Monday, 2 June 2008

இலங்கையில் வெள்ளம் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்

வெள்ளம் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 752 குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 25 ஆயிரத்து 440 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அதிகளவான வெள்ளம் அனர்த்தம் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

இதனை தவிர 54 வீடுகள் சிறியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் 62 ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தவிர கொழும்பு மாவடத்தில் 8 ஆயிரத்து 714 குடும்பங்களும், இவர்களில் 391 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 7 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் ஹங்வெல, சிறிஜயவர்தனபுர, கொலன்னாவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் வெள்ளத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை நுவரெலியா அம்பகமு கோரள பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் பலியானதுடன் அனர்த்தம் காரணமாக 2 ஆயித்து 752 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.


கேகாலை மாவட்டத்தின் வாரியபொல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் இறந்துள்ளார். இந்த நிலையில் கம்பாஹா மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 16 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 75 ஆயிரத்து 149 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் 476 குடும்பங்கள் 6 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் ஆயிரத்து 954 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

அதேவேளை இரத்தினபுரி மாவட்டத்;தில் 6 ஆயிரத்து 781 குடும்பங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 868 பேர் பாதி;க்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் வரலாற்றில் முதல் முறையாக பாரிய வெள்ள அனர்த்தம் இதுவென தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளம் ஏற்பட்டுள்ள பல பிரதேசங்களில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் செயலிழந்துள்ளதாக நிவாரண பணியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடற்படையை சேர்ந்த 175 பேர் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மாவட்டங்களில் உலங்குவானூர்தி ஒன்று நிவாரண பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் கடற்படையினரின் 16 படகுகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.

பல்கலைக்கழக அனுமதிக்கான "இஸட்' வெட்டுப்புள்ளி அடுத்த வாரம் வெளியாகும்

பல்கலைக்கழக அனுமதிக்கான "இஸட்' ஸ்கோர் வெட்டுப் புள்ளிகளை ஜூன் மாதம் 2ஆம் வாரத்தில் வெளியிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள மாணவர்களை 2007/2008 பல்கலைக்கழக கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகளை இம் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிட உத்தேசிக்கப்பட்டிருந்த போதிலும் ஒரு சில பணிகள் நிறைவுறாத நிலையில் வெட்டுப் புள்ளிகளை 2 ஆம் வாரத்தில் வெளியிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2007 இல் நடைபெற்ற க.பொ.த.

உயர்தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 80 ஆயிரத்து 234 மாணவர்கள் தோற்றிய போதிலும் 1 லட்சத்து 21 ஆயிரத்து 421 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமையைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இவர்களில் 19 ஆயிரத்து 650 மாணவர்கள் 14 தேசிய பல்கலைக்கழகங்களிலுள்ள 75 கற்கை நெறிகளுக்காக அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதன் பிரகாரம்

கொழும்பு, பேராதனை, ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆகிய 3 பல்கலைக்கழ கங்களுக்கும் முறையே 1905, 2375, 1160 மாணவர்களும்

களனி, மொறட்டுவ, றுகுணு ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் முறையே 1855, 1160, 1625 பேரும்

ரஜரட்டை, சப்ரகமுவ, ஊவா வெல்லஸ்ஸ, வயம்ப ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு முறையே 1145, 825, 410, 525 மாணவர்களும்

யாழ்ப்பாணம், கிழக்கு, தென் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு முறையே 1925, 1195, 765 பேரும் அனுமதிக்கப்படவுள்ளதோடு

சுதேச மருத்துவ நிறுவகத்திற்கு 200 பேரும் கம்பஹா விக்கிரமராச்சி ஆயுர்வேத நிறுவகத்திற்கு 80 மாணவர்களும்

கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கல்லூரிக்கு 240 பேரும்

சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவனத்திற்கு 230 பேரும் மேலும் மேலதிக உள்ளெடுப்பு என்ற நியதியின் கீழ் 650 மாணவர்களும் இக்கல்வியாண்டுக்காக அனுமதிக்கப்படவுள்ளனர்.


இவ்வாண்டு இலங்கையின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுவர்

என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழ க்கு பல்கலைக்கழகம், தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உத்தேசமான எண்ணிக்கையிலிருந்து தெரிவு செய்யப்படும் உண்மையான எண்ணிக்கைகள் வேறுபடும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா. உறுப்புரிமையிலிருந்தும் இலங்கை விரைவில் தூக்கியெறியப்படும் நிலை உருவாகும்

""இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதனால், மனித உரிமைப் பேரவையில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை மிக விரைவில் ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமையிலிருந்தும் தூக்கியெறியப்படும் நிலை உருவாகும்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அடிப்படை உரிமைகளை இல்லாது செய்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தை அடிப்படையாக வைத்து சர்வதேச அழுத்தத்தின் உச்சக் கட்டமாக இலங்கை மீது பொருளாதாரத் தடையை கொண்டு வருவதே பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் சொன்னார்.

நாட்டில் அதிகரித்துள்ள மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் தெ?வித்ததாவது, ""நாட்டுக்குள் இடம்பெற்று வருகின்ற அடிப்படை உரிமை மீறல், மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், கப்பம் அறவிடுதல், படுகொலைகள் போன்றவற்றில் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து அரசாங்கம்கவலைப்படுவதாக இல்லை.

""பேரினவாதம் பெருக்கெடுப்பதற்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உ?மைப் பேரவையில் இருந்து இல ங்கை ஓரங்கட்டப்பட்டுள்ளமை மற்றும் தமது முட்டாள்தனமான செயற்பாடுகளை சர்வதேசம் புரிந்து கொண்டுவிட்டது என்பது குறித்தும் அலட்டிக் கொள்ளாத அரசாங்கமாகவே இருக்கின்றது.

சர்வதேசத்திடம் பாடம் படித்த பேரினவாத அரசாங்கம் அதன் பிறகாவது திருந்தியிருக்கலாம். ஆனால், திருந்தவில்லை; திருந்துவதற்கு முயற்சிக்கவும் இல்லை.

""அங்கத்துவத்தை இழந்துவிட்ட நிலையிலும் இங்கு இடம்பெற்று வருகின்ற வன்முறைகள், படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருக்கின்றன.இதனை தடுத்து நிறுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏமாற்றுக்கார அரசாங்கத்திடம் இல்லை.

இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் அதி விரைவிலேயே ஐக்கிய நாடுகளின் உறுப்பு?மையும் பறிக்கப்பட்டு விடும் நிலையை தவிர்க்க முடியாது.

""இலங்கை அரசாங்கத்தின் தான் தோன்றித் தனமான செயற்பாடுகளை ரசித்துக் கொண்டிருக்கும் தேவை சர்வதேசத்துக்கோ அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்கோ கிடையாது. ""இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் இலங்கை மீது பாரிய அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது.

""இதன் உச்சக் கட்டமாக பாரிய பொருளாதாரத் தடையை அமுல்படுத்தி கீழ்மட்ட சிந்தனையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைக்கு சர்வதேசம் தண்டனை வழங்க வேண்டும்.

""இதன் மூலமே சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப் போயுள்ள அரசாங்கத்தை பணிய வைக்க முடியும். அதன் மூலமே இந்நாட்டில் இடம்பெற்று வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்ட முடியும். அரசாங்க அமைச்சர்கள் சிலர் இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் நாட்டிலுள்ள பிரச்சினைகள் அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர்.

""தற்போது இங்கு நடந்து கொண்டிருப்பது என்னவென்று அந்த அமைச்சர்களõல் புரிந்துகொள்ள முடியாத அளவில் இருக்கின்றனர்.""இருக்கின்ற பிரச்சினையே உச்சத்தில் இருக்கும் போது இதனைவிட அதிகமாக எந்தவிதமான பிரச்சினைகளும் எழப் போவதில்லை.எனவே அரசாங்கத்தின் யோசனைகளைப் புறந்தள்ளிவிட்டு நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை சிந்தித்து பொருளாதாரத் தடை விடயத்தை சர்வதேசம் உடனடியாக அமுலுக்கு கொண்டு வர வேண்டும்.''

புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மண்சரிவினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த துரதிஸ்டவசமான சம்பவத்தில் ஒரு வயது குழந்தையும், 11 சிறுமியொருவரும் உயிரிழந்துள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது.

மொனறாகலையில் நான்கு தமிழ் யுவதிகள் கைது

மொனறாகலை நகரிலிருந்து அம்பாறை நோக்கிச் செல்லவிருந்த நான்கு தமிழ் யுவதிகளை மொனறாகலை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவர்கள் நால்வரும் மொனறாகலை நகரிலுள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ்சிற்காக காத்து நின்ற வேளையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இவர்கள் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான இந்த யுவதிகள் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்காக கொழும்பிற்கு சென்று விட்டு திரும்பிச் செல்லும் வழியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த அடையாள அட்டையைக் காட்டிய போதிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம்கள் ஆயுதமேந்தினால் அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ், ரவூப் ஹக்கீம் என்ற முஸ்லிம் தலைமைகள் பதில் சொல்ல வேண்டும்

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டுவதாக உள்ளது. அவ்வாறான ஒரு நிலையேற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமும், முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன்.

நாங்கள் கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னே இந்த தேர்தல் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் என்று கூறினோம். இதுதான் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகிறது என்றும் அவர் ஜனகநாயக வழிக்கு திரும்பிய அமைப்பு ஆயுதங்களை களைய வேண்டும். ஆயுதங்களுடன் செயற்பட்டால் இனங்களுக்கிடையிலான முறுகலை மேலும் உருவாக்கும் அதுதான் தற்போது கிழக்கில் நடைபெறுகிறது. எனவே த.ம.வி. புலிகள் ஆயுதங்களை களைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் முதற்பணி அங்குள்ள முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆயுத மோதலாகும். இது முதற்கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வதுபோல் இனங்களுக்கிடையிலான விரிசலை ஏற்படுத்துவதே இவர்களின் முதற்பணியாக இருக்கிறது. முஸ்லிம்கள் ஆயுதமேந்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ், ரவூப் ஹக்கீம் என்ற முஸ்லிம் தலைமைகள் பதில் சொல்ல வேண்டும்.

எனவே 1987ஆம் ஆண்டு கொண்டு வந்த மாகாணசபை இன ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை. மாறாக இனவிரிசலையே ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் இந்த தேர்தல் இனவாதத்தை கக்கும் தேர்தல் என நாங்கள் வர்ணித்தோம் என்றார் ம.வி. முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன்.

200,000 தொன் அரிசியை வழங்கி உதவுமாறு ஜப்பானிடம் இலங்கை கோரிக்கை

200,000 தொன் அரிசியை வழங்குமாறு இலங்கை தம்மிடம் வேண்டுகோள்விடுத்துள்ளதாகவும், இது குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும் இதுவரை உத்தியோகபூர்வமாக இரு தரப்பும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை என்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஜப்பானிய பிரதமர் யசூகா புகுடாவும் இந்த வாரம் ரோமில் நடைபெறும் உணவு மற்றும் விவசாய சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இருப்பினும் இச்சந்திப்பிற்கும் இவ்வேண்டுகோளுக்குமிடையில் தொடர்புகள் எதுவுமில்லை எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜப்பான் தான் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் அரிசியில் ஒரு பகுதியை உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நாடுகளுக்கு வழங்கி உதவுவது குறித்து யோசித்துவரும் நிலையிலேயே இலங்கை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அதேவேளை, பிலிப்பைன்சிடமிருந்து இறக்குமதி செய்துள்ள 1.5 மில்லியன் தொன் அரிசியில், 200,000 தொன் அரிசியை விற்பனை செய்வது குறித்தும் ஜப்பான் ஏற்கனவே பரிசீலித்து வருகிறது.

இதேவேளை, கடந்த மாதம் 50,000 தொன் அரிசியினை இறக்குமதி செய்வது குறித்து தாய்லாந்துடன் இலங்கை பேச்சுலார்த்தை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை, மியன்மாரிடமிருந்து அரிசியினை இறக்குமதி செய்ய எண்ணியிருந்த போதிலும், சூறாவளியினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் காரணமாக அது தடைப்பட்டிருப்பதையடுத்தே வேறு நாடுகளிடமிருந்து அரிசியை இறக்குமதி செய்வது குறித்து கவனம் செலுத்திவருகிறது.

பத்திரிகைகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது: வடஇலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் எச்சரிக்கை

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் காணப்படுமாயின் பிராந்தியப் பத்திரிகைகளை நிறுத்தவேண்டி ஏற்படுமென வடஇலங்கை ஊடகவியலாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

கொழும்பு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் யாழ் பிராந்திய ஊடகவியலாளர் பி.தேவகுமார் படுகொலை செய்யப்பட்டமையை அந்த அமைப்பு கண்டித்திருப்பதுடன், தற்பொழுது யாழ் குடாநாட்டில் இயங்கிவரும் பத்திரிகைகள் செய்திகளுக்காக இணையத்தளங்களையும், கொழும்புச் செய்திகளையும் நம்பியிருக்கவேண்டி ஏற்பட்டிருப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தேவகுமாரின் படுகொலை தொடர்ப்பாக அதிர்ச்சியும், அவரின் குடும்பத்தினருக்கு கவலையையும் தெரிவித்திருக்கும் வடஇலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம், ஊடகப்பணியாளர்கள் செயற்படுவதற்கு உரிய சூழலையும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

“ஊடகப்பணியாளர்கள் குறிப்பாக யாழ் குடாநாட்டைச் சேர்ந்த ஊடகப்பணியாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் காலாச்சாரத்தில் தேவகுமார் இறுதியாகப் பலியாகியுள்ளார்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணத்தில் மூன்று பிராந்திய பத்திரிகைகள் வெளியாகின்றன. நாட்டின் ஒரு பிராந்தியத்திலிருந்து கூடுதலாக வெளியிடப்படும் பத்திரிகைகளாக இவை காணப்படுகின்றன. எனினும், பாதுகாப்புக் காரணங்களால் அவற்றைத் தொடர்ந்தும் வெளியிடமுடியாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என வடஇலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஊடகப்பணியாளர்கள் பணிபுரிவதற்கு உலகில் மிகவும் மோசமான இடமாக யாழ்ப்பாணம் அமைந்துள்ளது என கடந்தவருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஊடகக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தமையையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த இருண்டு வருடங்களில் யாழ் குடாநாட்டில் ஊடகவியலாளர்கள், ஒப்புநோக்காளர்கள், விநியோகஸ்தர்கள் உட்பட 10 ஊடகப் பணியாளர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சனத் பாலசூரிய மற்றும் அதன் செயலாளர் போத்தல ஜயந்த ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறி அதற்கு எதிராக கொழும்பில் பல்வேறு ஊடக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன.

இந்த நிலையில் ஊடகசுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பான பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குருநகரில் ஒருவர் சுட்டுக்கொலை.

குருநகர் பாசையூர் வீதியில் இன்று மதியம் 12.00 மணியளவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் ஆர்.பற்றிக் டி.வின்சன் வயது 30 கொலிக்ஸ் வீதி யாழ்ப்பாணம்

என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சிறிலங்காப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை யாழ் குடாநாட்டில் இன்று பிற்பகல் 5.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் படைத்தரப்பால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாளும் இரவு 9.00 மணிக்கு ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அம்பாறையில் இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளை உடைத்து சிங்களப் படைகள் கொள்ளையடிக்கின்றன!!!

* பத்மநாதன் எம்.பி. முறையீடு

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு உட்பட பல்வேறு தமிழ்ப் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டு அங்கிருக்கும் பெறுமதியான பொருட்கள் படையினரால் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்பட்டு படைமுகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் சர்வதேச சமூகம் இதனைத் தடுத்துநிறுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து அப்பகுதி மக்களை வெளியேற்றி அவர்களின் பொருளாதார வளங்களை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்மநாதன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அரசு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து இடம்பெயர்ந்த கஞ்சிகுடிச்சாறு, தங்க வேலாயுதபுரம், உடும்பன்குளம் ஆகிய மூன்று பிரதேசத்தில் 810 குடும்பங்கள் மீளக் குடியேற்றப்பட்டனர்.

இவர்களுக்கான வீடுகளை சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புகள் நிர்மாணித்துக் கையளித்தன.

இதில் தங்கவேலாயுதபுரத்தில் நோப் திட்டத்தின் கீழ் 94 வீடுகளை நிர்மாணித்து இடம்பெயர்ந்த மக்களிடம் கையளித்தனர்.

பின் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் காரணமாக மீண்டும் இடம்பெயர்ந்து திருக்கோவில் பிரதேசத்தில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளையே படையினர் உடைத்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியதுடன், படைமுகாமும் அமைத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தங்கவேலாயுதபுரத்தில் 25க்கு மேற்பட்ட வீடுகளை உடைத்து ஓடுகள், கூரை மரங்கள், கதவு நிலைகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை படையினர் 20 உழவு இயந்திரங்களில் தமது படை முகாம்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதேபோன்று கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட திருக்கோவில் பிரதேச மக்களில் 30 குடும்பங்களுக்கு காஞ்சிரங்குடாவிலுள்ள நேருபுரத்தில் அமைக்கப்பட்ட வீடுகளின் ஓடுகள், மரங்களையும் படையினர் அண்மையில் உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தொடர்ந்து தமிழ் மக்களின் பொருளாதாரத்தை சிங்கள பேரினவாதமும் படையினரும் திட்டமிட்டு அழித்து வருகின்றனர்.

எனவே, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக பலமுறை அரசிடம் நாம் முறைப்பாடு தெரிவித்தும் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எனவே, தான் நாம் எமது மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் சர்வதேச சமூகங்களுக்கும் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் தெரிவித்தார்.

யாழ்.கரையோரப்பகுதிகளில் திடீர் ஊரடங்கு அமுல்!

யாழ்,கரையோரப் பகுதிகளான குருநகர்,பாசையூர்,கொழும்புத்துறை பகுதிகளில் இராணுவத்தினரால் திடீர் ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்தாக தெரியவருகிறது.

இன்று பி.பகல் 3.00 மணியளவில் ஒலிபெருக்கி பூட்டப்பட்ட வாகனங்கள் மூலம் மாலை 5.00 மணி முதல் ஊரடங்கு அமுலாவதாக படையினர் அறிவித்துள்ளனர்.

இவ் அறிவித்தலை தொடர்ந்து அப்பகுதிகளை சோர்ந்த மக்கள் ஒரு வித பதற்ற உணர்வுடன் இருப்பதாக தெரிவிக்கப்படும் அதேவேளை,இராணுவத்தினர் வீதிகளில் பரவலாக காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

முஸ்லீம் காடையர்களால் 4 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளார்கள்

காத்தான்குடி முஸ்லீம் காடையர்களால் ஆயுதங்கள், கத்திகள் மற்றும் பொல்லுகள் சகிதம் மேசன் வேலை செய்துவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த நான்கு அப்பாவித் தமிழ் பொதுமக்கள் அடித்து காயப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ஆரையம்பதிக்கு ஞாயிறு மாலை வேலை முடித்து திரும்பிவரும் வழியில் 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முஸ்லீம் வர்த்தகரது உடலம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் முஸ்லீம் காடையர்கள் தமிழ் கிராம பகுதிக்குள் ஊடுருவ முயற்றதாகவும் சிறீலங்கா படையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன்போது காயமடைந்தவர்கள் 30 அகவையுடைய கிரன்குளத்தை சேர்ந்த ரவீந்திரன், 17 அகவையுடைய பதீஸ்வரன், 42 அகவையுடைய ராசதுரை, 49 அகவையுருடய சிவநேசன் எனவும் தெரியவருகிறது.

ரவீந்திரன் தலையில் காயங்களுடனும் மற்றைய இருவரும் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

பொருட்களின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் யுத்தத்தை முன்னெடுக்க வேண்டும் - விமல்வீரவன்ச

பொருட்கள் சேவைகளின் விலை எவ்வளவு அதிகரித்த போதிலும் தாய்நாட்டை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் யுத்தத்தை கைவிடக் கூடாதென ஜே.என்.பி. தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.


இராணுவ உயர் அதிகாரிகளை சரியான பாதைக்கு இட்டுச் சென்று புலிகளை தோற்கடிப்பதற்கு தேசப்பற்றுடன் இராணுவத் தளபதி கடமையாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (ஜூன்1) மஹவலி கேந்திர நிலையத்தில் படைவீரர்கள் நலத்திட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மனேல் மலர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்விற்கு இராணுவப் படையின் மகளிர் பிரிவு தலைவி அனோமா பொன்சேகா தலைமை தாங்கினார்.

இராணுவப்படை வீரர்களின் கலை நிகழ்களும், விவரணப் படமொன்றும் இந்த நிகழ்வின் போது திரையிடப்பட்டது.

சர்வதேச சமூகத்தினால், இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனக் கோரப்படுவதாகவும் தெரியவருகிறது.

கருணாவிடம் காசு கொடுத்து வாங்கிய ஆயுதத்தால் பிள்ளையானுக்கு எதிராக போராடுகிறோம் - ஜிகாத்.

கருணாவிடம் காசு கொடுத்து வாங்கிய ஆயுதத்தால் பிள்ளையானுக்கு எதிராக ஜிகாத் என்ற அமைப்பு போராடுகிறது என்று ஜிகாத் உறுப்பினர் ஒருவர் நிதர்சனத்திற்கு தெரிவித்தார்.
கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியுள்ளோம், கிழக்கில் முஸ்லீம் ஊர்காவல் படையினை பிறேமதாச உருவாக்கியதால் தமிழர் கிழக்கில் இருந்து அடித்து விரட்டபட்டனர், தற்போது கருணாவிடம் ஆயுதம் வாங்கிய முஸ்லீம் இழைஞர்கள் பிள்ளையான் குழுவிற்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர்,

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மதிகெட்ட நுட்பத்தால் உருவாகிய தமிழர் ஆயுதப்போராட்டமும் , பிறேமதாசாவின் மதி நுட்பத்தால் உருவாகிய முஸ்லீம் ஊர்காவல் படையும், மகிந்தவின் அரசியல் மதிநுட்பத்தால் இண்று உருவாகியுள்ள ஜிகாத் குழுவினரும் இலங்கையில் ஆயும் ஏந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருணாவையும் பிள்ளையானையும் அண்று உருவாக்கிய றணில் இண்று அவர்களின் ஆயுதங்களை களையுமாறு கோருவது வேடிக்கையானது என்று குறித்த ஜிகாத் உறுப்பினர் தெரிவித்தார்.

http://nitharsanam.com/?art=25109

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பரவலாக்கல் யோசனையை தமிழீழ விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர்


போர் முனைப்புகளுக்கு மத்தியில் வடக்குகிழக்கு பகுதிகளுக்கு அதிகாரப்பரவலாக்கலை மேற்கொள்ளப்போவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்து வரும் கருத்துகளை தமிழீழ விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13 வது திருத்தச்சட்டம் என்ற நாடகத்தை நடத்திக்கொண்டு தமிழ்தேசியத்திற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா நடேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் இனப்பிரச்சினைத்தீர்வுக்கான சமாதான ஏற்பாட்டாளராக செயற்படும் நோர்வே தரப்பினர் கிளிநொச்சிக்கு வந்து தமிழீழ விடுதலைப்புலிகளை சந்திப்பதற்கு அரசாங்கம் தடங்கலை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தக்கருத்துக்கள் தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் ஏழாலையில் வெடிப்புச் சம்பவம்: 9 வயதுச் சிறுவன் பலி மேலும் இரண்டு சிறுவர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் ஏழாலை கிழக்குப் பகுதியில் மூன்று சிறுவர்கள் ஆட்கள் இல்லாத வீடொன்றின் முன்றலில் விளையாடிக்கொண்டிருந்ததாகவும், தீடிரென அந்தப் பகுதியில் வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. என்ன வெடிப்பு ஏற்பட்டது என்பது குறித்த இதுவரை எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவத்தில் விஜயராசா தர்ஷன் (9), அவருடைய இளையசகோதரரான விதுஷன் மற்றும் அயல்வீட்டுப் பிள்ளையான யதுர்ஷன் (6) ஆகியோர் விளையாடிக்கொண்டுநின்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் விஜயராசா தர்ஷன் என்பவர் ஸ்தத்திலேயே கொல்லப்பட்டதுடன், ஏனைய இரண்டு சிறுவர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை: காத்தான்குடியில் ஹர்த்தால்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும், களுதாவளை பிரதேச சபையின் உபதலைவரும், அவருடைய உதவியாளர் ஒருவரும் இன்று திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

காத்தான்குடிப் பகுதியில் தோன்றியிருக்கும் பதற்றநிலையை தணிப்பது தொடர்பாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பிள்ளையான், மாகாணசபை அமைச்சர் ஹிஸ்புல்லாவை முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சூழ்நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் களுதாவளை பிரதேச சபை உபதலைவரும், அவருடைய உதவியாளரும் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடியில் காத்தான்குடிப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரி ஒருவர் நேற்று வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். இவருடைய ஜனாசா இன்று திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பிரதேச மக்கள் முயற்சித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி காத்தான்குடிப் பகுதிக்குச் சென்றதாகவும், அவரை அங்கு கூடியிருந்த மக்கள் கடுமையாக விமர்சித்ததாகவும் பிராந்தியச் செய்திகள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து அமைச்சர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், காத்தான்குடிப் பகுதியில் தொடர்ந்தும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது. வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு, வீதிகள் வெறிச்சோடிப்போயிருப்பதாகத் தெரியவருகிறது. வீதிகளில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக காத்தான்குடிப் பகுதியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுஇவ்விதமிருக்க தொடர்ந்தும் பதற்றநிலை காணப்படுவதால் ஏறாவூர் பிரதேச மக்களை அங்கிருந்து வெளியேறவேண்டாமென பாதுகாப்புப் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணம் பௌத்த கலாசாரத்தின் புனித புத்த பூமி--எல்லாவள மேதானந்த தேரர்:

எரிபொருள் மற்றும் பொருட்களின் விலை உயர்வு தொடர்பான கதைகளை பின்னுக்கு தள்ளி விட்டு, நாட்டை குறித்தே பேச வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

நாட்டை குறித்து பேசும் தலைப்பை ஜாதிக ஹெல உறுமயவே முன்னெடுத்து வந்துள்ளதாக அதன் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஹெல உறுமயவின் 5 வது மாநாட்டில் உரையாற்அவர், இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனநாயக குழு, ஈ.பீ.டீ.பீ மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி என்பன வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தன.

ஜாதிக ஹெல உறுமய ஆத்ம லாபத்திற்காக அரசியலில் ஈடுபடவில்லை. பஞ்சீல கொள்கையின் மூலமே நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினையில் இருந்து வெற்றி பெற முடியும். ?????

பௌத்த கலாசாரத்தின் புத்த பூமி கிழக்கு மாகாணமாகும். கிழக்கு மாகாணத்தில் எவர் முதலமைச்சராக இருந்தாலும் தேசிய உரிமைகளை பாதிக்க தாம் இடமளிக்க போவதில்லை எனவும் மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இளைய தலைமுறையினர் 1971ஆம் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து அழிவை சந்தித்தனர். தேசியவாத அமைப்புகள் வலுவிழந்ததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டது.

யுத்தத்தை முனைப்புகளை மேற்கொண்டுள்ள சில நாடுகள் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறுவது இரட்டை நிலைப்பாடகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வாகனங்களை விற்பனை செய்ததாக சிலர் கூறிய குற்றச்சாட்டுகள் தம்மை மேலும் வலுப்படுத்தியதாகவும் ஜாதிக ஹெல உறுமய மீது பல்வேறு விமர்சனங்களை செய்த உலகதில் சிறந்த அரசியல் கட்சி என கூறி கொள்ளும் கட்சி, தமது கட்சிக்கு செய்த பாவங்களுக்காகவே இரண்டாக பிளவுப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் புலிகளுக்கு எதிராக உரிய பதிலை வழங்க பௌத்த அடிப்படையை ஒரளவேனும் ஏற்றுக் கொண்ட அரச இயந்திரத்தை கட்டியெழுப்ப முடிந்தமை மகிழ்ச்சிகுரிய விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

மநாட்டில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டதை போன்று வன்னியையும் மீடக வேண்டும் என கூறியுள்ளார். எதிர்வரும் சில மாதங்களில் அந்த வேலை திட்டம் தீர்க்கமான இடத்தை அடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சிவாஜில்ங்கம்

sivajilingam-mp.jpgஇலங்கை மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.


தமிழகத்தின் அரியலூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

கடல் இலங்கையைப் பிரித்தாலும் தொப்புள்கொடி உறவு தமிழகத்துடன் தொடர்கிறது எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். ஈழத் தமிழர் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இலங்கை அரசின் இனப்படுகொலைகளை சர்வதேச நாடுகள் புரிந்துக்கொண்டுள்ளன. தனது மனித உரிமை மீறல்கள் வெளி உலகிற்கு தெரியக்கூடாது என்பதாலேயே சர்வதேச மனித உரிமை அலுவலகம் அமைக்க இலங்கை அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்குலைவுகளைச் சமாளிக்க இலங்கைக்கு உலக நாடுகள் உதவி வருகின்றன.

இந்தியாவும் முதல் கட்டமாக 400 கோடி ரூபாவை வழங்கியுள்ளது. இரண்டாம் கட்டமாக தொடரூந்து அபிவிருத்திக்கு 400 கோடி ரூபாவை வழங்கவுள்ளது.

இத்தகைய உதவிகளை இந்தியாவும் உலக நாடுகளும் நிறுத்த வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

அதன் மூலமே இலங்கை அரசாங்கத்தை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர முடியும் எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா நடுநிலையுடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் ராணுவத் தளம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இது இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதைக் கண்டித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க போவதாகவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

தகவல்: தினமணி

13 வயது சிறுமியை சிங்கள இராணுவ அதிகாரியொருவர் பாலியல் வல்லுறவு

13 வயது சிறுமியை இராணுவ அதிகாரியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக கொழும்பின் சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தொழில் வழங்குவதாகக் கூறி களுத்துறை விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த சிறுமி மிக மோசனமான வகையில் வல்லுறவில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

இந்த பாதகச் செயலுக்கு இரண்டு பெண்கள் உடந்தையாக இருந்ததாகவும், அதில் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த சிறுமி தற்போது களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.


இராணுவ அதிகாரி மற்றும் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றைய பெண் என்போரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத் சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

சம்பூர் அனல்மின் திட்டத்தின் பின்னணியில் பறிக்கப்பட்ட தமிழர் நிலங்களும் இந்தியாவின் இராஜதந்திரமும்: கொழும்பு ஊடகம்

தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமான சம்பூரில் இந்தியா உதவியுடன் சிறிலங்கா அரசாங்கமானது அனல் மின் திட்டத்தை அமைப்பதன் பின்னணி குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"லக்பிம" ஏட்டில் வெளியாகியுள்ள அக்கட்டுரையின் தமிழ் வடிவம்:

சம்பூர் அனல் மின் திட்டம் உத்தேசிக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்கா மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திட்டத்தின் மூலம் பாரியளவிலான பொதுமக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தேசிய அனல் மின்வலு கூட்டுத்தாபனத்தினால் சாத்திய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்தத் திட்டம் அமைக்கப்படவுள்ளதாகவும்,

எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்ய முடியும் எனவும் கூறப்படுகின்றது.

2006 ஆம் ஆண்டு சிறிலங்காப் படைத்தரப்பிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் காரணமாக சம்பூர் பிரதேச மக்கள் அப்பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் தற்போது இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வருகின்றனர்.

சம்பூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.

சம்பூர் பிரதேச மக்கள் அச்சம் காரணமாக அப்பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளனர். வெளியேறிய பலரிடம் தங்களின் உடமைகளை உறுதிப்படுத்தக்கூடிய எவ்வித ஆவணங்களும் தற்போது கைவசம் இல்லை.

எனினும், இந்த குடும்பங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளினால் குடியமர்த்தப்பட்டவர்கள் என சிறிலங்கா அரச அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரதேச மக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. எனினும் பல தலைமுறைகளாக அப் பிரதேசத்தில் அவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

இரண்டாம் இராஜசிங்க மன்னனினால் கோணஸ்வரத்திற்கு பதிலீடாக தம்பலகாமத்தில் ஓர் கோயில் அமைக்கப்பட்டதாகவும்,

கோயிலுக்கு தொண்டாற்றும் பணிகள் சம்பூர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும்

டச்சு வரலாற்றுத் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பூர் ஓர் மிகச் சிறந்த விவசாய நிலம் என்று மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியத்தைச் சேர்ந்த ராஜன் கூல் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான இடம் அதுவல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பிரதேச மக்களிடம் இது குறித்து எவ்வித கருத்தும் அறியப்படவில்லை.

இந்த நிலைமை அக் கிராம மக்களை எந்தளவுக்கு பாதிக்கும் என்பது பற்றி எவரும் கவலைப்படவில்லை.

எறிகணைத் தாக்குதல்களின் காரணமாக பிரதேச மக்கள் வெளியேறினர். அந்த சம்பவங்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது பற்றிக் கூட சிறிலங்கா அரசாங்கம் கவலைப்படவில்லை.

அந்தப் பிரதேச மக்களிடம் கருத்துக்கள் அறியப்பட்டிருக்க வேண்டும், அவர்களுக்கு நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டிக்க வேண்டும் என்றும் ராஜன் கூல் குறிப்பிட்டார்.

இந்த விடயங்களின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்தின் நேர்மைத்தன்மையின் நிலைமை எது என்பது தெளிவாக புலப்படுகின்றது.

அந்தப் பிரதேச மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படாது என அரசாங்கம் குறிப்பிடுகின்றது.

மறுபுறத்தில் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் பிரதேச மக்களிடம் வேறு இடங்களுக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவிக்கும் கையொப்பங்களை அரசாங்கம் தந்திரமாக பெற்றுக்கொள்கின்றது.

இதன் மூலமாக சம்பூர் மக்கள் வேறு இடங்களில் வசிப்பதனை நிராகரித்துள்ளமை தெளிவாக புலப்படுகின்றது.

ஏனெனில், மாற்றீடாக வழங்கப்படவுள்ள பிரதேசங்கள் மிகவும் மோசமான பயனற்ற பிரதேசங்களாக காணப்படுகின்றன.

சம்பூருக்கு மாற்றீடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள ரால்கீ- மகாவலி கங்கை பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் நீரில் மூழ்கிவிடும்.

மற்றைய தென்பகுதியில் வறட்சி நிலைமை காணப்படுகின்றது.

இந்தத் திட்டம் இந்தியாவின் மின் நிறுவனத்துக்கும் சிறிலங்கா மின்சார சபைக்கு இடையிலான கூட்டு முயற்சியாகும் என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதரகத்தின் தகவல் அதிகாரி தினகர் அஸ்தான தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியங்களின் அடிப்படையில் மின் திட்டத்திற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சம்பூர் பிரதேசத்தில் மின்திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்க மின் நிறுவனம் பரிந்துரைக்கவில்லை என்று 2007 ஆம் ஆண்டில் இந்திய தூதரகப் பேச்சாளர் நக்மா மாலிக் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பூர் பிரதேசத்தில் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

சம்பூரில் மின் நிலையத்தை அமைப்பதன் மூலம் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாரிய கப்பல்களின் மூலம் நிலக்கரியை இறக்குமதி செய்ய சம்பூர் மிகவும் உசிதமான இடமாக அமைந்துள்ளது,

பாரிய கப்பல்கள் போக்குவரத்து செய்யக்கூடியளவு ஆழ்கடல் பரப்பு காணப்படுகின்றது.

பிரதேச மக்கள் இடம் நகர்த்தப்பட்டமை தொடர்பாக வினவிய போது, இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு எனினும், உயர் பாதுகாப்பு வலயங்களில் எவருக்கு தங்க அனுமதியில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இராணுவக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக சம்பூர் கருதப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சம்பூர் பிரதேசத்தை சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிப்பதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் பல்வேறு கனரக ஆயுதங்களை சம்பூர் பிரதேசத்தில் கொண்டு வந்ததாகத் தெரியவருகின்றது.

திருகோணமலை துறைமுகம், பிறீமா மா ஆலை உள்ளிட்ட மிக முக்கிய இலக்குகள் காணப்படுகின்றமையே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கின்றார்.

பொதுமக்களை சம்பூர் பிரதேசத்தில் குடியமர்த்தினால், படிப்படியாக விடுதலைப் புலிகளும் பிரவேசிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த மின்சாரத் திட்டத்தின் மூலம் பாரிய சூழல் பிரச்சினை உருவாகக் கூடும். மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் 20,000 ஏக்கரை ஒதுக்குவதன் மூலம் 16,000 மக்கள் இடம்பெயர வேண்டியேற்படும்.

இந்தப் பிரதேச மக்கள் அடையக்கூடிய பாதிப்புக்கள் குறித்து அரசாங்கம் எந்தவித கரிசனையும் காட்டவில்லை என ராஜன் கூல் தெரிவித்துள்ளார்.

சுமார் 50 அனல் மின் நிலையங்களை அமைக்கக் கூடியளவு நிலத்தை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.

சம்பூர் பிரதேச மக்களை இடம் நகர்த்த வேண்டிய அவசியம் எதுவுமில்லை.

மின்சாரத் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் இராஜதந்திர காய் நகர்த்தல்களை இந்தியா மேற்கொள்வதாக இந்திய ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

பிராந்தியத்தின் அபிவிருத்தி மற்றும் இராஜதந்திர விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் ஓர் தந்திரோபாயமாக மின்சாரத் திட்டம் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்தியாவில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்வலு பிரச்சினைக்கு தீர்வு காணும் முக்கிய உபாயமாகவே பிராந்தியத்தின் பல நாடுகளுடன் கூட்டு மின்சக்தி திட்டங்களை அமுல்படுத்த இந்தியா முனைப்பு காட்டி வருவதாக அந்த ஊடகவியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார் என்றார் அவர் என அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthinam.com

Sunday, 1 June 2008

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாகாண சபை முறைமை, மற்றும் நிர்வாகம் உட்பட பல்வேறு பயிற்சிகளை வழங்கும் நோக்குடனேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மலேசியா மற்றும் கொங்கொங் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளனர். அலரி மாளிகையில் நேற்று சனிக்கிழமை கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது கிழக்கு மாகாண சபை அபிவிருத்தி குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அமைச்சர் ஹிஸ்புல்லா இவ்வேளையில் மாகாணசபை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சிறந்த பயிற்சிகள் வழங்கப்படுமெனவும் மக்களுக்கு சேவை செய்ய தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

கிழக்கு மாகாணசபை ஆளும் கட்சி உறுப்பினர்களை வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள அதேவேளை எதிரணி உறுப்பினர்கள் குறித்து எத்தகைய தீர்மானமும் மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இது மகிந்தவிற்கான காதல் கடிதம். - ஈ.பி.டி.பி.யின் ஜனநாயக விரோதம் அதிகமானது - ஆனந்தசங்கரி!


வடக்கில் ஈ.பி.டி.பி.யினர் கடந்த காலங்களில் மேற்கொண்ட ஜனநாயக விரோத செயல்கள் மற்றும் அவர்களது அடாவடித்தனங்களையும் சுட்டிக்காட்டியுள்ள த.வி.கூ.தலைவர் ஆனந்தசங்கரி ஈ.பி.டி.பி.யிடம் வடக்கு நிர்வாக செயலணிகுழு வழங்கப்பட்டதை கண்டித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள்
அலரி மாளிகை
கொழும்பு-03
26.05.2008
பாகம் -01
கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழுவை அமைத்தமைக்கு தங்களுக்குரிய கௌரவத்தை கொடுத்து எனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறேன். அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய உரிமையும், நாட்டின் நலன் கருதிய கடமைப்பாடும் எனக்குண்டு. அவ்வாறு செய்வதற்கு நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் பல என்னிடம் உண்டு. எனது ஆட்சேபனை தாமதமாகியமைக்கு கிழக்கு மாகாண பிரச்சினைகளில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தமையும் எனது ஆட்சேபனைக்குரிய ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் முக்கிய உறுப்பினராகிய செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் படுகொலையும் காரணங்களாகும். என்று அவருடைய கடிதம் நீண்டு செல்கிறது.
nitharsanam

ரயில்வே கட்டணங்கள் இன்று முதல் 90 வீதத்தால் அதிகரிப்பு

கடந்த வியாழக்கிழமை முதல் பஸ் கட்டணங்கள் 27.2 வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில், ரயில்வே திணைக்களம் இன்று முதல் ரயில் கட்டணங்களை 90 வீதத்தால் அதிகரித்துள்ளது.

"மிகக் குறைந்த கட்டணம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கிலோ மீற்றருக்குமான கட்டணங்கள் 90 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன" என ரயில்வே முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்திற்காக அதிகம் ரயில் வண்டிகளைப் பயன்படுத்துவோராக அரச ஊழியர்களே இருப்பதால் அவர்களது தவணைக் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரயில்வே கட்டணங்கள் மிகக் கூடுதலாக அதிகரிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரயில்வே தொழிற்பாட்டுக்கான செலவினங்கள் 120 வீதத்தால் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடைசியாக 2005 இல் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

அரசாங்க மதிப்பீடுகளின்படி மிகக் கூடுதலானோர் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துகின்ற அதேநேரம், தினசரி 175,000 தனியார் வாகனங்கள் கொழும்பு நகருக்குள் வந்து செல்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ரயில் கட்டணங்கள் மிகக் குறைவாக இருப்பதன் காரணமாக பெரும்பாலானோர் தமது இரு வழிப் பயணத்திற்கும் ரயிலையே பயன்படுத்துவதாகவும் இந்த மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

கட்டணங்கள் அதிகரித்துள்ளபோதிலும், ரயில்வே திணைக்களம் கடும் நஷ்டத்தில் இயங்குவதாகத் தெரிவித்திருக்கும் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ரயில்வே தொழிற்பாட்டுக்கான வருடாந்த செலவினம் 10,000 மில்லியன் ரூபாய்களாக இருப்பதாகவும், ஆனால் 2,500 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே வருமானமாக ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.திசாநாயக்கவை ஐ.தே.கவின் தலைமைப் பதவிக்கு நியமிக்க இரகசிய சதி!!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அகற்றிவிட்டு, எஸ்.பி.திசாநாயக்கவை அந்த பதவியில் அமர்த்தும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும், கரு ஜயசூரிய தரப்பை சேர்ந்த சிலரும் இந்த நடவடிக்கைகயின் பின்னனியல் இருப்பதாக கூறப்படுகிறது.

முதன் முதற்கட்டமாக கடந்த புதன் கிழமை சுவரொட்டி பிரசாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரொட்டியில் தோற்றது போதும் புதிய தலைவர் ஒருவரின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்புவோம் என அச்சிடப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பி போது, அவர் பார்வையில் படும்படியாக கட்டுநாயக்க முதல் கொழும்பு வரையும், கொழும்பு நகர் முழுவதும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அகற்றும் முயற்சிக்கு அரசாங்கத்தில் உள்ள முக்கியபுள்ளிகள் சிலர் ஆதரவு வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முயற்சி குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அறிந்து கொண்ட நிலையிலேயே கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் பிரசார நடவடிக்கைகளில் எஸ்.பி.திசாநாயக்க ஈடுபடுத்தப்படவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்கவின் ஜெர்மனி பயணத்தை அடுத்து, எஸ்.பியுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்த முடியாதிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் சிலர் அவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை தான் இல்லாத ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் தேர்தலில் வெற்றிபெற மாட்டாது என்ற பிரசாரத்தை எஸ்.பி.திசாநாயக்க ஆரம்பிக்க உள்ளதாகவும் இதுவரை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவுவழங்கி வந்த இலத்திரனியல் ஊடகம் ஒன்றும், வாராந்த பத்திரிகையும் இந்த பிரசாரத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பில் ஒருவர் கொலை தமிழ் மக்கள் பயம் காரணமாக மட்டக்களப்பு நகரப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தில் 38 வயதான அப்துல் ரசாக் பாரூக் என்ற மரக்கறி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து விபுலாநந்தா இசை நடனக்கல்லூரிக்கு அருகில் இருந்து தமிழ் மக்கள் பயம் காரணமாக மட்டக்களப்பு நகரப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்தநிலையில் மட்டக்களப்பிலும் காத்தான்குடியிலும் தமிழ் முஸ்லிம் மத்தியில் பதட்ட நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தென்மராட்சி குடம்மியன் வரணி பிரதேசத்தில் வசித்து வந்த 71 வயதான சின்னத்தம்பி சின்னக்குட்டி எனும் வயோதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தபோதே இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரது சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் ஆயுதக்குழுக்களுக்கௌ உதவும் செயற்பாடுகளை கைவிடவேண்டும்-ஐ.நா

இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் குற்றவாளிகளுக்கு உதவும் செயற்பாடுகளை கைவிடவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் விசேச நீதி விசாரணையாளர், பிலிப் அல்ஸ்டன் கோரியுள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி ஜெனீவாவில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

அரசாங்கமும் அதிகாரிகளும் இராணுவத்தினருடனும் ஆயுதக்குழுக்களுடனும் தொடர்புகளை கொண்டிருப்பது குற்றச்செயல்களை ஊக்குவிக்கும் என அல்ஸ்டனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணா குழுவினருடன் தொடர்புகளை கொண்டிருந்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதி நடைமுறையை முழுமையாக மீறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஒத்துழைப்பு காரணமாக கிழக்கிலும் வடக்கிலும் ஆயுதக்குழுக்களின் ஆதிக்கம் ஏற்பட்டதாக அல்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.