Tuesday 19 August 2008

முஸ்லிம்களுக்கு புத்த சிலையை வணங்கச் சொல்லி பிரதேச சபைத் தலைவர் அட்டகாசம்.

இனங்களுக்கிடையே நல்லுறவு, ஐக்கியம் ஏற்பட வேண்டுமென குரல்கொடுத்துக் கொண்டு வரும் இக்காலகட்டத்தில் அரசியல் அமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட மத உரிமையை மீறக்கூடிய விதத்தில் முஸ்லிம்களுக்கு புத்த சிலையை வணங்கச் சொல்லி வற்புறுத்தியுள்ள ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இது பற்றிய செய்தி வருமாறு:-

மஹியங்கனை வீதி வழியாக அமைந்துள்ள மீகஹாகிவுல பஸ் நிறுத்தும் சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலில் பணிபுரிந்த சிப்பந்திகள் மீது பிரதேச சபைத் தலைவர் அடாவடித்தனம் புரிந்த சம்பவம் அண்மையில் நிகழ்ந்துள்ளது.


இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

ஹாலி-எலயைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவர் நடாத்தும் மேற்படி ஹோட்டலில் பணி புரிந்த ஊழியர்கள் நால்வர் இரவில் கடையை மூடிவிட்டு வீதி வழியாக உலா வந்துள்ளனர்.

அச்சமயம் அவ்விடத்துக்கு வந்த பிரதேசசபைத் தலைவர் ஏதோ குறித்து 4 இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

போதாக் குறைக்கு அருகில் இருந்த போதிமர புத்தர் சிலையையும் வணங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மறுத்துள்ளனர்.

இது விடயமாக தகவல் தெரிந்த சமூக நலன்கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் உடனடியாக மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக பிரதேசசபைத் தலைவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த வாரம் (13) அவர் மீதான வழக்கு பிரிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. முஸ்லிம்களின் தனித்துவம் மீது கை வைத்து அரசுக்கு அபகீர்த்தியையும், வெட்கத்தையும் உண்டாக்கும் இச்சம்பவம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிர்ச்சியும், ஆத்திரமும் கொள்ளும் பொதுமக்கள் கவலையுடன் வேண்டுகின்றனர்.

No comments: