Saturday, 16 February 2008

தண்ணீருக்கான யுத்தம்



முன்னைய காலங்களில் யுத்தங்கள் எல்லாம் நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கிலே இடம்பெற்றுள்ளன. வலுமிக்க நாடுகள் வளம் உள்ள வலுவற்ற நாடுகளை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில் தீவிரம் காட்டின. இதனால் ஏற்பட்ட காலனியாதிக்க போட்டிகள் நாடுகளிடையே போர்களாகவும் மாறியது.

கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் இயந்திர சாதனங்களின் பாவனை அதிகரிக்க உலகின் இயங்கு சக்திக்கு கனியவளம் இன்றியமையாத ஒன்றாக விளங்கியது. இதனால் கனியவளம் உள்ள நாடுகளை வல்லரசுகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பி களத்தில் இறங்க கனிய வளமிக்க நாடுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏனைய நாடுகளுடன் அணிசேர்ந் தன. இதன் போதும் நாடுகளிடையே முறுகல் நிலை தோன்றியது. இதில் சில யுத்தத்திலும் முடிவடைந்தன. இந்த எரிபொருள் வளங்களைச் சுரண்டுவதற்காக வல்லரசுகள் வளமிக்க நாடுகளுடன் சுதந்திர பொருளாதார உடன்படிக்கைகள் என்ற பெயரில் பல ஒப்பந்தங்களையும் செய்து கொண்டன.

இராஜதந்திர ரீதியில் உள்நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான ஒப்பந்தங்களுக்குள் சிக்கிக் கொள்ளாத நாடுகளுடன் வல்லரசுகள் யுத்தத்திலும் ஈடுபடத் தயங்கியதில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் இன்று இடம்பெறுவதும் இதுதான்.

இதன்படி உலகின் நேற்றைய யுத்தங்கள் நிலங்களை மையமாகக் கொண்டும் இன்றைய யுத்தங்கள் எரிபொருளை மையமாகக் கொண்டும் இடம்பெறுகின்றன. ஆனால் இனி நாளைய உலக யுத்தம் என்பது நாம் எவரும் எதிர்பார்க்காத ஒன்றுக்காக அமையுமா என்பதுதான் இன்றைய கேள்வி. அதாவது தண்ணீரை மையமாகக்கொண்டு நாடுகளிடையே யுத்தங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் போக்கும் அதை நோக்கிச் செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது உலக அளவில் உள்ள தண்ணீரில் 0.01 விழுக்காடு நீர் மட்டுமே குடிநீராக உள்ளது. அந்த நீரும் தற்போது குறைந்தும், மாசுபட்டும் வருகின்றமை உலக உயிரினத்திற்கே விடுக்கப்பட்டிருக்கும் சவலாகும். 1995 இற்குப் பின்பு புவியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது. புவியின் சாதாரண வெப்ப அளவின் விகிதம் பெருமளவுக்கு கூடியிருக்கிறது. கரியமிலவாயு, ஓசோன் மண்டலத்தாக்கம், மீதேன், நைட்ரஸ் ஒக்சைட் என்பவற்றோடு காடுகளை அழிப்பதும் எரிபொருட்களின் வெப்பநிலை என்பன புவியின் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணங்களாக அமைகின்றன. நான்கு இலட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு புவியில் காபனீரொட்சைட் அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம் தொழிற்சாலைகள் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தக் கரியமில வாயுவினால் புவிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள மிலன்கோவிட்ச் வலயம் பாதிப்படையும். அதன் விளைவு துருவப் பனி வேகமாக உருகும். இதனால் துருவ நன்னீர் வளம் குறைவடையும்.

மேலும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு காரணமாக முன்னைய காலங்களைப் போலன்றி அமில மழை அடிக்கடி பெய்து வருகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்த அமில மழை காரணமாக நன்னீர் ஏரிகள் பாதிப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமில மழை அடிக்கடி பெய்து வந்தால் காலப் போக்கில் நன்னீர் ஏரிகள் அதன் நன்னீர் தன்மையை இழந்து விடலாம் என்ற அச்சம் தற்போது தலைதூக்கியுள்ளது. ஜேர்மனி, ஸ்கன்டினேவிய நாடுகளில் பெய்த அமில மழை காரணமாக காடுகளிலுள்ள மரங்களின் இலைகள் ஏன் வேர்கள் கூட அழிந்திருக்கின்றன. இதன் விளைவுகள் கூட நிலத்தடி நீரைப் பாதிக்கின்றன.

இன்று பூமியில் நிலவுகின்ற நிலையற்ற வானிலை காரணமாக சில இடங்களில் அதிக மழையும், வேறு சில இடங்களில் வறட்சியும் நிலவி வருகிறது.

மேலும் புவி வாழ் மக்களின் மூன்றில் ஒரு பகுதியினர் கரையோரப் பிரதேசத்தில் வாழ்கின்றனர். ஆனால் இக்கரையோரப் பிரதேசங்களில்தான் நிலத்தடி நீர் பெருமளவுக்கு வெளியேறி வருகிறது. அத்தோடு கரையோர நன்னீர் வளம் உவர்நீராகவும் மாறி வருகிறது. இந்நிலையில் அதிகளவு நீர்ப்பயன்பாடு உள்ள கரையோரப் பிரதேசங்களின் நன்னீர் வளம் அருகி வருகின்றமையால் எதிர்காலத்தில் இப்பிரதேச மக்கள் தங்களது நீர்த்தேவையினை முற்றுமுழுதாக இறக்குமதி செய்வதன் மூலமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை தோன்றலாம்.

இவ்வாறுதான் உலகத்தின் குடிநீராக இருக்கின்ற 0.01 விழுக்காடு நீரும் அருகி வருகிறது. இதனைக் கருத்தில் எடுத்துத்தான் நாடுகள் இப்போதே பல முன்னோடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. சில நாடுகளின் தற்போதைய நகர்வுகளை ஆழமாக பார்க்கின்ற போது அவர்கள் நன்னீர் நிலைகளையும் கருத்தில் கொண்டே காய்களை நகர்த்து வதாகத் தோன்றுகிறது.
அந்த வகையில் முதலாவதாக அண்மையில் ஆட்டிக் பிராந்திய மலை முகடுகளுக்கு ரஷ்யா உரிமை கோரியதும் அதனால் ரஷ்ய எதிர்ப்பு நாடுகள் சீற்றமடைந்தமையையும் கவனத்தில் கொள்ளலாம். அதாவது ஆட்டிக் சமுத்திரத்திலுள்ள மலைப் பகுதிகள் ரஷ்யாவின் ஒரு பகுதி என அந்நாட்டு ஆய்வுக்குழு தெரிவித்த கருத்திற்கு அமெரிக்கா, கனடா, டென்மார்க் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமையோடு ரஷ்யாவின் செயற்பாட்டினை அமெரிக்கா ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக சித்தரித்துள்ள மையும் இரண்டு நாடுகளிடையே பரஸ்பர கருத்து முரண்பாட்டிற்கும் கொண்டு சென்றிருக்கின்றன.

இப்பிரதேசக் கடலில் 1,0000 பில்லியன் தொன் எரிபொருள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்தோடு அதன் மலைப் பகுதிகளிலிருந்து தூய்மையான குடிநீரையும் பெற்றுக்கொள்ளலாம். ஒரு காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் இப்பிராந்தியத்திலிருந்து குழாய் வழி மூலம் ரஷ்யாவுக்கு தூய குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கடல் நீரைக் குடிநீராக மாற்றுவதிலும் பார்க்க இதில் பல்வேறு நன்மைகள் உண்டு. இதனாலேயே ரஷ்யா ஆட்டிக் பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. அமெரிக்காவின் அழுத்தங்களையும் பொருட்படுத்தாது ரஷ்யா மீண்டும் மீண்டும் லொமனோசோவ் மலைத்தொடர் தனது நிலப்பரப்பின் ஒரு பகுதியென வாதிட்டு வருகிறது. இதனைவிடக் கடந்த மாதம் அவுஸ்திரேலிய இயற்கை வள அமைச்சைச் சேர்ந்த குழுவினர் முதன் முதலாக விமான மூலம் அந்தாட்டிக்கா சென்று அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்து திரும்பியமையும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவுஸ்திரேலியாவின் இந்தப் பயணத்தை சில நாடுகள் தேவையற்ற பயணம் எனவும் விமர்சித்துள்ளன.
australian antadic division http://www.aad.gov.au/

அடுத்து முக்கியமாக நீரை ஆக்கிரமிக்கும் உலகின் திட்டத்தின் வடிவமாக காட்ஸ் ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது. இவ் ஒப்பந்தம் ஒரு நாடு தமது துறைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது பற்றிக் கூறுகிறது. அதில் முக்கியமாகத் தண்ணீரை தனியார் மயமாக்குவதில் தீவிர கவனம் செலுத்துகிறது காட்ஸ் ஒப்பந்தம் பெருமளவுக்கு வளமிக்க ஏழை நாடுகளை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி இவ் வளமிக்க ஏழை நாடுகள் தங்களது துறைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்துவிட மறுக்கும் சந்தர்ப்பங்களில் அவை வல்லரசுகளின் மிரட்டல்களையும், பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும். இவ்வாறான நிலைமைகள் நாடுகளிடையே பரஸ்பர நல்லுறவைச் சீர்குலைக்கும். இதனால் வளமுள்ள வலுவற்ற நாடுகள் வல்லரசுகளின் அழுத்தங்களை எதிர் கொள்ள அணிசேர முற்படும் இந்நிலைமை உலக அமைதிக்கு மேலும் கேடு விளைவிப் பதாக அமையும்.

தண்ணீரை விழுங்கும் காட்ஸ் ஒப்பந் தத்தில் தண்ணீர் தொடர்பான பல சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் சில,

ழூ தண்ணீர் இயற்கையின் கொடை என்பதனையோ, மனிதனின் அடிப்படை உரிமை என்பதனையோ காட்ஸ் ஏற்கவில்லை. இதன்படி தண்ணீர் ஒரு விற்பனைச் சரக்கு.

ழூ குடிநீர் விநியோகம் காசு கொடுப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் சேவை எனவும் பன்னாட்டு முதலாளிகள் இதில் முதலீடு செய்தால் அவர்களுக்கு இலாபம் ஈட்டும் உரிமையுண்டு. தண்ணீரின் விலையை நிர்ணயிப்பதில் ஒரு நாட்டு அரசு எந்த விதத் திலும் குறுக்கிடமுடியாது.

ழூ தன்னுடைய வர்த்தகத்தை வளர்க் கும் நோக்கில் ஒரு பன்னாட்டு நிறுவனம் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தண்ணீரைக் கொண்டு செல்லலாம். அத்தோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம். இதற்கு அரசுகள் தடைவிதிக்க முடியாது.

ழூ நிலத்தடி நீர் வற்றுவது, சுற்றுச்சூழல், உயிரியல் சூழல், கலாச்சாரம் என எந்தவிதக் காரணத்திற்காகவும் தண்ணீர் விற்பனையின் மீது அரசு தடைவிதிக்கக் கூடாது. அவ்வாறு தடைவிதிப்பது சுதந்திர வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே கொள்ளப்படும்.

ழூ குடிநீரின் தரம் குறித்து எந்த அரசும் தன்னிச்சையாகச் சட்டம் இயற்றவோ, அதன் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கவோ கூடாது.

ழூ தேசிய சட்டங்கள் உள்நாட்டு கம்பனிகளை மட்டுமே கட்டுப்படுத்தும் உலக வர்த்தக கழகத்தின் விதிமுறைகள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் உள்நாட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தாது.

இவ்வாறு தண்ணீர் தொடர்பாக காட்ஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் காணப்படுகின்றது. இவற்றோடு மேலும் பல விதிமுறைகளை இவ்வொப்பந்தம் கொண்டுள்ளது. நம்பமுடியாததாகவும், நடக்க முடியாததாகவும் தோன்றலாம். ஆனால் உண்மை.

வாளியும் கயிறும் இன்றி தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொண்ட மக்களிடம் நீங்கள் வருங்காலத்தில் தண்ணீர் தேடி அலையப் போகின்றீர்கள் என்றும் தண்ணீருக்கு காசு கொடுக்கப் போகின்றீர்கள் என்றும் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தால் எங்களை பைத்தியம் என்று கூறியிருப்பார்கள். ஆனால் இன்று எம் கண் முன்னே நடக்கிறதல்லவா. இப்படித்தான் நாளை தண்ணீருக்காக நாடுகளிடையே ஏற்படப்போகும் யுத்தமும். கடந்த காலங்களில் தண்ணீரின் நிரம்பல் அதிகமாக இருந்தது. தற்போது அதிகமாகவும் நிரம்பல் குறைவாகமுள்ளது. ஆனால் பாவனை அதிகரித்துச் செல்கிறது. இதனால் இன்றைய உலகின் எரிபொருளின் நிலை நாளை தண்ணீருக்கு ஏற்படலாம்.

அவ்வாறு ஏற்படும் போது நாடுகளிடையே போட்டிகள் தோன்றும் பின்னர் அப்போட்டிகள் போர்களாக மாறும்; ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

தற்போது அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் 'நோப்தா" என்கிற ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உண்டு. இவ்வொப்பந்தமும் தண்ணீரை ஒரு விற்பனைச் சரக்காக கருதுகிறது. இந்நிலையில் உலக குடிநீர் வளத்தில் இருபது விழுக்காடு நீரைக் கொண்டுள்ள கனடாவிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் பெரிய மைதானங்கள் அளவிலான உறைகளில் நீரை நிரப்பி அதனை கப்பலில் கட்டி இழுத்துச் சென்று ஏற்றுமதி செய்கின்றன. இதனைவிட நீர்வளம் குறைந்த மெக்சிகோவில் தண்ணீர் முதலாளிகள் உறிஞ்சுகிறார்கள். அந்நாட்டு மக்கள் தமது சொந்தக் கிணற்றிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்க அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்றால் உலக நிலைமையின் போக்கை எண்ணிப்பாருங்கள்.

ஈராக்கை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்க இராணுவத்திற்கு கொச்சியிலிருந்து கப்பலில் தண்ணீர் எடுத்துச் செல்ல ஒரு பன்னாட்டு தனியார் நிறுவனம் முயன்றது. பின்பு மக்கள் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. ஆனால் காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திட்டால் இவ்வாறான எதிர்ப்புகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு பொருட்டல்ல.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் உள்நாட்டிலும் எரிபொருளின் விலை உயர்வடைகிறது என ஊடகங்களில் வரும் செய்திகள் காலப்போக்கில் மாறி மசகு எண்ணெய் என்ற இடத்தில் தண்ணீர் என்ற சொல் பாவிக்கப்படும் நிலை ஏற்படப்போகிறது. காலம் அவற்றை நோக்கி நகர்வதாகத்தான் தென்படுகிறது.

கன்னடத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ள நதி நீர் பிரச்சினை போன்று வரும் காலத்தில் தமிழீழ அரசுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையே மகாவலி நதிக்காகவும் யுத்தம் ஏற்படலாம். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நாடுகள் நீர்வளம் உள்ள பிரதேசங்களை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயலும். இதனால் சில பிரதேசங்களை பல நாடுகள் கையகப்படுத்த முயலும் இதன்போது ஏற்படுகின்ற முறுகல்கள் முரண்பாடுகள் போர்களில் முடிவடையும் வாய்ப்பே அதிகம் எது எப்படியோ தண்ணீருக்கான பனிப்போர் தொடங்கிவிட்டதாகவே எண்ணலாம்.


நன்றி: ஈழநாதம் (08.02.08)

No comments: