Saturday 16 August 2008

ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல்-ஜனாதிபதி புஷ்

ஜோர்ஜியா தொடர்பில், ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையிலான சொற்போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் பிராந்தியத்தில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி புஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

21ஆம் நூற்றாண்டில் வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் முறை இதுவல்லவென்று குறிப்பிட்ட ஜனாதிபதி புஷ், ரஷ்யா தனது ஆக்கிரமிப்புப் படையை மீளப் பெறவேண்டுமெனவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அந்தப் பிராந்தியத்தில் ரஷ்யாவால் மாத்திரமே அமைதியை உறுதிப்படுத்த முடியுமென ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளார்;. ரஷ்ய மக்களும், படையினரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், ரஷ்யா இதே பாணியிலேயே மீண்டும் பதிலளிக்குமெனவும் அவர் கூறினார்.

மேற்குலகுடனான உறவுக்கு பாதிப்பு ஏற்படுவதை ரஷ்யா தவிர்க்க விரும்புவதாகவும், பிரான்ஸினால், மத்தியஸ்தம் செய்யப்பட்ட அமைதித் திட்டத்தில், ஜோர்ஜியாவே இதுவரையில் கைச்சாத்திட மறுத்துள்ளதாகவும் டிமிக்கிரி மெட்வடேவ் குறிப்பிட்டுள்ளார்.

ஜோர்ஜியா விடயத்தில் ரஷ்யாவின் நடவடிக்கையானது அளவுக்கு அதிகமானதென்று விமர்சித்த, ஜெர்மனியின், தலைவி ஏஞ்சலா மைக்கெல்லுடன் பேச்சு மேற்கொண்ட பின்னரே ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

ஜோர்ஜிய ஜனாதிபதியுடன் கொண்டலீசா ரைஸ் சந்திப்பு

ஜோர்ஜியாவின் எந்தப் பகுதியும் அந்நிய ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதை தன்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாதென ஜோர்ஜிய ஜனாதிபதி மிக்கெய்ல் சாக்காஸ்விலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத்துறைச் செயலாளர் கொண்டலீஸா ரைஸ்ஸ{டன் பேச்சு நடத்திய பின்னர் கருத்துவெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்;, ஜோர்ஜியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் ரஷ்யா மதித்து நடக்க வேண்டுமென கொண்டலீஸா ரைஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையில் ஜோர்ஜியா தற்போது கையெழுத்திட்டுள்ளதாக கொண்டலீஸா ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஜோர்ஜியாவில் ரஷ்யப் படைகள் இன்னமும் நிலைகொண்டுள்ளன

ஜோர்ஜியாவின் மூன்று முக்கிய நகரங்களின் உட்பகுதிகளுக்குள் இன்னமும் ரஷ்யப் படைகள் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோர்ஜியக் கடற்படைகளின் கப்பல்களை நிறுத்தும் இடத்தில் ரஷ்யாவின் இராணுவத்தினரை ஏற்றிச் செல்லும் படகுகள், கவச வாகனங்கள் மற்றும் அதிவேக படகுகள் நிலை கொண்டுள்ளதாகவும், அங்குள்ள இராணுவத் தளவாடங்களை அழிப்பதே ரஷ்யாவின் நோக்கமாக இருக்கக்கூடுமெனவும் பி.பி.சி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இவை மட்டுமல்லாது, செனாக்கி நிலப்பகுதியில், பெரியளவில் ரஷ்ய இராணுவப் படைகள் உள்ளதாகவும், அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து ஜோர்ஜியாவின் தளபாடங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பி.பி.சி செய்திச்சேவை அறிவித்துள்ளது.

இதேவேளை, கோரி நகரின் கட்டுப்பாட்டை மீண்டும் கையளிப்பது தொடர்பில் ஜோர்ஜியப் பொலிஸாருடன் ரஷ்யர்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments: