Thursday 21 August 2008

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்படுகின்றனர் - மன்னிப்புச் சபை

இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெறும் மோதல்கள் காரணமாக, வன்னியில் இடம்பெயர்ந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் உணவுப்பற்றாக்குறை மற்றும் கூடாரங்களின்றி பெரும் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இடம்பெயர்ந்துள்ள பெண்களும், யுவதிகளும் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகிவருவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்கும், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் பகுதிகளுக்கும் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிறியளவு நம்பகரமான தகவல்கள் அங்கிருந்து கிடைத்துள்ளதாகவும் மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில், மோதலில் ஈடுபட்டுள்ள இருசாராரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ள மக்களை அரசாங்கம் தற்காலிக கூடாரங்களிலும், இடைத்தங்கல் முகாம்களிலும் தங்கவைத்துள்ளதாகவும் மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
"மன்னார் மாவட்டத்திலுள்ள களிமோட்டை முகாமில் 200 குடும்பங்கள் தங்கியிருப்பதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில், பாடசாலைக்குச் செல்வோரைத் தவிர வேறெவரும் படையினரின் விசேட அனுமதியின்றி வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை இருசாராரும் நீக்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ள மன்னிப்புச் சபை, இடம்பெயர்ந்த மக்கள் மோதல்களுக்கு மத்தியில் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
" இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்குவதற்கான 3 பெரிய தங்குமிடங்கள் அமைக்கப்பட வேண்டும். அத்துடன், ஓமந்தை சோதனைச் சாவடியூடாக மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும்" எனவும் மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14,000 குடும்பங்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாகவும், அரசாங்க தரவுகளின்படி, ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை மொத்தமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை 150,000 முதல் 160,000 வரை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: