Saturday 16 August 2008

இந்திய வெளியுறவு கொள்கைக்கு பலியாகும் தமிழினம்--சட்டத்தரணி சி.வி விவேகானந்தன்

இலங்கை தனது ஆள்புலக் கடல் எல்லையை 1971 இல் 12 மைலாக நீட்டியது. அதன் பின் அடுத்துள்ள வலயமும் 24 மைல் தூரம் நீட்டப்பட்டது. பிரத்தியேகப் பொருளாதார வலயமும் 200 மைலுக்குச் சென்றது. இந்தியாவும் மாலைதீவும் தங்களது கடல் சார்ந்த வலயங்கள் யாவற்றையும் நீட்டிக் கொண்டன.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலிருப்பது ஒடுங்கியதோர் கடல் பரப்பு. அதனால், இரு நாடுகளின் கடல் வலய எல்லைகள் ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்துள்ளன.
எல்லைக்கோடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எந்தெந்த பகுதி யார் யாருக்கு சேர வேண்டுமென்பதற்கான கடல் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. கடல் எல்லைகளை நிர்ணயம் செய்தமைக்காக எழுதப்பட்ட ஒப்பந்தம் தான் 1974 ஆம் ஆண்டு சிறிமாவும் இந்திராவும் கைச்சாத்திட்ட ஒப்பந்தம் ஆகும்.

இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி, எழுதப்படும் ஒப்பந்தங்கள் யாவும் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பது சட்ட முறைமையாகும்.

இலங்கைத் தமிழர் பொருட்டு ஜே.ஆர். ஜயவர்த்தனாவிற்கும் ராஜீவிற்குமிடையில் 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தம் எழுதப்பட்டது. அவ்வொப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை நாடாளுமன்றம் 13 ஆவது 16 ஆவது அரசியலமைப்புத் திருத்தங்கள், மாகாணசபைச் சட்டம் போன்றவற்றை இயற்றியது. அவ்வாறே கடல் சார்ந்த வலயங்களின் எல்லைக்கோடு ஒப்பந்தங்களுக் கமைய இலங்கை 1976 இல் சட்டம் இயற்றியது. இந்தியாவும் அவ்வாறே 1976 இல் சட்டம் இயற்றியது. இரு நாடுகளும் தாங்கள் இயற்றிய சட்டங்களுக்கமைய பிரமாணங்களையும் பிரகடனங்களையும் நில அளவையாளர் படங்களையும் வெளியிட்டன.

அன்றைய இந்திய நாட்டின் வெளியுறவு அமைச்சர் வை.பி.ஜாவான் 1976 இல் இந்திய நாடாளுமன்றத்தில் கடல் வலய ஒப்பந்தங்களுக்கு புகழாரம் சூட்டினார்.

மற்றைய நாடுகள் இணக்கம் காண கஷ்டப்படும் பொழுது, ஐ.நா. வினால் கூட சமரசம் செய்ய முடியாதிருக்கும் பொழுது நாம் இணக்கம் கண்டோம். எல்லைகளை நிர்ணயித்துக் கொண்டோம். உலக நாடுகளுக்கு வழி காட்டி நிற்கின்றோம் என்ற தோரணையில் வர்ணித்த பொழுது தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மயான மௌனம் சாதித்தனர்.

டில்லியின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டிருந்தனர். அன்று ஒருவரும் நீதிமன்றம் செல்லவில்லை. இன்று முன்னாள் தமிழக முதல்வர், செல்வி ஜெயலலிதா வழக்காட உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். தேர்தல் நெருங்கும் பொழுது இது நல்ல நாடகம்.

தமிழக மீனவர்களுக்கு செய்த அநியாயம் 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா தனது பூகோள வல்லாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தியா முறுகினால் இலங்கை மூலையில் முடங்கி விடுவது போல் தோற்றம் கொடுக்கின்றது.


ஆனால் தமிழ் நாட்டின் உரிமையை தாரை வார்த்துவிட்டது. உண்மை என்னவெனில் டில்லி தனது பூகோள ஆதிக்கத்திற்காக கச்சதீவின் மீதிருந்த தமிழ் நாட்டின் உரிமைகளை இலங்கைக்கு விட்டுக் கொடுத்துவிட்டது. பன்னெடுங் காலம் ஆண்டு அனுபவித்து வந்த தமிழக மீனவர்களின் உரிமைகள் யாவும் காற்றோடு போயின. அவர்கள் நாதியற்றவர்களாக நட்டாற்றில் விடப்பட்டார்கள்.

டில்லி தனது தேவைக்காக தமிழ் நாட்டுத் தமிழர்களின் உரிமைகளை அடகு வைத்து விடும்.

விற்றும் விடும். ஒப்பந்தத்தை கூர்ந்து படிப்போர்க்கு இந்த உண்மை புரிந்து விடும்.

அண்ணாவின் அமுதமொழி "வடக்கு வளர்கின்றது, தெற்கு தேய்கின்றது' என்று அன்று அறிஞர் அண்ணா கூறினார்.

அடுக்கு மொழி வசனம் என்று பலர் அன்று கூறினர். "அடுக்கு மொழியல்ல, அண்ணாவின் அமுத மொழி'யென்று இன்று எல்லோரும் உணர்கின்றனர். அண்ணா ஊட்டிய தமிழ் உணர்வு, தேசிய உணர்வு மறைந்து போகவில்லை. அழிந்து போகவில்லை. நீறுபூத்த நெருப்புப் போல் மங்கியிருக்கின்றது. அவ்வளவுதான்.

ஜெயலலிதா இட்ட சுடர் இந்திய உச்ச நீதிமன்றம் அரசியல் அவலங்களால் அவலப்படும் மன்றல்ல. என்றாலும் சட்டம் ஒரு கழுதை என்பர். இயற்றிய சட்டத்தில் என்ன ஓட்டை உடைசல்கள் இருக்கின்றன என்பதை கெல்லிக் கெல்லி அலசி ஆராய்கின்றபொழுது தான் தெ?யவரும்.

நேரடியாகக் கொடுக்க முடியாததை மறைமுகமாகக் கொடுக்க முடியாது என்பது சட்டத்தின் ஒரு கருத்தாகும். கச்சதீவை கையளிப்பதற்கு வெளிப்படையாக ஓர் ஒப்பந்தம் எழுதாமல் கடல் வலயக் கோடுகள் கீறும் ஒப்பந்தத்தின் மூலம் மறைமுகமாக கச்சதீவை கையளிக்க முடியுமா? இந்திய அரசியலமைப்பின் 368 ஆம் உறுப்புரைக்குள் இவ்வொப்பந்தம் உட்படுத்தக்கூடியதா? தமிழக மீனவர்களின் உரிமைகள் அடகு வைக்கப்பட்டனவா? இவை போன்ற வேறு விடயங்களும் இவ் வழக்கின் மூலம் அம்பலத்திற்கு வரும்.

எது எவ்வாறாக இருப்பினும், ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு பல பின் விளைவுகளை உருவாக்கும் தன்மையுடையது. தமிழ் தேசிய உணர்விற்கு எதிரானவர் ஜெயலலிதா. அவர் தெரிந்தோ தெரியாமலோ, நீறுபூத்த நெருப்புப் போல் இருக்கும் அண்ணாவால் வளர்க்கப்பட்ட தமிழ் உணர்வும் தமிழ் தேசிய உணர்வும் சுடர் விட்டெரிவதற்கு இந்த வழக்கின் மூலம் சிறு சுடர் ஏற்றியுள்ளார். டில்லி பாட்ஷாக்களுக்கு வடக்கென்றால் துடிப்பு ஏற்படும்.


தமிழ் நாடு என்றால் அவர்களை காலால் மிதிக்கலாம். உதைக்கலாம். அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணம் எப்பொழுதும் டில்லிக்கு உண்டு. அதனால்தான் இந்தியா இலங்கையுடன் செய்த எல்லா ஒப்பந்தங்களிலும் தமிழர்களின் உரிமைகளை ஏலம் போட்டது.

அறம் கூற்றாதல் அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றாகும்.

அரசியல் பிழைத்தோருக்கும் அறம் கூற்றாகும். மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் காலம் கனிகின்றது.

டில்லி பாட்ஷாக்களின் உண்மையான தமிழ் விரோத நிலைப்பாடு வெட்டவெளிச்சத்திற்கு வரப் போகின்றது. ஜெயலலிதா ஏற்றிவைத்த இந்த சிறு சுடர் அதனைச் செய்யும்.

சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் பலவிதமான தொழில்கள் செய்வதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். புதிதாகத் திறக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களுக்கு தொழிலாளிகள் தேவைப் பட்டனர். 1820 ஆம் ஆண்டு தொடக்கம் இலட்சக்கணக்கில் தமிழர்கள், தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டனர். இன்றைய சந்ததியினர் மூன்று சந்ததியினரின் வாரிசுகள் ஆவர்.

இலங்கை, பிரஜாவுரிமைச் சட்டத்தை 1948 இல் கொண்டு வந்தது. பிரஜாவுரிமைச் சட்டம் சட்டமாக்கப்படுவதற்கு முன்பே அன்றைய மக்களின் தந்தையர்களும் பாட்டன்மார்களும் இலங்கையிலே பிறந்தவர்கள். அச்சட்டத்தின் பிரகாரம் மலையகத் தமிழர்கள் இலங்கைப் பிரசைகளாவர். ஆய்வுகள் செய்யவில்லை. எழுந்தமானத்திலே பிரஜாவுரிமைச் சட்டம் மலையகத் தமிழரை நாடற்றவர்களாக ஆக்கிவிட்டது என்ற எண்ணம் நாடளாவி எழுந்தது. டில்லியும் மேலோட்டமாகவே அச்சட்டத்தைப் பார்த்தது.


சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் எழுதப்பட்டது.

தமிழ் நாடும் ஆட்சேபித்தது. மலையகத் தமிழர்களின் ஏக தலைவன் தொண்டமானும் எதிர்த்தார். டில்லி அலட்டிக்கொள்ளவில்லை. ஏறக்குறைய மூன்று இலட்சம் மக்களை இலங்கை ஏற்றுக் கொண்டது.

தகுந்த பாதுகாப்புக்களை அவ்வொப்பந்தத்தின் மூலம் இந்தியா அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை. அவர்களது வருங்கால உரிமைகள் எவையும் காப்புறுதிப்படுத்தப்படவில்லை. அவர்கள் நட்டாற்றில் விடப்பட்டார்கள்.

மலேசிய தமிழர்களுக்கு ஏற்பட்ட சோக நிகழ்வுகள் இவர்களுக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? மலேசியத் தமிழர்களை டில்லி பாட்ஷாக்கள் கைவிட்டது போல மலையகத் தமிழரும் கைவிடப்படமாட்டார்களா?

வட நாட்டவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படும்பொழுது டில்லிக்கு ஏற்படும் துடிப்பு, உணர்வலைகள் தமிழ் நாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுது தோன்றுவதில்லை.

பிஜீ தீவில் மகேந்திர சௌத்திரி பிரதமரானார்.

அவரது ஆட்சி கலைக்கப்பட்டபொழுது டில்லி பட்ட பாட்டை மறந்துவிடுவோமா?

பிரான்ஸ் நாட்டில் சீக்கியர் தலைப்பாகை அணிவதில் சிறு பிரச்சினை ஏற்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் படையினரால் சுடப்பட்டபொழுது, தமிழக மீனவர்கள், காயப்பட்ட பொழுது, சுடப்பட்டு இறந்த பொழுது மன்மோகன்சிங் இலங்கை அரசுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாரா?

தமிழக மீனவர்கள் இறக்கின்ற பொழுதும் துடிப்பேதும் உண்டாவதில்லையே டில்லி பாட்ஷாக்களுக்கு. வடக்குக்கு ஓர் அணுகுமுறை தெற்கிற்கு ஓர் அணுகுமுறை. வடக்கு வளர்கின்றது, தெற்கு தேய்கின்றது என்ற அண்ணாவின் அந்த மொழியின் அர்த்தம் புரிகின்றதா?

ஏற்றி வைத்த இச்சுடர் வருங் காலத்தில் தீப்பிழம்பாய் எரியும் என்பது தெரிகின்றதா?

ஜே.ஆர். ராஜீவ்காந்தி ஒப்பந்தம் ஈழத் தமிழர் ஆண்ட பரம்பரையினர். மீளவும் ஆள நினைத்தார்கள். அவர்களுக்கு ஆயுதக் கலாசாரத்தை புகட்டியது இந்தியா. காந்தீயத்தில் பற்றுக்கொண்ட இந்தியா, பஞ்ச சீலம் போதித்த இந்தியா, கத்தியின்றி இரத்தமின்றி அஹிம்சாவழியில் சுதந்திரம் பெற்ற இந்தியா, தமிழ் இளைஞர்களின் பல குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆயுதம் கொடுத்தது.

இலங்கையில் இரத்த ஆறு ஓடவிட்டது. இன்றும் இரத்த ஆற்று ஓட்டம் நிற்கவில்லை.

பல தில்லு முல்லு நாடகங்கள் அரங்கேறின.

கடைசியில் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிற்கும் ராஜீவ் காந்திக்குமிடையில் ஒப்பந்தம் 1987 இல் கைச்சாத்திடப்பட்டது. "இரு மாகாணங்களின் இணைப்பு' ஈழத் தமிழர்களின் இருதயம் போன்றது. ஒப்பந்தத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜே.ஆர். இணைப்பை ஆதரிக்கவில்லை. இவ்வொப்பந்தத்தை அடியோடு வெறுத்தவர். ""இணைப்புக்கெதிராக பிரசாரம்செய்வேன், ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்வேன்'' என ஜே.ஆர். சூளுரைத்தார். அதே ஜே.ஆர். இணைப்பை பிரகடனம் செய்தார்.

ஒப்பந்தத்தின் 2: 13 பிரிவின் பிரகாரம் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டது. இரு மாகாணங்களை இணைக்கும் வரைவை இந்தியா மேற்பார்வை செய்தது.

டில்லியின் நெருக்குதல்களினால் தமிழர்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டனர். இந்த ஒப்பந்தத்தோடு கடிதங்களும் பரிமாறப்பட்டன.

அவ்வாறான பரிமாற்றத்தின் மூலம் இந்தியா தனது மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் ஈழத் தமிழர்கள் நட்டாற்றில் விடப்பட்டனர்.

20 வருடங்களின் பின் இந்தியாவால் மேற்பார்வை செய்யப்பட்ட இணைப்பு பிரகடனம் இலங்கை அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் முரணானது என்றும் சட்ட வலுவற்றதென்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தோடு ஈழத் தமிழர்களின் இருதயமாகக் கருதப்பட்ட இணைப்பு பிரிக்கப்பட்டது.

சிங்கள தேசம் ஈழத் தமிழர்களின் தேசிய உணர்வை அழித்திட கங்கணம் கட்டி நிற்கின்றது. டில்லி அவர்களுக்கு பக்க பலமாக நிற்கின் றது.

பண்டார வன்னியனின் வீரம் விளைந்த மண் வன்னிப் பிரதேசமாகும். அந்த மண்ணில் ஈழத் தமிழர்கள் இன்று நாதியற்றவர்களாக வானமே கூரையாக வீதியோரங்களில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அலைகின்றார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறக்கூட இந்தியான்வரவில்லை.

அவர்கள் என்ன ""நாய்களோ? அன்றி பன்றிச் சேய்களோ?'' இது நீதமோ? பிடிவாதமோ?'' இந்தியா நீ எங்களுக்கு துணைக்கு வர வேண்டாம். துன்பம் கொடுக்காமலிருந்தாலே போதும். பாரதி இருக்கிறான். அவன் வருவான் தேசிய உணர்ச்சிதனை ஊட்டிவிடுவான்.

அரண் அமைத்து நிற்பான். பாரதி அன்று சொன்னதை உங்களுக்கு நாங்கள் இன்று சொல்கின்றோம்.

""கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது குற்றமோ? இதில் செற்றமோ?

மற்று நீங்கள் செய்யும் கொடுமைக்கெல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம் சதையைத் துண்டு துண்டாக்கினும் உன்னெண்ணம் சாயுமோ? ஜீவன் ஓயுமோ'' அறம்தான் ஜெயலலிதாவை இச்சிறு சுடர் ஏற்றுவதற்கு தூண்டியது.

ஜெயலலிதாவால் ஏற்றப்பட்ட இச்சிறு சுடர் சுவாலையாய் மாறும்; தமிழரின் தேசிய உணர்வு தீப்பிழம்பாய் எரியும். இலங்கை அதிர்ந்து விடும். இந்தியா மௌனித்து விடும்; உலகமே அதிசயிக்கும்.

நன்றி:வீரகேசரி

No comments: