Wednesday 20 August 2008

சிறுபான்மையினமா – காவற்துறை அதிகாரியின் குடும்பமும் கைது செய்யப்படலாம்

கொழும்பு வலய நடவடிக்கைப் பிரிவு காவற்துறை அதிகாரியின் மனைவியும் குடும்பத்தினரும் கண்டி காவற்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.


அக்கரைப்பற்றிலிருந்து கண்டி ஊடாகக் கொழும்பு நோக்கி பயணிகள் வாகனமொன்றில் பயங்கரவாதிகள் செல்வதாகக் கூறி கண்டி தலைமையகக் காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர்கள் அந்தப் பயணிகள் வாகனத்தை மறித்துச் சோதனையிட்டனர். 12 முஸ்லிம்களும் 3 தமிழர்களும் அந்த வாகனத்தில் இருந்துள்ளனர்.


அதிகாலை 1.30க்கு வானை வழிமறித்த காவற்துறையினர் அவர்களை கண்டி காவற்துறை நிலையத்திற்கு கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த வானில் கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பிரிவுக்குட்பட்ட, கொழும்பு வலய நடவடிக்கைப் பிரிவு காவற்துறை அதிகாரியின் மனைவியும் குடும்பத்தினருமே பயணம் செய்திருந்தனர்.

காவற்துறை நிலையத்தில் மேற்படி காவற்துறை அதிகாரியின் மனைவி தன்னை அடையாளப்படுத்தியதுடன் தனது கணவரின் பதவி நிலையையும் தெரியப்படுத்தினார்.


எனினும் காவற்துறையினர் அவர்களை விடுவிக்கவில்லை. கண்டி பிரதிக் காவற்துறை மா அதிபரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு வரப்பட்டு அவர்களை விடுவிக்குமாறு அவர் உத்தரவிட்டும் 17 மணி நேரத்தின் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


சிறுபான்மையின காவற்துறை அதிகாரி என்பதால் பெரும்பான்மையின காவற்துறையினர் இவர்களை மிக மோசமாக நடாத்தியிருப்பதாக அந்த காவற்துறை அதிகாரியின் குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.

No comments: