Monday 18 August 2008

அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை கைதுசெய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு

தனியார் தொலைக்காட்சி நிறுவனப் படப்பிடிப்பாளரைத் தாக்கி அவரிடமிருந்து கமரா உபகரணங்களைப் பறித்தமை தொடர்பாக தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட நால்வரை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம், பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.

கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் மஞ்சுல திலகரட்ண இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். அமைச்சருடன், களனி பிரதேச சபை உறுப்பினர் பிரசன்ன ரணவீர, நிஹால் சில்வா, துலான் ஆசிரி ஆகிய மூவரையுமே கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

களினியில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத் திறப்புவிழாவைப் படம்பிடிக்கச் சென்ற தனியார் தெலைக்காட்சி நிறுவனமான சிரச தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளரின் வீடியோ கமரா அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினரால் பறிக்கப்பட்டதுடன், அவரும் தாக்குதலுக்குள்ளாகியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் கடந்தவாரம் அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பொலிஸ்மா அதிபருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது.

படப்பிடிப்பாளர் தாக்கப்பட்டமை தொடர்பாக அமைச்சர் உள்ளிட்ட நால்வரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேலியோகொட பொலிஸ் தலைமையம், நீதிமன்றத்திற்கு அறிவித்தது. விசாரணைகளைப் பக்கச்சார்பின்றி நடத்துமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

ஊடகவியலாளர்களைத் தாக்கிய சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள போதும், இம்முறையே முதன் முறையாக அவரைக் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அசாங்க ஊடகமான இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து செய்திப் பணிப்பாளரைத் தாக்கியதுடன், அத்திரமடைந்த கூட்டுத்தானப் பணியாளர்களால் அமைச்சர் தாக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டபோதும் அது உரிய விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டிருக்கவில்லை. மாறாக இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனப் பணியாளர்களே இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டு வந்தனர்.

இவ்வாறு ஊடகங்களுக்கு எதிராகச் செயற்படும் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சர்வதேச ஊடக அமைப்புக்கள் தொடர்ந்தும் கோரிக்கைவிடுத்துவரும் நிலையில், அமைச்சரைக் கைதுசெய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவுபிறப்பித்துள்ளது.

No comments: