Wednesday, 20 August 2008

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர் அனுமதி; பெற்றோர் எதிர்ப்புப் போராட்டம்

தமது விருப்பத் தேர்வுக்கு மாறாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலுமாறு தென்னிலங்கை மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருப்பதை எதிர்த்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், தமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாணவர்கள் 306 பேருக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடிதம் மூலம் அறிவித்திருந்தது. இவர்களில் 23 பேர் மருத்துவபீடத்திற்கும், 80 பேர் முகாமைத்துவ பீடத்திற்கும், 20 பேர் சட்ட பீடத்திற்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய வசதிகளைக் கருத்திற்கொண்டு, தமது பிள்ளைகளை யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அனுப்பமுடியாது என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

"யாழ்ப்பாணத்துக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவிப்பது இன வேறுபாட்டின் அடிப்படையில் அல்ல. தமது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அதிகம் கவலைப்படுவதே இதற்குக் காரணம்" என பல்கலைக்கழகங்கங்களுக்கிடையிலான மாணவர் பேரவையின் ஏற்பாட்டாளர் உதுல் ப்ரேமரத்ன தெரிவித்திருக்கிறார்.

தமது விருப்பமின்மையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உரிய அதிகாரிகளுக்கும் பலதடவைகள் வெளிப்படுத்தியுள்ளபோதிலும், அவர்கள் உரிய பதில் எதனையும் வழங்காதிருப்பதாகவும் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாட வருமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்தபோதிலும், கலந்துரையாடலில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

"முதல் ஒரு தவணைக்கு மாத்திரம் மட்டக்களப்பு சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு செல்லுமாறும், பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடருமாறும் குறிப்பிடப்பட்ட உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுமாறு எம்மிடம் ஆணைக்குழு கேட்டது. இருப்பினும் நாம் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட விரும்பவில்லை" என யாழ் மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள பாணந்துறை சிறீ சுமங்கல வித்தியாலயத்தைச் சேர்ந்த உதாரா ரணசிங்க எனும் மாணவி தெரிவித்துள்ளார்.

இதேபோன்றே, யாழ் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள ஏனைய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும், முதல் ஒரு தவணையை மாத்திரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிலுமாறும், பின்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடருமாறும் குறிப்பிடப்பட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு வேண்டப்பட்டதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

"இந்தப் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக 4 தடவைகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வந்திருக்கிறேன்" எனத் தெரிவிக்கும் மாத்தளையைச் சேர்ந்த மலானி ஜெயசிங்க எனும் தாயொருவர், ஏன் இந்த அதிகாரிகள் தனது பிள்ளையை யாழ். பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்துள்ளனர் எனவும் கேள்வியெழுப்பினார்.

"யாழ்ப்பாணத்தை எப்போது சென்றடைவோம் என்பதே எமக்குத் தெரியாது. ஏ-9 பாதை மூடப்பட்டுள்ள நிலையில், நாம் கடல்மார்க்கமாகவே அங்கு செல்லவேண்டும். திருகோணமலைக்குச் சென்று அங்கு கப்பலுக்காகக் காத்திருந்து, 4 நாட்களின் பின்னரே யாழ்ப்பாணத்தை அடையமுடியும்" என்றும் அவர் கூறுகிறார்.

இதேவேளை, அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள, முஸ்லிம் மாணவர்களை இணைப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு 1,203 மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவதாகவும், இவர்களில் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் 261 பேர் அடங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

"மூவின மாணவர்களும் கலந்து கற்பது நல்ல நடவடிக்கை. ஆனால், நாட்டில் அவ்வாறான சூழ்நிலை இல்லை. வடக்கில் யுத்தம் இடம்பெறுகிறது. இவ்வாறான நிலையில் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் எவ்வாறு யாழ்ப்பாணம் சென்று கல்வி கற்க முடியும்" என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

"வடக்கு, கிழக்கில் மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய நல்ல சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன், ஏ9 பிரதான வீதி திறக்கப்படவேண்டும். இவற்றை அரசாங்கம் செய்தால் யாழ்.பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் கல்வி கற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதில் அரசாங்கமும் உயர் கல்வி அமைச்சும் உடனடி கவனம் செலுத்தவேண்டும்" எனவும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, உயர்கல்வி அமைச்சுக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது எனவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கே இவற்றைத் தீர்மானிக்கும் முழுஅதிகாரமும் இருப்பதாகவும் கூறினார்.

"சிங்கள மாணவர்களை யாழ். பல்கலைக்கழகத்துக்கு அனுமதித்திருப்பது நியாயமற்றது. தற்போதுள்ள சூழ்நிலையில் அவர்களால் அங்கு கல்வி கற்க முடியாது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏன் இப்படி நடந்துகொள்கிறது என எனக்குத் தெரியாது" என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் சிங்கள மாணவர்கள் அனுமதி

இதற்கிடையில், கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மாணவர்கள்; சிலரும், நேற்று செவ்வாய்க்கிழமை தாம் எதிர்நோக்கும் உணவு மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் குறிப்பிடப்பட்ட கடிதம் ஒன்றினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கையளித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் சிங்கள மாணவர்களை அனுமதிப்பது எனும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கமைய கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இந்த வருடம் 41 சதவீதமான சிங்கள மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 358 தமிழ் மாணவர்களும், 306 சிங்கள மாணவர்களும், 79 முஸ்லிம் மாணவர்களுமாக மொத்தம் 743 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும், பாதுகாப்பான சூழலில் கிழக்குப் பல்கலைக்கழத்தில் தம்மால் கல்வியைத் தொடர முடியாதென சிங்கள மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், பெற்றோரும் இதற்கு தமது எதிர்ப்பைத் வெளிப்படுத்துகின்றனர்.

"எனது பிள்ளையை மரண வீடொன்றில் விட்டுவிட்டு வந்ததாகவே நான் நினைக்கிறேன். இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு எனது பிள்ளையைப் படிப்பித்தது இவ்வாறானதொரு இடத்தில், பெரும் அச்சத்துக்கு மத்தியில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு அல்ல" என கிழக்குப் பல்பலைக்கழக மருத்துவ பீடத்தில் தனது மகனை அனுமதிக்கச் சென்றிருந்த தாயொருவர் பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக சிங்கள மாணவர்கள் அனுமதி

இதேவேளை, முதன்முறையாக ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சிங்கள மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக துணைவேந்தர் கலாநிதி குசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

2008/2009 ஆம் கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களில் நாற்பது வீதமான சிங்கள மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பி.பி.சி. செய்திச்சேவைக்கு அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கல்வியாண்டில் 361 முஸ்லிம் மாணவர்களுக்கும், 140 சிங்கள மாணவர்களுக்கும், 17 தமிழ் மாணவர்களுக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

"தேசிய பல்கலைக்கழகங்கள் தனிப்பட்ட இனத்துக்காக ஆரம்பிக்கப்படுவது பொருத்தமானதல்ல. அந்த வகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதில் சிந்திப்பதற்கு எதுவுமேயில்லை" எனவும் தென்கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி குசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சிங்கள மாணவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பது பிரச்சினைக்குரியதொன்றல்ல எனவும், சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதற்கும், முஸ்லிம் மாணவர்கள் சிங்கள அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் இது நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொணடுக்கும் எனவும் அவர் கூறினார்.

இருப்பினும், கிழக்கு மற்றும் யாழ். பல்கலைக்கழகங்களுக்கு சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிசீலனை செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments: