Sunday 24 August 2008

கடற்படை தாக்குதல், தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் 8 பேரை காணவில்லை

இராமேஸ்வரத்தில் இருந்து 5 படகுகளில் தொழிலுக்குச் சென்ற தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, 8 பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

450 படகுகளில் தொழில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா படையினரால் தாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளரான 48 அகவையுடைய விஸ்வநாதன் தெரிவித்தார். சிறீலங்கா கடற் படையினரது தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணிகளில் இந்திய கரையோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் இரகசிய முயற்சி?

அரசாங்கம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சந்தர்ப்பத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இரகசிய முயற்சியை மேற்கொள்ளவதாக பிரபல சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

15 ஆவது சார்க் மாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இரகசிய வாக்குறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீர்வுத் திட்டமொன்று தொடர்பில் இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் பல தடவைகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகவும்


வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்கள் முடிவடைந்த உடன் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சந்தர்ப்பத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த – கருஜயசூரிய இடையே தடால்--வன்னியில் முதலீடு செய்ய போட்டி

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநயாக் குழுத்தலைவர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவதூறு செய்துள்ளார். குறிப்பாக அமைச்சர் கரு ஜயசூரியவினால் முன்வைக்கப்பட்ட இரண்டு யோசனைகளை ஜனாதிபதி உதாசீனம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே தொலைபேசி இணைப்புக்களை கோரி நிற்பதாக நேரடி நிகழ்ச்சியொன்றின் போது கரு ஜயசூரியவை, ஜனாதிபதி சாடியுள்ளார்.

Saturday 23 August 2008

சிறுபான்மையினருக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் என்பதில் ஜேர்மன் நம்பிக்கை இழந்துள்ளது

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தாம் மேற்கொண்டு வந்த முயற்சிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஜேர்ஜென் வீத் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது,


இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு என ஜேர்மனி தெரிவித்து வரும் கோரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ தற்போதைய அரசாங்கம் செவிமடுப்பதில்லை. இலங்கையில் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்திற்கு அதிகாரங்களை வழங்கும் என்பதில் ஜேர்மனி நம்பிக்கை இழந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


எந்த ஒரு அரசும் ஆட்சிபுரியும் போது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். ஒரு சமூகத்திற்கு ஆதரவு வழங்குவதை விடுத்து எல்லா சமூகங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.


இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் சட்டங்களை ஏற்படுத்த வேண்டும். இலங்கையின் ஜனநாயகத்தை அனைத்துலக சமூகம் மதித்தே வந்துள்ளது. ஆனால் தற்போது அந்த நன்மதிப்பு சீர்குலைந்துள்ளது என ஜேர்மனிய தூதுவர் ஜேர்ஜென் வீத் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ் மக்களை காக்க வேண்டிய பொறுப்பு சர்வதேசத்திற்கு உண்டு

அரசாங்கம் புலிகளுக்கு எதிரான யுத்தமென்று அரசாங்கம் கூறினாலும் உண்மையில் இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேசரி வார இதழுக்கு வழங்கிய நேர்காண லில் குறிப்பிட்டார். அவரது பேட்டியின் முழு விபரம் வருமாறு:

கேள்வி: இந்திய பிரதமர் இலங்கை வந்திருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இந்தியா வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக கூட்டமைப்பு அவருடன் தொடர்பு கொண்டதா? கூட்டமைப்பினர் இந்தியா செல்வதன் நோக்கம் என்ன? யார் யார் எப்போது இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளீர்கள்?

பதில்: இந்திய பயணம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து கொண்டிருக் கின்றன. அநேகமாக அடுத்தமாத நடுப்பகுதியில் இந்தியா செல்வதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளோம். இந்தியா செல்லும் குழுவில் யார் யார் இடம்பெறுகிறார்கள் என்பது இதுவரையில் தீர்மானிக்கவில்லை.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த முக்கியமானவர்கள் செல்லலாம். ஏற்கனவே சார்க் மாநாட்டின் போது இந்திய பிரதமர் எமக்கு அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து இந்திய தூதுவருடன் பேசியுள் ளோம். எனவே இந்திய விஜயம் நிச்சயம் இடம்பெறும். இந்திய விஜயத்தின் நோக்கம் இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியான நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே. இலங்கை அரசாங்கம் இன்றுவரை முற்று முழுதாக யுத்தத்தால் தமிழ் மக்களை வெற்றி கொள்வதன் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்ற நிலைப்பாட் டிலேயே செயற்படுகிறது. அரசாங்கத்தை பொறுத்தவரையில் இது புலிகளுக்கு எதிரான யுத்தமென்று கூறினாலும் கூட உண்மையாக இன்று தமிழர்களுக்கு எதிராகவே இந்த யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த யுத்தத்தால் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராகவே யுத்தம் நடத்துகிறோம், தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல என பொய்யான கருத்துக்களை கூறி வருகிறது.

இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக தன்னுடைய குடி மக்கள் மீது யுத்தத்தை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான மக்களை கொலை செய்ததுடன் இலட்சக்கணக்கான மக்களை தொடர்ந்தும் அகதிகளாக்கியுள்ளது.

எனவே அரசாங்கம் மக்கள் மீது இவ்வாறான யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிற போது நிச்சயமாக அதனை நிறுத்துவதற்கு ஏனைய நாடுகளிடம் உதவி கேட்பதில் எந்த விதமான தவறும் இல்லை.

எனவே இலங்கையில் இருக்கக்கூடிய தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுக்கான முழுமையான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில் ஏனைய நாடுகள் இதற்கு உதவி செய்ய வேண்டும்.சர்வதேச சட்டங்களின் பிரகாரம் ஐக்கிய நாடுகளின் சாசனங்களின் பிரகாரம், எந்த ஒரு இனத்தையும் அழிக்கும் உரிமை எந்த ஒரு அரசிற்கும் இல்லை . எனவே இதன் அடிப்படையில் இலங்கை தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் சர்வதேச சமூகத்திற்கு உள்ளது.

எனவே, இவ்விடயம் தொடர்பாக தெளிவாக பேசுவதற்காகவே நாங்கள் இந்திய பயணத்தை ?ன்öனடுக்க உள்ளோம்.

கேள்வி: தற்போது யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதேவேளை இம்மக்களின் நிலையினை சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்ல எவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது?

பதில்: ஏற்கனவே கொழும்பில் இருக்கின்ற ஐக்கிய நாடுகள் தூதுவரõலயத்துடன் இது தொடர்பாக பேசி இருக்கின்றோம். வெளிநாடுகளின் தூதுவர்களிடம் இது தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறோம். நிச்சயமாக உலக நாடுகளுக்கு இலங்கை யுத்தத்தால் மிக மோச மான இடப்பெயர்வுகள் இடம்பெற்றுள்மை நன்கு தெரியும். இது தவிர, சாப்பிட வழி இல்லாமலும் தங்க இடம் இல்லாமலும் மக்கள் மர நிழல்களில் தஞ்சம் புகுந்துமுள்ளனர். குறுகிய காலப்பகுதிக்குள் பாரிய இடப்பெயர்வு இடம்பெற்றுள்ளது.

மன்னார் பெருநில பரப்பில் மக்கள் முழுமையாக விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், வவுனியா பெருநிலப்பரப்பில் இருந்தும் இராணுவத்தினரால் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

எனவே பா?யளவில் மிக பாரதூரமான அளவில் இடம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன.

வன்னிப் பரப்பென்பது பாரிய கட்டிடங்களை கொண்ட இடமல்ல. சிறிய குடிசைகளும் வீடுகளுமே பெருமளவில் உள்ளன. இந்நிலையில் மக்களை தங்கவைப்பதற்கு இடவசதிகள் அங்கு இல்லை. எனவே சர்வதேச தொண்டு நிறுவனங்களும் இலங்கை அரசாங்கமுமே அவர்கள் தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆனால், அம்மக்களுக் கான தங்குமிட வசதிகள் இதுவரையில் கிடைக்கவில்லை. காரணம் வன்னி நிலப்பரப்பிற்கு செல்லும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கொண்டு செல்லும் பொருட்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் முறிகண்டி தொடக்கம் கிளிநொச்சி வரையான வீதியில் மக்கள் இரு மருங்கிலும் தங்க வசதியின்றி மரநிழலிலேயே தங்கும் நிலைமை தொடர்கிறது.

எனவே இது தொடர்பாக சர்வதேச சமூகத்திடமும் ஐக்கிய நாடுகள் தூதுவராலயத்திடமும் தெரிவித்துள்ளோம். நிச்சயமாக இவ்வாறான நிலைமைகள் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுமானால், முதலில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

இன்று இலங்கை அரசாங்கம் இடம்பெயர்வு பற்றியோ மக்கள் அகதிகளாக்கப்பட்டது பற்றியோ எந்த ஒரு அக்கறையும் இல்லாத நிலையில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. இன்னும் கூறப் போனால், இலங்கை அரசாங்கம் மிக மோசமான பொய்களையும் கூறுகின்றது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் அம்மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் பாதுகாப்பாக இரு க்கின்றார்கள் என்றும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக பொய்களை கூறிவரு கிறது. ஆனால், உண்மையிலேயே ஒரு நாட்டின் குடி மக்களை மிக மோசமாக விரட்டி அடிக்கும் நடவடிக்கை இந்நாட்டில் மட்டுமே நடைபெற்று வருகின்றது.

ஒரு புறம் மக்களை விரட்டி அடித்துக் கொண்டு, இன்னுமொரு புறம் அம்மக்கள் எல்லோரும் சுகபோகமாக வாழ்கின்றனர் என்பது போல இலங்கை அரசாங்கம் வெளி உலகத்திற்கு காட்ட முயற்சி செய்கிறது. நிச்சயமாக அம்மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. அம்மக்கள் வறுமை என்ற எல்லைக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக் கின்ற நிலையில் மீண்டும் மீண்டும் அவர்கள் தாக்கப்படுகின்றனர்.

வன்னி பகுதியில் மீன்பிடிப்பதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுதவிர விவசாயத்தை முன்னெடுப்பதற்கு உரமோ மருந்து வøககளோ கொண்டு செல்வதற்கு இலங்கை அரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை.

எனவே அவர்கள் எல்லாவகையிலும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர்.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் மக்களை எதுவித வசதிகளுமற்ற நிலையில் நடுத் தெருவிற்கு கொண்டுவந்துள்ளது.

இம்மக்களின் அவலத்தை பார்த்து விடுதலைப் புலிகள் கூட நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம் யுத்தத்தை நிறுத்துங்கள் என்று கூட கேட்டனர். இது தொடர்பாக உலக நாடுகள் கூட பல தடவைகள் இலங்கை அரசாங்கத் திடம் யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என அழுத்தத்தை கொடுத்துள்ளன. ஆனால், இலங்கை அரசாங்கத்தின் முடிவு முற்று முழுதாக இந்த யுத்தத்தை நடத்தி முடிப்பதே.

ஏற்கனவே கடந்த 25 வருடமாக நடந்த யுத்தத்தில் பத்து இலட்சத்துக்கு அதிகமான மக்கள் வெளிநாட்டிற்கு அகதிகளாக சென்று விட்டனர். எனவே, இலங்கை அரசாங்கத்தால் மக்கள் விரட்டப்பட்டுள்ளனர்.

அதேபோலவே இன்னும் தொடர்ச்சியாக இந்த விடயம் நடந்து வருகின்றது.

