Monday, 11 February 2008

நினைவாற்றலை வளர்க்க


நான் கல்லூரி படிக்கும் போது நூலகம் சம்பந்தமான பயிற்சிக்கு வந்திருந்த பேராசிரியரை என்னால் இன்றும் மறக்க முடியாது. வகுப்பிற்கு வந்த முதல் நாள் எங்கள் அனைவரிடமும் ஒரு கேள்வி கேட்க சென்னார். வகுப்பில் மொத்தம் 38 பேர். அனைவரின் கேள்விகளையும் கூர்ந்து கேட்டு புரிந்து கொண்டார். எல்லோரும் முடித்த பின்னர் 38 கேள்விகளை ஒவ்வென்றாக சொல்லி அதற்கான பதிலையும் விளக்கினார். எனக்கு தெரிந்தவரை ஒரே நாளில் எங்கள் 38 பேரின் பெயர்களையும் கற்றுக்கொண்டவரும் அவரே. பேராசிரியரின் திறமையை பார்த்து வகுப்பே அதிர்ச்சியடைந்தது.

இது எப்படி சாத்தியம்? என்பது தான் எங்களின் கேள்வியாக இருந்தது. அதற்கான பல்வேறு துணைக்கருவிகளையும், யுக்திகயையும் கற்பித்து நினைவாற்றலுக்கான பயிற்சியை அவர் நிறைவாக செய்தார். அன்றாட வாழ்க்கையில் நினைவாற்றல் சம்பந்தப்பட்ட பல அனுபவங்களை நாம் சந்தித்திருப்போம்;. வீட்டிற்கு வெளியே சென்ற நாம் எதோ ஒன்றை எடுக்க நினைத்து வீட்டிற்குள் செல்வோம். ஆனால் உள்ளே சென்றபின் எதற்காக உள்ளே வந்தோம் என மூன்று முறை யோசிக்க வேண்டிதாகிவிடும். மிதிவண்டியில் சந்தைக்கு சென்றவர்கள் நடந்தே வீட்டிற்கு வந்ததை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்;. மிதிவண்டி திருடப்பட்டதால் அல்ல. மிதிவண்டியில் தாங்கள் சென்றதை மறந்துவிட்டதால்..

வயதாக ஆக, நினைவாற்றல் குறைந்து கொண்டே செல்லும் என்று கூறுகிறார்கள். ஆனால் பல முதியோர் அதிக நினைவாற்றல் கொண்டவர்களாக உள்ளனர். நினைவாற்றல் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நினைவாற்றல் இழப்பை தடுக்க மருத்துவ முறைகளை பரிந்துரைக்காமல் பல்வகை பயிற்சி முறைகளையே பரிந்துரைக்கின்றன. இத்தகைய பயிற்சிகள் முதியோர்களின் மூளை செயல்பாடுகளை வளர்த்து நலமுடன் நீண்டநாள் வாழச்செய்கிறது.

முதியோர் தங்கள் நினைவாற்றலை வளர்த்து கொள்ள பல பயிற்சிகள் உள்ளன. எண்புதிர், குறுக்கெழுத்து புதிர் மற்றும் அயல்மொழிகள் கற்பது போன்றவைகள் இதற்கு எடுத்துக்காட்டு. நினைவாற்றல் இழப்பை அகற்றும் முறைகள் இவைகள் தானா என்பதில் மிக குறைந்த ஆய்வுகள் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய பயிற்சிகள் வயது முதிர்வதால் ஏற்படும் நினைவாற்றலை தடுக்க முடியாது. அதிக வயது வாழும்போது முதியோர்களை பாதிக்கும் நினைவிழப்பு நம்மை தாக்கும் என்பதால் நினைவாற்றல் பயிற்சி தேவையானது என்று பேராசிரியர் உல்ப் டைய்டர் ஆஸ்வால்டு கூறுகிறார். இவர் எர்லான்கன் நியுரெம்பெர்க் பல்கவைக்கழகத்தில் இந்த ஆய்வை மேற்கொள்ளும் குழுவை வழிநடத்துபவராவார்.

நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்படும் மக்கள் தங்களை தாங்களே கவனித்து நலமடைய முடியாது. சுயஉதவி அணுகுமுறை அவர்கள் தங்களுக்கே உதவும் முறையாகும் என்று ஆஸ்வால்டு கூறுகிறார். சிறிய செயல்களை கூட மறந்து விடுகின்ற நிலை நினைவாற்றல் இழப்பு ஏற்படுகிறது என்பதன் அடையாளமாகும். இவர்களால் ஒரு தொலைபேசி எண்ணையோ, வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலையோ, கார் ஒதுக்கி நிறுத்துமிடம் ஆகியவற்றை நினைவில் கொள்ள முடியாது என்று மேக்ஸ் பிளாங் கல்வி ஆய்வு நிறுவனத்தின் ஃபுளோரியன் செமைடெக் தெரிவித்தார். இத்தகைய பிரச்சனையை கொண்ட மக்களின் மூளைசுருக்கத்தை மாற்ற ஏதாவது செய்ய வேண்டியுள்ளது. மூளை பயிற்சி நேர்மறை முடிவுகளை கொண்டு வருகிறது என முடிவாக தீர்மானிக்கபடவில்லை எனக் கூறும் செமைடெக் இம்முடிவுக்கு மாறாக இருக்க முடியாது என்கிறார். அதாவது மூளைக்கு அளிக்கப்பட்ட பயிற்சி மூலம் நினைவாற்றல் எவ்வளவு வளர்ந்துள்ளது என கணக்கிடபடுவதில்லை. இத்தகைய பயிற்சிகள் மூலம் மழுங்கும் மூளை, கூர்மையடையும் என்ற நேர்முக வாய்ப்பே உள்ளது.

நினைவாற்றலை வளர்த்துகொள்ள எல்லோரும் தாங்களாகவே சில பயிற்சிகளை செய்யலாம். வார்த்தை பட்டியல் நினைவில் வைப்பதை இதற்கு உதாரணமாக கொள்ளலாம். நினைவாற்றலுக்கு துணை செய்கின்ற கருவிகளை பயன்படுத்தி பட்டியலை நினைவில் வைக்க, ஒரு வடிவத்தை எண்ணி அது வார்த்தையை குறிப்பது போன்ற பல உத்திகளை வளர்க்க முடியும். பார்க்க கூடியதாய் உள்ள உருவங்கள் ஆழமாக பதியக்கூடியவை. தொலைபேசி எண்களை நன்றாக நினைவில் கொண்டிருப்பவர் தான் பல வார்த்தைகளை நினைவில் வைத்திருக்க கூடும் என்று இல்லை. பழக்கப்படுத்தப்பட்ட கடமைகளே அதே கடமைகளில் பயனைத் தருகிறது என்று கூறும் உளவியலாளர் செமைடெக் மூளைக்கான பயிற்சிகள் புத்திக்கூர்மையை வளர்க்கும் என்ற நம்பிக்கை பலவீனமானது என எச்சரிக்கிறார்.

உடல் பயிற்சியோடு இணைந்த மூளைக்கான பயிற்சியே நல்லது. ஆனால் அது இயந்திரதன்மை உடையதாய் இருக்க கூடாது என் ஆஸ்வால்டு கூறுகிறார். ஓரே பயிற்சி முறைகளை திரும்ப திரும்ப செய்வதாக அமைந்து விடக்கூடாது. ஓய்வு நேரங்களில் தங்கள் உடல் மற்றும் மூளை பயிற்சி முறைகளை இயந்திரதன்மை கொண்டதாக செய்யாமல் அவைகளின் அமைப்பு முறைகளை மாற்றி பயிற்சி மேற்கொள்வோர் தங்கள் முதிய காலத்தில் குறைவான நினைவாற்றல் இழப்பை பெறுவர் என்று ஆஸ்வால்டு கூறுகிறார். இவர் சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்களால் எழுதப்பட்ட வார்த்தைகளை கொண்ட அட்டைகளை பயன்படுத்தும் நிறப்பயிற்சியை பரிந்துரைக்கிறார். இப்பயிற்சியின்படி வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கும் நிறத்திற்கு பொருந்தாத நிறத்தால் அவ்வட்டைகளில் எழுத வேண்டும்.

எடுத்துகாட்டாக நீலநிறத்தில் எழுதப்பட்டுள்ள வார்த்தை சிவப்பு நிறத்தில் எழுதப்படுகிறது. இவ்வாறு வேண்டுமென்றே செய்யப்படுகிற சாதாரண பயிற்சிக்கு மூளை அதிக செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது மூளை உடனடியாக செயல்பட்டு, எழுதப்பட்டுள்ள நிறத்தையும், வார்த்தையையும் இனம்கண்டு அதற்கு நேர்மாறான நிறத்தை தேர்ந்தெடுத்து எழுத வேண்டிய செயல்பாடுகளை செய்கிறது. இதை போல நாள்தோறும் பலவித பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று ஆஸ்வால்டு கூறுகிறார். வாகனம் ஓட்டிகொண்டிருக்கும் போது ஓய்வு நிறுத்தங்களில் அடையாளங்களை பார்த்துவிட்டு, அதனை தாண்டி சென்றபின் அந்த அடையாளங்களின் மேல் என்ன எழுதி இருந்தது என்று நினைவுபடுத்தி பார்க்கலாம். மூளைக்கான பயிற்சிக்கு செய்தித்தாள் உகந்த கருவியாகும். ஏதாவது ஒரு கட்டுரையை வாசிக்கும்போது A மற்றும் N என்ற எழுத்துக்களை அடையாளப்படுத்தி கொண்டே வாசிக்கலாம்.

நினைவாற்றலை வளர்க்க புதிர்கள் ஒரு கருவியே. செய்தித்தாள்கள் தலைப்புவாரியாக குறுக்கெழுத்து புதிர்களை வெளியிடுகின்றன. இவை திரும்ப திரும்ப ஒரே மாதிரி வருவதால் மூளையின் உயிரணுக்களை அவ்வளவு வலுவாக வைத்திருப்பதில்லை என நிபுணர்கள் கருதுகின்றனர். அவற்றில் 10 புதிர்களை செய்துவிட்டால் 11 வது புதிரை எளிதாக செய்து விடலாம். எண்புதிர் மூளைக்கு அதிக பயிற்சியை தந்தாலும் முடிவில் அதுவும் இயந்திரதன்மை வாய்ந்ததாகி விடுகிறது. மூளைக்கு தொடர் சவால்களையும், எழுச்சிகளையும் தருவதில் தான் இப்பயிற்சியின் இரகசியமே அடங்கியுள்ளது என்கிற ஆஸ்வால்டு ஒரே இசையை பியானோவில் வாசிப்பது பெரிதல்ல. மாறாக 80 வது வயதில் பியானோ வாசிக்க தொடங்குவது நன்மை விளைவிக்கிறது. இது உடற்பயிற்சி அல்லது பளுதூக்குதலில் குறைவான நேரம் செலவழிப்பதால் வருவதல்ல. உடற்பயிற்சியோடு கூடிய மூளைக்கான பயிற்சிதான் நினைவாற்றல் திறனை உயர்த்த முடியும்.

கல்வி பயிற்சிகள் மூளைக்கு நல்ல பயிற்சியாக அமைகிறது.

நினைவாற்றலை வளர்க்க கல்வி சம்பந்தப்பட்ட பயிற்சிகள் மிக நல்லது. ஆனால் இப்பயிற்சியை தேர்ந்தெடுப்போர் உடற்பயிற்சி மற்றும் கட்டுபாடான உணவு உண்பவராக இருக்க வேண்டும் என்று ஹய்டல்பெர்க்கை சேர்ந்த மூப்பியல் வல்லுநர் கிறிஸ்டீனா டிங்-கிரெய்னீர் அம்மையார் கூறுகிறார். உதாரணமாக முயற்சியுடன் நடை பயிற்சி மேற்கொள்வது அர்த்தமுள்ளது. இரண்டு முட்டை, ஒன்று அல்லது இரண்டு முறை மீன், அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஒரு வார உணவு வகைகளாக இருக்க வேண்டும். கொழுப்பு சக்தி குறைந்த பால் உற்பத்திப் பொருட்கள் தேவையான புரத மற்றும் கால்சியம் எனப்படும் சுண்ணாம்பு சத்தை வழங்குகின்றன. இவை எல்லாவற்றையும் விட வயதில் பெரியோர் சமூகத்தில் பல தொடர்புகளை தேட வேண்டும் என்று டிங்-கிரெய்னீர் அம்மையார் கூறுகிறார். அயல்மொழி பயிற்சியை ஒரு திட்டமாக வயதில் பெரியோர் கொள்ள வேண்டும். நினைவாற்றல் கல்வி பயிற்சியும் பொருள்ளதாய் அமைய முடியும். எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் வாளாய் இருப்பது தான் மிக மோசமாக இருக்கும்.

வயது முதிரும்போது எதாவது பணிகளை செய்து இயங்கி கொண்டே இருப்பது மிக முக்கியமானது. தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கும் முதியவர்கள் திடீரென அதை நிறுத்திவிட்டால் விரைவாக நோய்வாய் படுவது இயற்கை. தங்கள் பணிகள் மூலம் மூளைக்கு வேலை கொடுப்பதோடு அவர்கள் உடலும் இயங்குகிறது. அப்படியென்றால் உடல் பயிற்சியோடு சார்ந்த மூளைக்கான பயிற்சி நினைவாற்றலோடு நீண்ட ஆயுளையும் தரும் தானே.

No comments: