மட்டக்குளி உயர்தொழில் நுட்பப் பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் நான்கு தமிழ் மாணவர்கள் கைது
தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் மாணவர்கள் தொடர்ந்தும் கொட்டாஞ்சேனை கடற்கரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களும், நண்பர்களும் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார்கள்.
மட்டக்குளி ""உயர் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில்' கல்வி பயிலும் கரவெட்டியைச் சேர்ந்த எஸ்.ராஜரட்ணம், திருநெல்வேலியைச் சேர்ந்த நடராஜா விசாகன், அம்பாறையைச் சேர்ந்த ஏ.அசோகதீபன், பாசையூரைச் சேர்ந்த மத்தியூ சகாயதாஸ் ஆகிய நான்கு தொழில்நுட்பவியல் மாணவர்களே கடந்த 5 ஆம் திகதி இரவு தெமட்டகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது கடற்கரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பிரஸ்தாப நான்கு மாணவர்களும் கல்யாணி கங்காராம வீதியிலுள்ள ரவி என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்து படித்து வந்ததாகவும், சந்தேகத்தில் வீட்டுரிமையாளரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி இளைஞர்கள் சம்பந்தமாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே தெஹிவளை குண்டு வெடிப்பு தொடர்பாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்கரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பந்துல குணரட்ன பிரதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட மாணவர்களை விடுவிப்பதற்கும் அவர்கள் தொடர்பான கல்வி பாதிப்படையாமல் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இவர்கள் தொடர்பாக பாடசாலையைச் சேர்ந்த பெரும்பான்மையின மாணவர்களே போலித்தகவலை கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மகரகம ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் 4 தமிழ் மாணவர்கள் பொலிஸாரால் தடுத்துவைப்பு
மகரகம ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த நான்கு தமிழ் ஆசிரிய மாணவர்கள் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த திங்கட்கிழமை இந்த நால்வரும் வவுனியாவிலிருந்து கொழும்புக்கு ரயிலில் வந்த போதே மருதானை ரயில் நிலையத்தில் வைத்து இந்த நான்கு ஆசிரிய மாணவர்களையும் மருதானைப் பொலிஸார் கைது செய்தனர்.
கொழும்பு வருவதற்கான சகல ஆவணங்களையும் இந்த நால்வரும் வைத்திருந்த போதும் எதுவித காரணமும் கூறப்படாது இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் இருவர் பெண்கள்.
இது தொடர்பாக பயிற்சிக் கல்லூரி நிர்வாகத்திடம் பல தடவைகள் கூறியும் இவர்களை விடுவிக்க அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment