Thursday, 21 August 2008

பருவப் பெயர்ச்சி மழையால் வடக்கை நோக்கிய இராணுவ முன்நகர்வு தடைப்படும் சாத்தியம்- அரசியல் ஆய்வாளர்

வடக்கைக் கைப்பற்றும் நோக்கில் இலங்கை அரசாங்கப் படைகள் முன்னெடுத்திருக்கும் இராணுவ முன்நகர்வுகள் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆரம்பமாகும் பருவப்பெயர்ச்சி மழையால் தடைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர், முன்னாள் கேணல் சுசந்த செனவிரட்ன ஏ.பி.செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது முன்னெடுத்திருக்கும் இராணுவ முன்நகர்வானது கிழக்கைப் போன்று இலகுவானதாக அமைந்திருக்காதெனவும், கூடுதலான நிலக்கண்ணிவெடிகள் புதைத்து வைத்திருக்கக் கூடும் என்பதால் சிக்கல் நிறைந்த முன்நகர்வாக அமையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அண்மைய மோதல்களில் விடுதலைப் புலிகள் உடனடியாக பின்வாங்கிச் செல்கின்றமை, இராணுவத்தினரைக் கவரும் நிகழ்ச்சியாக அமைந்திருக்கலாம் என ஏ.பி.செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கும் செனவிரட்ன, காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் விடுதலைப் புலிகள் இன்னமும் தம்வசம் ஆட்லறி மற்றும் கனரக ஆயுதங்களை வைத்திருப்பதால், கடுமையான பதில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இந்த மௌனம் படையினருக்கு நல்லதாக அமையாது” என செனவிரட்ன கூறியுள்ளார்.

அண்மைய இராணுவ முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளைப் பலவீனமடையச் செய்துள்ளபோதும், இனப்பிரச்சினை மோதல்கள் மூலம் தீர்க்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

“உடனடியாகவோ அல்லது ஆறுதலாகவோ பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றுக்கு நாங்கள் செல்லவேண்டியே இருக்கும்” என அரசியல் ஆய்வாளர், முன்னாள் கேணல் சுசந்த செனவிரட்ன ஏ.பி.செய்திச் சேவைக்கு மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் வடமேல் பகுதியில் எட்டு மைல் விவசாய நிலங்களை அண்மித்திருப்பதால் அவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ முன்நகர்வுகளை மெதுவாக்கியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்திருப்பதாக ஏ.பி.செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிய இராணுவ முன்நகர்வை மேற்கொள்வதற்கு இராணுவத்தினர் இரவுவேளைகளில் போராடவேண்டி இருப்பதாகவும், இரவு வேளைகளிலேயே விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளைக் கைப்பற்றி அவற்றை ஒழிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரிகேடியர் கூறியுள்ளார்.

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்படுகின்றனர் - மன்னிப்புச் சபை

இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக, வன்னியில் இடம்பெயர்ந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் உணவுப்பற்றாக்குறை மற்றும் கூடாரங்களின்றி பெரும் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இடம்பெயர்ந்துள்ள பெண்களும், யுவதிகளும் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகிவருவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்கும், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் பகுதிகளுக்கும் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிறியளவு நம்பகரமான தகவல்கள் அங்கிருந்து கிடைத்துள்ளதாகவும் மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில், மோதலில் ஈடுபட்டுள்ள இருசாராரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ள மக்களை அரசாங்கம் தற்காலிக கூடாரங்களிலும், இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கவைத்துள்ளதாகவும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
"மன்னார் மாவட்டத்திலுள்ள களிமோட்டை முகாமில் 200 குடும்பங்கள் தங்கியிருப்பதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில், பாடசாலைக்குச் செல்வோரைத் தவிர வேறெவரும் படையினரின் விசேட அனுமதியின்றி வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை இருசாராரும் நீக்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ள மன்னிப்புச் சபை, இடம்பெயர்ந்த மக்கள் மோதல்களுக்கு மத்தியில் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
" இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்குவதற்கான 3 பெரிய தங்குமிடங்கள் அமைக்கப்பட வேண்டும். அத்துடன், ஓமந்தை சோதனைச் சாவடியூடாக மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும்" எனவும் மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14,000 குடும்பங்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாகவும், அரசாங்க தரவுகளின்படி, ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை மொத்தமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை 150,000 முதல் 160,000 வரை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

T.C.C ஐ தடைசெய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை கோரிக்கை

ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வரும் T.C.C என்ற தமிழ்க் கோடிநேசன் கமிட்டியை தடைசெய்யுமாறு இலங்கை அரசாங்கம் நேற்று(20) ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழர் புனர்வாழ்வு கழகம் தடைசெய்யப்பட்ட பின்னர், பிரான்சில் உள்ள இந்த ரி.சீ.சீ என்ற விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்பு அதிகளவான நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.


இந்த அமைப்பை தடைசெய்யுமாறு கோரும் மகஜரை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தமிழ் கோடிநேசன் கமிட்டி கடந்த இரண்டு மாதங்களில் மூன்று மில்லியன் பிராங் நிதியைச் சேகரித்துள்ளது.

விடுதலைப்புலிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்த நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பணாங்கொட இராணுவ முகாமில் படைச் சிப்பாய் தற்கொலை

பாணாங்கொட இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (19) இடம்பெற்றுள்ளது. மாத்தளையைச் சேர்ந்த ஜயவீர என்பரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகாமுக்குள் மூன்று சிப்பாய்கள் காவல் கடமையை பொறுப்பேற்றிருந்தனர்.


மூன்று கட்டங்களாக இவர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களில் தற்கொலை செய்து கொண்ட லான்ஸ் கேப்ரல் இரவு 10 மணிக்கு தனது காவல் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.


இதனடிப்படையில் இவர் காவல் கடமையை பொறுபேற்றுக் கொண்டதும் ஏனைய இருவரும் ஓய்வெடுக்க சென்றுள்ளனர். சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் துப்பாக்கி சத்தம் கேட்டதும் இவர்கள் சென்று பார்த்த போது லான்ஸ் கேப்ரல் துப்பாக்கி காயங்களுடன் கீழே விழுந்து கிடந்துள்ளார்.


துப்பாக்கிச் சூட்டில் அவரது மார்பு பகுதியிலும், தலையிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருந்ததாக ஹோமாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவற்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Wednesday, 20 August 2008

ஐவரைத் தடுத்து வைக்க மகிந்த சிறப்பு உத்தரவு

கொழும்பு துறைமுக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஐவரை மூன்று மாதங்களுக்கு தடுத்து வைப்பதற்கான சிறப்பு அதிகாரத்தை, சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார்.

இதன்மூலம் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாது, நீதிமன்ற விசாரணையின்றி தடுத்து வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா முப்படைகளின் தளபதி, மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, ஊடகவியாலாளர் திஸ்ஸநாயத்தை அடுத்த மாதம் 5ஆம் நாள்வரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஒருவர் கொலை

யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் 48 வயதான குட்டியன் சிவபாதம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை மாவடியில் உள்ள இவரின் வீட்டுக்கு சென்ற இனம் தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டபின் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து மரண விசாரணை மேற்கொண்ட பருத்தித்துறை நீதிமன்ற மேலதிக நீதிவான், சடலத்தை மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

மங்களம் மாஸ்டரின் வாகனம் மோதி ஊர்காவற்படைச்சிப்பாய் மரணம்

tmvplogo1.jpgவடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ரி.எம்.வி.பியின் மங்களம் மாஸ்டர் என அழைக்கப்படும் அய்யாத்துரை கதிர்காமத்தம்பி பயணித்த வாகனம் மோதியதில் ஊர்காவற்படைச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மங்களம் மாஸ்டர் பயணித்த ஜீப் வண்டி ஊர்காவல் படைச்சிப்பாய் சென்ற மோட்டார் சைக்களில் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜீப் வண்டியின் சாரதியை கைதுசெய்துள்ளதுடன் வண்டியை கைப்பற்றியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய மோதல்களில் நால்வர் பலி, 31 பேர் காயம் - படைத்தரப்பு

விடுதலைப் புலிகளுடனான நேற்றைய மோதல்களில் தமது தரப்பில் நால்வர் கொல்லப்பட்டு, மேலும் 30ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு, மணலாறு, ஆன்டான்குளத்தில் படைத் தரப்பில் ஒருரவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 6 படையினர் காயமடைந்துள்ளனர்.

மாந்தை கிழக்கில் துணுக்காய், மல்லாவி, மணியகுளம் பகுதியில் மூன்று படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் 23 படையினர் காயமடைந்துள்ளனர்.

யாழ் முகமாலை, வவுனியா பாலமோட்டையில் இரண்டு படையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த தகவல்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சே அறிவித்துள்ளது.

நேற்றைய மோதல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

பி.பி.சி செய்தியாளர் T.M.V.P குழுவால் மிரட்டப்பட்டதற்கு கண்டனம்

BBC உலக சேவையில் சிங்கள மொழியிலான சந்தேசிய ஒலிபரப்பின் செய்தியாளர் T.M.V.P துணைப்படைக் குழுவால் மிரப்பட்டதற்கு, கொழும்பை தளமாகக் கொண்ட ஐந்து முக்கிய ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சந்தேசிய ஒலிபரப்பின் பொலநறுவை செய்தியாளர் தக்சிலா ஜெயசேன (Thakshila Jayasena) பொலநறுவையில் தேர்தலில் போட்டியிடும் துணைப்படைக் குழுவின் மங்களம் மாஸ்ரர் என்பவரது அடியாட்களால் நேற்று முன்தினம் மிரட்டப்பட்டிருந்தார்.

பொலநறுவை மன்னம்பிட்டியவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பேரணி பற்றிய செய்தியை சேகரித்துவிட்டு பொலநறுவை நகர் நோக்கிச் சென்றபோது இவர் மிரட்டப்பட்டிருந்தார்.

வந்தாறு மூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் சிங்களத்தின் காடைத்தனம்!

நேற்றைய தினம் கிழக்குப் பல்கலைக்கழக முதலாம் வருட முகாமைத்துவ தழிழ் மாணவி ஒருவருக்கு இறுதி ஆண்டு சிங்கள மாணவியால் பகிடிவதை எனும் பெயரில் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகாமைத்துவக்கற்கை நெறிக்குத் தெரிவான முதலாம் ஆண்டு தழிழ் மாணவியை மேடையில் ஏற்றிய இறுதியாண்டு சிங்கள மாணவி சக ஆண்டு சிங்கள ஆண் மாணவகர் கை கொட்டி சிரிக்க குறித்த மாணவியின் உள்ளாடையினை கழற்றும் படி வற்புறுத்தி கழற்ற வைக்கப்பட்டுள்ளது. பீதியின் காரணம் பணிந்து குறித்த மாணவி அந்த துன்புறுத்தலின் பின்னர் மனநோயாளிக மாறியுள்ளார். மேலும் தொடர்ந்து கற்கை நெறியினை மேற்கொள்ள முடியாத அளவுக்கு மனநோயாளியாக மாறியுள்ளார்.

குறித்த காடைத்தனத்தினை மேற்கொண்ட சிங்கள மாணவி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவரின் உறவுக்காரி என்பதால் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக வாய் பேசா மௌனியாக இருப்பதாகத் தெரியவருகின்றது

இவ்வாண்டு சிங்கள மாணவர்களின் ஆதிக்கம் பல்கலைக்கழகத்தில் அதிகரித்துள்ளது மாத்திரமல்லாமல் தமிழ் மாணவ மாணவியரின் கல்விக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளும் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படுவதாக தெரியவருகின்றது.

மேலும், சிங்கள மாணவர்களின் வழிபாட்டிற்காக ஓர் பௌத்த விகாரையும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. மேலும் சிங்கள மாணவரின் வேண்டுகொழுக்கு இணக்க தங்களது தங்குமிட பொறுப்பதிகாரியாக ஓர் சிங்களவர் நியமிக்கபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

நான்கு இலட்சம் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவி செய்ய ஆறரைக் கோடி தமிழர்களால் முடியவில்லை - டி.இராஜேந்திரன்

தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியவில்லை என்றும் மத்தியில் 40 தமிழக எம்பிக்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறினார்.

அக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நடந்துது. அதில் டி.ராஜேந்தர் பேசியதாவது:

லட்சிய திமுக தொடங்கி 5வது ஆண்டில் அஞ்சாமல் நடைபோடுகிறோம். இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் திமுகவில் இணைந்தேன். தமிழன் என்ற உணர்வு என்னிடம் உள்ளதால் இதை நான் செய்தேன்.

கன்னடர்களுக்கு இருக்கும் இன உணர்வு தமிழர்களுக்கு இல்லை. குலேசன் படத்தை கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்றால் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டால்தான் விடுவோம் என்று கூறினார்கள்.

அதனால் அவர் மன்னிப்பு கேட்டு படத்தை அங்கு வெளியிட்டுள்ளார். ஒகேனக்கல் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட நடிகர்கள் உண்ணாவிரதத்தில்இ ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தியது தமிழர்களின் குற்றம்.

இலங்கையின் வட மாநிலங்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்குள்ள 4 லட்சம் மக்களில் 2 லட்சம் பேர் அகதிகள். அவர்களுக்கு சாப்பாடு மருந்து எதுவும் இல்லை. செஞ்சிலுவை சங்கம் மூலம் மருந்தையும் அங்கு கொண்டு போக முடியவில்லை. மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த 40 எம்பிக்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை.

மற்ற மாநிலத்தினர் இலங்கையில் இருந்து அவர்கள் தாக்கப்பட்டால் சும்மா விடுவார்களா?. ஆறரை கோடி தமிழர்களால் 4 லட்சம் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்க உணர்வில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்

கொட்டாஞ்சேனையில் காவற்துறை சிப்பாயின் கழுத்து அறுப்பு

கொட்டாஞ்சேனை ஜெம்பட்டா வீதி காவல்துறை சிப்பாய் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

24 வயதான இந்திக பண்டார என்ற காவற்துறை சிப்பாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

புலிகளுக்கு உதவியதாக நீதிமன்றத்தினால் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டிருந்த அச்சகம் ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அச்சகத்தின் உரிமையாளர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசாங்கமே பதிலளிக்க வேண்டும்- மனோ கணேசன்

கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையில் குறைந்து கூடும் நிலைமை காணப்பட்டாலும் இதுவரை காணாமல் போனவர்கள் குறித்து அரசாங்கமே பதில்கூறவேண்டும் என மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

“கடந்த வாரங்களில் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறைவாகக் கிடைத்துள்ளது என்பதற்காக கடத்தல்கள் குறைவடைந்து விட்டதாகக் கூறிவிட முடியாது. நேற்றுக் கூட இரண்டு கடத்தல் சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்திருக்கின்றன” என மனோ கணேசன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

“கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை கூடிக் குறைந்தாலும், இதுவரை கடத்தப்பட்டவர்கள் குறித்து யார் பதிலளிப்பது” என அவர் கேள்வியெழுப்பினார்.

இந்த வருடத்தில் இதுவரை 104 பேர் காணாமல் போயிருப்பதாக மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் சுமார் 200 பேர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லையெனவும் மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

“கடத்தல் சம்பவங்கள் குறைந்துவிட்டன, பிரச்சினை தீர்ந்துவிட்டது எனக் கூறி அரசாங்கம் தப்பிக்கொள்ள முடியாது. காணாமல் போனவர்கள் குறித்து அரசாங்கமே பதில் சொல்லவேண்டும்” என மனோ கணேசன் கூறினார்.

கடத்தல் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன என்பதை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனக் குறிப்பிட்ட மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பட்டாளர், அண்மைய பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக கடத்தல்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் இதனைவிட கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக கடத்தல் சம்பவங்கள் குறைவடைந்து சென்றிருப்பதாகத் தெரிவித்திருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் ரஞ்சித் குணசேகர, பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கைகளாலேயே கடத்தல் சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் கூறினார்.

கடற்படையால் இழுத்துச் செல்லப்பட்ட கணவர் வெள்ளைவான் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்--ஒரு அதிர்ச்சி ரிப்போட்

கொழும்பு புதுச்செட்டித்தெரு 70/27ஆம் இலக்கத்தில் வசித்து வந்த யாழ்.நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராஜா பாலகுமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு கடற்படையினரால் இழுத்துச் செல்லப்பட்டு பின் இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் சென்ற தமிழ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார் என அவரது மனைவியான ரோகினி பாலகுமார் முறைப்பாடு செய்துள்ளார்.



வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த முறைப்பாட்டில் கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வீட்டுச் சோதனைக்காக பிரவேசித்த கடற்படைச் சிப்பாய்கள் தனது கணவரை தாக்கி இழுத்துச்சென்று இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் வந்திருந்த தமிழ்க் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.



அவர்களுடன் காவற்துறைக் கான்ஸ்டபிள் ஒருவர் இருந்தார் எனவும் ரோகினி தெரிவித்தார். ஏற்கனவே இதே விலாசத்திலிருந்த மார்க்கண்டு வடிவானந்தன் கடந்த 2006ஆம் ஆண்டு 24ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.



இவரை விடுவிப்பதற்கு நிறுவன உரிமையாளர் 35 லட்சம் பணம் கப்பமாகச் செலுத்தியபோதும் அவர் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என்றும், உரிமையாளர் தற்போது தமிழ் நாட்டில் தங்கியிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பிட்ட தமிழ்க்குழு பாலகுமாரை முன்னர் ஒருமுறை எச்சரித்துச் சென்றது எனவும், அதன் பிறகே கடற்படையினரின் உதவியுடன் தமிழ்க் குழுவால் தனது கணவர் கடத்தப்பட்டுள்ளார் எனவும் ரோகினி தெரிவித்தார்.


இதேவேளை, கடந்த 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை வத்தளை, ஹூணுப்பிட்டிய, சிறிஜயந்தி மாவத்தையில் வசிக்கும் கிறீஸ்தோதிரம் பிரான்சிஸ் சேர்ச்சில் என்ற 49 வயதுடைய தமிழர், இரவு 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்துத் தாக்குதலுக்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டு பின்னர் கடத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.



இவர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அதேவேளை இவர் வெளிநாட்டில் தொழில் புரிந்துகொண்டிருந்தபோது 1997இல் ஏற்பட்ட ஒரு வாகன விபத்தில் தனது ஒரு காலை இழந்தவர் ஆவார்.


இச்சம்பவம் தொடர்பாக சேர்ச்சிலின் மனைவி மக்கள் கண்காணிப்புக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன்,


இச்சம்பவம் தொடர்பாக கிரிபத்கொட காவற்துறை நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு குறித்த மேல் நடவடிக்கைகளுக்காக மக்கள் கண்காணிப்புக்குழுவின் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனக் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர் அனுமதி; பெற்றோர் எதிர்ப்புப் போராட்டம்

தமது விருப்பத் தேர்வுக்கு மாறாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலுமாறு தென்னிலங்கை மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருப்பதை எதிர்த்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், தமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாணவர்கள் 306 பேருக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடிதம் மூலம் அறிவித்திருந்தது. இவர்களில் 23 பேர் மருத்துவபீடத்திற்கும், 80 பேர் முகாமைத்துவ பீடத்திற்கும், 20 பேர் சட்ட பீடத்திற்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய வசதிகளைக் கருத்திற்கொண்டு, தமது பிள்ளைகளை யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அனுப்பமுடியாது என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

"யாழ்ப்பாணத்துக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவிப்பது இன வேறுபாட்டின் அடிப்படையில் அல்ல. தமது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அதிகம் கவலைப்படுவதே இதற்குக் காரணம்" என பல்கலைக்கழகங்கங்களுக்கிடையிலான மாணவர் பேரவையின் ஏற்பாட்டாளர் உதுல் ப்ரேமரத்ன தெரிவித்திருக்கிறார்.

தமது விருப்பமின்மையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உரிய அதிகாரிகளுக்கும் பலதடவைகள் வெளிப்படுத்தியுள்ளபோதிலும், அவர்கள் உரிய பதில் எதனையும் வழங்காதிருப்பதாகவும் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாட வருமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்தபோதிலும், கலந்துரையாடலில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

"முதல் ஒரு தவணைக்கு மாத்திரம் மட்டக்களப்பு சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு செல்லுமாறும், பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடருமாறும் குறிப்பிடப்பட்ட உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுமாறு எம்மிடம் ஆணைக்குழு கேட்டது. இருப்பினும் நாம் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட விரும்பவில்லை" என யாழ் மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள பாணந்துறை சிறீ சுமங்கல வித்தியாலயத்தைச் சேர்ந்த உதாரா ரணசிங்க எனும் மாணவி தெரிவித்துள்ளார்.

இதேபோன்றே, யாழ் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள ஏனைய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும், முதல் ஒரு தவணையை மாத்திரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிலுமாறும், பின்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடருமாறும் குறிப்பிடப்பட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு வேண்டப்பட்டதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

"இந்தப் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக 4 தடவைகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வந்திருக்கிறேன்" எனத் தெரிவிக்கும் மாத்தளையைச் சேர்ந்த மலானி ஜெயசிங்க எனும் தாயொருவர், ஏன் இந்த அதிகாரிகள் தனது பிள்ளையை யாழ். பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்துள்ளனர் எனவும் கேள்வியெழுப்பினார்.

"யாழ்ப்பாணத்தை எப்போது சென்றடைவோம் என்பதே எமக்குத் தெரியாது. ஏ-9 பாதை மூடப்பட்டுள்ள நிலையில், நாம் கடல்மார்க்கமாகவே அங்கு செல்லவேண்டும். திருகோணமலைக்குச் சென்று அங்கு கப்பலுக்காகக் காத்திருந்து, 4 நாட்களின் பின்னரே யாழ்ப்பாணத்தை அடையமுடியும்" என்றும் அவர் கூறுகிறார்.

இதேவேளை, அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள, முஸ்லிம் மாணவர்களை இணைப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு 1,203 மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவதாகவும், இவர்களில் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் 261 பேர் அடங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

"மூவின மாணவர்களும் கலந்து கற்பது நல்ல நடவடிக்கை. ஆனால், நாட்டில் அவ்வாறான சூழ்நிலை இல்லை. வடக்கில் யுத்தம் இடம்பெறுகிறது. இவ்வாறான நிலையில் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் எவ்வாறு யாழ்ப்பாணம் சென்று கல்வி கற்க முடியும்" என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

"வடக்கு, கிழக்கில் மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய நல்ல சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன், ஏ9 பிரதான வீதி திறக்கப்படவேண்டும். இவற்றை அரசாங்கம் செய்தால் யாழ்.பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் கல்வி கற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதில் அரசாங்கமும் உயர் கல்வி அமைச்சும் உடனடி கவனம் செலுத்தவேண்டும்" எனவும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, உயர்கல்வி அமைச்சுக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது எனவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கே இவற்றைத் தீர்மானிக்கும் முழுஅதிகாரமும் இருப்பதாகவும் கூறினார்.

"சிங்கள மாணவர்களை யாழ். பல்கலைக்கழகத்துக்கு அனுமதித்திருப்பது நியாயமற்றது. தற்போதுள்ள சூழ்நிலையில் அவர்களால் அங்கு கல்வி கற்க முடியாது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏன் இப்படி நடந்துகொள்கிறது என எனக்குத் தெரியாது" என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் சிங்கள மாணவர்கள் அனுமதி

இதற்கிடையில், கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மாணவர்கள்; சிலரும், நேற்று செவ்வாய்க்கிழமை தாம் எதிர்நோக்கும் உணவு மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் குறிப்பிடப்பட்ட கடிதம் ஒன்றினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கையளித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் சிங்கள மாணவர்களை அனுமதிப்பது எனும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கமைய கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இந்த வருடம் 41 சதவீதமான சிங்கள மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 358 தமிழ் மாணவர்களும், 306 சிங்கள மாணவர்களும், 79 முஸ்லிம் மாணவர்களுமாக மொத்தம் 743 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும், பாதுகாப்பான சூழலில் கிழக்குப் பல்கலைக்கழத்தில் தம்மால் கல்வியைத் தொடர முடியாதென சிங்கள மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், பெற்றோரும் இதற்கு தமது எதிர்ப்பைத் வெளிப்படுத்துகின்றனர்.

"எனது பிள்ளையை மரண வீடொன்றில் விட்டுவிட்டு வந்ததாகவே நான் நினைக்கிறேன். இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு எனது பிள்ளையைப் படிப்பித்தது இவ்வாறானதொரு இடத்தில், பெரும் அச்சத்துக்கு மத்தியில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு அல்ல" என கிழக்குப் பல்பலைக்கழக மருத்துவ பீடத்தில் தனது மகனை அனுமதிக்கச் சென்றிருந்த தாயொருவர் பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக சிங்கள மாணவர்கள் அனுமதி

இதேவேளை, முதன்முறையாக ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சிங்கள மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக துணைவேந்தர் கலாநிதி குசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

2008/2009 ஆம் கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களில் நாற்பது வீதமான சிங்கள மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பி.பி.சி. செய்திச்சேவைக்கு அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கல்வியாண்டில் 361 முஸ்லிம் மாணவர்களுக்கும், 140 சிங்கள மாணவர்களுக்கும், 17 தமிழ் மாணவர்களுக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

"தேசிய பல்கலைக்கழகங்கள் தனிப்பட்ட இனத்துக்காக ஆரம்பிக்கப்படுவது பொருத்தமானதல்ல. அந்த வகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதில் சிந்திப்பதற்கு எதுவுமேயில்லை" எனவும் தென்கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி குசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சிங்கள மாணவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பது பிரச்சினைக்குரியதொன்றல்ல எனவும், சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதற்கும், முஸ்லிம் மாணவர்கள் சிங்கள அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் இது நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொணடுக்கும் எனவும் அவர் கூறினார்.

இருப்பினும், கிழக்கு மற்றும் யாழ். பல்கலைக்கழகங்களுக்கு சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிசீலனை செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உரிமைக்காகவும் வறுமைக்காகவும் போராடும் இளைஞர்களை அரசாங்கம் அழித்தொழிக்கிறது – விக்கிரமபாகு

vickramabahu.jpgவடக்கில் உரிமைக்காகப் போராடும் தமிழ் இளைஞர்களையும் தெற்கில் வேலை வாய்ப்பின்மை, வறுமை என்பவற்றை எதிர்த்துப் போராடும் இளைஞர்களையும் இராணுவபலத்தின் ஊடாக அழித்தொழிக்கும் இரண்டு வகையான யுத்தங்களையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இன்றைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என இடதுசாரிமுன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.


சப்ரகமுவ மாகாண சபை தேர்தலில் கேகாலை மாவட்ட தலைமை வேட்பாளர் பிறேம்குலதுங்கவை ஆதரித்து எட்டியாந்தோட்டை சந்தை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தொடர்ந்து உரையாற்றுகையில்,


இன்று இந்த அரசாங்கம் இரண்டு முனைகளில் யுத்தத்தை நடத்துகின்றது. ஒரு புறம் வடபகுதியில் தமது நிலத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் இளைஞர்களை இராணுவத்தின் மூலம் அழிக்க முயல்கின்றது. மறுபக்கத்தில் வாழ்க்கைச் செலவு உயர்வு,


வேலையின்மை போன்றவற்றிற்கு எதிராகப் போராடும் தென் இலங்கை இளைஞர்களை அவசர காலச் சட்டத்தின் துணையுடன் ஒடுக்க முயல்கிறது. இத்தகைய சூழ்நிலையில் வடக்கில் தமது உரிமைக்காக போராடும் இளைஞர்களுக்காகவும் தெற்கில் பொருளாதார பிரச்சினை, வேலைவாய்ப்பிற்காக போராடும் இளைஞர்களுக்காகவும் குரல் கொடுப்பது தமது கடமையாகும்.



ஜே.வி.பி. அவசர காலச் சட்டத்திற்கு ஆதரவளித்து விட்டு இளைஞர்களின் போராட்டத்தை ஆதரிப்பதாக கூறுவது ஒரு ஏமாற்று நாடகமாகும்.


கடந்த ஜூலை 10 ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடக்கி வைத்த ஜே.வி.பி. அதை இடைநடுவில் கைவிட்டது என்பதே உண்மை நிலையாகும். ஆனால், தாங்கள் அந்த போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்ததாகவும், இந்தப் போராட்டத்துக்கு மலையக தோட்டத் தொழிலாளர் மற்றும் வடக்கு, கிழக்கு தொழிலாளர்கள் முழு ஆதரவை தெரிவித்து இருந்தனர் எனவும் கூறினார்.



இன்றும் ஜே.வி.பி. எல்லா தேசிய சக்திகளையும் இணைத்து போராட்டம் நடத்த வக்கற்றே நிற்கிறது. பல்வேறு நிலைகளில் இந்த அரசாங்கத்தின் பொய் வேஷம் கலைந்து வருகிறது. இந்த நாட்டு மக்கள் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை அப்புறப்படுத்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுபான்மையினமா – காவற்துறை அதிகாரியின் குடும்பமும் கைது செய்யப்படலாம்

கொழும்பு வலய நடவடிக்கைப் பிரிவு காவற்துறை அதிகாரியின் மனைவியும் குடும்பத்தினரும் கண்டி காவற்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.


அக்கரைப்பற்றிலிருந்து கண்டி ஊடாகக் கொழும்பு நோக்கி பயணிகள் வாகனமொன்றில் பயங்கரவாதிகள் செல்வதாகக் கூறி கண்டி தலைமையகக் காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர்கள் அந்தப் பயணிகள் வாகனத்தை மறித்துச் சோதனையிட்டனர். 12 முஸ்லிம்களும் 3 தமிழர்களும் அந்த வாகனத்தில் இருந்துள்ளனர்.


அதிகாலை 1.30க்கு வானை வழிமறித்த காவற்துறையினர் அவர்களை கண்டி காவற்துறை நிலையத்திற்கு கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த வானில் கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பிரிவுக்குட்பட்ட, கொழும்பு வலய நடவடிக்கைப் பிரிவு காவற்துறை அதிகாரியின் மனைவியும் குடும்பத்தினருமே பயணம் செய்திருந்தனர்.

காவற்துறை நிலையத்தில் மேற்படி காவற்துறை அதிகாரியின் மனைவி தன்னை அடையாளப்படுத்தியதுடன் தனது கணவரின் பதவி நிலையையும் தெரியப்படுத்தினார்.


எனினும் காவற்துறையினர் அவர்களை விடுவிக்கவில்லை. கண்டி பிரதிக் காவற்துறை மா அதிபரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு வரப்பட்டு அவர்களை விடுவிக்குமாறு அவர் உத்தரவிட்டும் 17 மணி நேரத்தின் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


சிறுபான்மையின காவற்துறை அதிகாரி என்பதால் பெரும்பான்மையின காவற்துறையினர் இவர்களை மிக மோசமாக நடாத்தியிருப்பதாக அந்த காவற்துறை அதிகாரியின் குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.

திஸநாயகம் மீதான விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானம்

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகம் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

திஸநாயகம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் நீதவான் நீதிமன்ற பதிவாளருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது. திஸநாயகம் மீதான விசாரணை அறிக்கைகளை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.

2006ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் திகதி முதல் 2007ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் மாதாந்தச் சஞ்சிகையை வெளியிட்டமை, விநியோகித்தமையானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரானது என ஊடகவியலாளர் திஸநாயகம் மீது குற்றப்பத்திரம் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

சந்தேகத்தை ஏற்படுத்திய வங்கிக் கணக்குப் புத்தகம், சில சஞ்சிகைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி போன்றவற்றை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியிருப்பதாக அவர்மீதான குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி ஊடகவியலாளர் திஸநாயகம் மற்றும் அச்சக உரிமையாளரான ஜசிகரன், அவருடைய மனைவி வளர்மதி ஆகியோர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் 150 நாட்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ஊடகவியலாளர் திஸநாயகம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டவர் என தற்பொழுது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேநேரம், திஸநாயகம் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவேண்டும், அல்லது அவர் விடுவிக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல்வேறு மனிதநேய அமைப்புக்களும், சர்வதேச ஊடக அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் புண்ணாக்கு சாப்பிடுகிறது அதனால் நாமும் சாப்பிடுகிறோம்-விமல் வீரவன்ஸ

வான்பரப்பில் இருந்து உணவுப் பொதிகளைப் போடும் நிலைமைக்கு உட்பட்ட நாடாக மேற்குலக நாடுகள் இலங்கையை பட்டியலிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் இதுவெனவும் கூத்தாட வேண்டிய சந்தர்ப்பம் இது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். பணிப்புறக்கணிப்புகள், அரசாங்கம் நடத்தும் தேர்தல்கள் என்பன இந்த பிரச்சினைகளை திசைத்திருப்பும் செயற்பாடுகள்.


அரசாங்கம் இந்த மூடத்தனமான வேலையை செய்யும் போது, ஏனையோரும் இந்த மூடத்தனமான வேலையை செய்ய தமக்கு உரிமை இருப்பதாக கூறுகின்றனர் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். ‘


யுத்தம் என்றால் அரசாங்கம் தேர்தலை நடத்தமால் இருக்காலம்தானே, அரசாங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிந்தால் எமக்கு ஏன் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள முடியாது என சகோதரர் லால்காந்த கேள்வி எழுப்பியிருந்தார். அரசாங்கம் புண்ணாக்கு சாப்பிடுகிறது அதனால் நாமும் சாப்பிடுகிறோம்,

அரசாங்கத்திற்கு புண்ணாக்கு சாப்பிட முடிந்தால் ஏன் எங்களுக்கு சாப்பிட முடியாது என்றுதானே லால்காந்த கேட்கிறார் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சாரக் கூட்டத்திற்கு மக்கள் வராததல் காத்திருந்தார் இலங்கை பிரதமர்

தம்புத்தேகம ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு மக்கள் சமூகமளிக்காத நிலையில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மக்களுக்காக காத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள தம்புத்தேகம பிரதேசத்தில் நேற்று முற்பகல் 10.30க்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த கூட்டத்திற்காக மாகாணம் முழுவதும் கட்அவுட்கள், பிரசார சுவரொட்டிகள் என தடல்புடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டம் 10.30க்கு ஆரம்பமாக விருந்த போதிலும் மக்கள் கூட்டம் இல்லாத நிலையில் மதியம் 12.30 மணிக்கே கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் சுமார் 150 பேரே கூட்டத்தில் கலந்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது. கூட்டத்தில் உரையாற்றவிருந்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மக்கள் கூடும் வரை அருகில் உள்ள இடம் ஒன்றில் காத்திருந்திருந்ததாகவும் மக்களை அழைத்து வரும் பணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும், அமைப்பாளர்களும் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.


இதேவேளை தம்புத்தேகம பிரதேசத்தில் ஜே.வீ.பீயினர் நடத்திய கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டதாகவும் இந்த கூட்டத்தை குழப்புவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு மக்கள் வராத நிலையில் தொடர்ந்தும் மக்களை அழைத்துவரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையில் மக்கள் கூட்டத்திற்கு சமூகமளிக்காததால் அதனை ஒளிப்பதிவுசெய்ய ஊடகவியலாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் அனுமதி வழங்கவில்லை.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும்- பிரதிப் பொலிஸ்மா அதிபர்

அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட விடத்தல் தீவு உட்பட ஏனைய பகுதிகளில் விரைவில் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிதாக அமைக்கப்படவிருக்கும் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுவதற்குப் பொலிஸார் முன்வந்திருப்பதுடன், அவ்வாறு அமைக்கப்படும் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறியுள்ளார்.

மடு பகுதியில் புதிய பொலிஸ் நிலையமொன்றை கடந்த சனிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட மன்னார் மற்றும் வடக்கின் ஏனைய பகுதிகளில் பகுதியில் வீதிகள் மற்றும் பாலங்களை அமைப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கூறியிருந்தார்.

அங்கிருக்கும் மக்களுக்கான அனைத்து அடிப்படை உட்கட்டுமான வசதிகளைப் பூர்த்திசெய்து கொடுப்பதற்கு தமது அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்திருப்பதாகவும், வடபகுதியைச் சேர்ந்த மக்கள் இதுவரை கண்டிராத சீரான வீதிகளை இனிவருங்காலங்களில் காண்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், பாலங்கள் மற்றும் வீதிகளை அமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாகத் தெரியவருகிறது. பாலங்களை அமைப்பதில் தேர்ச்சிபெற்ற பொறியியலாளர்களை கூடியளவு சம்பளம் கொடுத்து பணிக்கு வருமாறு அரசாங்கம் அழைத்திருப்பதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, யாழ் குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வயல்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் கட்டளைக்கு அமைய உயர்பாதுகாப்பு வலயப் பகுதியான அரியாலையில் விவசாயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயம் அமைந்திருக்கும் அரியாலையில் கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியிலிருந்து அரியாலை புகையிரதப் பாதைக்கு இடைப்பட்ட 103 ஏக்கர் வயல் நிலங்களில் விவசாயம் செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதற்கமைய 512வது படைப்பிரிவினால் வழங்கப்படும் விசேட அடையாள அட்டைகளுடன் விவசாயிகள் விவசாயம் செய்ய அனுமதிக்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.

Tuesday, 19 August 2008

மகேஸ்வரன் - கொலைச் சந்தேக நபரிடம் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரன் உள்ளிட்ட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் இன்று குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி திலக் தாப்ரூ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டுள்ள ஜோன்சன் கோலின் வெலன்டினோ எலியஸ் வசந்தன் என்பவருக்கே இன்று குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரி மகேஸ்வரன் மற்றும் சந்திரகுமார் மகிந்தன் ஆகியோரை கொலை செய்ததன் மூலம் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் இந்த நபர் கொலை குற்றவாளியாக காணப்படுவதாக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சந்தேக நபர் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளினால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணைகளை நீதிபதி எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

வட போர் முனையில் படையினர் மூவர் பலி, 9 பேர் படுகாயம்

யாழ் முகாமாலையில் முன்னரங்கில் நேற்று மாலை 5:30 முதல் அரை மணி நேரத்திற்கு இடம்பெற்ற எறிகணை மோதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு படை உறுப்பினர் பலாலி படைத்துறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் முன்னரங்கில் காலை 8:30 அளவில் இடம்பெற்ற எறிகணை மோதலில் தமது தரப்பில் மூவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று மாலை நாகர்கோவிலில் விடுதலைப் புலிகளின் பொறி வெடிகளில் சிக்கிய படையினரில் 6 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறவித்துள்ளது.

பருத்தித்துறையில் படையினர் இருவர் படுகாயம்

யாழ் பருத்தித்துறையில் இனம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறீலங்கா படைகள் தரப்பில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினைத் தொடர்ந்து, படையினர் அந்தப் பிரதேசங்களில் கடுமையான தேடுதல், மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்த படையினர் இருவரும் பலாலி படைத்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வல்லிபுரம் ஆழ்வார் கோவிலுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பற்றிருப்பதாக உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இளம் குடும்பத்தர் கடத்தல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, கோட்டைக்கல்லாறு கல்முனை வீதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தர் ஒருவர் துணைப்படைக் குழுக்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 அளவில் கடத்திச் செல்லப்பட்டவர் பாலசிங்கம் சிறீஸ்கந்தராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுத நபர்கள் மேற்கொண்ட இந்த கடத்தலுக்காக காரணங்கள் எதுவும் தெரிய வரவில்லை.

ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணியும் 300 ரூபாவும் வளங்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ருவான்வெல்ல பிரதேச கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் உணவுப் பொதியும் 300 ரூபா பணமும் வழங்கப்படும் என்ற உறுதிமொழியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரால் அழைத்துச் செல்லப்பட்டதக கூறப்படுகிறது.


ருவான்வெல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பளரின் ஆலோசனைக்கு அமைய தோட்டங்களில் இருந்து இந்த மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இவர்களை ஏற்றிச் செல்ல இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூட்டம் முடிந்த பின்னர் உறுதியளிக்கப்பட்டவாறு உணவுப் பொதியும் 300 ரூபா பணமும் வழங்கப்படாத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள், சுதந்திரக்கட்சியின் சார்பில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை தூஷண வார்த்தைகளால் திட்டியதுடன் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து காவற்துறையினர் தலையிட்டு, பிரச்சினைகயை சமரசம் செய்து வைத்துள்ளனர்.

பொலன்னறுவை - எகொடபத்துவ கிராமம் - மட்டக்களப்புடன் இணைப்பா? முடியாது என்கிறது ஐ.தே.க

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள எகொடபத்துவ பிரதேசத்தை மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைப்பது உள்ளிட்ட பலவேறு இணக்கங்களை உள்ளடக்கி அரசாங்கத்தினால் பிள்ளையான் தரப்புடன் செய்துகொண்ட ரகசிய உடன்படிக்கை தொடர்பாக ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.


எகொடபத்துவ பிரதேசத்தை நிர்வாக ரீதியாக முதலில் மட்டக்களப்புடன் இணைத்து, முழுமையாக மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கவும் இந்த ரகசிய உடன்படிக்கை மூலம் இணக்கம் காணப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் பிள்ளையான் குழுவினரின் 16 முகாம்கள் எகொடபத்துவ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 8 ஆயிரத்து 696 தமிழ் வாக்காளர்களில் 7 ஆயிரத்து 800 பேர் எகொடபத்துவ பிரதேசத்தில் வசிக்கின்றனர்.


அத்துடன் ஒரு லட்சத்து 12 ஆயிரம் சிங்கள மக்கள் வசித்து வருகின்றனர். இந்த விகிதாசாரத்தை குறைக்கும் நோக்கில் பிள்ளையான் தரப்பினரை குடியமர்த்தும் செயற்திட்டமும் இந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.