Friday, 1 August 2008

களமுனையில் புலிகளின் மௌனம் குறித்து இராணுவம் எச்சரிக்கை: 'மிறர்' பாதுகாப்பு ஆய்வாளர்

ஏ-9 வீதியின் கிழக்காகவும், மேற்காகவும் பெருமளவு பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இலங்கை இராணுவத்தினர், விடுதலைப் புலிகள் இதுவரையில் பாரிய தாக்குதல் எதனையும் மேற்கொள்ளாது மௌனமாக இருந்துவருவது குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக டெய்லி மிறர் பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசேகர தனது வாராந்த பாதுகாப்பு ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இலங்கைப் படையினரின் துரித முன்னேற்றம் மற்றும் தமது பிரதான தளங்களிலிருந்தும் புலிகள் பெரியளவில் பின்வாங்கியுள்ளமை என்பன, அடுத்த கட்ட நகர்வுக்கான புலிகளின் இரகசிய நோக்கங்களை வெளிப்படுத்தவதாக இராணுவப் புலனாய்வுத்துறை எச்சரித்திருப்பதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4ஆவது ஈழப்போர் ஆரம்பாகி இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் புலிகளை தோற்கடிக்கலாம் என்ற நம்பிக்கை இலங்கைப் படையினருக்கு ஏற்பட்டுள்ளபோதும், விடுதலைப் புலிகளின் தலைமையின் தொடர்ச்சியான மௌனம், அடுத்து வரும் மாதங்களில் ஏதேனும் எதிர்பாராத விடயங்கள் இடம்பெறலாம் என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவித்திருப்பதாகக் குறிப்பிடும் மிறர் பாதுகாப்பு ஆய்வாளர் ஜயசிறி,

கடந்த காலங்களிலும் இவ்வாறு படையினரின் முன்னேற்ற நடவடிக்கைகளின்போது தந்திரோபாய ரீதியாக தமது தளங்களிலிருந்து பின்வாங்கி, இராணுவத்தினருக்கு அதிகம் பரிச்சயமில்லாத பகுதிகளுக்குள் அவர்களை இழுத்து, வாய்ப்பான ஒரு தருணத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தி, இழந்த பிரதேசங்களையும் கைப்பற்றி, படையினருக்குப் புலிகள் பலத்த இழப்புக்களையும் ஏற்படுத்தியிருப்பதை தனது பத்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், புலிகள் தமது படைப்பலத்தின் மூன்றில் இரண்டு பகுதியை இதுவரையில் இழந்திருப்பதாகக் குறிப்பிடும் அவர், படையினர் மீது பாரிய தாக்குதல் எதனையும் மேற்கொள்வதற்கான ஆள் மற்றும் படைக்கல வளங்கல் புலிகளிடம் இப்போது கிடையாது என்றும் விபரித்துள்ளார்.

யாழ்ப்பாண தரையிறக்கச் சாத்தியம்

யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றும் தமது நோக்கத்தை புலிகள் இன்னமும் கைவிடவில்லை என்பதால், யாழ் குடாநாட்டில் இன்னமும் புலிகளின் வசம் இருக்கும் நாகர்கோவில் பகுதியூடாக ஒரு எதிர்பாராத தரையிறக்கத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையைப் புலிகள் மேற்கொள்ளலாம் என்று இராணுவப் புலனாய்வாளர்கள் எச்சரித்திருப்பதாக மிறர் பாதுகாப்பு ஆய்வு குறிப்பிடுகிறது.

அல்லது, கிளிநொச்சி மாவட்டத்துக்குள் படையினர் நுழைந்ததும், 57வது படையணியை இலக்குவைத்து, அவர்கள் மீது பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக புலிகள் தற்போது மௌனம் காத்திருக்கக் கூடும் என்றும் அந்த ஆய்வில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எனினும், தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் கிடைத்த அதிகபட்ச மனவுறுதியுடன் படையினர் இருப்பதால் இது அவ்வளவுதூரம் சாத்தியமில்லை என்றும் ஜயசிறி வாதிடுகிறார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இந்தப் படையணி நுழைந்துவிட்டால், 2000, ஏப்ரல் 22இல் ஆனையிறவு படைத்தளத்திலிருந்து பின்வாங்கிய எட்டு வருடங்களின் பின்னர், முதற் தடவையாக மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் படையினர் பிரவேசிப்பர் என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவை ஆறு அணிகள் முற்றுகையிடும்

ஏ-9 வீதியின் மேற்குப் பகுதியை இராணுவம் கைப்பற்றிவிட்டால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை இராணுவத்தினரின் ஆறு அணிகள் முற்றுகையிடும் என்று விபரித்துள்ள சுனில் ஜயசிறி, இதனால், புலிகளின் தாக்குதல் அச்சம் பெருமளவில் குறைந்துவிடும் என்றும் வாதிடுகிறார்.

அடுத்த சில மாதங்கள் இரு பகுதியினருக்குமே மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும் என்றும் அவர் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.

களமுனையிலிருக்கும் படையினரின் தகவல்படி, சேதங்களைக் குறைத்துக்கொள்வதற்காக புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து பின்வாங்குவதற்கு படையினர் தயாராக இருப்பதாகவும், நிலங்களைக் கைப்பற்றுவதைவிட, பிரதேசங்களை விடுவிப்பதே படையினரது பிரதான நோக்கமாக இருக்கிறது எனறும் தனது ஆய்வில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொறிக்குள் சிக்கிய 25,000 பொதுமக்கள்

மாங்குளம்-துணுக்காய்-பூநகரி வீதியை படையினர் இப்போது துண்டித்திருப்பதால், வவுனிக்குளம் பிரதேசத்தில் சுமார் 25,000 பொதுமக்கள் கிளிநொச்சி மாவட்டத்தை நோக்கி இடம்பெயர முடியாமல் சிக்குண்டிருப்பதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

போக்கிடம் இல்லாத காரணத்தினால் இந்த மக்கள் வீதியோரங்களில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் டெய்லி மிறர் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசிறி தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்கள் வீழ்ச்சி அடைந்தாலும் புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடையாது - தம்பியண்ணா

தமிழக மக்களை நாம் சகோதரர்களாவே கருதுகிறோம். நான் கைதானதால் புலிகள் இயக்கத்திற்கு எவ்விதப் பாதிப்பபும் இல்லை.

எமது இயக்கத்தில் தலைவர்கள் வீழ்ந்தாலும் ஒருபோதும் இயக்கம் வீழ்ச்சியடையாது என கடந்த புதன் கிழமை சென்னை வளசரவாக்கதில் கைதான புலிகள் இயக்க உறுப்பினர் என சந்தேகப்படும் டானியல் தெரிவித்துள்ளார்.

தம்பிஅண்ணா எனப்படும் டானியல் (வயது 40) குறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையை தொடர்ந்தே இவரது வீட்டில் வைத்து கைதுசெய்யபட்டார்.

தொடர்ந்து பொலிஸார் அவரை இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் :

இராமேஸ்வரத்திலிருந்து பொருட்களை கடத்தி வருவதை நாம் வாடிக்ககையாக கொண்டுள்ளோம். தற்போது பொலிஸ் கெடுபிடியால் இராமேஸ்வரத்திலிருந்து பொருட்களை கடத்துவது சிரமமாக உள்ளது.

இதனால் வேறிடத்தில் இருந்து கடத்த முடிவு செய்தோம். இதற்கான புதிய வியூகம் அமைப்பதற்கு நான் மட்டும் தனியாகவே படகு மூலம் ஜூலை முதலாம் திகதியன்று தமிழகத்திற்கு வந்தேன்.

தொடர்ந்து சென்னiயில் வளசரவாக்கத்தில் நண்பர் ஒருவருடன் தங்கியிருந்தேன்.

பொருட்களை கடத்துவதற்கு வசதியான இடத்தை தெரிவு செய்வதற்கு தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதியான அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், தேவிப்பட்டினம், கோட்டை பட்டினம் ஆகிய பகுதிகளை சென்று பார்வையிட்டேன்.

தமிகத்தில் கோடியாக்கரை பகுதியில் இருந்து இயந்திரப் படகு மூலம் ஒரு மணி நேரத்திற்குள் இலங்கைக்கு சென்றுவிடலாம். எனவே அங்கிருந்து பொருட்கைள படகு மூலம் கடத்தலாமா என்பது பற்றி ஆலோசனை நடத்தினோம். அந்த விஷயத்தில் இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்குள் பொலிஸார் பிடித்துவிட்டனர்.

நான் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் சாதாரண போர் வீரனாக முதலில் பணியாற்றினேன். அப்போது இலங்கை கடற்படையினரோடு நேரடியாக பலமுறை மோதல்களில் ஈடுபட்டேன்.

புலிகள் இயக்கத்தில் கடும் கட்டுப்பாடுகள் இருந்தாலும் மனைவி, குழந்தைகளோடு தனியாக குடும்பம் நடத்தி கொள்ளலாம். மத நம்பிக்கை வைப்பதிலும் தடையில்லை. குழந்தைகளை படிக்க வைப்பது முதல், குடும்பம் நடத்துவதற்கான அனைத்து செலவுகளையும் புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளும்.

எனது மனைவியின் பெயர் ஸ்ரீதேவி, எனக்கு 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் இன்னோரு மகனும் உள்ளனர்.

கிறிதஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ள நான், தமிழகத்திற்கு வரும்போது வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். அதை ஒரு வேண்டுதலாகவும் வைத்திருந்தேன்.

நாம் தமிழக மக்களை எமது சகோதரர்களாகவே கருதுகிறோம். நான் பிடிபட்டதால் புலிகள் இயக்கத்துக்கு எந்த பின்னடைவும் இல்லை. என்னுடைய இடத்தில் இப்போது வேறோருவர் நியமிக்கப்பட்டிருபார்.

எனவே, விடுதலைப்புலிகள் இயக்கம் தலைவர்கள் வீழ்ச்சி அடைந்தாலும், இயக்கம் ஒரு போதும் வீழ்ச்சியடையாது.

இவ்வாறு தம்பி அண்ணா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதனைத் தொடார்ந்து இவர் நீதிமன்றில் அஜர்ப்படுத்தப்பட்டதையடுத்த
தற்போது 15 நாள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்ட.மிட்டுள்ளனர். அப்போது அவரிடமிருந்து மேலும் திடுக்கிடும் தகவல்களை பெறலாம் என கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நன்றி : வீரகேசரி.

பிள்ளையானை சந்திக்கிறார் இந்திய வெளியுறவு செயலர் ,கருணா ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளார்,

sivshangar.jpgஇலங்கை வருகைதந்துள்ள இந்திய பிரதமர் பிள்ளையான்குழு தலைவர் பிள்ளையானை சந்திக்கும் வாய்ப்பு இல்லாவிடினும் கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவை சந்திக்கவுள்ளதாகவும் பிள்ளையானை இந்திய வெளியுறவு செயலர் சிவ்சங்கர்மேனன் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்க்கட்சி தலைவர் ரணில்விக்ரமசிங்க,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம்,தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனும் ,மிலிந்தமொரகொட மற்றும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை இன்று இரவு தமிழ் கட்சிகளையும் முஸ்லிம் கட்சிகளையும் பிரமர் மன்மோகன் சிங் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருணா ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளார்

karunaa.jpgஒட்டுக்குழுவான கருணா குழுவின் தலைவர் கருணா, சார்க் மாநாடு நிறைவுற்றபின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தான் அரசியலில் நுழைவது குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இந்தச் சந்திப்புக்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இச்சந்திப்பின்போது தமது கட்சியின் புதிய கட்டமைப்பு குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக விளக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


" நான் எனது கட்சியை மீள ஒழுங்கமைத்துள்ளேன். அத்துடன், கிழக்கிலுள்ள பொதுமக்கள் மத்தியில் சிறிய குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.


இந்தக் குழுக்கள் மூலம் சில அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியலில் நுழைவதற்கு நான் தயாராகவுள்ளேன். இந்த விடயத்தை ஜனாதிபதியிடம் எத்திவைக்க காத்திருக்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தமது கட்சி உறுப்பினர்கள் தான் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்வதற்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


"நான் ஜனாதிபதியுடன் அதிகமான விடயங்களைக் கலந்துரையாடவுள்ளேன். கிழக்கு மக்களின் நன்மை கருதி ஏற்கனவே கிழக்கை மீளக்கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளேன்" என்றும் கருணா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் தம்மைச் சந்திக்காமை குறித்துக் கருணா கவலை--அழுதிருவன்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தமது கட்சியினர் சந்திக்க முடியாது போயுள்ளமை குறித்துக் கருணா கவலை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு விடயங்கள் குறித்து, இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடவிருந்ததாகக் கருணா குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்திய பிரதமர் தம்மைச் சந்திக்காமை குறித்து இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கிழக்கில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்;.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியப் பிரதமரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டமை ஆச்சரியப்பட வைப்பதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

NTT News Tamil 01.08.2008

தியத்தலாவை முகாமில் இராணுவ வீராங்கனை ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயமடைந்து பின் மரணம்

தியத்தலாவை இராணுவ முகாமின் இராணுவ வீராங்கனை ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் மரணமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் முப்பதாம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது. இருபத்திரண்டு வயதுடைய மதுசானி அத்தநாயக்க என்ற இராணுவ வீராங்கனையே சம்பவத்தில் மரணமானவராவார்.

இத்துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பான தீவிர புலனாய்வு விசாரணைகளை தியத்தலாவை பொலீசார் தியத்தலாவை இராணுவ முகாம் பொலீசாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஓய்வூதியம் பெறுவோர் 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில்

கொழும்பு மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோருள் நாலாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக கொழும்பு மாவ்ட செயலர் ஜீ.ஏ.ஜே சில்வெஸ்டர் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்த ஓய்வூதியம் பெறுவோர் பற்றிய உண்மை நிலைமைகளை கண்டறியுமாறும்,

ஓய்வூதியம் தொடர்ந்தும் வழங்குவது தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்திற்கு அறிவித்து அந்தச் சம்பளத்தை ஓய்வூதிய திணைக்களத்தின் பொறுப்பில் ஏற்குமாறும் மாவட்ட செயலர் சில்வெஸ்டர் ஓய்வூதிய திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தைக் கேட்டுள்ளார்.


வெளிநாடுகளிலுள்ள ஓய்வூதியக் காரர்களுக்கு வருடாந்தம் பத்து மில்லியன் டொலர்களை ஓய்வூதிய கொடுப்பனவுக்கு அரசாங்கம் செலவிட்டு வருவதாகவும் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் கே.ஏ.திலகரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு மாவடத்தில் 88.727 ஓய்வூதியக்காரர்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதியில் இரு அதிரப் படையினர் படுகாயம்

அம்பாறை கஞ்சிகுடிசாறு வனப் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தச் சென்ற அதிரடிப் படைடியினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரு அதிரப்படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் இவ் வனப் பகுதிக்குள் நுழைந்த படையினர் விடுதலைப் புலிகள் தற்காப்புச் சமரை நடத்தியுள்ளனர். இதன் போதே இரு அதிரடிப் படையினர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த படையினருள் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதென விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைத் தமிழர்களைக் இந்தியா ஒருபோதும் கைவிடாது--இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

இலங்கைத் தமிழர்களைக் இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வின்போது தமிழர்களுக்கு முக்கியத்துவம் வழங்கித் தீர்வு முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை நேரம் இன்று (ஓகஸ்ட்1) மாலை இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.


இதன்போது வடக்குகிழக்கு இணைப்பைத் தாம் வலியுறுத்தியதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த இணைப்பு மேற்கொள்ளப்படாத நிலையில் தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும் எனச் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவது தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மன்மோகன் சிங்கிற்கு விளக்கமளித்தனர்.

இலங்கைப்படையினர் அனைத்து ஆயுதங்களையும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குறிப்பிட்டது.


இலங்கை அரசாங்கம் இந்தியா தம்பக்கம் இருப்பதாகத் தெரிவித்துக் கொண்டே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினார்.

இலங்கை அரசாங்கம் அத்துமீறிய குடியேற்றம் மட்டுமல்லாது அனைத்திலும் சிங்கள மயம் என்ற கொள்கையையும் திணித்து வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர்.


இந்தநிலையில் கருத்துரைத்த இந்திய மன்மோகன் சிங், தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தாம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தீர்வையல்ல அரசியல் தீர்வையே இந்தியா, இலங்கையில் ஏற்படவேண்டும் என வலியுறுத்துகிறது என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

இருமுறை கடத்தப்பட்ட சிறுவனை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு ஆயுததாரிகள் மிரட்டல்

மட்டக்களப்பு கதிரவெளி அம்பன்தானாவெளியைச் சேர்ந்த 15 வயதுடைய சுந்தரலிங்கம் குணதாசன் என்ற சிறுவன் தொடர்ச்சியாக இருதடவைகள் கடத்தப்பட்டு தற்போது துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரைக் கடத்தியவர்கள் தம்மிடம் அவனை மீண்டும் ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளனர்.

இந்த சிறுவன் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி வாகரை யுத்தமுனையில் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு 18. ஏப்ரல் 2008 இல் விடுவிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்த சிறுவன் மீண்டும் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி கடத்தப்பட்டு ஜூலை 21 ஆம் திகதி சுடப்பட்டு காயங்களுக்கு உள்ளானநிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சிறுவனைக் கடத்திச்சென்றவர்கள் அவனை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்களிடம் கோரியுள்ளனர்.

கல்முனை பாத்திமா கல்லூரி மாணவன் கடத்தல் - கண்ணீரில் தாயார்

வெள்ளை வானில் சென்றவர்களால், கடந்த புதன்கிழமையன்று இரவு 10 மணிக்கு, அம்பாறை கல்முனையில், 16 வயது சிறுவன் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

கோவில் வீதி கல்முனையை சேர்ந்த தர்சன் என அழைக்கப்படும், பாஸ்கரன் துஷாந்தன் என்பவரே கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

கல்முனை பாத்திமா கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் பயிலும் தர்சன் கடந்த 6 மாதக்காலமாக இந்த வீட்டில் வசித்து வருவதாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து கல்முனைக் காவற்துறை மற்றும் மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறையிட்டுள்ளதாக இந்தத் தாய் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இலங்கைப் படையினர் பிரவேசித்திருப்பதாகக் கூறுகிறது பாதுகாப்பு அமைச்சகம்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைப்புறங்களில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினர் குறிப்பிட்டு அடையாளம் சொல்ல முடியாத இடம் ஒன்றில் கிளிநொச்சி மாவட்டத்தினுள் பிரவேசித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் பூனகரி வீதியில் மூன்றாம்பிட்டிப் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளில் 5 பேரின் சடலங்கள் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இதேவேளை 5 விடுதலைப் புலிகளின் சடலங்களை இராணுவத்தினர் வெள்ளியன்று மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வன்னிக் களமுனைகளின் பல இடங்களிலும் நேற்று இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் 20 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை மேற்கு, துணுக்காய் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு தொகுதியினர் ஏ9 வீதியின் இரு பக்கங்களிலும் மாங்குளம் தொடக்கம் கிளிநொச்சி வரையில் மரங்களுக்கு கீழ் தஞ்சமடைந்துள்ளதாகக் கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாகர்கோவில் ஊடாக தரையிறங்கி குடாநாட்டை கைப்பற்ற புலிகள் திட்டம்: சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி ஊடாக தரையிறக்கம் ஒன்றை மேற்கொள்வதன் மூலம் யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கலாம் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை வட்டாரங்கள் இராணுவத்தை எச்சரித்துள்ளன.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள படைத்துறை வட்டாரங்கள் கருத்து வெளியிடும்போது தெரிவித்திருப்பதாவது:

ஏ-9 வீதிக்கு மேற்காக தற்போது பாரிய இழப்புக்களை சந்தித்துவரும் விடுதலைப் புலிகள், புதிய களமுனையை திறக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

சிறிலங்கா இராணுவத்தின் சுமார் ஆறுக்கும் அதிகமான டிவிசன்கள், ஏ-9 வீதிக்கு மேற்காக படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இராணுவத்திற்கு பழக்கமில்லாத நிலப்பிரதேசங்களுக்குள் அவர்களை உள்ளே வரவிட்ட பின்னர் தாக்குதல்களை மேற்கொள்ளும் விடுதலைப் புலிகளின் பழைய தந்திரோபாயங்கள் தற்போது நடைபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில், எந்த எதிர்ப்புமின்றி - தமது இழப்புக்களை குறைத்துக்கொள்ளும் வகையில் - வன்னியின் மேற்குப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் தொடர்ந்து பின்வாங்கி செல்வது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அங்கு வலிந்த தாக்குதல் ஒன்றை விடுதலைப் புலிகள் மேற்கொண்டால், அது அவர்களுக்கு பாரிய இழப்பையே ஏற்படுத்தும் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்.

கிளிநொச்சியை நோக்கி நகரும் இராணுவத்தின் 57 ஆவது படையணி - எதிர்காலத்தில் - விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய ஆபத்து இருக்கிறது.

ஆனாலும், வன்னியின் மேற்குப் பகுதியில் பெற்றுக்கொண்ட தொடர்ச்சியான வெற்றிகளால், இராணுவத்தின் மனவலிமை அதிகரித்திருக்கின்றது.

ஆகவே, விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதலின்போது உடனடியாக அவர்கள் பின்வாங்குவார்கள் என்பதை இந்த தடவை எதிர்பார்க்கமுடியாது.

இவ்வாறான ஒரு நிலையில், விடுதலைப் புலிகள் நாகர்கோவில் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தின் உடாக தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு, ஈரூடக தாக்குதலை நடத்தி, குடாநாட்டை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கலாம்.

வன்னியின் மேற்குப் பகுதியின் பெரும்பாலான பிரதேசங்கள் படையினர் வசம் வீழ்ந்து விட்ட காரணத்தினால், குடாநாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள தீவுகளின் ஊடாக வந்து தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகளுக்கு தற்போது சாத்தியமில்லாத நகர்வு ஆகும்.

ஆகவே, அடுத்த சில மாதங்களில் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதலுக்கான முயற்சியை படைகள் எதிர்பார்க்கலாம்.

இதேவேளை, வன்னியின் மேற்கில் படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை தக்க வைத்திருக்கும் படையணிகள், அங்கிருந்து அகற்றப்படவுள்ளன என்று தெரியவருகிறது.

களமுனைகளில் தாக்குதல் நடத்தும் படையினர் தமது நிலைகளை வலுவாக்கும் பணிகளை நிறைவுசெய்து விட்டபடியாலும் அந்த வலுவான முன்னரங்குகளை உடைத்துக்கொண்டு புலிகள் உள்ளே வரமுடியாது என்று இராணுவம் நம்பிக்கை கொண்டுள்ளதாலும், முன்னர் கைப்பற்றிய பிரதேசங்களை தக்கவைத்திருக்கும் படைகளை வேறு பிரதேசங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை,இந்தியர்கள் உட்பட்டவர்களுக்கு வருகையின் பின் விசா முறையை மலேசியா ரத்துச் செய்துள்ளது

இலங்கை உட்பட 27நாடுகளின் பிரஜைகள் நாட்டுக்குள் வருவதற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் விமான நிலையத்தில் வைத்து வழங்கப்படும் விசாமுறை அனுமதியை மலேசியா இன்று முதல் ரத்துச் செய்துள்ளது.

இதன்படி இந்த அனுமதி மறுப்பு இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாட்டு பிரஜைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது

இதனைத்தவிர்ந்த அனுமதி மறுக்கப்பட்ட ஏனைய நாடுகள் ஆபிரிக்க நாடுகளாகும். இதுதொடர்பாக மலேசியாவின் உள்துறை அமைச்சுக் கடந்த வாரமே சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சின் செயலாளர் விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளார்.

எனினும் மலேசியாவுக்கு வருவோர் அவரவர் நாடுகளில் உள்ள மலேசிய தூதரகங்களின் விசா அனுமதியைப் பெற வேண்டியிருக்கும் என்றும் புத்ரா குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முக்கிய இரு பெண் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்

 மணலாறு பகுதியின் வடக்கே இடம்பெறும் இன்றைய மோதல்களின் போது விடுதலைப் புலிகளின் பெண் தலைமை போராளிகள் இருவர் உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் லுத்தினல் கேர்ணல் அங்கம்மா மற்றும் பகுதிப் பொறுப்பாளர் மதிவதனி ஆகியோர் அடங்குகின்றனர் என இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

சூரிய கிரகணம் இலங்கையிலும் தென்பட்டது.


சூரிய கிரகணத்தை இன்று மாலை 4.59 மணியில் இருந்து 5.30 வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

இந்தச் சூரிய கிரகணத்தை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நேரங்களில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

இதேவேளை இந்தச் சூரிய கிரகணத்தைப் பொதுமக்கள் நேரடியாகப் பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

கிழக்கு மாகாண தமிழ்மொழி தினப் போட்டிகள்

கிழக்கு மாகாண தமிழ்மொழி தினப் போட்டிகள் நாளை மட்டக்களப்பில் ஆரம்பமாகிறது என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண தமிழ்மொழி தினப் போட்டிகள் நாளையும் மறுதினமும் மட்டக்களப்பில் நடைபெற சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் சற்று முன்னர் அங்கிருந்து தெரிவித்தார்.

கிழக்கு மாகாண தமிழ்மொழி தினப் போட்டிகளில் மொத்தம் 50 போட்டிகள் நடைபெறவுள்ளன. ; 3 மாவட்டங்களிலிருந்தும் 412 போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர்.
கிழக்கின் பாரம்பரிய கூத்துக் கலையிலும் 5 போட்டிகள் நடாத்தப்படுமென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சி.தண்டாயுதபாணி மேலும் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் 2 வது மாகாண மட்ட போட்டியான இப் போட்டியில் 3 மாவட்டங்களிலிருந்தும் போட்டியாளர்கள் மட்டக்களப்பு வந்து சேர்ந்துள்ளனர்.

தப்பிச் சென்ற ஆயிரம் படையினரைக் கைது செய்யத் திட்டம்

முப்படையைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படையிலிருந்து தப்பிச் சென்றவர்கள், விடுமுறைக்குச் சென்று திரும்பாதவர்கள் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளனர்.

இவ்வாறு சிறையில் அடைக்கப்படவுள்ள ஒரு தொகுதி படைவீரர்கள் தற்போது நுகேகொட இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த படைவீரர்கள் கட்டம் கட்டமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏங்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையாக- ஓயாத அலைகளாக- இன்றும் உறுமுகிற ஒரே அமைப்பு "விடுதலைப் புலிகளே": "ஆனந்த விகடன்" புகழாரம்


ஈழ விடுதலைக்காக சிறிலங்கா அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்றுவரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு- "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்றும் ஏங்கிக் கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான் என்றும் தமிழ்நாட்டின் முன்னணி வார ஏடான "ஆனந்த விகடன்" புகழாரம் சூட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆனந்த விகடன் இதழானது (06.08.08 பதிப்பு) "கருத்துக்கணிப்பு" ஒன்றை வெளியிட்டு பிரசுரித்துள்ள கட்டுரை:

ஜூலை 25, 1983..! இலங்கையில் இனவெறிக்கான வெறுப்பு விதை அழுத்தமாக விழுந்த நாள். சிங்கள இராணுவம் முதல்முறையாக ஈழத் தமிழ்ப் பகுதிகளில் வெறிபிடித்து வேட்டையாடி, அப்பாவித் தமிழர் பிணங்களை அடுக்கிய நாள். தனித் தமிழீழப் போராட்டத்துக்கு உணர்ச்சி நெருப்பேற்றிய அந்தக் கறுப்பு ஜூலை முடிந்து 25 வருடங்களாகின்றன!

அரை நூற்றாண்டு காலமாக போரின் இரத்தத்தில் நனைகிறது ஈழ மண். நிலம், குடும்பம், உயிர், உடைமை என எல்லாவற்றையும் இழந்து துயரத்தின் பிள்ளைகளாக வாழ்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஈழ விடுதலைக்காக, சிறிலங்கா அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்று வரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு, 'தமிழீழ விடுதலைப் புலிகள்'!

அனைத்துலக தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் ஒன்றாக இருந்தாலும், உலகில் வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாத கண்ணிய மரியாதை விடுதலைப் புலிகளுக்கு உண்டு. உலக நாடுகளின் துணையோடு எதிர்க்கிற சிறிலங்கா இராணுவத்துக்கு, புலிகள் ஒவ்வொரு கணமும் சிம்ம சொப்பனம்தான்!

"இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களை மீளச்செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். புலிகளை வீழ்த்த இன்னும் 10 ஆயிரம் வீரர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்!" என்று அறிவிக்கிறது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஒபாமா உலகின் மற்ற தீவிரவாத அமைப்புகளைக் கண்டிக்கிறார். ஆனால், புலிகள் பற்றிய கேள்விகளுக்கு அவரது பதில் மௌனம்தான். "செல்லடிக்கிற இரவுகளும் எங்கட பெண்டு பிள்ளைகளைக் கைபிடிச்சு இழுக்கிற ஆமிக்காரர்களும் இல்லாத எங்கட மண் வேண்டும்" என ஏங்கிக்கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான்!

ஆனால், புலிகள் அமைப்பு பலவீனமடைந்துவிட்டது, அமைப்புக்குள்ளேயும் உலக நாடுகளின் பார்வையிலும் அது பின்னடைவில் இருக்கிறது என்பது மாதிரியான தோற்றம் இப்போது ஏற்பட்டிருப்பது உண்மையா..? அன்டன் பாலசிங்கம், சுப.தமிழ்ச்செல்வன் போன்ற முக்கிய தளகர்த்தர்களின் மறைவு அவர்களுக்கு மறுக்க முடியாத இழப்புதான். ஆனால், "விடுதலைப் புலிகளுக்கு இழப்புகள் புதிதல்ல. திலீபன் தொடங்கி தமிழ்ச்செல்வன் வரை அவர்கள் இழப்புக்களில்தான் எழுந்து முளைத்திருக்கிறார்கள். 25 வருட போராட்டக்களத்தில் புலிகள் கண்ட இழப்புக்கள் நிகழ்காலச் சரித்திரத்தில் எந்த போராளிக்குழுக்களும் காணாதது. அவர்களை எதுவும் தடுக்க முடியாது" என்கிறார்கள் அனைத்துலக பார்வையாளர்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பகுதிகளில் சிங்கள இராணுவம் முன்னேறி வருகிறது என சிறிலங்கா அமைச்சகம் வெளியிடும் செய்திகளில் எத்தனை உண்மை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தச் சூழலில் இலங்கையில் நடக்கும் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை அடுத்து தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள் புலிகள். இந்த நேரத்தில் எல்லோருக்குள்ளும் எழுகிற கேள்விகள்... இலங்கை தமிழர் பிரச்னையில் இந்திய அரசின் நிலைப்பாடு சரிதானா? புலிகளின் போராட்டத்துக்குத் தமிழர்களிடையே ஆதரவு இருக்கிறதா..? தமிழீழம் அவசியமா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா?

"ஒற்றைத் துப்பாக்கி, ஐந்து வீரர்களோடு பிரபாகரன் தொடக்கிய அமைப்பு, இன்று 25 ஆயிரம் வீரர்கள் கொண்ட மாபெரும் இயக்கம்! தரைப் புலிகள், கடற்புலிகள், வான் புலிகள் என சகல திசைகளிலும் கிளை பரப்பும் புலிகளின் இராணுவக் கட்டமைப்பு அசாத்தியக் கச்சிதமானது. இதுவரை புலிகள் தற்காப்பு நிலையில்தான் போரிட்டார்கள். அவர்கள் தாக்குதல் நிலையை எடுக்கும்போது சிங்கள இராணுவம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தத் தருணத்துக்காகத்தான் புலிகள் காத்திருக்கிறார்கள்!" என்கிறார் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் நம்பிக்கையாக!

புலிகளின் நிரந்தர ஆதரவாளரான தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், "போர் தந்திரங்களின்படி சில இடங்களில் முன்னேறி, சில இடங்களில் பின்வாங்கினாலும் புலிகள் தங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். உலக நாடுகளிடமிருந்து ஆயுத உதவி பெறும் சிங்கள இராணுவத்திடம் பறித்தெடுத்த ஆயுதங்களைக்கொண்டே இத்தனை காலமும் வளமான போராட்டம் நடத்தி வருகிறார்கள் புலிகள்!" என்கிறார்.

"தமிழீழப் போராளிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் அறிவியல்பூர்வமாகவும் இராணுவ ரீதியாகவும் பெரும் வெற்றியைச் சந்தித்திருக்கிறது. அனைத்துலக அளவில் தமிழீழம் அங்கீகரிக்கப்படவில்லையே தவிர, இலங்கையில் தமிழீழத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே உண்மை. தமிழீழத்துக்கான அரசாங்கம் அமைக்கப்பட்டு, நீதி, காவல், கல்வி, மருத்துவம், நிதி என அனைத்துத்துறைகளும் சிறப்பாக இயங்கி வருகின்றன. சிறிலங்கா சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை ஒட்டி, புலிகள் அறிவித்திருக்கும் போர் நிறுத்தம் புலிகளின் நேர்மையை உலகுக்குக் காட்டுவதாக இருக்கிறது!" என்று பெருமிதப்படுகிறார் தொல்.திருமாவளவன்.

"ஏழு, எட்டு வயசுப் பசங்களை எல்லாம் தீவிரவாதிகளாக மாத்துறதுதான் ஒரு இயக்கத்தின் கொள்கையா இருந்தா, அப்படி ஒரு இயக்கம் எதுக்கு? தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இங்கே இருந்துதான் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கடத்துறாங்க புலிகள். இதனால் தமிழகத்துக்கு எப்பவும் பாதிப்புதான். இப்போ இலங்கைப் பிரச்சினையில் இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் சரி. தனி ஈழம் சரியான தீர்வு இல்லை" என்று காரசாரமான விமர்சனத்தைப் புலிகள் மீது வைக்கிறார் சோ.

பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரனோ "ஒவ்வொரு முறை சமரச உடன்படிக்கை ஏற்படும்போதும், சிறிலங்கா அரசுதான் அதை மீறிச் செயற்பட்டு இருக்கிறது. தமிழ் மக்களுக்குச் சம உரிமை வழங்குகிறோம் என்று அறிவித்துவிட்டு, ஒரே வாரத்தில் கொடுத்த வாக்குறுதியைக் குப்பையில்தான் சிறிலங்கா அரசு போடும். இதற்கு தனி ஈழம் அமைவது ஒன்றுதான் இறுதித் தீர்வாக அமையும்" என்கிறார் ஆவேசமாக.

"இதுவரை பாகிஸ்தான் உட்பட அசாதாரணச் சூழ்நிலை நிலவும் பல அண்டை நாடுகளில் எல்லாம் சார்க் மாநாடுகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் மூன்று கப்பல்களில் ஆயுதங்களும் 3 ஆயிரம் போர் வீரர்களும் பிரதமரின் பாதுகாப்புக்கு என்று போனதில்லை. இப்போதுதான் இந்த வேடிக்கை நடக்கிறது.

சிறிலங்காவைத் திருப்திப்படுத்தும் வேலையை மட்டுமே செய்து வருகிறது இந்திய அரசு. சிறிலங்காவின் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்த பல லட்சம் இந்தியத் தமிழர்களை ஒன்றுமில்லாத பிச்சைக்காரர்களாகத் திரும்பப் பெற்றது, கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது, அதன் பலனாக இன்றும் தமிழக மீனவர்களைப் பலி கொடுப்பது வரை இது தொடர்கிறது.

இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நாடுகளுடன் சிறிலங்கா உறவு வைத்துக்கொள்ளாது என்று நினைக்கிறது இந்திய அரசு. ஆனால், பாகிஸ்தானிய வானோடிகள்தான் சிங்களப் போர் வானூர்திகளை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவும் தன் இராணுவ தளத்தை இலங்கையில் அமைப்பதற்கு நேரம் பார்த்துவிட்டது. இதெல்லாம் தெரிந்தும் நம் டெல்லி அறிவுஜீவிகள் இப்படி இருக்கிறார்கள்!" என்று காட்டமாகிறார் பழ.நெடுமாறன்.

இந்தச் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் இயக்கத்தைக் கட்டுக்கோப்போடு முன்னெடுத்துச் செல்வதில் தீவிரமாக இருக்கிறார் பிரபாகரன் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து. "பிரபாகரனின் சிந்தனைதான் விடுதலைப் புலிகளின் சிந்தனை. கட்டுக்கோப்புடனும் தலைமைக்கு விசுவாசமாகவும் இருக்கும் விடுதலை இயக்கத்துக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது புலிகள் அமைப்பு. பிரபாகரன், திறமையான இராணுவத் திட்ட வகுப்பாளர் மட்டுமல்ல அரசியல் நுணுக்கமும் அறிந்தவர். மாறுகின்ற உலக நடப்புகள் எப்படியெல்லாம் தமிழர்களின் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதில் தீர்க்கமான ஞானம் உள்ளவர். ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அமெரிக்கா, இந்திய நிலைமைகள் தெரிந்த பின்பு, அடுத்த நகர்வை நோக்கிய முக்கியமான முடிவை பிரபாகரன் எடுப்பார்" - சமீபத்தில் இலங்கை இணையத்தளப் பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப்.

சரி... தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்..? தனி ஈழம், விடுதலைப் புலிகள் விடயத்தில் அவர்கள் மனநிலை என்ன என அறிந்துகொள்ள தமிழகம் முழுவதும் கணித்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது விகடன்.

முடிவுகள், தமிழக மக்களின் மனசாட்சியை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஈழ மண்ணில் அமைதி மலர வேண்டும், விடுதலை வெளிச்சம் பரவவேண்டும் என்பதே அது! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லையென அரசு தீர்மானம் -முடிவை மாற்றுமாறு இந்திய அதிகாரிகள் கடும் அழுத்தம்

இந்தியாவுடனான சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லையென அரசு தீர்மானம் -முடிவை மாற்றுமாறு இந்திய அதிகாரிகள் கடும் அழுத்தம்

இந்தியாவுடன் செய்து கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த பரந்தளவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (சீபா) அரசாங்கம் கையெழுத்திடாது என வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சீபா ஒப்பந்தத்தை கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வருகை தரும்போது கைச்சாத்திடுவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது..

இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பொருளாதார ஆலோசகர் குழு கூட்டத்தில் சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீபா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக இந்தியா இரு வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நேற்று சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கையின் முடிவு குறித்து தமது கடும் அதிருப்தியை தெரிவித்ததாகவும், இவ்வொப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகளை விளக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இலங்கையின் இந்த முடிவால் இந்தியா மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக இந்தியாவின் சிரேஷ்ட இராஜதந்திரியொருவர் தெரிவித்தார். இதே வேளை சீபா ஒப்பந்தத்தில் இலங்கையை கையெழுத்திடச் செய்வதற்கு இந்திய அதிகாரிகள் இலங்கைத் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்..

இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலும் வெளிவிவகார அமைச்சு மட்டத்திலும் இந்தியா கடும் அழுத்தங்களை கொடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும் சீபா ஒப்பந்தத்தினால் இலங்øக்கு எவ்விதமான பொருளாதார அனுகூலமும் ஏற்படப்போவதில்லையெனவும், மாறாக உள்நாட்டு கைத்தொழில்கள் நலிவடைவதற்கே இது வழிவகுக்குமென பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-வீரகேசரி

பொலிஸார் சைகையை மீறிச்சென்றவர் சுட்டுக்கொலை

பொலிஸாரின் சைகைகளை மீறிச்சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது நேற்றுமுன்தினமிரவு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

பாதுக்கை போப்பே பகுதியைச் சேர்ந்த துஷார (வயது23) என்ற இளைஞரே கொல்லப் பட்டவராவார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது

தந்தையை கொலை செய்த சிவில்பாதுகாப்பு சிப்பாய் கைது

கெப்பிற்றிகொல்லாவ கோனமெரியாவ பிரதேசத்தில் தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சிவில் பாதுகாப்பு சிப்பாய் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு 11.50 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர் கெபதிகொல்லாவ சிவில் பாதுகாப்பு படையில் கடமையாற்றி வருகின்றார். இந்தப் படுகொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய துப்பாக்கியையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு கருதி சிவில் பாதுகாப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு படையில் அங்கம் வகிக்கும் பலர் இவ்வாறான சட்டவிலோத சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

பயங்கரவாத செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு மூன்றாமிடம்

2008 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், பயங்கரவாத செயற்பாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3 ஆவது இடத்தில் உள்ளதாக பயங்கரவாதத்துக்கு எதிரான சிறப்பு பாதுகாப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் ஈராக் முதலிடத்தில் இருப்பதாக துருக்கியைத் தளமாகக் கொண்டியங்கும் மேற்படி நிலையம் குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இந்நிலையம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தக் காலப்பகுதியில் உலக நாடுகளில் 2396 பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றில் 4204 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன், 7614 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஈராக் உள்ளது. குறித்த காலபபகுதியில் ஈராக்கில் மாத்திரம் 857 பயங்கரவாதச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், ஆப்கானிஸ்தானில் 334, இலங்கையில் 327, பாகிஸ்தானில் 216, இந்தியாவில் 195, சோமாலியாவில் 112, துருக்கியில் 71, தாய்லாந்தில் 55, நேபாளில் 44, இஸ்ரேலில் 31 எனும் ஒழுங்கில் பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூரில் ஐந்து முஸ்லிம்கள் கடத்திச் செல்லப்பட்டனர்

மட்டக்களப்பு ஏறாவூர் மூன்றாம் குறிச்சியில் நேற்று இரவு 8.15 அளவில் ஐந்து முஸ்லிம்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மீனவ சங்கத் தலைவரான சமது, மற்றும் ஒரு ஆசிரியர் உட்பட்ட ஐந்துபேரே கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பிரதேசத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்த வேளையில் இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. வெள்ளைவானில் வந்த இராணுவ உடை அணிந்திருந்தவர்களே இவர்களைக் கடத்திச்சென்றதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஏறாவூரில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் பின்னணி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. கடத்திச்செல்லப்பட்டவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புலிகளுக்கு 54.25% ஆதரவு- தமிழீழமே தீர்வு- 55.44%- தடையை நீக்க வேண்டும்- 47.65% "ஆனந்த விகடன்" கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" தெரிவித்துள்ளது. ஆனந்த விகடன் இதழில் (06.08.08) இது தொடர்பில் இடம்பெற்றுள்ள கருத்துக் கணிப்பு விவரம்:











"விகடன்" கருத்துக்கணிப்பில் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி: பா.நடேசன்


தமிழீழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயம் என்று தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" நடத்திய கருத்துக்கணிப்பில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
"ஆனந்த விகடன்" (06.08.08 பதிப்பு) ஏட்டில் வெளியாகியுள்ள பா.நடேசனின் பேட்டி வருமாறு:

இலங்கையில் இப்போதைய நிலவரம் என்ன?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறிலங்கா அரசு, தனது இராணுவத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் மீதும் தமிழீழத் தேசத்தின் மீதும் மோசமான இனப் படுகொலையை மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் வாழ்விடங்கள் மீது வான்குண்டு வீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தாக்கி வருகிறது. தினமும் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.


உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்குமே இங்கே இப்போது பெரும் தட்டுப்பாடு.

மக்களைப் பட்டினி போட்டுக் கொன்றொழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என சிறிலங்கா அரசு எண்ணுகிறது. அண்மைக்காலத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வாழ்விடங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக விடுதலைப் புலிகள் வீராவேசத்துடன் போராடி வருகின்றனர்!

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு புலிகளின் போராட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் குறிப்பாக, தமிழக மக்களின் ஆதரவை எந்த வகையில் எதிர்பார்க்கிறீர்கள்?

இதைப் புலிகளின் போராட்டம் என்று குறிப்பிடுவதைவிட தமிழ் மக்களின் போராட்டம் என்று சொல்வதுதான் பொருத்தமானதாகும்.

எமது விடுதலைப் போராட்டத்துக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது. இதனைப் பிழையாக மதிப்பிட வேண்டாம். வரலாற்று ரீதியாக, இன, கலாசார ரீதியாக தமிழக மக்களுக்கும் எமக்கும் தொப்புள் கொடி உறவு இருந்து வருகின்றது. அவர்களின் ஆதரவு எமக்கு எப்போதும் இருந்தே வரும்.

தனி ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயமென்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எங்கள் நிருபர்களிடமும் எங்கள் இணையத்தளத்திலும் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுபற்றி தங்கள் கருத்து என்ன?

உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இவர்கள், எமது தலைவர் தொடர்பாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தவறானவையாகும். வெகுவிரைவில் இவர்களது கருத்துக்களில் மாற்றம் ஏற்படும் என உறுதியாகச் சொல்கின்றேன்.

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தப் போராட்டம்?

விடுதலைப் போராட்டங்களுக்கு கால எல்லைகள் வகுத்துப் போராடுவதில்லை. ஆனால், முழுமக்கள் பலத்தோடு எமது விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்!

அனைத்துலக சமூகம் உங்களையும் சிறிலங்கா அரசையும் எப்படிப் பார்க்கிறது?

அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசு பற்றி நன்றாகவே புரிந்தித்திருக்கிறது. அண்மையில்கூட ஐக்கிய நாடுகள்
சபையின் மனித உரிமை சபையிலிருந்து சிறிலங்கா நீக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

அனைத்துலக சமூகம் எமது போராட்டத்தைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள்.

எமது விடுதலைப் போராட்டம் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்துக்காக நடத்தும் போராட்டம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்!

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறியிருக்கிறதா?

சிறிலங்கா அரசின் இராஜதந்திர நகர்வுகள் எப்போதுமே இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் பாதகமாகவே இருந்து வந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனேயே அவர்கள் வரலாற்று ரீதியான உறவுகளையும் தொடர்புகளையும் பேணி வருகின்றனர்.


சிங்களக் கட்சிகளின் இந்தியா தொடர்பான அரசியல் கொள்கைகள் என்பன எப்போதுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானவையே. தற்போதைய போர்ச்சூழ்நிலையில் அது உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது.


இந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்பதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.

கொழும்பு-கட்டுநாயக்க வீதி நேரத்துக்கு நேரம் மூடப்படும்

சார்க் மாநட்டில் கலந்து கொள்ளும் அரச தலைவர்கள் இன்று இலங்கைக்கு வருகைதருவதை முன்னிட்டு, கொழும்பு-கட்டுநாயக்க வீதி இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை தொடர்ச்சியாக நேரத்துக்கு நேரம் மூடப்பட்டிருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை 30 நிமிட நேர இடைவெளிக்கு ஒரு தடவை இந்த வீதி மூடப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, பயணிகள் கொழும்புக்கு வருவதற்கு ஏனைய மாற்றுப் பாதைகளை பயன்படுத்த முடியும் எனவும் இல்லையேல், கொழும்பு-கட்டுநாயக்க வீதி திறக்கப்படுகின்ற நேர இடைவெளிகளில் சிறிது நேரம் காத்துநின்று பயணங்களைத் தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு நகரிலுள்ள வீதிகள் தொடர்ச்சியாக மூடப்படமாட்டாது எனவும், முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் நேரங்களில் மாத்திரம் போக்குவரத்துக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.