கர்நாடக எல்லையில் உள்ள சோதனை சாவடி பகுதிக்கு வந்தது.

அப்போது அங்கு கன்னட அமைப்பினர் திரண்டு நின்று பஸ்ஸை வழி மறித்தனர். பின்னர் தமிழக பஸ்சை சிறை பிடித்தனர்.

அப்போது, தமிழ்நாட்டுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் பஸ்சின் கண்ணாடியில் சேறு பூசினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அதே போல அந்த வழியாக வந்த தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பஸ்ஸையும் அந்த அமைப்பினர் சிறை பிடித்தனர். அந்த பஸ் பெங்களூரில் இருந்து தளியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

கன்னட அமைப்பினரின் சிறை பிடிப்பால் பயணிகள் பெரும் அச்சத்துக்கும் பீதிக்கும் உள்ளாயினர்.

இது குறித்து கர்நாடக மாநிலம் ஆனைக்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதே போல தமிழகத்தின் தளி பகுதி போலீசாருக்கும் தகவல் தரப்பட்டது.

இதையடுத்து இரு மாநில போலீசாரும் அங்கு விரைந்தனர். தமிழக போலீசார் தங்கள் எல்லையில் நின்றபடி கர்நாடக போலீசாருடன் பேசினர்.

இதையடுத்து பஸ்களை சிறைபிடித்த கன்னட அமைப்பினரிடம் கர்நாடக போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அந்த பஸ்களை விட முன் வரவில்லை. இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டியத்தனர். அதன் பின்னரே பஸ்கள் விடுவிக்கப்பட்டன.

இந்த சம்பவத்தையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்பி தேன்மொழி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் ஓசூர் பகுதியில் முகாமிட்டு எல்லையோர பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக எல்லையான ஜூஜூவாடி, அந்திவாடி, கக்கனூர், கும்மளாபுரம் ஆகிய சோதனை சாவடிகளில் கூடுதலாக தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு பணிக்காக மாவட்டத்தில் விடுமுறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் உடனடியாக பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் தமிழகத்தில் இருந்து இரவில் வந்த பல பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு காலையில் தான் இயக்கப்பட்டன. இதனால் தமிழக பஸ்கள் தாமதமாக பெங்களூருக்குள் வந்து கொண்டுள்ளன.

பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீதும் தாக்குதல்!!

Vidhana Souda - Bangalore
பெங்களூர்: பெங்களூர் அல்சூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் மீதும் கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

ற்கு நேற்று 20 பேர் கொண்ட கும்பல் வந்தது. வெளியில் உள்ள தட்டிகள் மற்றும் போர்டுகளை அவர்கள் தாக்கி சேதப்படுத்தினர். இரண்டு பேர் உள்ளே வந்து சில பிட் நோட்டீஸ்களை போட்டு விட்டுச் சென்றனர்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நேற்று தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.

இதி்ல் நடராஜ் தியேட்டருக்குள் புகுந்து நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இந்த தியேட்டர்களின் முன் வைக்கப்பட்டிருந்த சினிமா படங்களின் போஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்களை கிழித்தெறிந்தனர்.

இதையடுத்து பெங்களூரில் தமிழ் சினிமா திரையிடப்படும் நடராஜ், சங்கீத், வினாயக் உள்ளிட்ட 9 தியேட்டர்களில் தமிழ் படங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

''தமிழ் சினிமாவை அனுமதிக்க மாட்டோம்'':

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ரத்து செய்யும்வரை பெங்களூரில் தமிழ் சினிமா படங்களை ஓடவிடமாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

மேலும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

இதையடுத்து கன்னட அமைப்பினர், பெங்களூர் தமிழ்சங்கத்துக்கு சென்றனர். தமிழ்ச் சங்கத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அடித்து உடைத்தனர். 2 பேர் தமிழ்ச்சங்க அலுவலகத்துக்குள் சென்று துண்டு பிரசுரங்களை வீசி விட்டு ஓடினர்.

போரின் திசைகளை மாற்றப்போகும் தாக்குதல்கள் - சூசை தொடர்பாக கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் கடுமையான வதந்தி தென்னிலங்கையில் பரவியிருந்தது.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தொடர்பாக கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் கடுமையான வதந்தி தென்னிலங்கையில் பரவியிருந்தது. முல்லைத்தீவு கடற்பகுதியில் நடைபெற்ற விபத்தில் சூசை காயமடைந்ததைத் தொடர்ந்தே இந்த வதந்தி பரவியது. எனினும் பின்னர் அது வழமை போலவே விரைவில் மழுங்கிப்போய்விட்டது. ஆனால் அன்று பரீட்சித்து பார்க்கப்பட்ட உத்திகள் தற்போது கடற்படையினரைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அதாவது கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெற்ற அந்த விபத்தின் போது கடற்புலிகள் நவீன கலங்களைத் தகர்ப்பதற்கான நவீன ஆயுதங்களையும், அதற்கான உத்திகளையுமே பரீட்சித்து பார்த்துக்கொண்டிருந்ததாக வன்னித்தகவல்கள் தெரிவித்திருந்தன. கடற்புலிகள் பரீட்சித்துப் பார்த்த நவீன ஆயுதங்களுடன் கூடிய இந்தப் புதிய உத்திகள் கடந்த சனிக்கிழமை (22) நாயாறு கடற்பகுதியில் எதிரொலித்துள்ளதா? என்ற பலமான சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன.

அதாவது நடைபெற்றுவரும் நாலாம் கட்ட ஈழப்போரில் வான்புலிகளின் தாக்குதல் வான் தாக்குதலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியிருந்ததைப்போல முல்லைத்தீவை அண்டிய நாயாறு கடற்பகுதியில் கடற்படையினர் சந்தித்த இழப்பு கடற்போர் வேறு ஒரு பரிமாணத்தை சந்தித்துள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

கடலுக்கு அடியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பால் கொழும்பு டொக்கியாட் நிறுவனத்தில் கட்டப்பட்ட பி438 இலக்க அதிவேகத் தாக்குதல் படகு(Ultra Fast Attack Craft - UFAC) சொற்ப நேரத்தில் மூழ்கிப்போயுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கரும்புலித்தாக்குதல் மூலமே படகு அழிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ள போதும், கடற்படையினர் அதனை மறுத்துள்ளனர்.

அதிவேகத் தாக்குதல் படகு அழிந்து போவதற்கு முன்னர் அப்பகுதியில் கடற்சமர்கள் எவையும் நடைபெறவில்லை எனவும், அந்தப் பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த இரு அதிவேகத் தாக்குதல் படகுகளின் ராடர் திரைகளிலும் கடற்புலிகளின் படகுகள் எதனையும் தாம் அவதானிக்கவில்லை எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இது ஒரு கடற் கண்ணிவெடி தாக்குதலாக இருக்கலாம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை இரண்டு மணியளவில் நடை பெற்ற இந்த தாக்குதலில் படகின் கட்டளை அதிகாரி உட்பட 6 கடற்படையினர் காப்பற்றப்பட்ட போதும் 10 கடற்படையினர் காணமால் போயுள்ளனர். இலங்கை கடற்படையினரின் கரையோரத் தாக்குதல் படகுகளில் வலிமைமிக்க அதிவேகத் தாக்குதல் படகுகளின் இழப்புக்கள் கடற்படையினரின் நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்கமுடியாது.

கடந்த வாரம் மூழ்கடிக்கப்பட்ட அதிவேகத் தாக்குதல் படகுடன் நடைபெற்றுவரும் நாலாம் கட்ட ஈழப்போரில் கடற்படையினர் 9 டோறாக்களை இழந்துள்ளனர். இஸ்ரேலின் ஆயுதங்களுடன் ஓவ்வொன்றும் 5 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த படகுகளின் இழப்புக்களைக் கடற்படையினர் உடனடியாக ஈடுசெய்வது என்பது சாத்தியமற்றது.

ஜப்பானின் முதலீட்டில் இயங்கிவரும் கொழும்பு டொக்கியாட் நிறுவனம் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தைப் பிரதி பண்ணி இந்த அதிவேக தாக்குதல் படகுகளை கட்டிவரும் போதும் உடனடியாக அவற்றை சேவையில் இணைத்துக் கொள்வது கடினமானது. ஒரு அதிவேக தாக்குதல் படகை கட்டிமுடிப்பதற்கு 6 தொடக்கம் 12 மாதங்கள் செல்லலாம்.

மேலும் கடற்படையினரின் இழப்புக்களுக்கு அப்பால் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உத்தி தென்னிலங்கையில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. கடற்படையினாரின் வலிமை மிக்க தாக்குதல் படகு கடலடித் தாக்குதல் மூலம் திடீரென வெடித்து சிதறியது படைத்துறை மட்டத்தில் பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதாவது இந்தத் தாக்குதல் தொடர்பாக கடற்படைத்தரப்பின் மத்தியில் மூன்று முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. ராடர்களின் திரைகளில் தெரியாத விடுதலைப் புலிகளின் நவீன ஸ்ரெல்த் ரக தாக்குதல் கலம் கரும்புலித் தாக்குதலை நடத்தியதா? கடற்படையினரின் படகுகளைத் தேடித்தாக்கும் சிறிய நவீன டோப்பிடோ கடற்கண்ணிவெடிகளை (Anti-ship torpedo) விடுதலைப்புலிகள் பயன்படுத்தினரா? சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு கரும்புலிகள் அதிவேகத் தாக்குதல் படகை தாக்கி அழித்தனரா? என்பவை தான் கடற்படையினர் மத்தியில் எழுந்திருக்கும் கேள்விகள் ஆகும்.

ஸ்ரெல்த் கடற்கலம் ராடர் திரைகளில் புலப்படாதவாறு வடிவமைக்கப்பட்ட அதிவேக கரும்புலித்தாக்குதல் படகாகும். கடல் அலைகளுடன் அலையாக பயணிக்கும் இந்த படகு 50 நொட்ஸ் வேகத்தை எட்டக்கூடியது. 2000 ஆம் ஆண்டு திருகோணமலை துறைமுகத்திற்கு அண்மையான மார்பிள் பீச் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் விடுதலைப்புலிகள் இத்தகைய படகைப் பயன்படுத்தியிருந்தனர்.

வெடிமருந்துகளுடன், முன்புறத்தின் இருபுறமும் இரண்டு 122 மி.மீ எறிகணைகள் பொருத்தப்பட்ட இந்தப் படகு வேகமாகச் சென்று கடற்படைப் படகுடன் மோதும் போது ஏற்படும் சேதம் மிக அதிகமாகும். அமெரிக்காவின் ஸ்ரெல்த் 117 தாக்குதல் விமானத்தின் வெளிக்கட்டமைப்பை ஒத்த அமைப்புடைய இந்த படகுகளை ராடர்களில் அவதானிப்பது கடினமாகும்.

கடற்படையினர் கூறுவதுபோல இது ஒரு கண்ணிவெடித் தாக்குதலாகவும் இருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் குறித்த படகைக் குறிவைத்து கடல் கண்ணிவெடி ஏவப்பட்டதா? என்பதே முக்கிய கேள்வி.

இதனிடையே நீர்மூழ்கிப் படகின் தாக்குதலையும் நிராகரிக்க முடியாது என கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஒரு முழுத்தேசத்திற்குரிய படைக்கட்டுமானங்களை வடிவமைப்பதிலும், அதிர்ச்சியான தாக்குதல்களை நடத்துவதற்கு ஏதுவாக படைக்கலங்களையும், தாக்குதல் உத்திகளையும் வடிவமைப்பதிலும் ஒருபோதும் பின்நிற்பதில்லை.

1990 களின் பிற்பகுதியில் தமது விமானப்படையின் வடிவமைப்பில் விடுதலைப்புலிகள் கவனம் செலுத்திய அதேசமயம் நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவமைப்பிலும் அதிக அக்கறை செலுத்தி வந்துள்ளனர். இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினரும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்போது தகவல்களை வெளியிட்டே வந்துள்ளனர்.

1990 களின் முற்பகுதியில் விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்ட சிறிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வடமராட்சிக் கடலில் பரிசோதிக்கப்பட்டது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த நீர்மூழ்கிப் படகு நீரை உள்ளிழுத்து வெளியேற்றும் பொறிமுறை மூலம் அன்று பரீட்சிக்கப்பட்டது. இதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள தீவுகளின் கப்பல் கட்டுமிடம் ஒன்றில் அரைகுறையாக வடிவமைக்கப்பட்ட சிறிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று (Half-built miniature submarine) தொடர்பான தகவல்களும் வெளிவந்திருந்தன.

இரண்டு அல்லது மூன்று பேர் பயணம் செய்யக்கூடிய இந்த சிறிய நீர்மூழ்கிக் கப்பல் 1990 களில் விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்ட கப்பலை ஒத்த வகை எனவும் இலங்கையின் புலனாய்வுத்துறை அன்று தெரிவித்திருந்தது.