கிழக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு 2 இலட்சம் மக்கள் அகதியாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இதுவரையில் முழுமையாக குடியேற்றப்படவில்லை. மூதூரில் 22 கிராமத்தை சேர்ந்த மக்கள் குடியேற்றப்பட நிலையில் தற்போது வடக்கு பகுதியில் உள்ள மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இவ்விடயங்கள் அனைத்தையும் மிக தெளிவாக சர்வதேச சமூகத்திடம் சொல்லி இருக்கிறோம். இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நிச்சயமாக இந்திய அரசிற்கு இந்த விடயங்கள் பற்றி தெரியும். நாங்கள் இது தொடர்பாக இந்திய அரசுடனும் எதிர்க்கட்சி மற்றும் ஏனைய தலைமைக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

கேள்வி: வன்னியில் மக்கள் அகதிகளாக மர நிழல்களில் தங்கி இருப்பதாக கூறப்படுவது பொய் என அரசாங்கம் கூறுகின்றதே.

இது பற்றி உங்களது கருத்து என்ன?

பதில்: இந்த அரசாங்கம் இதுவரையில் உண்மை பேசி இருக்கிறது என நம்புவதற்கு யாரும் தயாராக இல்லாத நிலையில், யுத்தம் தொடர்பான செய்திகள் பற்றி பார்ப்போமானால் மக்களுக்கு கூறப்படும் ஒரே ஒரு விடயம் "நாங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றுக்கொண்டுள்ளோம். நாங்கள் வாகரையை பிடித்து விட்டோம். கிளிநொச்சிவரை சென்றுள்ளோம்' என்பவையே. யுத்தத்தில் எத்தனை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்பன சிங்கள மக்களுக்கு கூறப்படவில்லை. சிங்கள மக்களுக்கு இனவெறி ஊட்டப்பட்டுள்ளது.

தமிழர்களை கொல்வதன் மூலம் தாங்கள் துட்டகைமுனுவின் வாரிசுகளாக தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். எனவே, சிங்கள மக்களும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர். உண்மையில் இந்த நாட்டில் இருக்கும் மக்களில் சிங்கள மக்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டும். அதனை தமிழ் மக்களும் பெற்றுக் கொள்ளும் போதே இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என மக்கள் எண்ணுவதாக இல்லை. அல்லது மக்களை யோசிப்பதற்கு அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் விடுவதாய் இல்லை. அது இடதுசாரி பேசக்கூடிய ஜே.வி.பி.யாகவும் இருக்கலாம்.

மிக மோசமாக இனவாதத்தை பேசக்கூடிய சில பௌத்த பிக்குகளாகவும் இருக்கலாம்.

இதுதவிர ஐக்கிய தேசியக் கட்சியாகவும் இருக்கலாம். இந்நிலையில் இலங்கையை ஆள விரும்புகின்ற, எல்லா கட்சிகளுக்கும் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர்களை அழிப்பதன் ஊடாகவும் தமிழ் விரோத கருத்துக்களை கொண்டுவருவதன் மூலமாகவும் தான் அரசாட்சியை கைப்பற்ற முடியும் என்றதொரு துர்ப்பாக்கிய நிலை ஆண்டாண்டு காலமாக இலங்கையில் நிலவி வருகின்றது.

இன்று மஹிந்த சமரசிங்க சொல்கிறார் இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் சென்று கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு எந்த பிரச்சினையும் இல்லை என. ஆனால், இவர் நேரே சென்று பார்த்தால் எத்தனை ஆயிரம் மக்கள் தங்க இடமின்றி மரநிழலில் இருக்கிறார்கள் என்பது தெரியும்.

இது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு கூறுவதற்கு பல கருத்துக்களை வைத்துள்ளனர். இவர்கள் எத்தனைமுறை அங்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்று கூறினாலும் அங்கு இருக்கக்கூடிய சர்வதேச நிறுவனங்களுக்கு உண்மையில் அங்கு என்ன நடைபெறுகிறது என்பது தெரியும்.

கேள்வி: வன்னியில் உணவு போதிய கையிருப்பில் இருப்பதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பதாகவும் மக்களின் நலன் கருதி தினம் 20 லொறிகளில் வன்னிக்கு உணவு அனுப்பி வைப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது. இதன் உண்மை தன்மை பற்றி விளக்கமுடியுமா?

பதில்: முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் மக்கள் வாழ்கின்ற நிலையில் 20 லொறிகள் தான் போகின்றது என்றால், அந்த பொருட்கள் எவ்வளவு காலத்திற்கு போதும் என்னென்ன பொருட்கள் போகின்றன என்பது கேள்வி குறியே.

முக்கியமாக அம்மக்களுக்கு தங்குவதற்குக் கூடாரம் வேண்டும். உணவு வேண்டும். குழந்தைகளுக்கு பால்மா வேண்டும். நான் அறிந்த வகையில் அங்கு குழந்தைகளுக்கு எந்த வகையான பால்மாவும் இல்லை. அரிசியையும் பருப்பையும் மட்டும் கொண்டு செல்ல அனுமதியை வழங்கிவிட்டு

"நாம் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டோம். 20 லொறிகளில் பொருட்கள் அனுப்புகிறோம் ' என கூறி கொள்வதில் எந்த உண்மையும் இல்லை. பொதுவாக அங்கு குழந்தைகளுக்கான பால் மா இல்லாத பிரச்சினை இருக்கிறது. மக்களது உயிர் காக்கும் மருந்து இல்லாத பிரச்சினை இருக்கிறது. இதுவரை முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும் உள்ள வைத்தியசாலைக்கு மின்சாரம் இல்லாத பிரச்சினை உள்ளது. இதனால், கையிருப்பில் உள்ள மருந்துகளை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது.

ஆகவே, பிரச்சினைகள் என்று பார்த்தால் அங்கு ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. ஆனால், அரசாங்க அதிபர் இல்லை என்றே பதிலளிக்கிறார். காரணம் அரசாங்க அதிபர் என்பவர் ஒரு அரசாங்க ஊழியர்.

அவர் அரசாங்கம் சொல்வதையே கூறுவார்.

இந்நிலையில் அவர் தமிழர்களுக்காக பேசுவார் என எதிர்பார்க்க முடியாது. அவர் அரசாங்கத்தை எதிர்த்து தமிழர்களுக்காக பேசுவாரானால் அவருடைய பதவி பறிக்கப்படும்.

எனவே அரசாங்கம் கூறுவதையே அரசாங்க அதிபர் கூறுவார். 20 லொறிகள் போனது உண்மைதான். ஆனால், அந்த ö லாறியில் அம்மக்களுக்கான முக்கியமான உணவுகள், மருந்துகள் குழந்தைகளுக்கான பால் மா என ஏற்று கொள்ள முடியாது.

காரணம் இவற்றுக்கான தட்டுப்பாடு தற்போதும் அங்கு நிலவுகின்றது. இதுதவிர அப்பகுதிகளில் நாளாந்தம் ஷெல் தாக்குதல் நடைபெறுகிறது. இவற்றின் மூலம் பாதிக்கப்படுபவர்கள் புலிகளோ புலிகளின் உறுப்பினர்களோ அல்ல. இவற்றில் அதிகளவில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி மக்களே. எனவே இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளை கூட கொண்டு செல்வதற்காக அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இதேவளை மக்களுக்கு தேவையான மருந்துகள் கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டும் வவுனியாவில் அனுமதிக்கப்பட்டாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

நாங்கள் ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்த்துள்ளோம். வாகரையில் தொடர்ச்சியாக குண்டு வீசி அம்மக்களை தாக்கி அவர்களுக்கு உணவு அனுப்பாமல் அவர்களை இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிக்குö காண்டு வர வேண்டும் என்ற நோக்கில் 300க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கையினை நாங்கள் சமர்ப்பித்திருக்கிறோம். மக்களை மிக மோசமான முறையில் அங்கிருந்து விரட்டி விட்டு நாங்கள் வாகரையை பிடித்து விட்டோம் என கூறியது. அதேபோன்ற செயற்பாடே இன்று இங்கும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

மக்களின் மீது மோசமானதும் மோசடித்தனமான தாக்குதலை நடத்துகின்ற நடவடிக்கைகளையே இன்று இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. எனவே, இந்த அரசாங்கம் கூறுவதிலோ அரசாங்க அதிபர்கள் கூறுவதிலோ எந்த உண்மையும் இல்லை.

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்த சில சக்திகள் முயல்வதாக ஸ்ரீகாந்தா எம்.பி. அண்மையில் குற்றம் சாட்டியுள்ளார். அந்த சக்தி என்ன? இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை கூற முடியுமா?

பதில்: இதுவரையில் எனது அறிவுக்கு எட்டிய வகையில் எனக்கு கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் தமிழ் கூட்டமைப்பில் ஒரு பிளவு வரும் என நான் கருதவில்லை.

சில வேளைகளில் ஸ்ரீகாந்தாவிற்கு யாராவது இடையூறு விளைவிப்பது அவருக்கு தெரிந்திருக்கலாம். இல்லை என நான் கூறமாட்டேன்.

ஆனால், என்னை பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய உரிமைகளை, தமிழ் மக்களினுடைய அபிலாஷகளை ஏற்றுக்கொள்ளக்கூடியது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் நிச்சயமாக அவர்களுடைய கூட்டு என்பது பாதுகாக்கப்படும். அவர்கள் ஒற்றுமையும் பாதுகாக்கப்படும்.

இலங்கை மண்ணில் சமாந்தரமாக பயணிக்கும் யுத்தமும் தேர்தலும் - இதயச்சந்திரன்

சத்தியத்திற்குப் பின்னால் அணி வகுத்து நிற்கும் உலகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷை நிச்சயம் வெற்றியடையும்.

புலம்பெயர் மக்கள் வாழும் நாடொன்றில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றிற்கு, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் வழங்கிய நேர்காணலில் கூறப்பட்ட விடயமே இது.

மிகவும் ஆழமான அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட இப் போராட்டம், உண்மையின் தரிசனத்தில் வேரூன்றி இருப்பதால் வெற்றிப் பாதையில் பயணிக்குமென்பதே அவரின் உறுதியான நம்பிக்கை.

அரசால் முன்னெடுக்கப்படும் கிழக்கு அபிவிருத்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு தெளிவான பதிலையும் அவர் முன்வைத்தார்.

மூதூர் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 2000 குடும்பங்களிற்கு எந்தவிதமான நிவாரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை.

அபிவிருத்தி என்பது அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்களிற்குக் கிடைக்கவில்லை.
துரத்தியடிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த பூமியில், இராணுவத்திலிருந்து இளைப்பாறியவர்களைக் குடியமர்த்துவது அபிவிருத்தி ஆகாது.

தெருக்களையும், நீண்ட நெடுஞ்சாலைகளையும் அமைத்து, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை செயற்படுத்துவதே அபிவிருத்தி என்கிறது அரசு.

தமிழ், முஸ்லிம்களின் குடியிருப்புக் காணிகளில் பாதை அமைப்பது நிலப்பறிப்பா? அல்லது அபிவிருத்தியா? என்கிற கேள்வியையும் சம்பந்தன் முன்வைத்தார்.

தமிழ் மக்களால் ஜனநாயக முறைமையில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதியின் கருத்துக்களை செவிமடுக்கும் நிலையில் அகண்ட பாரதத்தின் ஜனநாயகத் தலைமைகள் இல்லையென்பது வேறு விடயம்.

அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் துணைப்படையின் துணையோடு ஜனநாயகத்தை நிலைநிறுத்தும்படி ஆதரவு வழங்குகிறது இந்திய, அமெரிக்க வல்லரசுகள்.

மாகாண சபைத் தேர்தல்கள் வரும்போது, பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாவை இயக்கி விடுவார் அமெரிக்கத் தூதர் றொபேட் ஓ பிளேக். நேர்மையான, சுதந்திரமான தேர்தல் ஸ்ரீலங்காவில் நடைபெற வேண்டுமென கிழக்குத் தேர்தலின் போது கூறினார்.

தற்போதைய வடமத்திய, சப்ரகமுவ
மாகாண சபைத் தேர்தலின் போதும் அதையே திரும்பவும் கூறுகிறார்.
படை நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தாலும் தமிழ் மக்கள் மரங்களின் கீழ் ஏதிலியாக வாழ்ந்தாலும் உலக மகா ஜனநாயகத்தைக் காப்பாற்ற, தேர்தலை நடத்துங்களென்பதே அமெரிக்காவினதும், இந்தியாவினதும் வேண்டுதல்.

வடக்கை முழுமையாக வெற்றி கொள்ள ஒரு வருடம் தேவையெனக் கூறியவாறு, யாழ். குடாவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தப் போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். யுத்தமும், தேர்தலும் சமாந்தரமாகப் பயணிக்கும் உத்தியை, தற்போது பிரயோகிக்கும் அரசு, வல்லரசுகளின் மீது மனித உரிமை சங்கங்கள் செலுத்தும் அழுத்தங்களை திசை திருப்புமென எடைபோடுகிறது.

தேர்தல் திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றால், ஸ்ரீலங்காவில் ஜனநாயக விழுமியங்கள் இன்னமும் அழியவில்லையென்று உலகம் நம்புமென அரசு சிந்திக்கிறது.

கடன் பெறுவதற்குப் பயன்படும் தேர்தல்கள், இன அழிப்பு வெளிப்பாடுகளை மூடி மறைக்கவும் உபயோகப்படுகிறதென கூறிக் கொள்ளலாம்.

விடுதலைப் போராட்டமும், இன அழிப்பு நிலையும், இருபெரும் முரண் அடையாளங்களாக ஸ்ரீலங்காவில் இனங்காணப்படுகின்றன.

அவலத்தில் சிக்கித் தவிக்கும் வன்னி மக்களுக்குத் தேவையான அவசர நிவாரணப்
பொருட்கள் சென்றடையவிடாமல், சிங்களம் தடுப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்த அறிக்கையால், அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க விசனமடைந்துள்ளார்.

அந்த அறிக்கையை மீளப் பெறும்படி அவசர வேண்டுகோள் ஒன்றினையும், சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அவர் விடுத்துள்ளார்.

இந்த அபத்தமான வேண்டுகோளை செவிமடுக்கும் மன்னிப்புச் சபை, உறுதியான மேலதிக அழுத்தங்களை அரசின் மீது செலுத்த வேண்டுமென்பதே மரணத்தின் விளிம்பில் அவஸ்தைப்படும் வன்னி மக்களின் எதிர்பார்ப்பு.

வாகரையில் பிரயோகித்த அதேவகையான, வெளியேற்றும் தந்திரத்தை, மன்னாரில் நிறைவேற்ற முடியாமல் ஏமாற்றமடைந்திருக்கும் அரசு, பொருளாதாரத் தடையை இறுக்கி, மக்களைப் பிதுக்கி வெளியே தள்ளும் உத்தியை பிரயோகிக்கிறது.

வெறுமனே மன்னிப்புச் சபைகளும், தூதர்களும் அபிப்பிராயங்களை உதிர்த்து விட்டுப் போவது, துயர்படும் மக்களை ஆசுவாசப்படுத்தாது. யுத்தப் பிரதேசத்தில் பொதுமக்கள் பாதிப்படையக் கூடாதென்கிற ஐ.நா.வின் சாசனத்தையாவது சிங்களத்திடம் இவர்கள் கூறலாம்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கியே நாம் நகர்வோம் என்கிற விடயமும் மக்களின் ஜனநாயக உரிமைதான்.

ஆகவே அரசு நியாயப்படுத்தும் பயங்கரவாதத்திற்கெதிரான ஜனநாயகத்தை நிலைநாட்டும் போரில் தமிழ் மக்கள் எவர் பக்கமென்பது தெளிவாகப் புலப்படுகிறது.

அதேவேளை விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து, இராணுவப் பிரதேசத்திற்கு மக்களை வரவழையுங்களென்று சர்வதேச மன்னிப்புச் சபையிடம் அரசு வேண்டுகோள் விடுப்பதிலிருந்து மக்கள் எவரோடு இணைந்துள்ளார்களென்பது தெளிவாகிறது.

அரசியல் துறையினரின் அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள், விடுதலைப் புலிகளோடு இணைவதும், பரந்துபட்ட மக்கள், போரெழுச்சி கொண்டு அணிதிரள்வதும், நடைபெறப் போகும் கோரமான யுத்தத்தின் அழிவுப் பரிமாணங்களை தெற்கிற்குக் கோடிட்டுக் காட்டுகிறது.

தொலைந்த இடத்தில்தான் வாழ்வைத் தேட வேண்டும். மக்களின் ஒன்றுகூடல் விளம்பும், கருத்துநிலையும் இதுதான்.

கடல்வழி வழங்கலை அழித்து, பன்முனைத் தாக்குதலை தொடர்ச்சியாகத் தொடுத்து படைநகர்வுகளை முடக்க வான்வெளி தாக்குதலை நிகழ்த்தி, விடுதலைப் புலிகளின் மரபுசார் படையணியைத் தற்காப்பு நிலைக்குள் வைத்திருக்கலாமென்பதே சரத் பொன்சேகாவின் போர் மூலோபாயம். பலவீனமான பகுதிக்குள் நகர்வினை மேற்கொள்ளல் என்பது அவரின் தந்திரோபாய உத்தி.

எதிர்ப்பு இல்லாமல் நடந்து சென்றால், அகலக்கால் பரப்ப அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதென்று கருதலாம். இவைதான் இராணுவ மூலோபாயங்கள் எதிர்கொள்ளும் சில யதார்த்தங் கள். ஜெயசிக்குறுவின் “ஒட்டிசுட்டான்’ மன்னாரிற்கு எதுவென்று தெரியவில்லை. அதிகம் எழுதினால் அரசாங்கத்திற்குப் பிடிக்காது. சில புலம்பெயர் பத்திரிகைகளுக்கும் நெஞ்செரிவு வரும். களையெடுத்து, ஊடகத்துறையை சுத்தம் பண்ணப் புறப்பட்டு விடுவார்கள் சில “கிருஷ்ண’ துர்வாசகர்கள்.

இருப்பினும் புலம்பெயர் மக்கள் வாழும் நாடுகளில் இயக்கும் ஊடகங்கள் அனைத்தும், ஒருமித்த குரலில், அக்னிக் களத்துப் புதல்வர்களுக்கும், மரணத்தின் விளிம்பில் தவிக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் ஆதரவு தெரிவிப்பது ஆறுதலான விடயம். இன்னமும் வேர் அறவில்லை.

இலங்கை மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி

சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்காக நேற்று நடைபெற்ற தேர்தலின் தற்போதைய முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.


மாவட்ட அடிப்படையில் முழுமை தகவல் வெளியாகியுள்ள வடமத்திய மாகாணத்தில் பொலநறுவ மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமுள்ள 10 ஆசனங்களில் 6 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ள அதேவேளை ஜே.வி.பிக்கு ஆசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனை தவிர அனுராதபுர மாவட்டத்தின் மதவாச்சி தேர்தல் தொகுதி, பொலநறுவை மாவட்டம் மெதிரிகிரிய தேர்தல் தொகுதி மின்னேரிய தேர்தல் தொகுதி, அநுராதபுரத்தின் மிகிந்தலை தேர்தல் தொகுதி ஆகியவற்றிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது.

சப்பரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டம் அரநாயக்க தேர்தல் தொகுதி, ரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை தேர்தல் தொகுதி கேகாலை மாவட்டத் கேகாலை தேர்தல் தொகுதி, ரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல தேர்தல் தொகுதி போன்ற இடங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி முன்னிலையை பெற்றுள்ளது.

ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரத்தினபுரி மாவட்ட அஞ்சல் வாக்குகளில் 34 வாக்குகளை பெற்றுள்ளது.
பி. சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி 2 வாக்குகளை பெற்றுள்ளது.

கேகாலை மாவட்ட அஞ்சல் வாக்களிப்புகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 34 வாக்குகளை பெற்றுள்ளது.

கேகாலை அரநாயக்க தேர்தல் தொகுதியில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் 91 வாக்குகளை பெற்றுள்ளது.
ரத்தினபுரி பலாங்கொடை தேர்தல் தொகுதியில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் 81 வாக்குகளையும் மலையக மக்கள் முன்னணி 332 வாக்குகளையும் பெற்றுள்ளன.

கேகாலை தேர்தல் தொகுதியில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் 68 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ரதத்தினபுரி நிவித்திகலை தேர்தல் தொகுதியில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் 681 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதேவேளை பொலனறுவை மெதிரிகிரிய தேர்தல் தொகுதியில் ஏ. எல். எம். அத்தாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் 796 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பொலனறுவ அஞ்சல் மூல வாக்குவாக்குகளில் இந்த கட்சி 36 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அநுராதபுர மதவாச்சி தேர்தல் தொகுதியில் தேசிய காங்கிரஸிற்கு 231 வாக்குகள் கிடைத்துள்ளன.

மிகிந்தலையில் 440 வாக்குகளும் மெதிரிகிரயவில் 796 வாக்குகளை தேசிய காங்கிரஸ் பெற்றுள்ளது.

கள்ள வாக்கை அளிக்க முயற்சித்த சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார்

sarana.jpgஇரத்தினபுரியில் கள்ள வாக்கை அளிக்க முயற்சித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பாஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை பிரதேச மக்கள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி கரபிஞ்ச பிரதேசத்தில் உள்ள புனித ஜோக்கின் தமிழ் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியிலேயே அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கம்பாஹாவைச் சேர்ந்த 25 பேருடன் பேரூந்து மற்றும் கெப் வாகனத்தில் சென்ற சரண குணவர்தன, ஜே.வீ.பீனரை போல் சிவப்பு உடைகளை அணிந்திருந்தாகவும்,


பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை அடையாள கண்டப்பின்னர், அங்கிருந்து விரட்டியதுடன் , அவர்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் குற்றச்சாட்டை மறுத்தார் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் பலர் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாக ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த குற்றச்சாட்டை கிழக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி.என்.பத்மநாதன் மறுத்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மாணவர் அமைப்புக்களின் செயற்பாடுகளில் பங்கெடுக்காத சிரேஷ்ட மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும் துணைவேந்தர் கூறினார்.

“உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக சிங்கள மாணவர்கள் எவரும் ஒருபோதும் எம்மிடம் முறைப்பாடு செய்யவில்லை” என கலாநிதி பத்மநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் பயிலும் சிங்கள மாணவர்கள், அங்குள்ள தமிழ் மாணவர்களால் மோசமாக நடத்தப்படுவதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பகிடிவதைக்கு உட்படுத்தப்படும் சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர், கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குற்றஞ்சாட்டினார்.

சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கல்வி பயில்வதற்கு அனுமதித்திருக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டைப் பாராட்டியிருந்த தேரர், எனினும், அந்தப் பகுதிகளில் காணப்படும் பாதுகாப்புச் சூழ்நிலைகளால் சிங்கள மாணவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறினார்.

இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் குற்றஞ்சாட்டிய அன்று இரவே சிங்கள மாணவர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கான மூலகாரணி எதுவென்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லையென கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒருவரும், இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், ஒரு சிற்றூழியரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தப் படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், சிங்கள மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனைக் காப்பாற்ற அவுஸ்ரேலியர் முயற்சி – திவயின

வாழ்க்கைக்கு மதிப்பளிப்போம் என்ற பெயரில் இலங்கையில் நடைபெறும் போருக்கு எதிராக மகஜர் ஒன்றில் 7 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் நடவடிக்கையில் அவுஸ்த்ரேலிய தன்னார்வ தொண்டர் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

ஜோன்சன் தோமஸ் என்ற தொண்டர் அமைப்பின் செயற்பாட்டாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சி என புலனாய்வுதுறையினர் கூறியுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்த்ரேலிய பிரஜை ஒருவர் வழி நடத்தும் அமைப்புபொன்று பிரபாகரனைக் காப்பாற்ற கையெழுத்து சேகரிக்கிறது என அந்த நாழிதழ் தலைப்பிட்டு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அமைச்சர்கள் அமீர் அலி - ஹுசைன் பைலா பயனித்த ஜீப் வண்டி மீது குண்டுத்தாக்குதல்

அமைச்சர்கள் அமீர் அலி மற்றும் ஹுசைன் பைலா ஆகியோர் சென்று கொண்டிருந்த ஜீப் வண்டி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் பொலநறுவை நெலும்விலவில் நடைபெற்றுள்ளது.


வாகனம் சிறிது சேதமடைந்தாலும் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. குண்டு வாகனத்துள் பொருத்தப்பட்டிருந்ததா அல்லது தெருவோரத்தில் வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லியாகொடல்லவில்; முஸ்லிம் வாக்காளர்கள் விரட்டியடிப்பு

tmvplogo1.jpgபொலன்னறுவை பல்லியாகொடல்லவில் வாக்களிக்கச் சென்ற முஸ்லிம் வாக்காளர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுததாரிகள் விரட்டியடித்ததாக முறையிடப்பட்டுள்ளது.


பெரும் எண்ணக்கையிலான முஸ்லிம் வாக்காளர்கள் இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைக் கண்காணிப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அடையாள அட்டைகளை சமர்ப்பிக்காத பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பல மாவட்டங்களில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையகம் வெளியிட்ட தகவல்களை பொதுமக்கள் சரியாக புரிந்துகொள்ளாமையினால் இந்த நிலை உருவாகியுள்ளது.

அடையாள அட்டைக்குப் பதிலாக எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்க முடியும் என பொதுமக்கள் கருதியதனால் இந்தக் குழப்ப நிலை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆள் அடையாளத்தை உரிய வகையில் நிரூபிக்க முடியாத பல வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

Friday 22 August 2008

யாழில் துணைப்படை E.P.D.P குழுவினரின் கப்பம் அறவீடு தொடர்கி்றது

யாழ் குடாநாட்டில் துணைப்படை E.P.D.P குழுவினரின் கப்பம் அறவீடு தொடர்ந்து வருகின்ற போதிலும், அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் வெளியே அதனைக்கூறாது தவிர்த்து வருகின்றனர்.

பொதுமக்களின் வீடகளுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் துணைப்படை E.P.D.P குழுவினர் தம்மை கருணா குழு எனத் தெரிவித்து கப்பம் கோருகின்றனர்.

இடமொன்றைக் குறிப்பிட்டு அங்கு கப்பப் பணத்தைக் கொண்டுவந்து தருமாறு அச்சுறுத்தும் துணைப்படைக் குழுக்கள், இல்லையெனில் கடத்திச் செல்வோம், அல்லது சுட்டுக்கொல்வோம் என எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

சிறீலங்கா படைகளது இறுக்கமான தடைகள் காரணமாக துணைப்படைக் குழுக்களின் மிரட்டலுக்கு அஞ்சும் மக்கள் வேறு இடங்களுக்கு சென்று வாழ முடியாத நிலை காணப்படுவதாக எமது குடாநாட்டுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

துணைப்படை T.M.V.P குழுவினரும் கிழக்கிலும், வவுனியாவிலும் கப்பம் அறவிட்டு வருகின்றனர்.

கந்தளாய் வெந்நீர் ஊற்றில் காவற்துறைச் சிப்பாய் பலி

துப்பாக்கியின் குறிதவறியதில் காவற்துறை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை – கந்தளாய் வெண்ணீர் ஊற்று காட்டுப் பிரதேசத்தில் உள்ள வீதியின் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவற்துறைச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை ஒன்றை விரட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது குறி தவறி தோட்டா காவற்துறை சிப்பாயின் மீது பாய்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஒளிப்பதிவு செய்து வெளியிடுமாறு மேர்வின் அறிவுரை

இலங்கை இராணுவத்தினர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஒளிப்பதிவு செய்து வெளியிடுமாறு அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சிரச ஊடகவியலாளர்களை தாக்கி அவர்களிடம் இருந்து ஒளிப்பதிவுக் கருவிகளைப் பறித்தமை தொடர்பில் நீதிமன்றதினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேர்வின் சில்வா சட்டத்தரணி மூலம் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


அவர் நீதிமன்றத்திற்குள் பிரவேசிப்பதை ஒளிப்பதிவுசெய்த ஊடகவியலாளர்களிடமே அமைச்சர் மேர்வின் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா படையினர் தமிழர்களைத் தாக்குவதாகக் கூறியுள்ளமை தொடர்பாக அரசாங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கேட்டபோது,

படையினர் எந்த இனத்திற்கு எதிராகவும் தாக்குதல்களை நடத்தவில்லை, பயங்கரவாதிகளுக்கு எதிராகவே தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கு அனைவரது ஆசிர்வாதமும் அவசியம் என கூறியுள்ளார்.


அமைச்சர் மேர்வின் கூறிய கருத்து தொடர்பில் தன்னால் எதனையும் தெரிவிக்க முடியாது எனவும் தான் அதனை அறிந்திருக்கவில்லை என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் வடக்கில் தமிழர்களை தாக்குகின்றனர் என்று கூறுவது, படையினர் இனப்படுகொலை புரிகின்றனர் எனப் பொருள்படுகிறது.

மேர்வின் சில்வா அரசாங்கத்தின் அமைச்சர் என்பதால், அரசாங்கத்தின் கொள்கை இதுவோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அரிசிக் கப்பல் விபத்தில் சிக்கி மூழ்கியது!

இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி அரிசியை ஏற்றிக்கொண்டு வந்த இலங்கைக் கப்பல் ஒன்று பங்களாதேஸ் சிட்டகொங் துறைமுகத்திற்கு அருகில் வேறொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளது.

இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா என்பவருக்குச் சொந்தமான எம்.வி. பதுலுவலி எனும் கப்பலே 3000 தொன் அசிரியுடன் சிட்டகொங் துறைமுகத்திற்குள் நுழைந்தவேளை எதிரே வந்துகொண்டிருந்த பனாமா நாட்டின் எண்ணெய் கப்பலொன்றுடன் மோதி மூழ்கியுள்ளது.

இதன்போது கப்பலில் இருந்த 17 பேரில் தலைமைப் பொறியியளாளர் தவிர ஏனைய அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஸ் துறைமுக அதிகாரிகளும் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது

துணுக்காய், உயிலங்குளம் பகுதிகளை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் மற்றும் உயிலங்குளம் பகுதிகளை அரசாங்கப் படைகள் மீட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தினரின் 57வது படைப்பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தப் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு மிகவும் முக்கிய பகுதியாக விளங்கிய துணுக்காயை நோக்கி நேற்று முதல் இராணுவத்தினர் முன்நகர்வுகளை ஆரம்பித்திருந்ததாக அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளான்குளம்- மாங்குளம் வீதியின் மையப் பகுதியில் துணுக்காய் நகர் அமைந்திருப்பதுடன், துணுக்காயிலிருந்து வடக்கில் 5 கிலோமீற்றர் தொலைவில் உயிலம்குளம் அமைந்துள்ளது.

அண்மைய வெற்றிகள் மூலம் விடுதலைப் புலிகளின் கோட்டையெனக் கருதப்படும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகின்றமை தெளிவாகிறது என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.

இதேவேளை, துணுக்காய் மற்றும் உயிலங்குளம் பகுதிகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டமை குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.

எனினும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு விடுதலைப் புலிகள் பயிற்சிகளை வழங்கிவருவதாக தமிழ் இணையத்தளங்கள் பல செய்தி வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளை வலுப்படுத்த கொபி கிளப் - சிங்கள இணையம்

விடுதலைப்புலிகளை வலுப்படுத்தும் நோக்கில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து அமைப்பொன்றை உருவாக்கியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


கொபி கிளப் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சர்வதே நிலைப்பாடு ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.


இந்த நடவடிக்கையை ஒழுங்குப்படுத்துவதற்காக கொழும்பில் இவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.


இதன் உறுப்பினர்கள் வெளிநாட்டினர் எனவும் இந்த அமைப்பை வன்னியில் செயற்படுத்தவும் இவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொபி கிளப் அமைப்பில் உள்ள சில சர்வதேச அமைப்புகளின் வாகனங்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த அமைப்பு தற்போது புதிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேற்றம்: மாணவன் கொலையின் எதிரொலி

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகபீட இறுதியாண்டைச் சேர்ந்த மாணவன் பஸன் சமரசிங்க(22) இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்குப் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து சிங்கள மாணவர்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டதாக கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்றிரவு 8.45 மணியளவில் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள், சிறியரக கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அந்த மணவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கிழக்குப் பல்லைகலைக்கழகத்தின் விடுதிகளில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் அவர்களின் பாதுகாப்புக்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகத்தின் விரிவுரை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லையெனவும் கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார். எனினும், இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லையென அவர் கூறினார்.

நேற்றைய சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர் பஸன் சமரசிங்கவின் சடலம் பிரேதப் பிரசோதனைக்காக மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர் குருநாகல், பொத்துஹர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

‘கிழக்குப் பல்கலைக்கழகம் மரணவீடு’ என முன்பே அச்சம் வெளியிட்டிருந்த தாயார்

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பெரும்பான்மை இன மாணவர் ஒருவரை அனுமதித்துவிட்டுத் திரும்பியிருந்த அவரின் தாயார், மரணவீட்டில் தனது பிள்ளையை விட்டுவந்ததைப் போன்றிருப்பதாக அண்மையில் பி.பி.சி.க்கு கூறியிருந்தார்.

இவ்வாறு அவர் கூறி, ஒரு மாத காலத்துக்குள்ளேயே கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மை இன மாணவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

“எனது பிள்ளையை மரண வீடொன்றில் விட்டுவிட்டு வந்ததாகவே நான் நினைக்கிறேன். இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு எனது பிள்ளையைப் படிப்பித்தது இவ்வாறானதொரு இடத்தில், பெரும் அச்சத்துக்கு மத்தியில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு அல்ல” என கிழக்குப் பல்பலைக்கழக மருத்துவ பீடத்தில் தனது மகனை அனுமதிக்கச் சென்றிருந்த அந்தத் தாயார் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தனது கவலையைத் தெரியப்படுத்தியிருந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து அவர்களது பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இதுதவிரவும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய கடிதமொன்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அண்மையில் அனுப்பிவைத்திருந்தனர்.

ஜாதிக ஹெல உறுமய

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் பயிலும் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தொல்லைக்களுக்கு உள்ளாவதாக ஜாதிக ஹெல உறுமய நேற்று வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தது.

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் சிங்கள மாணவர்கள் மாத்திரமே இவ்வாறான பிரச்சினைக்கு முகம்கொடுப்பதாகவும், அங்கிருக்கும் தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

அந்தப் பல்கலைக்கழகங்களிலுள்ள சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தாக்கப்படுவதாகவும், அவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட மாணவர்களை ஜாதிக ஹெல உறுமய அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மாணவர்கள்

எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் எந்த இனத்தைச் சேர்ந்த மாணவரும் அனுமதிக்கப்படலாம் என அரசாங்கத் தரப்பில் நியாயம் கூறப்படுகின்றபோதும், தற்போது வடக்கு, கிழக்கில் நிலவும் சூழ்நிலையில், சிங்கள மாணவர்களை அங்கு அனுமதிப்பதானது தமது பல்கலைக்கழகங்களை ஆக்கிரமிக்கும் அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாமென தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Thursday 21 August 2008

கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர் சுட்டுக் கொலை

கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவரான 27 வயதுடைய எம்.பி.எஸ் சமரசிங்க இன்றிரவு ஒன்பது மணியளவில் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


இவர் குருநாகல் பொத்துஹர என்ற பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள மாணவராவார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவி ஒருவர் ராக்கிங் செய்யப்பட்ட சம்பவத்துடன் இப்படுகொலைக்குத் தொடர்புள்ளதா என காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓகஸ்ட் 19ஆம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கலாசாரப்பிரிவினரால் ஒரு எச்சரிக்கைத் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதில் பெண்களுக்கெதிரானதும் கலாசாரத்திற்கு எதிரானதுமான இழிவான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நவடிக்கை தம்மால் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


கொல்லப்பட்ட மாணவன் கடந்த மூன்று வருடங்களாக 16 சிங்கள மாணவர்களுடன் கற்கையில் ஈடுபட்டு வருபவர் என்று பல்கலைக்கழக வட்டாரம் தெரிவிக்கிறது.

2007 -2008 ஆம் ஆண்டுகளில் 181 சிங்கள மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் முக்கிய ஆயுத தொழிற்சாலைக்கு அருகே இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதல்

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வெகு அருகிலிருக்கும் நாட்டின் முக்கிய ஆயுத தொழிற்சாலைக்கு அருகே இடம் பெற்ற இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 63 பேராவது கொல்லப்பட்டிருப்பதாக பாகிஸ்தானிய போலீசார் கூறுகிறார்கள். இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

வாஹ் நகரிலுள்ள இந்த ஆயுதத் தொழிற்சாலையின் முக்கிய வாயிலுக்கு எதிரே ஒரு தற்கொலை குண்டுதாரி தன்னைத் தானே வெடிக்க வைத்துக் கொண்டார் எனவும் பாகிஸ்தானிய போலீசார் தெரிவிக்கிறார்கள்.

மற்றொரு வாயிலுக்கு அருகே இருந்த சந்தைப் பகுதியில் இரண்டாவது தற்கொலை குண்டுதாரியின் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தானிலுள்ள தாலிபான்களுக்காக பேசவல்ல ஒருவர் அந்நாட்டின் பழங்ககுடிகள் வாழும் பகுதிகளில் தமக்கு எதிராக இராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாகத்தான் இன்றைய இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்று கூறியுள்ளார்.

2287ஆம் ஆண்டில் வானில் இரண்டு சந்திரன்கள் தோன்றும்!!

செவ்வாய்க் கிரகமானது எதிர்வரும் 27ஆம் திகதி பூமிக்கு மிக நெருங்கி வரவுள்ளதாகவும் அது பூமியிலிருந்து பார்க்கும்போது இரண்டாவது சந்திரன் போன்று தோற்றமளிக்கும் எனவும் அராபிய பத்திரிகைகள் அண்மையில் அறிக்கையிட்டிருந்தன. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வானிலை நிபுணர்கள் மேற்படி எதிர்வு கூறல்அறிக்கைகளை நிராகரித்துள்ளனர்.

எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க் கிரகமானது வானத்தில் பெரிய முழுநிலவு போன்று தோற்றமளிக்கும் எனவும் அதனால்,வானத்தில் இரு சந்திரன்களைப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் எனவும் இணையத் தளங்கள் பலவற்றிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


செவ்வாயானது ஒவ்வொரு 780 நாட்களுக்கும் ஒரு தடவை சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் பயணிக்கையில் பிரகாசமான தோற்றத்தை வெளிப்படுத்துவது வழமையாகவுள்ளது என எமிரேட்ஸ் வானிலை சபையின் இஸ்லாமிய சந்திர அவதான திட்ட தலைவர் மொஹமட் சொயுகத் அவதா தெரிவித்தார்.

மேற்படி செவ்வாய்க் கிரகமானது இவ்வருடம் மனித வெற்றுக் கண்ணுக்கு முழு நிலவு அளவு தோன்றுவது சாத்தியமில்லை எனக்குறிப்பிட்ட அவர்,2287ஆம் ஆண்டில் அத்தகைய இரு சந்திரத் தோற்றப்பாடு வானில் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறினார்.

வவுணதீவில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இளைஞர் படுகொலை

இனந்தெரியாத ஆயுததாரிகள் ஐவர் தமிழ் இளைஞர் ஒருவரை பலவந்தமாகத் தூக்கிச் சென்று படுகொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்றுள்ளது. விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த சீருடையையே ஆயுததாரிகள் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்டவர் 48 வயதான அழகதுரை தர்மலிங்கம் என்ற விவசாயி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். கொல்லப்பட்டவரின் கையிலிருந்த இரண்டு பவுண் பெறுமதியான தங்க மோதிரத்தையும் கொலையாளிகள் அபகரித்துச் சென்றுள்ளனர்.

சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

புல்மோட்டையில் இருவர் கொலை

இனந்தெரியாத ஆயுதபாணிகளால் இரண்டு முஸ்லிம்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை இரவு ஏழரை மணியளவில் திருகோணமலை புல்மோட்டை வீதியிலுள்ள நிலாவெளியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மேலும் நான்கு முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளைத் தொடர்கின்றனர்

மட்டக்களப்பில் ஒருவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு வவுணகுளம் கந்தன்குடா பகுதியைச் சேர்ந்த ஒருவரை இனந்தெரியாதோர் சுட்டுப் படுகொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற இனந்தெரியாத நபர்கள், கொலையுண்டவரை வெளியே அழைத்து பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அழகுதுரை தர்மலிங்கம் என்ற 48 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் அமில மழை பெய்யக்கூடிய சாத்தியம் - பேராசிரியர் ஓ.ஈ.இளப்பெரும

எதிர்காலத்தில் இலங்கையின் சில பகுதிகளில் அபாயகரமான அமில மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஓ.ஈ. இளப்பெரும எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைய வருடங்களாக இலங்கையில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றங்களினால் அமில மழை பெய்யக்கூடிய அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

குறிப்பாக அனுராதபுரம், மஹாஇலுப்பள்ளம் மற்றும் ஊவா பகுதிகளில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழைக் காலத்தில் அமில மழை பெய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அமில மழை காரணமாக ஆறுகள், குளங்கள், தாவரங்கள் மற்றும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் தீங்கு ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விவசாயத்துறைக்கு அமில மழை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமில மழை தொடர்பாக இலங்கையில் எவ்வித முறையான ஆய்வுகளும் இதுவரையில் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் தாயும், மகனும் கடத்திச் செல்லப்பட்டனர்

அம்பாறை, கல்முனையில் தாயும் மகனும் வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை வீதியிலுள்ள இவர்களது வீட்டிற்கு நேற்று அதிகாலை 1:30 அளவில் சென்ற ஆயுத நபர்கள் இவர்களைக் கடத்திச் சென்றனர்.

40 அகவையுடைய நவரத்தினம் மஞ்சுளா, உயர்தரப் பரீட்சையில் தோற்றும் அவரது மகனான 18 அகவையுடைய நவரத்தினம் கலைவாணன் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடத்திச் செல்லப்பட்ட வீட்டில் இருந்து 75 மீற்றர் தொலைவில் துணைப்படைக் குழு ஒன்றின் முகாம் அமைந்திருக்கின்றது.

nitharsanam: கல்முனையில் சார்க் அமைப்பின் தலைவரின் அம்பாறை இணைப்பாளரால் தாயும் மகனும் கடத்தல்!!

பருவப் பெயர்ச்சி மழையால் வடக்கை நோக்கிய இராணுவ முன்நகர்வு தடைப்படும் சாத்தியம்- அரசியல் ஆய்வாளர்

வடக்கைக் கைப்பற்றும் நோக்கில் இலங்கை அரசாங்கப் படைகள் முன்னெடுத்திருக்கும் இராணுவ முன்நகர்வுகள் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆரம்பமாகும் பருவப்பெயர்ச்சி மழையால் தடைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர், முன்னாள் கேணல் சுசந்த செனவிரட்ன ஏ.பி.செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது முன்னெடுத்திருக்கும் இராணுவ முன்நகர்வானது கிழக்கைப் போன்று இலகுவானதாக அமைந்திருக்காதெனவும், கூடுதலான நிலக்கண்ணிவெடிகள் புதைத்து வைத்திருக்கக் கூடும் என்பதால் சிக்கல் நிறைந்த முன்நகர்வாக அமையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அண்மைய மோதல்களில் விடுதலைப் புலிகள் உடனடியாக பின்வாங்கிச் செல்கின்றமை, இராணுவத்தினரைக் கவரும் நிகழ்ச்சியாக அமைந்திருக்கலாம் என ஏ.பி.செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கும் செனவிரட்ன, காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் விடுதலைப் புலிகள் இன்னமும் தம்வசம் ஆட்லறி மற்றும் கனரக ஆயுதங்களை வைத்திருப்பதால், கடுமையான பதில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இந்த மௌனம் படையினருக்கு நல்லதாக அமையாது” என செனவிரட்ன கூறியுள்ளார்.

அண்மைய இராணுவ முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளைப் பலவீனமடையச் செய்துள்ளபோதும், இனப்பிரச்சினை மோதல்கள் மூலம் தீர்க்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

“உடனடியாகவோ அல்லது ஆறுதலாகவோ பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றுக்கு நாங்கள் செல்லவேண்டியே இருக்கும்” என அரசியல் ஆய்வாளர், முன்னாள் கேணல் சுசந்த செனவிரட்ன ஏ.பி.செய்திச் சேவைக்கு மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் வடமேல் பகுதியில் எட்டு மைல் விவசாய நிலங்களை அண்மித்திருப்பதால் அவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ முன்நகர்வுகளை மெதுவாக்கியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்திருப்பதாக ஏ.பி.செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிய இராணுவ முன்நகர்வை மேற்கொள்வதற்கு இராணுவத்தினர் இரவுவேளைகளில் போராடவேண்டி இருப்பதாகவும், இரவு வேளைகளிலேயே விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளைக் கைப்பற்றி அவற்றை ஒழிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரிகேடியர் கூறியுள்ளார்.

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்படுகின்றனர் - மன்னிப்புச் சபை

இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக, வன்னியில் இடம்பெயர்ந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் உணவுப்பற்றாக்குறை மற்றும் கூடாரங்களின்றி பெரும் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இடம்பெயர்ந்துள்ள பெண்களும், யுவதிகளும் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகிவருவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்கும், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் பகுதிகளுக்கும் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிறியளவு நம்பகரமான தகவல்கள் அங்கிருந்து கிடைத்துள்ளதாகவும் மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில், மோதலில் ஈடுபட்டுள்ள இருசாராரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ள மக்களை அரசாங்கம் தற்காலிக கூடாரங்களிலும், இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கவைத்துள்ளதாகவும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
"மன்னார் மாவட்டத்திலுள்ள களிமோட்டை முகாமில் 200 குடும்பங்கள் தங்கியிருப்பதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில், பாடசாலைக்குச் செல்வோரைத் தவிர வேறெவரும் படையினரின் விசேட அனுமதியின்றி வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை இருசாராரும் நீக்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ள மன்னிப்புச் சபை, இடம்பெயர்ந்த மக்கள் மோதல்களுக்கு மத்தியில் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
" இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்குவதற்கான 3 பெரிய தங்குமிடங்கள் அமைக்கப்பட வேண்டும். அத்துடன், ஓமந்தை சோதனைச் சாவடியூடாக மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும்" எனவும் மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14,000 குடும்பங்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாகவும், அரசாங்க தரவுகளின்படி, ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை மொத்தமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை 150,000 முதல் 160,000 வரை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

T.C.C ஐ தடைசெய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை கோரிக்கை

ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வரும் T.C.C என்ற தமிழ்க் கோடிநேசன் கமிட்டியை தடைசெய்யுமாறு இலங்கை அரசாங்கம் நேற்று(20) ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழர் புனர்வாழ்வு கழகம் தடைசெய்யப்பட்ட பின்னர், பிரான்சில் உள்ள இந்த ரி.சீ.சீ என்ற விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்பு அதிகளவான நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.


இந்த அமைப்பை தடைசெய்யுமாறு கோரும் மகஜரை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தமிழ் கோடிநேசன் கமிட்டி கடந்த இரண்டு மாதங்களில் மூன்று மில்லியன் பிராங் நிதியைச் சேகரித்துள்ளது.

விடுதலைப்புலிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்த நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பணாங்கொட இராணுவ முகாமில் படைச் சிப்பாய் தற்கொலை

பாணாங்கொட இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (19) இடம்பெற்றுள்ளது. மாத்தளையைச் சேர்ந்த ஜயவீர என்பரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகாமுக்குள் மூன்று சிப்பாய்கள் காவல் கடமையை பொறுப்பேற்றிருந்தனர்.


மூன்று கட்டங்களாக இவர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களில் தற்கொலை செய்து கொண்ட லான்ஸ் கேப்ரல் இரவு 10 மணிக்கு தனது காவல் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.


இதனடிப்படையில் இவர் காவல் கடமையை பொறுபேற்றுக் கொண்டதும் ஏனைய இருவரும் ஓய்வெடுக்க சென்றுள்ளனர். சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் துப்பாக்கி சத்தம் கேட்டதும் இவர்கள் சென்று பார்த்த போது லான்ஸ் கேப்ரல் துப்பாக்கி காயங்களுடன் கீழே விழுந்து கிடந்துள்ளார்.


துப்பாக்கிச் சூட்டில் அவரது மார்பு பகுதியிலும், தலையிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருந்ததாக ஹோமாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவற்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Wednesday 20 August 2008

ஐவரைத் தடுத்து வைக்க மகிந்த சிறப்பு உத்தரவு

கொழும்பு துறைமுக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஐவரை மூன்று மாதங்களுக்கு தடுத்து வைப்பதற்கான சிறப்பு அதிகாரத்தை, சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார்.

இதன்மூலம் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாது, நீதிமன்ற விசாரணையின்றி தடுத்து வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா முப்படைகளின் தளபதி, மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, ஊடகவியாலாளர் திஸ்ஸநாயத்தை அடுத்த மாதம் 5ஆம் நாள்வரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஒருவர் கொலை

யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் 48 வயதான குட்டியன் சிவபாதம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை மாவடியில் உள்ள இவரின் வீட்டுக்கு சென்ற இனம் தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டபின் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து மரண விசாரணை மேற்கொண்ட பருத்தித்துறை நீதிமன்ற மேலதிக நீதிவான், சடலத்தை மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

மங்களம் மாஸ்டரின் வாகனம் மோதி ஊர்காவற்படைச்சிப்பாய் மரணம்

tmvplogo1.jpgவடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ரி.எம்.வி.பியின் மங்களம் மாஸ்டர் என அழைக்கப்படும் அய்யாத்துரை கதிர்காமத்தம்பி பயணித்த வாகனம் மோதியதில் ஊர்காவற்படைச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மங்களம் மாஸ்டர் பயணித்த ஜீப் வண்டி ஊர்காவல் படைச்சிப்பாய் சென்ற மோட்டார் சைக்களில் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜீப் வண்டியின் சாரதியை கைதுசெய்துள்ளதுடன் வண்டியை கைப்பற்றியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய மோதல்களில் நால்வர் பலி, 31 பேர் காயம் - படைத்தரப்பு

விடுதலைப் புலிகளுடனான நேற்றைய மோதல்களில் தமது தரப்பில் நால்வர் கொல்லப்பட்டு, மேலும் 30ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு, மணலாறு, ஆன்டான்குளத்தில் படைத் தரப்பில் ஒருரவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 6 படையினர் காயமடைந்துள்ளனர்.

மாந்தை கிழக்கில் துணுக்காய், மல்லாவி, மணியகுளம் பகுதியில் மூன்று படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் 23 படையினர் காயமடைந்துள்ளனர்.

யாழ் முகமாலை, வவுனியா பாலமோட்டையில் இரண்டு படையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த தகவல்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சே அறிவித்துள்ளது.

நேற்றைய மோதல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

பி.பி.சி செய்தியாளர் T.M.V.P குழுவால் மிரட்டப்பட்டதற்கு கண்டனம்

BBC உலக சேவையில் சிங்கள மொழியிலான சந்தேசிய ஒலிபரப்பின் செய்தியாளர் T.M.V.P துணைப்படைக் குழுவால் மிரப்பட்டதற்கு, கொழும்பை தளமாகக் கொண்ட ஐந்து முக்கிய ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சந்தேசிய ஒலிபரப்பின் பொலநறுவை செய்தியாளர் தக்சிலா ஜெயசேன (Thakshila Jayasena) பொலநறுவையில் தேர்தலில் போட்டியிடும் துணைப்படைக் குழுவின் மங்களம் மாஸ்ரர் என்பவரது அடியாட்களால் நேற்று முன்தினம் மிரட்டப்பட்டிருந்தார்.

பொலநறுவை மன்னம்பிட்டியவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பேரணி பற்றிய செய்தியை சேகரித்துவிட்டு பொலநறுவை நகர் நோக்கிச் சென்றபோது இவர் மிரட்டப்பட்டிருந்தார்.

வந்தாறு மூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் சிங்களத்தின் காடைத்தனம்!

நேற்றைய தினம் கிழக்குப் பல்கலைக்கழக முதலாம் வருட முகாமைத்துவ தழிழ் மாணவி ஒருவருக்கு இறுதி ஆண்டு சிங்கள மாணவியால் பகிடிவதை எனும் பெயரில் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகாமைத்துவக்கற்கை நெறிக்குத் தெரிவான முதலாம் ஆண்டு தழிழ் மாணவியை மேடையில் ஏற்றிய இறுதியாண்டு சிங்கள மாணவி சக ஆண்டு சிங்கள ஆண் மாணவகர் கை கொட்டி சிரிக்க குறித்த மாணவியின் உள்ளாடையினை கழற்றும் படி வற்புறுத்தி கழற்ற வைக்கப்பட்டுள்ளது. பீதியின் காரணம் பணிந்து குறித்த மாணவி அந்த துன்புறுத்தலின் பின்னர் மனநோயாளிக மாறியுள்ளார். மேலும் தொடர்ந்து கற்கை நெறியினை மேற்கொள்ள முடியாத அளவுக்கு மனநோயாளியாக மாறியுள்ளார்.

குறித்த காடைத்தனத்தினை மேற்கொண்ட சிங்கள மாணவி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவரின் உறவுக்காரி என்பதால் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக வாய் பேசா மௌனியாக இருப்பதாகத் தெரியவருகின்றது

இவ்வாண்டு சிங்கள மாணவர்களின் ஆதிக்கம் பல்கலைக்கழகத்தில் அதிகரித்துள்ளது மாத்திரமல்லாமல் தமிழ் மாணவ மாணவியரின் கல்விக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளும் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படுவதாக தெரியவருகின்றது.

மேலும், சிங்கள மாணவர்களின் வழிபாட்டிற்காக ஓர் பௌத்த விகாரையும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. மேலும் சிங்கள மாணவரின் வேண்டுகொழுக்கு இணக்க தங்களது தங்குமிட பொறுப்பதிகாரியாக ஓர் சிங்களவர் நியமிக்கபடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

நான்கு இலட்சம் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவி செய்ய ஆறரைக் கோடி தமிழர்களால் முடியவில்லை - டி.இராஜேந்திரன்

தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியவில்லை என்றும் மத்தியில் 40 தமிழக எம்பிக்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறினார்.

அக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நடந்துது. அதில் டி.ராஜேந்தர் பேசியதாவது:

லட்சிய திமுக தொடங்கி 5வது ஆண்டில் அஞ்சாமல் நடைபோடுகிறோம். இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் திமுகவில் இணைந்தேன். தமிழன் என்ற உணர்வு என்னிடம் உள்ளதால் இதை நான் செய்தேன்.

கன்னடர்களுக்கு இருக்கும் இன உணர்வு தமிழர்களுக்கு இல்லை. குலேசன் படத்தை கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்றால் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டால்தான் விடுவோம் என்று கூறினார்கள்.

அதனால் அவர் மன்னிப்பு கேட்டு படத்தை அங்கு வெளியிட்டுள்ளார். ஒகேனக்கல் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட நடிகர்கள் உண்ணாவிரதத்தில்இ ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தியது தமிழர்களின் குற்றம்.

இலங்கையின் வட மாநிலங்கள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்குள்ள 4 லட்சம் மக்களில் 2 லட்சம் பேர் அகதிகள். அவர்களுக்கு சாப்பாடு மருந்து எதுவும் இல்லை. செஞ்சிலுவை சங்கம் மூலம் மருந்தையும் அங்கு கொண்டு போக முடியவில்லை. மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த 40 எம்பிக்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை.

மற்ற மாநிலத்தினர் இலங்கையில் இருந்து அவர்கள் தாக்கப்பட்டால் சும்மா விடுவார்களா?. ஆறரை கோடி தமிழர்களால் 4 லட்சம் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்க உணர்வில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்

கொட்டாஞ்சேனையில் காவற்துறை சிப்பாயின் கழுத்து அறுப்பு

கொட்டாஞ்சேனை ஜெம்பட்டா வீதி காவல்துறை சிப்பாய் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

24 வயதான இந்திக பண்டார என்ற காவற்துறை சிப்பாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

புலிகளுக்கு உதவியதாக நீதிமன்றத்தினால் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டிருந்த அச்சகம் ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அச்சகத்தின் உரிமையாளர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசாங்கமே பதிலளிக்க வேண்டும்- மனோ கணேசன்

கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையில் குறைந்து கூடும் நிலைமை காணப்பட்டாலும் இதுவரை காணாமல் போனவர்கள் குறித்து அரசாங்கமே பதில்கூறவேண்டும் என மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

“கடந்த வாரங்களில் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறைவாகக் கிடைத்துள்ளது என்பதற்காக கடத்தல்கள் குறைவடைந்து விட்டதாகக் கூறிவிட முடியாது. நேற்றுக் கூட இரண்டு கடத்தல் சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்திருக்கின்றன” என மனோ கணேசன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

“கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை கூடிக் குறைந்தாலும், இதுவரை கடத்தப்பட்டவர்கள் குறித்து யார் பதிலளிப்பது” என அவர் கேள்வியெழுப்பினார்.

இந்த வருடத்தில் இதுவரை 104 பேர் காணாமல் போயிருப்பதாக மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் சுமார் 200 பேர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லையெனவும் மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

“கடத்தல் சம்பவங்கள் குறைந்துவிட்டன, பிரச்சினை தீர்ந்துவிட்டது எனக் கூறி அரசாங்கம் தப்பிக்கொள்ள முடியாது. காணாமல் போனவர்கள் குறித்து அரசாங்கமே பதில் சொல்லவேண்டும்” என மனோ கணேசன் கூறினார்.

கடத்தல் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன என்பதை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனக் குறிப்பிட்ட மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பட்டாளர், அண்மைய பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக கடத்தல்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் இதனைவிட கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக கடத்தல் சம்பவங்கள் குறைவடைந்து சென்றிருப்பதாகத் தெரிவித்திருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் ரஞ்சித் குணசேகர, பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கைகளாலேயே கடத்தல் சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் கூறினார்.

கடற்படையால் இழுத்துச் செல்லப்பட்ட கணவர் வெள்ளைவான் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்--ஒரு அதிர்ச்சி ரிப்போட்

கொழும்பு புதுச்செட்டித்தெரு 70/27ஆம் இலக்கத்தில் வசித்து வந்த யாழ்.நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராஜா பாலகுமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு கடற்படையினரால் இழுத்துச் செல்லப்பட்டு பின் இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் சென்ற தமிழ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார் என அவரது மனைவியான ரோகினி பாலகுமார் முறைப்பாடு செய்துள்ளார்.



வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த முறைப்பாட்டில் கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வீட்டுச் சோதனைக்காக பிரவேசித்த கடற்படைச் சிப்பாய்கள் தனது கணவரை தாக்கி இழுத்துச்சென்று இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் வந்திருந்த தமிழ்க் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.



அவர்களுடன் காவற்துறைக் கான்ஸ்டபிள் ஒருவர் இருந்தார் எனவும் ரோகினி தெரிவித்தார். ஏற்கனவே இதே விலாசத்திலிருந்த மார்க்கண்டு வடிவானந்தன் கடந்த 2006ஆம் ஆண்டு 24ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.



இவரை விடுவிப்பதற்கு நிறுவன உரிமையாளர் 35 லட்சம் பணம் கப்பமாகச் செலுத்தியபோதும் அவர் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என்றும், உரிமையாளர் தற்போது தமிழ் நாட்டில் தங்கியிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பிட்ட தமிழ்க்குழு பாலகுமாரை முன்னர் ஒருமுறை எச்சரித்துச் சென்றது எனவும், அதன் பிறகே கடற்படையினரின் உதவியுடன் தமிழ்க் குழுவால் தனது கணவர் கடத்தப்பட்டுள்ளார் எனவும் ரோகினி தெரிவித்தார்.


இதேவேளை, கடந்த 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை வத்தளை, ஹூணுப்பிட்டிய, சிறிஜயந்தி மாவத்தையில் வசிக்கும் கிறீஸ்தோதிரம் பிரான்சிஸ் சேர்ச்சில் என்ற 49 வயதுடைய தமிழர், இரவு 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்துத் தாக்குதலுக்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டு பின்னர் கடத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.



இவர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அதேவேளை இவர் வெளிநாட்டில் தொழில் புரிந்துகொண்டிருந்தபோது 1997இல் ஏற்பட்ட ஒரு வாகன விபத்தில் தனது ஒரு காலை இழந்தவர் ஆவார்.


இச்சம்பவம் தொடர்பாக சேர்ச்சிலின் மனைவி மக்கள் கண்காணிப்புக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன்,


இச்சம்பவம் தொடர்பாக கிரிபத்கொட காவற்துறை நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு குறித்த மேல் நடவடிக்கைகளுக்காக மக்கள் கண்காணிப்புக்குழுவின் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனக் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர் அனுமதி; பெற்றோர் எதிர்ப்புப் போராட்டம்

தமது விருப்பத் தேர்வுக்கு மாறாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலுமாறு தென்னிலங்கை மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருப்பதை எதிர்த்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், தமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாணவர்கள் 306 பேருக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடிதம் மூலம் அறிவித்திருந்தது. இவர்களில் 23 பேர் மருத்துவபீடத்திற்கும், 80 பேர் முகாமைத்துவ பீடத்திற்கும், 20 பேர் சட்ட பீடத்திற்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய வசதிகளைக் கருத்திற்கொண்டு, தமது பிள்ளைகளை யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அனுப்பமுடியாது என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

"யாழ்ப்பாணத்துக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவிப்பது இன வேறுபாட்டின் அடிப்படையில் அல்ல. தமது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அதிகம் கவலைப்படுவதே இதற்குக் காரணம்" என பல்கலைக்கழகங்கங்களுக்கிடையிலான மாணவர் பேரவையின் ஏற்பாட்டாளர் உதுல் ப்ரேமரத்ன தெரிவித்திருக்கிறார்.

தமது விருப்பமின்மையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உரிய அதிகாரிகளுக்கும் பலதடவைகள் வெளிப்படுத்தியுள்ளபோதிலும், அவர்கள் உரிய பதில் எதனையும் வழங்காதிருப்பதாகவும் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாட வருமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்தபோதிலும், கலந்துரையாடலில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

"முதல் ஒரு தவணைக்கு மாத்திரம் மட்டக்களப்பு சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு செல்லுமாறும், பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடருமாறும் குறிப்பிடப்பட்ட உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுமாறு எம்மிடம் ஆணைக்குழு கேட்டது. இருப்பினும் நாம் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட விரும்பவில்லை" என யாழ் மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள பாணந்துறை சிறீ சுமங்கல வித்தியாலயத்தைச் சேர்ந்த உதாரா ரணசிங்க எனும் மாணவி தெரிவித்துள்ளார்.

இதேபோன்றே, யாழ் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள ஏனைய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும், முதல் ஒரு தவணையை மாத்திரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிலுமாறும், பின்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடருமாறும் குறிப்பிடப்பட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு வேண்டப்பட்டதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

"இந்தப் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக 4 தடவைகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வந்திருக்கிறேன்" எனத் தெரிவிக்கும் மாத்தளையைச் சேர்ந்த மலானி ஜெயசிங்க எனும் தாயொருவர், ஏன் இந்த அதிகாரிகள் தனது பிள்ளையை யாழ். பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்துள்ளனர் எனவும் கேள்வியெழுப்பினார்.

"யாழ்ப்பாணத்தை எப்போது சென்றடைவோம் என்பதே எமக்குத் தெரியாது. ஏ-9 பாதை மூடப்பட்டுள்ள நிலையில், நாம் கடல்மார்க்கமாகவே அங்கு செல்லவேண்டும். திருகோணமலைக்குச் சென்று அங்கு கப்பலுக்காகக் காத்திருந்து, 4 நாட்களின் பின்னரே யாழ்ப்பாணத்தை அடையமுடியும்" என்றும் அவர் கூறுகிறார்.

இதேவேளை, அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள, முஸ்லிம் மாணவர்களை இணைப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு 1,203 மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவதாகவும், இவர்களில் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் 261 பேர் அடங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

"மூவின மாணவர்களும் கலந்து கற்பது நல்ல நடவடிக்கை. ஆனால், நாட்டில் அவ்வாறான சூழ்நிலை இல்லை. வடக்கில் யுத்தம் இடம்பெறுகிறது. இவ்வாறான நிலையில் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் எவ்வாறு யாழ்ப்பாணம் சென்று கல்வி கற்க முடியும்" என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

"வடக்கு, கிழக்கில் மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய நல்ல சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன், ஏ9 பிரதான வீதி திறக்கப்படவேண்டும். இவற்றை அரசாங்கம் செய்தால் யாழ்.பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் கல்வி கற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதில் அரசாங்கமும் உயர் கல்வி அமைச்சும் உடனடி கவனம் செலுத்தவேண்டும்" எனவும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, உயர்கல்வி அமைச்சுக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது எனவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கே இவற்றைத் தீர்மானிக்கும் முழுஅதிகாரமும் இருப்பதாகவும் கூறினார்.

"சிங்கள மாணவர்களை யாழ். பல்கலைக்கழகத்துக்கு அனுமதித்திருப்பது நியாயமற்றது. தற்போதுள்ள சூழ்நிலையில் அவர்களால் அங்கு கல்வி கற்க முடியாது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏன் இப்படி நடந்துகொள்கிறது என எனக்குத் தெரியாது" என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் சிங்கள மாணவர்கள் அனுமதி

இதற்கிடையில், கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மாணவர்கள்; சிலரும், நேற்று செவ்வாய்க்கிழமை தாம் எதிர்நோக்கும் உணவு மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் குறிப்பிடப்பட்ட கடிதம் ஒன்றினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கையளித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் சிங்கள மாணவர்களை அனுமதிப்பது எனும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கமைய கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இந்த வருடம் 41 சதவீதமான சிங்கள மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 358 தமிழ் மாணவர்களும், 306 சிங்கள மாணவர்களும், 79 முஸ்லிம் மாணவர்களுமாக மொத்தம் 743 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும், பாதுகாப்பான சூழலில் கிழக்குப் பல்கலைக்கழத்தில் தம்மால் கல்வியைத் தொடர முடியாதென சிங்கள மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், பெற்றோரும் இதற்கு தமது எதிர்ப்பைத் வெளிப்படுத்துகின்றனர்.

"எனது பிள்ளையை மரண வீடொன்றில் விட்டுவிட்டு வந்ததாகவே நான் நினைக்கிறேன். இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு எனது பிள்ளையைப் படிப்பித்தது இவ்வாறானதொரு இடத்தில், பெரும் அச்சத்துக்கு மத்தியில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு அல்ல" என கிழக்குப் பல்பலைக்கழக மருத்துவ பீடத்தில் தனது மகனை அனுமதிக்கச் சென்றிருந்த தாயொருவர் பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக சிங்கள மாணவர்கள் அனுமதி

இதேவேளை, முதன்முறையாக ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சிங்கள மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக துணைவேந்தர் கலாநிதி குசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

2008/2009 ஆம் கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களில் நாற்பது வீதமான சிங்கள மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பி.பி.சி. செய்திச்சேவைக்கு அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கல்வியாண்டில் 361 முஸ்லிம் மாணவர்களுக்கும், 140 சிங்கள மாணவர்களுக்கும், 17 தமிழ் மாணவர்களுக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

"தேசிய பல்கலைக்கழகங்கள் தனிப்பட்ட இனத்துக்காக ஆரம்பிக்கப்படுவது பொருத்தமானதல்ல. அந்த வகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதில் சிந்திப்பதற்கு எதுவுமேயில்லை" எனவும் தென்கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி குசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சிங்கள மாணவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பது பிரச்சினைக்குரியதொன்றல்ல எனவும், சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதற்கும், முஸ்லிம் மாணவர்கள் சிங்கள அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் இது நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொணடுக்கும் எனவும் அவர் கூறினார்.

இருப்பினும், கிழக்கு மற்றும் யாழ். பல்கலைக்கழகங்களுக்கு சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிசீலனை செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உரிமைக்காகவும் வறுமைக்காகவும் போராடும் இளைஞர்களை அரசாங்கம் அழித்தொழிக்கிறது – விக்கிரமபாகு

vickramabahu.jpgவடக்கில் உரிமைக்காகப் போராடும் தமிழ் இளைஞர்களையும் தெற்கில் வேலை வாய்ப்பின்மை, வறுமை என்பவற்றை எதிர்த்துப் போராடும் இளைஞர்களையும் இராணுவபலத்தின் ஊடாக அழித்தொழிக்கும் இரண்டு வகையான யுத்தங்களையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இன்றைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என இடதுசாரிமுன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.


சப்ரகமுவ மாகாண சபை தேர்தலில் கேகாலை மாவட்ட தலைமை வேட்பாளர் பிறேம்குலதுங்கவை ஆதரித்து எட்டியாந்தோட்டை சந்தை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தொடர்ந்து உரையாற்றுகையில்,


இன்று இந்த அரசாங்கம் இரண்டு முனைகளில் யுத்தத்தை நடத்துகின்றது. ஒரு புறம் வடபகுதியில் தமது நிலத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் இளைஞர்களை இராணுவத்தின் மூலம் அழிக்க முயல்கின்றது. மறுபக்கத்தில் வாழ்க்கைச் செலவு உயர்வு,


வேலையின்மை போன்றவற்றிற்கு எதிராகப் போராடும் தென் இலங்கை இளைஞர்களை அவசர காலச் சட்டத்தின் துணையுடன் ஒடுக்க முயல்கிறது. இத்தகைய சூழ்நிலையில் வடக்கில் தமது உரிமைக்காக போராடும் இளைஞர்களுக்காகவும் தெற்கில் பொருளாதார பிரச்சினை, வேலைவாய்ப்பிற்காக போராடும் இளைஞர்களுக்காகவும் குரல் கொடுப்பது தமது கடமையாகும்.



ஜே.வி.பி. அவசர காலச் சட்டத்திற்கு ஆதரவளித்து விட்டு இளைஞர்களின் போராட்டத்தை ஆதரிப்பதாக கூறுவது ஒரு ஏமாற்று நாடகமாகும்.


கடந்த ஜூலை 10 ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடக்கி வைத்த ஜே.வி.பி. அதை இடைநடுவில் கைவிட்டது என்பதே உண்மை நிலையாகும். ஆனால், தாங்கள் அந்த போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்ததாகவும், இந்தப் போராட்டத்துக்கு மலையக தோட்டத் தொழிலாளர் மற்றும் வடக்கு, கிழக்கு தொழிலாளர்கள் முழு ஆதரவை தெரிவித்து இருந்தனர் எனவும் கூறினார்.



இன்றும் ஜே.வி.பி. எல்லா தேசிய சக்திகளையும் இணைத்து போராட்டம் நடத்த வக்கற்றே நிற்கிறது. பல்வேறு நிலைகளில் இந்த அரசாங்கத்தின் பொய் வேஷம் கலைந்து வருகிறது. இந்த நாட்டு மக்கள் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை அப்புறப்படுத்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுபான்மையினமா – காவற்துறை அதிகாரியின் குடும்பமும் கைது செய்யப்படலாம்

கொழும்பு வலய நடவடிக்கைப் பிரிவு காவற்துறை அதிகாரியின் மனைவியும் குடும்பத்தினரும் கண்டி காவற்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.


அக்கரைப்பற்றிலிருந்து கண்டி ஊடாகக் கொழும்பு நோக்கி பயணிகள் வாகனமொன்றில் பயங்கரவாதிகள் செல்வதாகக் கூறி கண்டி தலைமையகக் காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர்கள் அந்தப் பயணிகள் வாகனத்தை மறித்துச் சோதனையிட்டனர். 12 முஸ்லிம்களும் 3 தமிழர்களும் அந்த வாகனத்தில் இருந்துள்ளனர்.


அதிகாலை 1.30க்கு வானை வழிமறித்த காவற்துறையினர் அவர்களை கண்டி காவற்துறை நிலையத்திற்கு கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த வானில் கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பிரிவுக்குட்பட்ட, கொழும்பு வலய நடவடிக்கைப் பிரிவு காவற்துறை அதிகாரியின் மனைவியும் குடும்பத்தினருமே பயணம் செய்திருந்தனர்.

காவற்துறை நிலையத்தில் மேற்படி காவற்துறை அதிகாரியின் மனைவி தன்னை அடையாளப்படுத்தியதுடன் தனது கணவரின் பதவி நிலையையும் தெரியப்படுத்தினார்.


எனினும் காவற்துறையினர் அவர்களை விடுவிக்கவில்லை. கண்டி பிரதிக் காவற்துறை மா அதிபரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு வரப்பட்டு அவர்களை விடுவிக்குமாறு அவர் உத்தரவிட்டும் 17 மணி நேரத்தின் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


சிறுபான்மையின காவற்துறை அதிகாரி என்பதால் பெரும்பான்மையின காவற்துறையினர் இவர்களை மிக மோசமாக நடாத்தியிருப்பதாக அந்த காவற்துறை அதிகாரியின் குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.

திஸநாயகம் மீதான விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானம்

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகம் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

திஸநாயகம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் நீதவான் நீதிமன்ற பதிவாளருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது. திஸநாயகம் மீதான விசாரணை அறிக்கைகளை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.

2006ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் திகதி முதல் 2007ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் மாதாந்தச் சஞ்சிகையை வெளியிட்டமை, விநியோகித்தமையானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரானது என ஊடகவியலாளர் திஸநாயகம் மீது குற்றப்பத்திரம் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

சந்தேகத்தை ஏற்படுத்திய வங்கிக் கணக்குப் புத்தகம், சில சஞ்சிகைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி போன்றவற்றை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியிருப்பதாக அவர்மீதான குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி ஊடகவியலாளர் திஸநாயகம் மற்றும் அச்சக உரிமையாளரான ஜசிகரன், அவருடைய மனைவி வளர்மதி ஆகியோர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் 150 நாட்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ஊடகவியலாளர் திஸநாயகம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டவர் என தற்பொழுது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேநேரம், திஸநாயகம் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவேண்டும், அல்லது அவர் விடுவிக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல்வேறு மனிதநேய அமைப்புக்களும், சர்வதேச ஊடக அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் புண்ணாக்கு சாப்பிடுகிறது அதனால் நாமும் சாப்பிடுகிறோம்-விமல் வீரவன்ஸ

வான்பரப்பில் இருந்து உணவுப் பொதிகளைப் போடும் நிலைமைக்கு உட்பட்ட நாடாக மேற்குலக நாடுகள் இலங்கையை பட்டியலிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் இதுவெனவும் கூத்தாட வேண்டிய சந்தர்ப்பம் இது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். பணிப்புறக்கணிப்புகள், அரசாங்கம் நடத்தும் தேர்தல்கள் என்பன இந்த பிரச்சினைகளை திசைத்திருப்பும் செயற்பாடுகள்.


அரசாங்கம் இந்த மூடத்தனமான வேலையை செய்யும் போது, ஏனையோரும் இந்த மூடத்தனமான வேலையை செய்ய தமக்கு உரிமை இருப்பதாக கூறுகின்றனர் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். ‘


யுத்தம் என்றால் அரசாங்கம் தேர்தலை நடத்தமால் இருக்காலம்தானே, அரசாங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிந்தால் எமக்கு ஏன் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள முடியாது என சகோதரர் லால்காந்த கேள்வி எழுப்பியிருந்தார். அரசாங்கம் புண்ணாக்கு சாப்பிடுகிறது அதனால் நாமும் சாப்பிடுகிறோம்,

அரசாங்கத்திற்கு புண்ணாக்கு சாப்பிட முடிந்தால் ஏன் எங்களுக்கு சாப்பிட முடியாது என்றுதானே லால்காந்த கேட்கிறார் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சாரக் கூட்டத்திற்கு மக்கள் வராததல் காத்திருந்தார் இலங்கை பிரதமர்

தம்புத்தேகம ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு மக்கள் சமூகமளிக்காத நிலையில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மக்களுக்காக காத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள தம்புத்தேகம பிரதேசத்தில் நேற்று முற்பகல் 10.30க்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த கூட்டத்திற்காக மாகாணம் முழுவதும் கட்அவுட்கள், பிரசார சுவரொட்டிகள் என தடல்புடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டம் 10.30க்கு ஆரம்பமாக விருந்த போதிலும் மக்கள் கூட்டம் இல்லாத நிலையில் மதியம் 12.30 மணிக்கே கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் சுமார் 150 பேரே கூட்டத்தில் கலந்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது. கூட்டத்தில் உரையாற்றவிருந்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மக்கள் கூடும் வரை அருகில் உள்ள இடம் ஒன்றில் காத்திருந்திருந்ததாகவும் மக்களை அழைத்து வரும் பணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும், அமைப்பாளர்களும் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.


இதேவேளை தம்புத்தேகம பிரதேசத்தில் ஜே.வீ.பீயினர் நடத்திய கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டதாகவும் இந்த கூட்டத்தை குழப்புவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு மக்கள் வராத நிலையில் தொடர்ந்தும் மக்களை அழைத்துவரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையில் மக்கள் கூட்டத்திற்கு சமூகமளிக்காததால் அதனை ஒளிப்பதிவுசெய்ய ஊடகவியலாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் அனுமதி வழங்கவில்லை.

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும்- பிரதிப் பொலிஸ்மா அதிபர்

அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட விடத்தல் தீவு உட்பட ஏனைய பகுதிகளில் விரைவில் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிதாக அமைக்கப்படவிருக்கும் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுவதற்குப் பொலிஸார் முன்வந்திருப்பதுடன், அவ்வாறு அமைக்கப்படும் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறியுள்ளார்.

மடு பகுதியில் புதிய பொலிஸ் நிலையமொன்றை கடந்த சனிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட மன்னார் மற்றும் வடக்கின் ஏனைய பகுதிகளில் பகுதியில் வீதிகள் மற்றும் பாலங்களை அமைப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கூறியிருந்தார்.

அங்கிருக்கும் மக்களுக்கான அனைத்து அடிப்படை உட்கட்டுமான வசதிகளைப் பூர்த்திசெய்து கொடுப்பதற்கு தமது அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்திருப்பதாகவும், வடபகுதியைச் சேர்ந்த மக்கள் இதுவரை கண்டிராத சீரான வீதிகளை இனிவருங்காலங்களில் காண்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், பாலங்கள் மற்றும் வீதிகளை அமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாகத் தெரியவருகிறது. பாலங்களை அமைப்பதில் தேர்ச்சிபெற்ற பொறியியலாளர்களை கூடியளவு சம்பளம் கொடுத்து பணிக்கு வருமாறு அரசாங்கம் அழைத்திருப்பதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, யாழ் குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வயல்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் கட்டளைக்கு அமைய உயர்பாதுகாப்பு வலயப் பகுதியான அரியாலையில் விவசாயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயம் அமைந்திருக்கும் அரியாலையில் கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியிலிருந்து அரியாலை புகையிரதப் பாதைக்கு இடைப்பட்ட 103 ஏக்கர் வயல் நிலங்களில் விவசாயம் செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதற்கமைய 512வது படைப்பிரிவினால் வழங்கப்படும் விசேட அடையாள அட்டைகளுடன் விவசாயிகள் விவசாயம் செய்ய அனுமதிக்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.