Saturday, 31 May 2008

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு இந்தியா உதவும்????

indian-highcommissioner-alok-prasad.jpgகிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவை அழைத்து கலந்துரையாடிய போதே உயர்ஸ்தானிகர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலை மற்றும் மாகாண பேரவையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளன. இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லீம் மோதல்கள் ஏற்படாதிருக்க வேண்டிய தேவை குறித்து உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியதாக அமைச்சர் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் புலிகளின் நிலைகளைக் கண்டறிவதில் சவால்களை எதிர்கொள்ளும் சிங்களப் படை

sri_lankan_army_1.jpgவடக்கில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை முடிவின்றி நீண்டு சென்று கொண்டிருக்கும் நிலையில், கிழக்கில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் தாக்குதல்களால் படையினர் முன்னுள்ள நெருக்கடி மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கிழக்கில் இருந்து விலகிச் சென்ற ஜெயந்தன் படையணியை புலிகளின் தலைமைப்பீடம் மீண்டும் கிழக்கிற்கு அனுப்பி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், அம்பாறையிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் காலத்தில் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிந்த மறுநாள் 11 ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியிலும், 16 ஆம் திகதி நாவற்குடாவிலும், 20 ஆம் திகதி அரசடியிலும் வைத்து தலா ஒவ்வொரு பொலிஸார் என மொத்தம் மூன்று பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்த நிலையில்!

ltte_figiters.jpg

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் புதிதாக சிறப்புத் தாக்குதல் தளபதிகளை புலிகளின் தலைமை நியமித்திருப்பதானது புலிகளிடம் கிழக்கிற்கு அணிகளை அனுப்புமளவுக்கு ஆளணி வளம் இருப்பதையே காட்டுகிறது.

மட்டக்களப்பில் மட்டுமன்றி திருகோணமலையிலும் தேர்தல் நடைபெற்ற 10 ஆம் திகதி அதிகாலை 2.23 மணிக்கு ஏ-520 என்ற ஆயுத விநியோகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதும், அன்று காலை அம்பாறை பன்னலகம என்ற இடத்தில் புலிகள் மோட்டார் தாக்குதலை நடத்தியிருந்ததும் கிழக்கின் அனைத்து பகுதிகளுக்குள்ளும் மோட்டார் தாக்குதல்களை நடத்தும் வலிமையுடன் புலிகள் ஆழமாக ஊடுருவியுள்ளனர் என்பதையே காட்டுகிறது.

கடந்த 20 ஆம் திகதி அம்பாறை ரூபஸ் குளத்தில் அதிரடிப் படையினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதலில் அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டார், நான்கு பேர் படுகாயமடைந்தனர். கடந்த 22 ஆம் திகதி அம்பாறை அக்கரைப் பற்று ஊரணியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்திருந்தார். மறுநாள் 23 ஆம் திகதி அம்பாறை பக்மிட்டிய என்ற இடத்தில் நடந்த கிளைமோர் தாக்குதலில் படைத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார். 20 ஆயிரம் இராணுவத்தினர், 10 ஆயிரம் பொலிஸார் என சுமார் 30 ஆயிரம் படைத் தரப்பினரின் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு புலிகளின் அணிகள் கிழக்கிற்குள் ஊடுருவியுள்ளதையே இந்தச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அதுமட்டுமின்றி, கிழக்கில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமை படைத்தரப்பிற்கு புதிய நெருக்கடிகளையும் தலைவலியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம், கடந்த 22 ஆம் திகதி மட்டக்களப்பில் சிறி லங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் குழுவின் ஆரையம்பதி பொறுப்பாளரும், அந்தக் குழுவின் முக்கிய பிரமுகருமான சாந்தன் துப்பாக்கிதாரிகளால் ஓட ஓட விரட்டி விரட்டி சுட்டுக் கொல்லப்பட்டமையும், அதனையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறையும் கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

‘முஸ்லிம்களே சாந்தனை சுட்டுக் கொலை செய்தனர’; என்று பிள்ளையான் குழு குற்றம் சுமத்துகின்ற போதும் அதனை முஸ்லிம்கள் அடியோடு நிராகரித்துள்ளனர். கிழக்கை முழுமையாகக் கைப்பற்றி, அங்கு ஒரு தேர்தலை நடத்தி, மாகாண நிர்வாகத்தை நடைமுறைப் படுத்தியிருப்பதாக சிங்களம் கௌரவத்துடன் கூறிக்கொள்ள முடியாத நிலைக்கு புலிகளின் ஊடுவல்களும் தாக்குதல்களும் கிழக்கில் அதிகரித்து விட்டன. இத்தகையதொரு நிலையில் கிழக்குப் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் கூறிவரும் தகவல்களில் எதுவித உண்மையுமில்லை என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் கூட உருவாகி வருகிறது.

கிழக்கில் அதிகரித்திருக்கும் தாக்குதல்களைப் பொறுத்தவரை ஒரே சமயத்தில் மூன்று மாவட்டங்களிலும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது. புலிகளின் சிறிய குழு ஒன்றே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக படைப் புலனாய்வுப் பிரிவினர் கூறிவரும் தகவல்களை மேற்படி மூன்று மாவட்டங்களிலும் ஒரே சமயத்தில் இடம்பெறும் தாக்குதல்கள் பொய்ப்பிப்பதாகவே அமைந்துள்ளன.

அதாவது ஏற்கனவே இருந்ததைவிட மேலதிகமான அணிகள் வன்னியிலிருந்து கிழக்கிற்கு விரைந்துள்ளன. கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திற்குமென சிறப்புத் தளபதியும் தாக்குதல் தளபதிகளும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதியாக கேணல் கீர்த்தி நியமிக்கப் பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட புலிகளின் தாக்குதல் சிறப்புத் தளபதியாக கேணல் வசந்தன் நியமிக்கப் பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியாக கேணல் ராம் நியமிக்கப் பட்டுள்ளார்.

இவர்களில் கீர்த்தியும், வசந்தனும் பிரிகேடியர் பால்ராஜின் அஞ்சலி நிகழ்வில் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து பங்கேற்றிருந்தனர். தளபதி கேணல் ராம் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. அவர் அம்பாறையில் நிலைகொண்டு தாக்குதல்களை ஒருங்கிணைத்து வருவதாக கூறப்படுகிறது.

புலிகள் கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்புத் தாக்குதல் தளபதிகளை நியமித்து களமிறக்கியிருப்பது முக்கியத்துவம் மிக்கதாகப் பார்க்கப் படுவதுடன் கிழக்கில் தாக்குதல்கள் மிகவேகமாக அதிகரிக்கும் சாத்தியங்களையும் தோற்றுவித்திருக்கிறது.

வன்னியிலிருந்து கிழக்கிற்கு வருகை தந்த புலிகள் திருகோணமலையின் வடக்கேயுள்ள பேராறு பகுதியில் தரையிறங்கி அங்கிருந்து மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் நகர்ந்துள்ளனர் என்று தெரிய வருகிறது. பேராறு பகுதியில் தரையிறங்கிய இந்த அணியினரின் கிழக்கு நகர்வு குறித்து முகர்ந்து பிடித்த படையினர் கந்தளாய் சிற்றாறு பகுதியிலும் மீகஸ்கொடல்ல பகுதியிலும் வைத்து மேற்படி புலிகளின் குழுவுடன் வழிமறிப்பு தாக்குதலில் ஈடுபட்டனர். எனினும் படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு - போக்கு காட்டிவிட்டு - உரிய இடங்களை புலிகளின் அணிகள் சென்றடைந்திருக்கின்றன.

ஆய்வு: சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி

வன்னியில் தினமும் கடும் மோதல்களும் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் புலிகள் கிழக்கிற்கு தமது அணிகளை அனுப்புகின்றனரெனில் அதற்கு வலுவான காரணங்கள் இருக்கவே செய்யும். குறிப்பாக, படையினரின் போர்த் திட்டங்களைக் குழப்புவதே கிழக்கில் மீண்டும் களமிறக்கப்படும் புலிகளின் முக்கிய பணியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

வன்னியைச் சூழ கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகையில் வன்னியைச் சூழ்ந்துள்ள களமுனைகளில் குவிக்கப்பட்டுள்ள படையினரின் கவனத்தை குலைப்பது அல்லது அங்குள்ள படையினரை பரவலாக்குவதே புலிகளின் உத்தியாகும். கிழக்கில் படையினருக்கு ஏற்படும் நெருக்கடியானது வன்னிக் களமுனைகளில் இத்தகையதொரு நிலையை இலகுவில் ஏற்படுத்திவிடும்.
எனினும் கிழக்கில் தற்போது இடம்பெறும் சிறிய சிறிய தாக்கதல்களால் இத்தகையதொரு நிலையை புலிகளால் அடைந்து கொள்வது கடினமே. எனவே, எதிர்வரும் நாட்களில் கிழக்கில் தமது தாக்குதல்களை புலிகள் தீவிரப்படுத்தும் சாத்தியங்களே அதிகமாகவுள்ளன. மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்த கையோடு புலிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பதை வைத்துக் கொண்டு மாகாணசபை நிர்வாகத்தைக் குழப்பும் வகையில் புலிகளின் மேலதிக அணிகள் களமிறக்கப் பட்டிருக்கலாமென எழுந்தமானமாகக் கூறிவிட முடியாது.

அப்படி மாகாணசபை நிர்வாகத்தைக் குழப்புவதானால் தேர்தல் காலத்தில் புலிகளின் அணிகள் கிழக்கில் தமது கைவரிசையைக் காட்டி தமது நோக்கத்தை இலகுவாக அடைந்திருக்கலாம். ஆனால், தேர்தல் காலத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆகவே, புலிகளின் நோக்கம் அதுவல்ல.

அம்பாறையிலும் மட்டக்களப்பிலும் பாதுகாப்பு தரப்பினர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களைப் பார்க்குமிடத்து படைத்தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்துவதே புலிகளின் திட்டமென்பது வெளிப்படையாகி உள்ளது. அத்துடன் கிழக்குத் தேர்தல் முடியும்வரை நிறுத்தப் பட்டிருந்த சுமார் 20,000 படையினரில் கணிசமானோரை தேர்தல் முடிந்த பின்னர் வடக்கிற்கு நகர்த்தும் திட்டம் இராணுவத் தளபதியிடம் இருந்ததாகவும் முன்னர் கூறப்பட்டது. எனவே, கிழக்கில் தேர்தலுக்கு பின்னர் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி படையினரை வடக்கிற்கு நகர்த்தும் திட்டத்தைக் குழப்பவும் புலிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

அதையும் மீறி வடக்கு நோக்கி படையினர் நகர்த்தப்படும் பட்சத்தில் கிழக்கில் களையெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு புலிகளுக்கு வாய்ப்பாகிவிடும். அந்த வகையில் கிழக்கில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ள புலிகளால் படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கப் போவது உறுதியாகி இருக்கிறது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை கிழக்கு பிராந்தியக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே தலைமையிலான மூன்று படையணிகள் நிலைகொண்டுள்ளன. 21 ஆவது 22 ஆவது 23 ஆவது படையணிகளே இவையாகும். இந்த மூன்று படையணிகளும் தாக்குதல் படையணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 21 ஆவது படையணி கஜசிங்கபுரத்திலும் 22 ஆவது படையணி திருகோணமலையிலும் 23 ஆவது படையணி வெலிக்கந்தையிலும் நிலைகொண்டுள்ளன.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை என மேற்படி தாக்குதல் படையணிகளும் நிலைநிறுத்தப் பட்டிருந்தாலும் புலிகள் கிழக்கில் எந்தெந்த இடங்களில் நிலைகொண்டுள்ளனர் என்பதைக் கண்டறிவதில் படைத்தரப்பு பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்திருப்பது வெளிப்படையே. இந்நிலையில் புலிகளின் குழு யால வனவிலங்கு சரணாலயப் பகுதிக்குள் மீண்டும் நுழைந்திருப்பதாகத் தெரிவிக்கப் படுகிறது. கடந்த வாரம் படைப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்திருக்கும் தகவல்களின்படி புலிகளின் கெரில்லா தாக்குதல் அணியினர் யால வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மீண்டும் ஒன்றுகூடி வருவதாகத் தெரிவிக்கப் படுகிறது.

இதனையடுத்து யாலவின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் உத்தரவு யாலவிலுள்ள ஓருங்கிணைப்புக்குழு கட்டளை மையத்திற்கு இராணுவத் தளபதியால் கடந்த வாரம் அனுப்பப் பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவின் இந்தத் தகவல்கள் உண்மையாயின் அடுத்துவரும் நாட்களில் யாலவில் தாக்குதல்கள் அதிகரிக்கும் சாத்தியங்கள் உள்ளன. யால வனவிலங்கு சரணாலயத்தின் வடபகுதியான பாணம என்ற பகுதியிலேயே சுமார் 10 பேரடங்கிய புலிகள் குழுவினரின் நடமாட்டம் காணப்பட்டதாக அப்பகுதி சிங்கள மக்களும் தெரிவித்திருக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த டிசம்பர் 7 ஆம் திகதியும் இப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவல்களையடுத்து படையினர் தேடுதல் நடத்தியபோது அப்பகுதியில் இருதரப்பிற்கும் இடையே மோதல் மூண்டிருந்தது. எனினும் அங்கிருந்த புலிகள் தப்பியிருந்தனர்.

தற்போது மீண்டும் புலிகளின் நடமாட்டம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. யால வனவிலங்கு சரணாலயப் பகுதியில் புலிகள் முதன் முதலாக 1997 ஆம் ஆண்டிலேயே சிறியதொரு கெரில்லா தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து பின்வாங்கியிருந்தனர். அதன் பின்னர் தற்போதே புலிகளின் நடமாட்டம் யாலவில் அதிகரித்திருக்கிறது. கெரில்லா தாக்குதல்களை நடத்துவதற்கான சிறந்த ஒரு களமாக யால வனவிலங்கு சரணாலயப் பகுதியை புலிகள் கருதியிருக்கலாம். அடிக்கடி அப்பகுதியில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களும் அதனை உறுதிப்படுத்துவது போன்றே உள்ளது.

கஞ்சிகுடிச்சாறு மற்றும் பேராறு பகுதிகளில் சுதந்திரமாக இயங்கிவரும் புலிகளின் அணியினரே யால வனவிலங்கு சரணாலயப் பகுதிக்குள் கெரில்லா தாக்குதல்களை நடத்தும் நோக்கில் உள் நுழைகின்றனர் என்று படைத்தரப்பு கூறிவருகிறது. அதாவது, கஞ்சிகுடிச்சாறு மற்றும் பேராறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி புலிகளை விரட்ட முடியாத கையாலாகாத நிலையில் தாம் இருப்பதை படைத்தரப்பு மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

அதேநேரம், வன்னியில் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்கதல்கள் நடத்தப்பட்டு பலியெடுக்கும் படலம் தெடர்வதை தடுத்து நிறுத்துவதற்காக தென்னிலங்கையிலும் தாக்குதல்களை நடத்த வேண்டியதொரு நிலை புலிகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்டிருப்பது யாவரும் அறிந்த உண்மையே.

எனவே, வன்னியிலுள்ள மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வகையிலான தாக்குதல்கள் தென்னிலங்கையில் அதிகரிக்கும் சாத்தியங்களும் காணப்படுகின்றன. வன்னியில் கடந்த 23 ஆம் திகதி நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட 16 பேரின் சடலங்களும் கிளிநொச்சி பாரதிபுரத்தில் மறுநாள் 24 ஆம் திகதி அருகருகே புதைக்கப்பட்டன.

சடலங்கள் புதைக்கப்பட்ட சமயம் கொழும்பில் கடவத்தையிலும் மொறட்டுவையிலும் பேரூந்துகளில் அதிசக்தி வாய்ந்த இரண்டு குண்டுகள் பயணிகள் வழங்கிய தகவலையடுத்து படைத் தரப்பால் மீட்கப்பட்டன. இந்த இரண்டு பேரூந்து குண்டுகளும் மீட்கப்பட்டமை வன்னித் தாக்குதலில் மக்கள் கொல்லப் பட்டமைக்கு கொழும்பில் பதிலடித் தாக்குதல் நடத்தப்பட விருந்ததையே எடுத்துக் காட்டுகிறது. பேரூந்து குண்டுகள் அதிர்ஷ்ட வசமாக மீட்கப்பட்டாலும் 26 ஆம் திகதி பிற்பகல் தெகிவளை புகையிரத நிலையத்தில் வெடித்த குண்டை மீட்க முடியாமல் போய் விட்டது. இச் சம்பவத்தில் 9 பேர் இறந்ததுடன் 70 பேர் வரையானோர் காயமடைந்தும் உள்ளனர்.

எதிர்வரும் காலங்களிலும் இத்தகைய பதிலடிகள் தொடராது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. எனவே, எதிர்வரும் வாரங்களில் கிழக்கில் மட்டுமன்றி தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளிலும், கொழும்பிலும் கூட படைத்தரப்பு பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரலாம். படையினருக்கு ஏற்படும் இத்தகைய நெருக்கடிகள் களமுனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், புலிகளுக்கு அத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதா என்ற கேளிவிக்கே இடமில்லாத வகையில் அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன.

அதாவது வன்னியைச் சூழ்ந்து பலமுனைகளில் படையினர் தாக்குதல்களை நடத்திக் கொண்டு, இன்னும் மீதமாகவிருக்கும் ஒரிரு ஆயிரம் புலிகளை விரைவில் அழித்து விடுவோம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி ஆள்பற்றாக்குறை இருந்தால் புலிகள் நிச்சயம் தமது புதிய அணிகளை கிழக்கில் தரையிறக்க முன்வந்திருக்க மாட்டார்கள்.

வன்னியைத் தக்கவைப்பதற்கே தமது அணிகளை அவர்கள் பயன்படுத்த முனைவர். ஆனால், கிழக்கிற்குத் தமது புதிய அணிகளை மேலதிகமாக புலிகள் அனுப்பி வருவதைப் பார்க்குமிடத்து புலிகளுக்கு ஆட்பற்றாக்குறை இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் புதிதாக சிறப்புத் தாக்குதல் தளபதிகளை புலிகளின் தலைமை நியமித்திருப்பதானது புலிகளிடம் கிழக்கிற்கு அணிகளை அனுப்புமளவுக்கு ஆளணி வளம் இருப்பதையே காட்டுகிறது.

கிழக்கிற்கு அணிகளை அனுப்பி வைப்பதுடன் பணி முடிந்துவிடப் போவதில்லை. அவர்களுக்கான விநியோகம், தொடர்பாடல், நிர்வாகம் என்பனவற்றையும் உறுதிப்படுத்த வேண்டும். அப்படியிருந்தும் புலிகளின் தலைமை கிழக்கிற்கு அணிகளை அனுப்பும் நிலைக்கு வந்திருக்கிறதெனில் புலிகளின் தலைமைக்கு நிர்வாகச் சிக்கல் என்பது இல்லவே இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

இத்தகையதொரு நிலையானது படைத் தரப்பிற்கு நிச்சயம் பாரிய நெருக்கடிகளை விரைவில் கொடுக்கும் அதேவேளை வரலாற்றுச் சமர்களை மீண்டும் நினைவு படுத்தும் வகையிலான தாக்குதல்களும் நடைபெறலாம் என்பதையும் கட்டியம் கூறி நிற்கின்றது.

நன்றி: சுவிஸ் நிலவரம் பத்திரிகை( 30.05.2008 )

யாலவில் புலிகளுக்கு உணவு வழங்கும் சிங்கள, முஸ்லிம் குழுவினர்

யால சுற்றுலா வனப்பகுதி உட்பட சுற்றுவரப் பரந்துள்ள யால காட்டுப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவ்வாறு ஆங்காங்கே புகுந்து மறைந்திருக்கும் புலிகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் காட்டுப்பகுதிகளுக்குள் கொண்டுசென்று மிகக் கூடுதல் விலைக்கு விற்று இலட்சக்கணக்காகப் பணம் சம்பாதிக்கும் வியாபாரத்தில் சில குழுவினர் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காடுகளில் பதுங்கியிருக்கும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு உணவுப் பொருட்களை விற்பவர்கள் சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த குழுவினரே எனவும் பிரச்சினைக்குரிய யால பிரதேசங்களிலும் அண்டியுள்ள கிராமப்பகுதிகளிலும் சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்களே பாதுகாப்புக் கெடுபிடியின்றி இயல்பாக வாழ்ந்தும் நடமாடியும் வருவதால் இவ்வாறு யாலப் பிரதேசக் காடுகளுக்குள் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு விற்பதற்காக உணவுப்பொருட்களைக் கொண்டுசெல்வதில் பெரும் சிரமம் ஏற்படுவதில்லையெனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள, முஸ்லிம் குழுவினரைப் பிடிப்பதற்காக யால பொலிஸ் பிரிவினர் யாலக் காட்டுப் பகுதிகள் மற்றும் காட்டுப்புறக் கிராமங்களில் பரந்த அளவில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

மேலும், பொலிஸ் தரப்பினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப இவ்வாறு யால காட்டுக்குள் மறைந்திருக்கும் புலிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்க பெரும் பணம் சம்பாதித்துவரும் சிங்கள, முஸ்லிம் குழுவினரைத்தேடி யாலபிரதேசம், அதனை அண்டிய கிராமங்கள் சார்ந்த வழமையான போக்குவரத்துப் பாதைகளில் பொலிஸ் பிரிவினர் ஏற்கனவே சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், குறித்த வியாபாரக் குழுவினர் வேறு இரகசியப் பாதைகள் மூலமே இவ்வாறு உணவுப் பொருட்களை யால காட்டுப்பகுதிக்குள் கடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் குழுவினர் முச்சக்கர வண்டிகள் மூலமாக மட்டுமன்றி உழவு இயந்திரங்கள் மூலமும் உணவுப் பொருட்களைப் பெருந்தொகையில் குறித்த இரகசியக் காட்டுப்பாதைகள் மூலமாக யால காட்டுக்குள் கடத்திவருவதாக மேலும் தெரியவந்துள்ளது.

இந்த வியாபாரக்குழுவினர் பெரும்பாலும் அரிசி மற்றும் உலர் உணவுப் பொருட்களையே இவ்வாறு இரகசியமாக காட்டுக்குள் கொண்டுசென்று புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு விற்றுவருவதாகவும் இந்த வகையில் இதுவரையில் பெருந்தொகையான அரிசி மூடைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை இந்த வியாபாரிகள் மூலம் யால காட்டுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரவாதிகள் பெற்றுவிட்டனர் எனவும் யால பொலிஸ் தரப்பில் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், அண்மைக் காலங்களில் இவ்வாறு பயங்கரவாதியினருக்காக யால காட்டுக்குள் உணவுப் பொருட்களைக் கடத்திவரும் சிங்கள, முஸ்லிம் வியாபாரிகளைத் தேடிப் பொலிஸார் தீவிர கண்காணிப்புகளை மற்றும் திடீர் சோதனை நடவடிக்கைகளை எடுத்துவந்ததைத் தொடர்ந்து கடந்தவாரம் பொத்துவில் பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டியில் பயங்கரவாதிகளுக்காக உணவுப்பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த இரண்டு முக்கிய நபர்களை பொத்துவில் பிரதேச பொலிஸ் விசேட நடவடிக்கைப் பிரிவினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து இவ்வாறு யாலவுக்குள் பதுங்கியுள்ள புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு விற்பதற்காக முச்சக்கர வண்டியில் உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற இருவரும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக விசேட நடவடிக்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து குறித்த இரண்டு நபர்களையும் கைதுசெய்து தடுத்துவைத்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது இந்த வியாபாரம் பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு முஸ்லிம் நபர்களும் பொலிஸாருக்கு வெளியிட்டுள்ள தகவல்களுக்கேற்ப யால காடுகளில் பதுங்கியுள்ள புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு இவ்வாறு உணவுப்பொருட்களை விற்றுவரும் வியாபாரத்தில் பெரும்பாலும் பொத்துவில், லாஹுகல மற்றும் றதெல்ல பிரதேசங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த குழுவினரே ஈடுபட்டுவருவதாகவும் இந்த வகையில் அப்பகுதிகளிலிருந்து யால காட்டுப்பகுதிகளுக்கு உணவுப்பொருட்களைக் கடத்துவதில் பெருந்தொகையான சிங்கள, முஸ்லிம் நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு இந்த நபர்களிடமிருந்து உணவுப்பொருட்களை வாங்கும் இரகசிய நடவடிக்கைகளில் சுமார் 500 புலிகள் இயக்கத்தினர் ஈடுபட்டிருப்பதாக மேலும் மேற்படி நபர்கள் தெரிவித்த தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது. இந்தப் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் யால காட்டுப் பிரதேசங்களில் மட்டுமன்றி பொத்துவில், லாஹுகல, றதெல்ல போன்ற யாலவை அண்டிய நகர மற்றும் கிராமப்பகுதிகளிலும் நடமாடி இவ்வாறு குறித்த சிங்கள, முஸ்லிம் வியாபாரிகளிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து உணவுப் பொருட்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என மேலும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார்.

லங்காதீப: 29052008

கட்டாரில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை,

இலங்கையர் ஒருவரை அடித்துக் கொலை செய்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் இன்னுமொரு இலங்கையருக்கு கட்டார் நீதிமன்றமொன்று மரண தண்டனை விதித்திருக்கிறது.

ரவி ராசலிங்கம் என்ற தமிழ் இளைஞனுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சக நாட்டவரான பிரதீபன் ராமச்சந்திரன் என்ற இளைஞனை போத்தல் மற்றும் மட்பாண்டம் தயாரிக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தி தலையில் அடித்துக் கொலை செய்த குற்றத்திற்காகவே இவருக்கு கட்டார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்கிறது.

பழைய தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்று இறுதியில் கொலையில் முடிந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் சம்பவம் இடம்பெற்ற 3 நாட்களின் பின்னர் அவரது தங்குமிடத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதியன்றே நஜ்மா எனும் பிரதேசத்தில் உள்ள தனது தங்குமிடத்தில் வைத்தே பிரதீபன் ராமச்சந்திரன் , ரவி ராசலிங்கத்தால் தாக்கப்பட்டிருக்கிறார்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நட்டஈட்டுத் தொகையை ஏற்க மறுத்ததை அடுத்தே நாகலிங்கத்தைத் தூக்கிலிடுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதேநேரம், இந்தத் தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதி சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் ஆசியப் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடு

உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கப்படும் சவால்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான புதிய கொள்கைகளை வகுப்பதற்கும் தீர்வுகளை கண்டறிவதற்குமாக ஆசிய, பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் நேற்று வெள்ளிக் கிழமை சிங்கப்பூரில் ஒன்று கூடினர்.

27 தூதுக் குழுக்கள் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டன.

2002 இல் இதற்கான முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. லண்டனை தளமாகக் கொண்டியங்கும் உபாயக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம் இந்தப் பேச்சுவார்த்தையை ஒழுங்கு செய்திருந்தது. இந்த ஏற்பாடானது ஐரோப்பிய, அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு களமாக பின் விரிவுபடுத்தப்பட்டது.

நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டினை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்தார்.

இன்று சனிக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேற்ஸ் உரையாற்றவுள்ளார். சீனாவில் ஏற்பட்ட பூகம்பம், மியன்மார் சூறாவளி தொடர்பாகவும் இம்மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.

1958 இல் உருவாக்கப்பட்ட உபாயக்கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவும் நேற்றாகும்.

ஆசிய, பசுபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கான சவால்கள், கிழக்கு ஆசியாவின் எதிர்காலப் பாதுகாப்பு, பிராந்தியத்தின் சக்தி வளத்தை பாதுகாத்தல் என்பன போன்ற விடயங்களும் இங்கு ஆராயப்படவுள்ளன.

இலங்கை, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், புரூனை, கம்போடியா, கனடா, சீனா, கிழக்குத்திமோர், பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியன்மார், நேட்டோ, நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, தென்கொரியா, தாய்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதுக் குழுக்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளன

புதிய மகிந்த சிந்தனை-(600028) ---- 75 வோட்ஸுக்கு அதிகமான மின் குழிழுக்கு தடை?

மின்சார பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக 75 வோட்ஸ் மின் அழுத்தத்திற்கு கூடுதலான மின் குமிழ்களை தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரியவருகின்றது. 75 வோட்ஸுக்கு அதிகமான மின் அழுத்தத்தை கொண்ட மின் குழிழ்களை தடை செய்வதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான உத்தேசத் திட்டம் சட்ட வரைவுகளுக்காக மின் சக்தி, எரி சக்தி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் காயம்

tmvplogo.jpg

பிள்ளாயான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தனது துப்பாக்கி வெடித்ததினால் காயம் அடைந்துள்ளார். மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள தம்பானம் அலுவலகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்த வேளை காலை 9 மணியளவில் துப்பாக்கி வெடித்ததினால் காயம் அடைந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர், பான்குடாவெளியைச் சேர்ந்த 17 வயதுடைய மதன் என அறியப்பட்டுள்ளார்.

மதவாச்சியில் இரு புகையிரதங்கள் மோதியதில் 10 பேர் காயம்


மதவாச்சியில் இருந்து புறப்பட்ட தொடரூந்து சேவை வழங்கும் புகையிரதத்துடன் போத்தளா மிகிரிகம பகுதியில் மோதியுள்ளது.

இதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து இப் பாதையினை உபயோகிக்கும் பிரதான சேவைகள் பாதிப்படைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

ரெஜி ரணதுங்க காலமானார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரெஜி ரணதுஙக கொழும்பு நவலோக வைத்தியசாலையில் இன்று (மே31) காலமானார்.

கடந்த மே மாதம் 23ம் திகதி ரெஜி ரணதுங்க திடீரென சுகவீனமுற்ற காரணத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இறுதியில் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ரணதுங்கவின் தந்தையான ரெஜி ரணதுங்க சபரகமுவ மாகாண ஆளுரானவும் பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

களனியில் எனக்கு உதவி செய்யும் மதுபானக் கடைகளைத் தவிர்ந்த ஏனையவற்றை மூடிவிடுவேன் - மேர்வின் சில்வா

களனி பிரதேசத்தில் தமக்கு ஒத்துழைப்பு நல்கும் ஒரு சில மதுபானக் கடைகளைத் தவிர்ந்த ஏனையவற்றை மூடப் போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

களனிசிறி என்ற புதிய பாலம் திறப்பு விழா வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

களனி விஹாரையின் மாநாயக்க தேரர் கொள்ளுப்பிட்டி சங்கரக்கித்த தேரர் பெருந்தெருக்கள் அமைச்சர் ரீ.பி. ஏக்கநாயக்க களனி விஹாரையின் பஸ்நாயக்க நிலமேல தம்மிக்க அடிகல விமான சேவைகள் பணிப்பாளர் நாளக பமுனுசிங்க தொலைதொடர்பு ஆணைக்குழுவின் தலைவர் பிரியன்த காரியப்பெரும ஆகியோர் உள்ளிட்ட பல முக்கியஸ்தாகள் கலந்து கொண்டனர்.


மேலும் களனி பிரதேசத்தில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி கடைகளை மூடுவதற்கும் மாதமொன்றுக்கு 4 மாடுகளை விடுதலை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெயர்ந்தவர்களுக்கு போதியளவு உணவுப் பொருள்கள் இல்லை: மாவட்ட செயலாள

உணவுப்பொருள் தட்டுப்பாட்டால் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்த மக்கள் போதிய உணவின்றி பாதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் இராசலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

“உணவுப் பொருள்கள் உட்பட ஏனைய பொருள்களின் விநியோகம் 80 வீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு போதியளவு உணவுப் பொருள்களை வழங்கமுடியாதுள்ளது” என மாவட்ட செயலாளர் பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறினார்.

உணவுப்பொருள்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுகின்றபோதும் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களில் 12,000 பேருக்கு உலக உணவுத் திட்டத்தின் ஊடாகவும், ஏனைய 17,000 பேருக்கு இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழும் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.

“அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படையினரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக உணவுப் பொருள் விநியோகத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்கப்படமுன்னர் கிளிநொச்சிக்கு 200-300 லொறிகளில் பொருள்கள் எடுத்துவரப்பட்டன. எனினும் தற்பொழுது 50 லொறிகள் மாத்திரமே வருகின்றன” எனக் குறிப்பிட்டார் கிளிநொச்சி மாவட்ட செயலாளர்.

உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. “எனினும், அவ்வாறு வழங்கப்படும் நிவாரணங்கள் மக்களுக்குப் போதுமானதாக இல்லை. நிவாரணப் பொருள்களை ஒரு வாரத்துக்கே மக்கள் பயன்படுத்திப் பழக்கப்பட்டவர்கள். எனினும் தற்பொழுது அவர்கள் ஒரு மாதத்துக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது” என்றார் அவர்.

உணவுப் பொருள்களை எடுத்துச்செல்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு மூன்று மாதங்களுக்கு முன்னர் தான்விடுத்த வேண்டுகோளுக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லையென பி.பி.சி. செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் கூறினார்.

எனினும், கிளிநொச்சியில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக எந்தவொரு அறிக்கையையும் தாம் பெற்றுக்கொள்ளவில்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் இவ்வாறன குற்றச்சாட்டுக்கள் முற்றாகத் தவறானவை” என மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியுதீன் பி.பி.சி. செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.

உணவுப்பற்றாக்குறை தொடர்பாக மாவட்ட செயலாளர் எமக்கு இன்னமும் அறிவிக்கவில்லை. தேவைப்பாட்டால் தேவையானளவு உணவுப் பொருள்களை அரசாங்கம் அனுப்பிவைக்கும் என்றார் அமைச்சர்.

பஸ் பயணிக்கும் வழிகளை இனி இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்

எந்தவொரு நேரத்திலும் பஸ் வண்டிகள் பயணிக்கும் பாதை மற்றும் அவை பயணித்துக் கொண்டிருக்கும் இடம் என்பவற்றை வாகன ஓட்டுனர்களும், பொது மக்களும் இணைய வழி உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிந்துகொள்ளும் திட்டம் ஒன்றினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்தும் இதனூடாக எவ்வாறு பயனடைவது என்பது குறித்தும் உள்ளூர் பத்திரிகைகள் ஊடாக பொதுமக்களை அறிவூட்டவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எம்.ஏ.ஜெப்ரி தெரிவித்துள்ளார்.

"பஸ் பயணிக்கும் வழிகளைக் கண்டறியும் தொழில்நுட்பம் அபிவிருத்தியடைந்த நாடுகளிலேயே பயன்பாட்டிலுள்ளன. வெளிநாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தக்கூடிய இயலுமை எம்மிடம் இல்லை. இருப்பினும் உள்ளூர் தொழில்நுட்ப அறிவைக் கொண்டே இதனை வடிவமைக்கவுள்ளோம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் ஆரம்பத்தில் மாகாணங்களுக்கிடையிலான 3,000 பஸ்கள் பயணிக்கும் வழிகளை கண்டறிய முடியும் எனவும், பின்னர் 25,000 பஸ்களை கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"தொழில்நுட்ப வசதிகள் மேம்பட்டதும், இன்னும் சில வருடங்களின் பின்னர் தினசரி பயணங்களை மேற்கொள்வோர் அவர்களுக்கு தேவையான பஸ்களை இணையத்தளம் வழியாக கண்டறிந்து கொள்ளமுடியும். இந்தத் திட்டத்தை படிப்படியாகவே நடைமுறைப்படுத்தவுள்ளோம். பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்துவோருக்கு நன்மை பயக்கும் வகையிலேயே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்ல" என்றும் ஜெப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை: ஆணைக்குழு விளக்கம்

முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அதன் செயற்பாடுகளை மேலும் தாமதப்படுத்துவதுடன், அதன்மூலம் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தும் என விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவி பெற்றுக்கொள்வதாகவும், ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் அந்தப் பதவிகளுக்குப் பொருத்தமற்றவர்கள் எனவும் குற்றஞ்சாட்டி சிரேஷ்ட சட்டத்தரணிகளான எஸ்.எல்.குணசேகர மற்றும் கொமின் தயாசிறி ஆகியோர் ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த அவர்கள், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆணைக்குழு விளக்கமளிக்க வேண்டுமனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்துக்கு, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பிவைத்திருப்பதுடன், முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை எனவும் தெரிவித்துள்ளது.

விசாரணை ஆணைக்குழு அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை மறுத்திருக்கும் அந்த ஆணைக்குழு, 17 அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்களின் படுகொலைகள் மற்றும் திருகோணமலையில் கொல்லப்பட்ட ஐந்து இளைஞர்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான தொலைக்காட்சிமூலமான நேரடி சாட்சியமளிப்புக்கு உதவிகள் தேவையா என மூன்று நாடுகளையும் சேர்ந்த தூதுவர்கள் விசாரணை ஆணைக்குழுவிடம் கோரியிருந்ததாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

“கடந்த மார்ச்மாத இறுதியில் சர்வதேச சுயாதீன மான்புமிக்கோர்குழு வெளியேறியதைத் தொடர்ந்து சாட்சியங்கள் பதிவுசெய்வதைத் தவிர வேறு மாற்றுவழி எமக்கு இருக்கவில்லை. இதனால் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன வழங்க முன்வந்த உதவிகளை மறுப்பதற்கு காரணங்கள் இருக்கவில்லை” என ஆணைக்குழு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் செலவில் இரண்டு ஆணைக்குழு அதிகாரிகள், சாட்சியங்களைப் பாதுகாப்பது தொடர்பான பயிற்சிகளைப் பெறுவதற்கு அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். ஆணைக்குழு பயன்படுத்தும் சாதனங்கள் ஜப்பான் அரசாங்கத்தால் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியுதவியால் வழங்கப்பட்டவை என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் பதில் கடிதங்கள் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர்கள் ஒன்றியத்தின் தலைவராக பிள்ளையான் நியமனம்

மாகாண முதலமைச்சர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவராக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த நான்கு மாதங்களுக்கு அவரே தலைவராகப் பதவி வகிக்கவுள்ளார்.

இன்று சனிக்கிழமை பதுள்ளையில் இடம்பெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டிலேயே முதலமைச்சர்கள் ஒன்றியத்தின் தலைவராகப் பிள்ளையான் நியமிக்கப்பட்டார். அடுத்த முதலமைச்சர்கள் மாநாட்டு மட்டக்களப்பில் நடத்துவதற்கும் ஏற்பாடாகியுள்ளது.

கிழக்கு மாகாணசபை இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லையெனத் தெரிவித்திருக்கும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பிள்ளையான், தற்பொழுது கிழக்கு மாகாணசபை பெயரளவில் மாத்திரம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

“மத்திய அரசாங்கத்திடம் மாத்திரம் குவிந்துகாணப்படும் பெருமளவிலான அதிகாரங்கள் மாகாண ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்” என இன்று நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிள்ளையான் தெரிவித்தார்.

13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டியது அவசியம் என வலியுறுத்தியிருக்கும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அவசியமானது எனவும் கூறியுள்ளார்.

Friday, 30 May 2008

கோத்தபாய ராஜபக்ஸவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, ஊடகவியலாளர்களான போத்தல ஜெயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோரை, அழைத்து எச்சரித்து, அச்சுறுத்த மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய அரச ஊடக ஊழியர் சம்மேளணம் கொழும்பு கோட்டையில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பபட்டன. இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகன ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ருக்மன் சேனாநாயக்க, தலதா அத்துகோரள, ஐக்கிய ஊழியர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் லால் பெரேரா, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வில்பத்து சரணாலயப் பகுதியில் 3 பேர் சுட்டுக்கொலை

shoot-down.jpgசிறிலங்காவின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து வனவிலங்கு சரணாலயப் பகுதியில் இன்று இரவு ஊர்காவல் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

வில்பத்து வனவிலங்கு சரணாலயப் பகுதியில் உள்ள 18 ஆவது வலயப் பகுதியிலேயே இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில் இவர்கள் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வீடு ஒன்றில் இருந்த ஊர்காவல் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் கணவனும் மனைவியுமே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என அனுராதபுரம் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் முதியவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக கூறப்படுகின்றது.

வில்பத்து வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து மேற்படி சரணாலயம் மூடப்பட்டு அங்கு பலத்த தேடுதல்கள் நடைபெற்றதுடன் சந்தேகத்திற்கு இடமான எவரும் அப்பகுதியில் இல்லை என்று படைத்தரப்பு உறுதிப்படுத்திய பின்னரே மீண்டும் சரணாலயம் திறக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அப்பகுதியில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் ஊர்காவல் படையினரும் காவல்துறையினரும் ஈடுபட்டிருப்பதாக அனுராதபுரம் மாவட்ட காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உதவி நிறுத்தப்பட்டால் வறுமை ஏற்படும்-பீரிஸ்

மனித உரிமைகள் நிலையை காரணம் காட்டி இலங்கையின் மீது பொருளாதார தடைகளை மேற்கத்தைய நாடுகள் விதித்தால் அது இலங்கையின் இனப்பிரச்சினையின் தாக்கத்தை அதிகரிக்கவே செய்யும் செய்யும் என இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது.

அமரிக்காவும் ஐரொப்பிய ஒன்றியமும் இலங்கைக்கான பல உதவி திட்டங்களை மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி நிறுத்தியுள்ளன. இந்தநிலையில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளை விளங்கிக்கொள்வதில் அனுதாபம் காட்டப்படவேண்டும் என இலங்கையில் சர்வதேச வர்த்தக்கத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ் அமரிக்க வாசிங்டனில் வைத்து ஏ எப் பி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

ஆடை ஏற்றுமதி தொடர்பான கோட்டா முறையை ஐரோப்பிய நாடுகள் விலக்கிக்கொண்டால் இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாரிய வறுமை நிலைக்கு உள்ளாவர் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் தொடரும் என அறிவித்துள்ள நிலையிலேயே ஜி எல் பீரிஸின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஐந்து வருடங்களில் இல்லாதவாறு இலங்கையில் பாரியளவில் பணவீக்க உயர்வு


இலங்கையில் பாரியளவில் பணவீக்க உயர்வு கடந்த ஐந்து வருடங்களில் இல்லாதவாறு பணவீக்கம் 19.8 வீதமாக உயர்ந்துள்ளது.

இந்த மே மாதத்திற்கான பணவீக்க அளவே 19.8 என மதிப்பிடப்பட்டுள்ளது. உணவு மற்றும் மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் உயர்ந்துள்ளன.

ரொய்ட்டரின் ஆய்வு ஒன்றின்படி தற்போதைய நிலைமை தொடர்ந்தால் இலங்கையில் இன்னும் ஒரு வருடத்தில் பணவீக்கம் 26 வீதமாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வங்கி வட்டி வீதங்களும் பாரியளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி சமஸ்டி தீர்வு யோசனையை இன்னும் கைவிடவில்லை

unplogo8.jpgஐக்கிய தேசிய கட்சி சமஸ்டி தீர்வு யோசனையை இன்னும் கைவிடவில்லை என தெரிவித்துள்ளது. இனப்பிரச்சினை தொடர்பிலான யுத்ததிற்கு, சமஸ்டி மூலம் தீர்வுகாண வேண்டும் என்ற ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். ஐக்கிய தேசிய கட்சி சமஸ்டி தீர்வு குறித்த யோசனையை கைவிடவில்லை.

ஊடக ஒடுக்குமுறை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்புக்கும் யுத்தமும் ஒரு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற , ஊடக ஒடுக்குமுறைகள், ஐக்கிய தேசிய கட்சியின் புதிய ஆட்சியில் இருக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊடக ஒடுக்குமுறைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் விருந்துபசாரததில் இருந்து வெளியேறி ஊடகவியலாளர் ஒருவர் குறித்தும் அவர் நினைவுகூர்த்தார்.

ஊடகவியலாளர்களுக்கு தமது சுதந்திரம் மற்றும் ஆத்ம கௌரவம் குறித்த உணர்வு இருக்க வேண்டும் எனவும் அவ்வாறான உணர்வுகள் ஊடகவியலாளர்கள் மத்தியில் இருக்குமானால், கீத் நொயார், மற்றும் போத்தல ஜெயந்த, சனத் பாலசூரிய ஆகியோருக்கு ஏற்பட்ட சம்பவங்களின் பின்னர், ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி வழங்கும் விருந்துபசாரங்களில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்

மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 25 படையினர் பலி- 45 பேர் படுகாயம்

மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னாரின் மேற்குப் பகுதியில் உள்ள மாளிகைத்திடல் பகுதியில் இருந்து தேனுடையான் நோக்கி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் மிகச்செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இன்று நண்பகல் வரை நடைபெற்ற படையினரின் பெரும் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.

நண்பகல் ஓய்வின் பின்னர் மீண்டும் பிற்பகல் 12:30 மணியளவில் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தீவிர முறியடிப்புத் தாக்குதலையடுத்து மாலை 6:00 மணியளவில் பலத்த இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கியுள்ளனர்.

இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயடைந்துள்ளனர். படையினரின் பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையில் மன்னார் பெரியமடுவுக்கு வடக்காகவும் தென்கிழக்காகவும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

மொனராலையில் காவல்துறையினர் மீது இனந்தெரியாத கோஷ்டி தாக்குதல்


மொனராகலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் திடீர் தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார

மொணராகலை கரகொலகஸ்பிட்டிய என்னும் இடமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் ஒரு காவல்தறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். கறுப்பு நிற ஆடையணிந்த 20 பேரைக் கொண்ட குழுவினர் தன்னியக்க துப்பாக்கிகளின் மூலம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்கள் தப்பியோடியதாக மேலும் குறிப்பிடப்படுகிறது

உணவுக் கொள்வனவுக்குத் தடைஏற்படுத்த வேண்டாம்- அனைத்து நாடுகளிடமும் உலக வங்கி கோரிக்கை

உணவுப் பற்றாக்குறைக்கு முகம்கொடுத்திருக்கும் நாடுகளுக்கு உணவுப் பொருள்களை உதவியாக வழங்குவதற்கோ அல்லது ஏனைய நாடுகளுக்கு உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கோ வளர்ச்சியடைந்த நாடுகள் தடைகளை ஏற்படுத்தக்கூடாதென உலக வங்கியின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள்களின் விலையேற்றம், கேள்வி அதிகரிப்பு, குறைகளுடன் கூடிய வர்த்தகக் கொள்கைகள், அச்சம் காரணமாக கூடுதலான கொள்வனவு போன்ற காரணங்களால் கடந்த ஒரு வருடமாக உலகளாவிய ரீதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் உட்பட சில நாடுகள் உள்ளூர் சந்தைவாய்ப்பை அதிகரிப்பதற்காக ஏற்றுமதிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ஜப்பானில் நடைபெற்ற ஆபிரிக்கவின் துணை அபிவிருத்தி தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட உலக வங்கியின் தலைவர் ரொபேர்ட் சொய்லிக் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வரிகளும், கட்டுப்பாடுகளும் “பிரச்சினையை மிகவும் மோசமாக்குகின்றன” என அவர் கூறினார்.

கட்டுப்பாடுகள் காரணமாக உலக உணவுத் திட்டம்போன்ற சர்வதேச உதவி நிறுவனங்கள் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றன என்று உலக வங்கியின் தலைவர் குறிப்பிட்டார்.

“இன்று நாம் கொள்வனவு செய்யும் உணவுப் பொருள்களில் 80 வீதமானவை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஏற்றுமதிக்குத் தட்டுப்பாடுகள் காணப்பட்டாலும் அவற்றைக் கருத்தில்கொள்ளாமல் பொருள்களை கொள்வனவு செய்வதற்கு அனைத்து நாடுகளும் அனுமதிக்க வேண்டும்” என உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜொஸ்ரி ஷீரன் தெரிவித:துள்ளார்.

அனைத்துலகத்தின் சிறிலங்கா எதிர்ப்பு நிலைப்பாட்டை தமிழர் சார்பு நிலைப்பாட்டாக மாற்றுவது அவசியம்: "நிலவரம்"


அனைத்துலக நாடுகள் கடைப்பிடித்து வரும் சிறிலங்கா எதிர்ப்பு நிலைப்பாட்டை தமிழர் சார்பு நிலைப்பாட்டாக மாற்றுவது அவசியமானது என்று சுவிசில் இருந்து வெளிவரும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (30.05.08) வெளிவந்த "நிலவரம்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் செயற்குழுவில் மீள் நியமனம் பெற சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனம் தோல்வியில் முடிந்திருக்கின்றது.

ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுள் 101 நாடுகளே சிறிலங்காவின் மீள் நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஏனைய 91 நாடுகளும் ஆதரவு தெரிவிக்கத்தவறியதால் சிறிலங்கா தனது பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்றது.

இது தமிழ் மக்களின் பரப்புரைக்குக் கிடைத்த ஒரு வெற்றி எனவே கொள்ளப்பட வேண்டும்.

ஏனெனில் இந்தப் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ள சிறிலங்கா பலமுனைகளிலும் போராடியது. இதற்காக சிறிலங்கா எடுத்துக்கொண்ட முயற்சிகள் தொடர்பாகவும் அதனை முறியடிப்பதற்கு தமிழ் மக்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்பது பற்றியும் நிலவரத்தின் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம்.

சிறிலங்கா இது விடயத்தில் அடைந்துள்ள தோல்வியானது சிங்களக் கடும்போக்காளர்களையும் அரசாங்க உயர்மட்டத்தினரையும் வெகுவாகப் பாதித்திருக்கின்றது என்பதை நிதானம் இழந்த முறையில் அங்கிருந்து வெளிவரும் கருத்துக்கள் புலப்படுத்தி நிற்கின்றன. இந்த விடயத்தைக் கையாண்ட விதம் குறித்து சிங்கள ஊடகங்களும் கூட அரசாங்கம் மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

இனப்பிரச்சினை விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு தரப்புமே தாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதனை விடவும் மற்றைய தரப்பைக் குற்றம் சுமத்துவதிலேயே அதிக நேரத்தையும் சக்தியையும் செலவு செய்து வருகின்றன. அரச கட்டமைப்பைக் கொண்டுள்ள சிங்கள தேசம் இது விடயத்தில் பல மடங்கு முன்னணியில் நிற்கின்றது.

தன் மீது சுமத்தப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் யாவற்றையும் "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்ற பிரம்மாஸ்திரத்தைப் பாவித்து முறியடித்து விடுவதற்கு சிங்கள தேசம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. அது மட்டுமன்றி உலக வல்லாதிக்க சக்திகளுடன் தனக்குள்ள இராஜரீக உறவுகளை, தொடர்புகளைப் பாவித்து அவற்றின் ஆதரவுடனேயே அனைத்து மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருகின்றன எனக்காட்டிக்கொள்ள முயல்வதுடன் சில வேளைகளில் அதனை வெளிப்படையாகவும் தெரிவித்து வருகின்றது.

நியாயம் என்ற அம்சத்தை விட பூகோள நலன்கள் என்ற அம்சம் தூக்கலாக இருப்பதால் ஒரு சில நாடுகள் சிறிலங்காவின் செயற்பாடுகளை - அவை கசப்பாக இருந்தபோதும் - சகித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதனால் அவை உதட்டளவில் சமாதானத்தைப் பேசிய வண்ணம் பின்கதவால் சிறிலங்கா போரை தொடர்வதற்கு ஏதுவாக ஆயுத, பொருண்மிய உதவிகளைத் தங்குதடை இன்றி வழங்கி வருகின்றன.

உலக நாடுகளின் ஒவ்வொரு அசைவிலும் நலன்கள் சம்பந்தப்பட்டிருப்பதனாலேயே சிறிலங்கா, இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்கா - சீனா, இஸ்ரேல் - ஈரான் எனப் பரஸ்பரம் பரம வைரிகளுடன் ஒரே நேரத்தில் தொடர்பு வைத்திருக்க முடிகின்றது.

இத்தகைய தொடர்புகள் தந்த உற்சாகம் காரணமாகக் கண்மண் தெரியாமல் நடந்து கொள்ள முயற்சித்ததாலேயே இன்றைய இக்கட்டான நிலை சிறிலங்காவிற்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துப் பிரிவுகளுடனும் சிறிலங்கா பகிரங்கமாக மோதிக்கொண்டது. இது தவிர அனைத்துலக மனித உரிமைக் காப்பு நிறுவனங்களுடனும் காட்டமாக நடந்து கொண்டது. அதன் விளைவாக அவை மேற்கொண்ட அனைத்துலக ரீதியிலான பிரசாரம், தமது சொந்த நலன்களையும் மீறி முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஒரு சில நாடுகளுக்கு ஏற்படுத்தின.

மேற்குறிப்பிட்ட நாடுகள் இத்தகைய முடிவை எடுப்பதில் தமிழர் தரப்பின் பரப்புரையும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பல்வேறு மட்டங்களிலும் மேற்கொண்ட பரப்புரையானது சிறிலங்கா அரசால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மாத்திரம் இன்றி தமிழ் மக்களின் போராட்ட நியாயத்தையும் ஏக காலத்தில் உணர்த்தியுள்ளது. இது தமிழ் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.

91 நாடுகள் - இதனை வேறுவிதமாகக் கூறுவதனால் கிட்டத்தட்ட உலகின் அரைவாசி நாடுகள் - சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன. இக்கருத்தை - சிறிலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை - தமிழ் மக்களுக்குச் சாதகமான ஒன்றாகக் கருதலாமா என்பது கேள்விக்குரிய விடயம்.

இதற்கு விடை காண்பதை விடுத்து இத்தகைய சிறிலங்கா விரோத நிலைப்பாட்டை தமிழர் சார்பு நிலைப்பாட்டாக மாற்றலாமா என்று சிந்திப்பதே அவசியமானதும் அனுகூலமானதும் காலத்தின் தேவையும் ஆகும்.

தமிழின அழிப்புக் கோட்பாட்டில் உன்மத்தம் கொண்டுள்ள சிங்கள தேசம் திருந்துவதற்கான வாய்ப்பு, கிட்டிய எதிர்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே உள்ள சூழலை எமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்கு நாம் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும்.

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எமது தேசத்தின் விடியல் தூரப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் முழுமூச்சாகச் செயற்பட முன்வர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி.யின் செயற்பாடுகளை நோர்வே, சுவீடன் டென்மாக் நாடுகளில் அதிகரிக்க திட்டம். - தமிழருக்கு எதிரான அமுக்க வேலைகள் அதிகரிக்கும்.

ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க நோர்வே சுவீடன் டென்மாக் நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை பயணமானார்.

ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளராகவும் நாடாளுமன்றக்குழுவின் தலைவராகவும் இருந்த விமல் வீரவன்சவின் வெளியேற்றத்தின் பின்னர் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக கட்சியின் சர்வதேசக் கிளைகளுக்கு விளக்குவதும் அவற்றை மீள ஒழுங்கமைப்பதும்தான் அவருடைய விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என கட்சிவட்டாரங்கள் தெரிவித்தன.

சுவீடன் டென்மார்க் நோர்வே ஜேர்மனி மற்றும் பிரத்தானியா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் சோமவன்ச அமரசிங்க அந்த நாடுகளிலுள்ள ஜே.வி.பி.யின் கிளைகளை புனரமைப்புச் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவுவார். (தமிழருக்கு எதிரான அமுக்க வேலைகளில்) கட்சிப் புனரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மேலதிகமாக இந்நாடுகளில் உள்ள சிங்கள அமைப்புக்களின் கூட்டங்களில் பங்குகொண்டு உரையாற்றுவதுடன் புலம்பெயர்ந்த மக்களையும் சந்தித்து உள்நாட்டு நிலைமைகள் தொடர்பாகப் பேச்சுக்களை நடத்துவார்.


சுவீடனிலுள்ள முதலீட்டாளர்களின் கருத்தரங்கு ஒன்றிலும் சோமவன்ச உரையாற்றவிருக்கின்றார். சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு சுவீடன் முதலீட்டாளர்களுக்கு உள்ள வாய்ப்புக்கள் தொடர்பாக இங்கு உரையாற்றும் அவர் இவ்விடயம் தொடர்பில் முதலீட்டாளர்களுடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுக்களை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார்.


சுவீடனில் தனது வெளிநாட்டு விஜயத்தை ஆரம்பிக்கும் அவர் அதனைத் தொடர்ந்து டென்மார்க் செல்லவுள்ளார்.

விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் ஜே.வி.பி.யிலிருந்து வெளியேறி புதிய கட்சி ஒன்றை அமைத்திருப்பதையடுத்து கட்சியின் சர்வதேசக் கிளைகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.

இந்தக் குழப்பநிலையை முடிவுக்குக்கொண்டுவந்து கட்சிக் கிளைகளின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்த போதிலும் அதில் பெருமளவு வெற்றி கிடைக்காததையடுத்தே இப்போது கட்சித் தலைவர் ஐரோப்பா பயணமாகியிருக்கின்றார்.

ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் அதன் வெளிநாட்டுக்கிளைகளின் மூலமாகவே பெருந்தொகையான பணம் கிடைக்கின்றது. இதில் குறிப்பிடத்தக்களவு நிதியை வழங்கிவரும் ஜே.வி.பி.யின் ஜப்பான் கிளை
விமல் வீரவன்சவின் வெளியேற்றத்தையடுத்து இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.


இதன் மூலம் ஜே.வி.பி.யின் வருமானம் பெருமளவுக்குப் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஐரோப்பிய கிளைகளில் உருவாகியுள்ள குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய அவசரத் தேவை ஜே.வி.பி. தலைமைக்கு இப்போது ஏற்பட்டிருக்கின்றது.

http://www.nitharsanam.com/?art=25100

விசாரணை ஆணைக்குழு மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாக விளக்கம் கோரினார் ஜனாதிபதி

மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கும், சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கியமான 16 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

விசாரணை ஆணைக்குழுவுக்கும், வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக மனித உரிமை மீறல் விசாரணைகளில் பாதுகாப்புத் தரப்பு மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான கொமின் தயாசிரி மற்றும் எஸ்.எல்.குணசேகர சந்தேகத்தை எழுப்பியுள்ள நிலையிலேயே இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆணைக்குழுவுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெறுகின்றனவா மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர் நேசையாவுக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்துக்கும் இடையில் காணப்படும் நெருக்கம் தொடர்பாகவும் ஆராயுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. இது தொடர்பாக 30ஆம் திகதி விளக்கமளிக்க வேண்டுமென ஜனாதிபதி முன்னர் கூறியிருந்ததாகவும் அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளிடம் உதவிகளைப் பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி உடலகம மறுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பயணத் தடைகளால் மக்களின் சுதந்திரமான நடமாட்டம் பாதிப்பு- மனிதநேய அமைப்புக்களின் இணையம்

இலங்கை மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு காணப்படும் தடைகள் தொடர்பாக மனிதநேய அமைப்புக்களின் இணையம் கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக வவுனியா, மன்னார் மற்றும் மதவாச்சி சோதனைச் சாவடிகளுக்கு அப்பால் சுதந்திரமான நடமாட்டம் குறைக்கப்பட்டிருப்பதாக அந்த இணையம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக பயணத்தடைகளை ஏற்படுத்தும் உரிமை அரசாங்கத்துக்கு இருக்கின்றபோதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர்களுக்கு மாத்திரம் இவ்வாறு ஒருதலைப் பட்சமான தடைகளை ஏற்படுத்த முடியாதென மனிதநேய அமைப்புக்களின் இணையம் அறிவித்துள்ளது.

மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளிலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்பவர்கள் முற்றுமுழுதாக சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றபோதும் மதவாச்சி சோதனைச் சாவடி ஊடாக தமது சொந்த வாகனங்களில் பயணிப்பதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமையை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உயர் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் இந்தச் செயற்பாடு கடைப்பிடிக்கப்படுவதாக மனிதநேய அமைப்புக்களின் இணையம் தெரிவித்துள்ளது.

“இதற்கு மேலதிகமாக சோதனைச் சாவடிகளைவிடவும் மேலும் பல இடங்களில் பயணிகள் இறக்கி சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனால் பாரிய நேரச் செலவு ஏற்படுவதுடன், சிலர் கைதுசெய்யப்படுகின்றனர்” என மனிதநேய அமைப்புக்களின் இணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உதாரணமாக வவுனியாவிலிருந்து புறப்படும் பயணிகள் முதலில் வவுனியா பேரூந்து நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இரண்டாவதாக ஈரப்பெரியகுளத்திலும், மூன்றாவதாக மதவாச்சியிலும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பயணிகள் வாகனங்களிலிருந்து இறக்கப்பட்டு முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்வரை பயணிகள் காத்திருக்கவேண்டி ஏற்பட்டுள்ளது என அந்த இணையம் தெரிவித்துள்ளது.

மதவாச்சியிலிருந்து பிறிதொரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியே பயணத்தைத் தொடரவேண்டியிருப்பதாக மனிதநேய அமைப்புக்களின் இணையம் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி புதுவிதமான ஆர்ப்பாட்டம்

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜுன் 3ஆம் திகதி புதுமையான எதிர்ப்புப் போராட்டமொன்றை நடத்தவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணிக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பயணிக்கும் வாகனங்கள் 5 நிமிடநேரம் நிறுத்தப்பட்டு வாகனங்களின் விழக்குகளை ஒளிரவிட்டு, வாகன ஒலிகளை எழுப்ப வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த புதுமையான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள மக்கள் இவ்வாறு செய்தி தமது எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஒரு லீற்றர் பெற்றோலை விற்பனை செய்வதன் மூலம் அரசாங்கம் 56 ரூபாய்களை இலாபமாகப் பெற்றுக்கொள்வதாக ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவிக்கிறது. எரிபொருள் விற்பனையின் போது 10 வீதம் தரகுப்பணம் அறவிடப்படுகிறது. இவற்றைக் குறைத்து மக்களுக்கு எரிபொருள் மானியத்தை அரசாங்கத்தால் வழங்கமுடியும் எனக் குறிப்பிட்ட திஸ்ஸ அத்தநாயக்க, ஆனால் அவற்றைச் செய்யாமல் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு பெருமளவான வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு கூடுதல் எண்ணிக்கையான வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாதவர்களுக்கும் பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் எண்ணிக்கையை 25ஆகக் குறைப்பதன்மூலம் எரிபொருள்களின் விலையை பெருமளவு குறைக்க முடியுமென அத்தநாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.

எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுவிட்டது எனக் கூறிக்கொண்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்து கவலைப்படுவதில் பயனில்லை. வீதியிலிறங்கி எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராகப் போராடவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறினார்.