கடற்சமரைப் பொறுத்தவரை அதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம். மேற்பரப்பின் மீது நடைபெறும் சமர், வான்வழித் தாக்குதல், நீரடித் தாக்குதல் என்பனவே அவையாகும். இந்த ஒவ்வொரு தாக்குதல்களும் போருக்கு ஒவ்வொரு வகையான வியூகங்களைக் கொடுக்கக் கூடியவை.

இதில் நீரடித் தாக்குதலானது தாக்குதல் நடத்தும் கலம் எதிரியின் கண்களில் படாமல் பயணிப்பது அனுகூலமானது. அதாவது அது அதிக ஆழத்தில் பயணிக்கும் போது அதனை கண்டுபிடித்துத் தாக்கி அழிப்பது கடினமானது.

மேலும் கலம் எதிரியின் கண்களில் படாமல் பயணிப்பதனால் அது தனது இலக்குகளை மிகவும் அண்மையில் நெருங்கி அழித்து விடக்கூடியது. நீர்மூழ்கிக் கப்பலானது இந்த நேரடியான தாக்குதல் அனுகூலங்களுக்கு அப்பால் பாரிய உளவியல் தாக்கத்தையும், எதிரிப்படைகளின் ஆள், ஆயுத வளங்களின் வீண் விரயங்களையும் ஏற்படுத்தக் கூடியது.

உதாரணமாக 1982 ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கும் ஆர்ஜென்ரீனாவுக்கும் இடையில் நடைபெற்ற பேக்லன்ட் போரில் பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் ஹெங்குறொர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜென்ரீனாவின் ஏ.ஆர்.ஏ ஜெனரல் பெல்கிரேனோ என்ற கப்பலை தாக்கி மூழ்கடித்திருந்தது. இதில் 323 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னர் தமது கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல்களுக்கு எந்த நேரமும், எந்த இடத்திலும் இலகுவாக உட்படலாம் என்பதை உணர்ந்த ஆர்ஜென்ரீனா கடற்படையினர் தமது கப்பல்களை போர் முடியும் வரை துறைமுகங்களுக்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

அதாவது மிகவும் பரந்த கடற்பிரதேசத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நடைபெறும் தாக்குதல்களைத் தடுப்பதற்கு எதிர்த்தரப்பு தனது அதிகளவான வளங்களைப் பயன்படுத்த வேண்டும் அல்லது களத்தில் இருந்து ஒதுங்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றது. இதுதான் அதன் நேரடியற்ற மற்றும் உளவியல் தாக்கங்களுக்கான சிறு உதாரணம்.

இலங்கையைப் பொறுத்த வரையில் நாயாறு கடற்பரப்பில் இடம்பெற்ற தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலாக இருந்தால் அது அரசாங்கத்தின் கப்பல் வர்த்தகத்துறையிலும், படையினருக்கான விநியோக வழிகளிலும் கடுமையான தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியது. நாயாறு கடற்பகுதியில் நடைபெற்ற கடல் தாக்குதலில் மூன்று கடற்கரும்புலிகள் பலியானதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல் ஸ்ரெல்த் படகு அல்லது நீர்மூழ்கி படகின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களை வலுவாக ஏற்படுத்தி உள்ளதாக தென்னிலங்கை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த நீரடித்தாக்குதலானது கடற்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தை எற்படுத்த வல்லது என்பதுடன் ஏறத்தாள நான்கு டிவிசன் இராணுவத்தினரும் பல ஆயிரம் கடற்படையினர் மற்றும் காவல்துறையினரும் முடங்கிப் போயுள்ள யாழ். குடாநாட்டிற்கான விநியோக வழிகளிலும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

இதனையே கடந்த செவ்வாய்கிழமை அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய நேர்காணலில் விடுதலைப்புலிகளின் படைத்துறை பேச்சாளர் இராசையா இளந்திரையன் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாயாறு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடல் தாக்குதல் உத்திகள் தொடர்பாக தகவல் எதுவும் கூறுவதைத் தவிர்த்துக் கொண்ட அவர், இந்தத் தாக்குதல் உத்திகள் பல தொடர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், படையினரின் விநியோகங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தாக்குதல் உத்திகளை எதிர்கொள்வதற்கு அரசிற்கு அதிக படைவளமும், நிதிவளவும் தேவை. அதாவது நீண்ட கடற்பரப்பில் கண்ணிவெடிகளைத் தேடி அலைவதற்கும், நீர்மூழ்கிகளை கண்டறிவதற்கும் நவீன தொழில்நுட்பங்களும், பெருமளவான நிதிவளமும் தேவை. நடைபெற்றுவரும் போரினால் ஏற்கனவே இலங்கை அரசின் பொருளாதாரம் மிகவும் பாதகமான கட்டத்தை அடைந்துள்ளது.

மக்களின் வாழ்க்கைச் செலவு 22 சதவீதத்தை அண்மித்துவரும் இந்த நிலையில் புதிதாகத் திறக்கப்படும் களமுனைகளும் புதிய தாக்குதல் உத்திகளும் யாரும் எதிர்பார்க்காத திசையில் போரை நகர்த்தப்போகின்றது என்பது மட்டும் யதார்த்தமானது.

மன்னார் முன்நகர்வுகள் முறியடிப்பு: 15-க்கும் அதிகமான சிறிலங்காப் படையினர் பலி; 25-க்கும் அதிகமானோர் படுகாயம

மன்னார் இத்திக்கண்டல் பகுதியில் இன்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இத்திக்கண்டலில் இருந்து கறுக்காய்குளம் நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் டாங்கிகளின் பிற்களச்சூடு, ஆட்டிலெறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் முன்நகர்வை மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை தீவிரமாக நடத்தினர். இம் முறியடிப்புத் தாக்குதல் முற்பகல் 11:00 மணி வரை நடத்தப்பட்டது.

இதனையடுத்து சிறிலங்காப் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர். இதில் 15-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 25-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்தனர். படையினரின் படைக்கலங்கள் மற்றும் வெடிபொருட்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் திருக்கேதீஸ்வரம் பகுதியிலிருந்து இன்று முற்பகல் 9:00 மணிக்கு பாப்பாமோட்டை நோக்கி சிறிலங்காப் படையினர் முன்நகர்வு முயற்சியினை மேற்கொண்டனர். இம் முன்நகர்வையும் விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.

தாலி பறித்த திருடனை பிடித்து வெளுத்த வீரப் பெண்!!!

சென்னையில் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓட முயன்ற திருடனைப் பிடித்து சரமாரியாக அடித்து, மிதித்து, உதைத்து வெளுத்தார் ஒரு வீரப் பெண். போக்குவரத்துக் காவலரும், அவரும் சேர்ந்து அந்தத் திருடனை மடக்கினர்.

சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி அமுதா (வயது 44). இவர் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ள தனது அண்ணனை பார்ப்பதற்கு வந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் இருந்து கூடுவாஞ்சேரி செல்ல பிராட்வே பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார்.

பிராட்வே பஸ் நிலையம் அருகே குறுகலான சந்து வழியாக அமுதா சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி ஒருவன் அமுதாவின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்தான்.

ஆனால் சங்கிலி உறுதியாக இருந்ததால், தாலி அறுபடாமல் உறுதியாக இருந்தது. இதையடுத்து தாலியைப் பறிக்க கொள்ளையன் போராடினான். இதையடுத்து அமுதா உதவி கோரி சத்தம் போட்டார். அப்போது சங்கிலியின் ஒரு பகுதி அறுந்து திருடன் கையில் சிக்கியது.

இதையடுத்து அதைப் பறித்துக் கொண்டு ஓட முயன்றான் திருடன். இதைக் கண்டு பொங்கி எழுந்தார் அமுதா. கொள்ளையனின் தலைமுடியை பிடித்து தூக்கி தரையில் தேய்த்து சரமாரியாக அடித்தார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த திருடன் நிலை குலைந்து போனான். அத்துடன் நிற்காத அமுதா, கீழே விழுந்த திருடனை சரமாரியாக காலால் மிதித்தார். வலி தாங்க முடியாமல் அலறிய திருடன் விட்டால் போதும் என தப்பி ஓட முயன்றான்.

ஆனால் அமுதாவின் ஆத்திரம் அடங்கவில்லை. திருடனின் சட்டையையும், பேன்ட்டையும் படு கோபமாக கிழித்தெறிந்தார். அவர் போட்ட போட்டில் திருடன் கண்ணீர் விட்டுக் கதறி அழுது விட்டு விட்டும்படி கெஞ்சினான். வலியால் துடித்தான்.

இந்த சமயத்தில், அந்தப் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் நாகநாதன் இதைப் பார்த்து வேகமாக ஓடி வந்தார். திருடனை மடக்கிப் பிடித்தார். கையில் வைத்திருந்த தாலிச் சங்கிலியைப் பறிமுதல் செய்தார்.

பின்னர் திருடனை பூக்கடை காவல் நிலையத்திற்குக் கூட்டி வந்தனர். தகவல் அறிந்ததும் உதவி ஆணையர் பாலச்சந்திரன் விரைந்து வந்தார்.

திருடனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவன் பிரபலமான சங்கிலித் திருடன் என்பது தெரிய வந்தது. அவனது பெயர் கரண் என்கிற குமார் என்கிற ஆண்டனி குமார்.

இவன் மீது 20க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன. கீழ்ப்பாக்கம், வேப்பேரி, பெரியமேடு என பல பகுதிகளில் கைவரிசை காட்டியுள்ளான். பலரது தாலிச் சங்கிலிகளைத் திருடியவன். குண்டர் சட்டத்தின் கீழும் சிறை சென்றவன்.

இப்படிப்பட்ட பலே திருடனை சற்றும் சளைக்காமல், மகா தைரியத்தோடு போராடி, சரமாரியாக அடித்துப் பிடித்த அமுதாவையும், காவலர் நாகநாதனையும் வட சென்னை இணை ஆணையர் ரவி வெகுவாகப் பாராட்டினார்.

பெங்களூரில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு ரத்து

பெங்களூர்: கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று பெங்களூரில் கேபிள் டி.வி. அலுவலகங்களை முற்றுகையிட்டு தமிழ் சேனல்களை ஒளிபரப்ப கூடாது என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து பெங்களூரின் பல பகுதிகளில் தமிழ் சானல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.

தமிழர்களுக்கு எதிரானதல்ல-வேதிகே:

இந் நிலையில் கர்நாடகத்தில் நடக்கும் போராட்டம் தமிழக அரசுக்கு எதிரானதே தவிர தமிழர்களுக்கு எதிரானதல்ல என கர்நாடக ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெளடா கூறியுள்ளார்.

இந்த அமைப்பினர் தான் நேற்று முதல் பெங்களூரில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் குறி்த்து நாராயண கெளடா கூறுகையில்,

கர்நாடகத்தில் நடைபெறும் போராட்டம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. எனவே கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள் அச்சம் அடைய தேவையில்லை. தமிழக முதல்வர் கருணாநிதி, ராமதாஸ் ஆகியோர் கூறிய கருத்துக்கள் தவறானவை. அதற்கு எதிராகத்தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.

இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியான முறையில்தான் நடத்துகிறோம். நடராஜ், பூர்ணிமா, சாரதா உள்பட சில சினிமா தியேட்டர்களில் தமிழ் சினிமா திரையிடக்கூடாது என்று கேட்டுக் கொண்டோம். அதற்கு அந்தந்த சினிமா தியேட்டர் நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்து விட்டனர்.

இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) காந்திநகர் கனிஷ்கா ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் கர்நாடக சினிமா துறை, விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த பிரச்சினையில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து இக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்த போராட்டம் தமிழர்களுக்கு, எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இது தமிழக அரசுக்கு எதிரானதே தவிர கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு எதிரானதல்ல என்றார் நாராயண கெளடா.

இதற்கிடையே கன்னட அமைப்புகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் பெங்களூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதே போல ஷிமோகா, சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களிலும் கன்னட அமைப்புகள் சார்பில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

அமெரிக்காவில் பெண் கரும்புலிகள் தொடர்பான விவரணத்திரைப்படம்!(வீடியோ இணைப்பு)

நோர்வே நாட்டுத் தயாரிப்பாளர் பியட் ஆர்னஸ்டாட் தயாரித்துள்ள விவரணத் திரைப்படம்!!! எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி அமெரிக்காவில் விவரணத் திரைப்பட விழா இடம்பெறவுள்ளது. இதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நோர்வே நாட்டுத் தயாரிப்பாளர் பியட் ஆர்னஸ்டாட் தயாரித்துள்ள விவரணத் திரைப்படமும் காண்பிக்கப்படவுள்ளது.


இந்தத் திரைப்படம் இரண்டு பெண் கரும்புலிகளைப் பற்றியதாக அமைந்துள்ளது. ஏப்ரல் மாதம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்;த திரைப்படவிழாவில் நூற்றுக்கும் அதிகமான விவரணத் திரைப்படங்கள் வெளியிடப்படவுள்ளன.


இந்தத் திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் ஆர்னஸ்டாட் கருத்து தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் கரும்புலி உறுப்பினர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளாகத் தயார்படுத்திக் கொள்வதற்கு அவர்களைத் தூண்டும் காரணிகள் குறித்து ஆராய முற்பட்டதன் விளைவாகவே அந்த திரைப்படத்தை தயாரித்ததாக குறி;ப்பிட்டுள்ளார்.

கரும்புலிகளின் அத்தகைய செயற்பாடுகளின் நோக்கம்,அவற்றின் பின்னணி போன்றவற்றை ஆழமாகப் புரிந்து கொள்ள முயற்சித்ததன் வெளிப்பாடாகவே தமது இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் கருத்துச் சுதந்திரம் காணப்படாத நிலையில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகளுக்காகத் தான் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுமதியைக் கோரவில்லை என்றும் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலப்பகுதியிலேயே தான் தனது படப்பிடிப்புக்களை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர்களின் வாழ்க்கையை ஒன்றிணைப்பதன் மூலம் ஒரு நாட்டினுடைய யுத்தத்தை பெருந்தொகையான பார்வையாளர்களின் கவனத்திற்கு கொண்டு வரமுடியும் என்பதே தனது நோக்கம் எனவும் பியட் ஆர்னஸ்டாட் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் அழியப் போகுது : ரஷ்யாவில் பரபரப்பு!!!!!!!!!!!!!!

வரும் மே மாதத்தில் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை தனிமையில் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாகவும் ரஷ்யாவில் ஒரு அமைப்பு, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும், “டூம்ஸ்டே’ என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை அவர்கள் தனிமையில் பிரார்த்தனை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக கடந்த அக்டோபரில் இருந்து ரஷ்யாவின் பென்சா மலைப் பகுதியில், ஒரு குகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அவர்கள், உலகம் அழியும் வரை, இந்த குகையில் இருந்து வெளிவர மாட்டோம் என மறுத்து வருகின்றனர். இவர்களை வெளியே கொண்டு வர, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறியிருப்பதாவது: இந்த அமைப்பின் தலைவர் பியோட் குஸ்னெட்ஷோவை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், குகையில் இருந்து ஏழு பெண்கள் வெளியே வந்துள்ளனர். பியோட்டுக்கு கோர்ட் உத்தரவின் பேரில், மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியில் வந்த பெண்கள் அனைவரும், நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனர்.

அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் தேவையில்லை. இவர்கள் அனைவரும், அவர்களது விருப்பப்படி பியோட் குஸ்னெட்ஷோவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மே மாதம் உலகம் அழியும் என்பதில் அவர்கள் உறுதியுடன் இருக்கின்றனர். அவர்களது கருத்துக்கு மதிப்பளிக்கப்படும். இவர்களை தவிர மேலும், 28 பேர் இன்னும் அந்த குகையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றுவது குறித்து தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இளவரசர் தீபேந்திரா தனது குடும்பத்தினர் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன், நேபாளத்தில் மன்னர் குடும்பமே துப்பாக்கி சூடுக்கு பலியான விவகாரத்தில் பேசப்பட்ட இளவரசி தேவயானி ராணா மீண்டும், புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேபாளத்தில், 2001ம் ஆண்டு, இளவரசர் தீபேந்திரா தனது குடும்பத்தினர் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். தானும், தற்கொலை செய்து கொண்டார். இளவரசி தேவயானி ராணாவை, தீபேந்திரா விரும்பினார். அவரை திருமணம் செய்து கொள்ள, குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தான், இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்தது என பேசப்பட் டது.இதன்பிறகு, இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங்கின் பேரன் ஐஸ்வர்யா சிங்கை, தேவயானி ராணா திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகே, அவரால் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்தது.நேபாளத்தில் விரைவில், அரசியல் நிர்ணயசபை தேர்தல் நடக்க உள்ளது. தேவயானியின் தந்தை, பசுபதி சுமேஷர் ஜங் பகதுõர் ராணா, இந்த தேர்தலில், இரண்டு தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது தலைமையிலான ராஷ்டிரிய பிரஜாதந்திரா கட்சி, நேபாளத்தில், முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. தந்தை சார்பாகவும், அவரது கட்சி சார்பாகவும், பிரசாரம் செய்ய, இளவரசி தேவயானி, நேபாளம் வந்துள்ளார். இதனால், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.