Wednesday 20 August 2008

திஸநாயகம் மீதான விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானம்

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகம் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

திஸநாயகம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் நீதவான் நீதிமன்ற பதிவாளருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது. திஸநாயகம் மீதான விசாரணை அறிக்கைகளை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.

2006ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் திகதி முதல் 2007ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் மாதாந்தச் சஞ்சிகையை வெளியிட்டமை, விநியோகித்தமையானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரானது என ஊடகவியலாளர் திஸநாயகம் மீது குற்றப்பத்திரம் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

சந்தேகத்தை ஏற்படுத்திய வங்கிக் கணக்குப் புத்தகம், சில சஞ்சிகைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி போன்றவற்றை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியிருப்பதாக அவர்மீதான குற்றப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி ஊடகவியலாளர் திஸநாயகம் மற்றும் அச்சக உரிமையாளரான ஜசிகரன், அவருடைய மனைவி வளர்மதி ஆகியோர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் 150 நாட்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ஊடகவியலாளர் திஸநாயகம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டவர் என தற்பொழுது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேநேரம், திஸநாயகம் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவேண்டும், அல்லது அவர் விடுவிக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல்வேறு மனிதநேய அமைப்புக்களும், சர்வதேச ஊடக அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: