Tuesday 19 August 2008

பயங்கரவாதத்திற்கெதிரான 'ஐரோப்பிய பொறிமுறை'யினை விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அமுல்படுத்துக-அரசாங்கம் கோரிக்கை

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கெதிரான 'ஐரோப்பிய பொறிமுறை'யினை விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் அமுல்படுத்தவேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளதாக, அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், ரீ.சீ.சி ஆகிய அமைப்புக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் செயற்பட்டுவருவது தொடர்பான ஆவணங்களையும் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகளுக்கும் அனுப்பிவைத்துள்ளதாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளபோதிலும், இணையத்தளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக தற்போதும் அவர்கள் நிதிசேகரிப்பு மற்றும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐரோப்பிய பொறிமுறையினை அமுல்படுத்தவேண்டும் எனவும் அரசாங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

"விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் நிறுவனங்கள் குறித்த ஆவணங்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமர்ப்பித்துள்ளோம். சுனாமி நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பணம் எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதையும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.


ஐரோப்பிய ஒன்றியம் இதுகுறித்து தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இந்த விடயங்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தெளிவுபடுத்துவது இலகுவான விடயமல்ல. இதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். இருப்பினும் இதற்கான அழுத்தங்களை நாம் வழங்கிக்கொண்டிருப்போம்" என அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கெதிரான 'ஐரோப்பிய பொறிமுறை' அல்கைதா இயக்கத்திற்கு எதிராக அமுல்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம்,


புலிகளுக்கு எதிராகவும் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

"விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்திருந்தாலும், அவர்களது செயற்பாடுகள் அங்கு வேறுவழிகளில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.


இதுகுறித்து ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும் 27 நாடுகளுக்கும் நாம் தெளிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில், ஒரு நாடு எதிர்த்தாலும், இதனை அமுல்படுத்த முடியாது" என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர் மத்தியில், விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் அமைப்புக்கள் தொடர்பாக அறிவூட்டும் சமூக மட்டத்திலான செயற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: