Saturday, 23 August 2008

இலங்கை மண்ணில் சமாந்தரமாக பயணிக்கும் யுத்தமும் தேர்தலும் - இதயச்சந்திரன்

சத்தியத்திற்குப் பின்னால் அணி வகுத்து நிற்கும் உலகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷை நிச்சயம் வெற்றியடையும்.

புலம்பெயர் மக்கள் வாழும் நாடொன்றில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றிற்கு, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் வழங்கிய நேர்காணலில் கூறப்பட்ட விடயமே இது.

மிகவும் ஆழமான அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட இப் போராட்டம், உண்மையின் தரிசனத்தில் வேரூன்றி இருப்பதால் வெற்றிப் பாதையில் பயணிக்குமென்பதே அவரின் உறுதியான நம்பிக்கை.

அரசால் முன்னெடுக்கப்படும் கிழக்கு அபிவிருத்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு தெளிவான பதிலையும் அவர் முன்வைத்தார்.

மூதூர் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 2000 குடும்பங்களிற்கு எந்தவிதமான நிவாரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை.

அபிவிருத்தி என்பது அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்களிற்குக் கிடைக்கவில்லை.
துரத்தியடிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த பூமியில், இராணுவத்திலிருந்து இளைப்பாறியவர்களைக் குடியமர்த்துவது அபிவிருத்தி ஆகாது.

தெருக்களையும், நீண்ட நெடுஞ்சாலைகளையும் அமைத்து, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை செயற்படுத்துவதே அபிவிருத்தி என்கிறது அரசு.

தமிழ், முஸ்லிம்களின் குடியிருப்புக் காணிகளில் பாதை அமைப்பது நிலப்பறிப்பா? அல்லது அபிவிருத்தியா? என்கிற கேள்வியையும் சம்பந்தன் முன்வைத்தார்.

தமிழ் மக்களால் ஜனநாயக முறைமையில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதியின் கருத்துக்களை செவிமடுக்கும் நிலையில் அகண்ட பாரதத்தின் ஜனநாயகத் தலைமைகள் இல்லையென்பது வேறு விடயம்.

அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் துணைப்படையின் துணையோடு ஜனநாயகத்தை நிலைநிறுத்தும்படி ஆதரவு வழங்குகிறது இந்திய, அமெரிக்க வல்லரசுகள்.

மாகாண சபைத் தேர்தல்கள் வரும்போது, பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாவை இயக்கி விடுவார் அமெரிக்கத் தூதர் றொபேட் ஓ பிளேக். நேர்மையான, சுதந்திரமான தேர்தல் ஸ்ரீலங்காவில் நடைபெற வேண்டுமென கிழக்குத் தேர்தலின் போது கூறினார்.

தற்போதைய வடமத்திய, சப்ரகமுவ
மாகாண சபைத் தேர்தலின் போதும் அதையே திரும்பவும் கூறுகிறார்.
படை நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தாலும் தமிழ் மக்கள் மரங்களின் கீழ் ஏதிலியாக வாழ்ந்தாலும் உலக மகா ஜனநாயகத்தைக் காப்பாற்ற, தேர்தலை நடத்துங்களென்பதே அமெரிக்காவினதும், இந்தியாவினதும் வேண்டுதல்.

வடக்கை முழுமையாக வெற்றி கொள்ள ஒரு வருடம் தேவையெனக் கூறியவாறு, யாழ். குடாவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தப் போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். யுத்தமும், தேர்தலும் சமாந்தரமாகப் பயணிக்கும் உத்தியை, தற்போது பிரயோகிக்கும் அரசு, வல்லரசுகளின் மீது மனித உரிமை சங்கங்கள் செலுத்தும் அழுத்தங்களை திசை திருப்புமென எடைபோடுகிறது.

தேர்தல் திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றால், ஸ்ரீலங்காவில் ஜனநாயக விழுமியங்கள் இன்னமும் அழியவில்லையென்று உலகம் நம்புமென அரசு சிந்திக்கிறது.

கடன் பெறுவதற்குப் பயன்படும் தேர்தல்கள், இன அழிப்பு வெளிப்பாடுகளை மூடி மறைக்கவும் உபயோகப்படுகிறதென கூறிக் கொள்ளலாம்.

விடுதலைப் போராட்டமும், இன அழிப்பு நிலையும், இருபெரும் முரண் அடையாளங்களாக ஸ்ரீலங்காவில் இனங்காணப்படுகின்றன.

அவலத்தில் சிக்கித் தவிக்கும் வன்னி மக்களுக்குத் தேவையான அவசர நிவாரணப்
பொருட்கள் சென்றடையவிடாமல், சிங்களம் தடுப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்த அறிக்கையால், அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க விசனமடைந்துள்ளார்.

அந்த அறிக்கையை மீளப் பெறும்படி அவசர வேண்டுகோள் ஒன்றினையும், சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அவர் விடுத்துள்ளார்.

இந்த அபத்தமான வேண்டுகோளை செவிமடுக்கும் மன்னிப்புச் சபை, உறுதியான மேலதிக அழுத்தங்களை அரசின் மீது செலுத்த வேண்டுமென்பதே மரணத்தின் விளிம்பில் அவஸ்தைப்படும் வன்னி மக்களின் எதிர்பார்ப்பு.

வாகரையில் பிரயோகித்த அதேவகையான, வெளியேற்றும் தந்திரத்தை, மன்னாரில் நிறைவேற்ற முடியாமல் ஏமாற்றமடைந்திருக்கும் அரசு, பொருளாதாரத் தடையை இறுக்கி, மக்களைப் பிதுக்கி வெளியே தள்ளும் உத்தியை பிரயோகிக்கிறது.

வெறுமனே மன்னிப்புச் சபைகளும், தூதர்களும் அபிப்பிராயங்களை உதிர்த்து விட்டுப் போவது, துயர்படும் மக்களை ஆசுவாசப்படுத்தாது. யுத்தப் பிரதேசத்தில் பொதுமக்கள் பாதிப்படையக் கூடாதென்கிற ஐ.நா.வின் சாசனத்தையாவது சிங்களத்திடம் இவர்கள் கூறலாம்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கியே நாம் நகர்வோம் என்கிற விடயமும் மக்களின் ஜனநாயக உரிமைதான்.

ஆகவே அரசு நியாயப்படுத்தும் பயங்கரவாதத்திற்கெதிரான ஜனநாயகத்தை நிலைநாட்டும் போரில் தமிழ் மக்கள் எவர் பக்கமென்பது தெளிவாகப் புலப்படுகிறது.

அதேவேளை விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து, இராணுவப் பிரதேசத்திற்கு மக்களை வரவழையுங்களென்று சர்வதேச மன்னிப்புச் சபையிடம் அரசு வேண்டுகோள் விடுப்பதிலிருந்து மக்கள் எவரோடு இணைந்துள்ளார்களென்பது தெளிவாகிறது.

அரசியல் துறையினரின் அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள், விடுதலைப் புலிகளோடு இணைவதும், பரந்துபட்ட மக்கள், போரெழுச்சி கொண்டு அணிதிரள்வதும், நடைபெறப் போகும் கோரமான யுத்தத்தின் அழிவுப் பரிமாணங்களை தெற்கிற்குக் கோடிட்டுக் காட்டுகிறது.

தொலைந்த இடத்தில்தான் வாழ்வைத் தேட வேண்டும். மக்களின் ஒன்றுகூடல் விளம்பும், கருத்துநிலையும் இதுதான்.

கடல்வழி வழங்கலை அழித்து, பன்முனைத் தாக்குதலை தொடர்ச்சியாகத் தொடுத்து படைநகர்வுகளை முடக்க வான்வெளி தாக்குதலை நிகழ்த்தி, விடுதலைப் புலிகளின் மரபுசார் படையணியைத் தற்காப்பு நிலைக்குள் வைத்திருக்கலாமென்பதே சரத் பொன்சேகாவின் போர் மூலோபாயம். பலவீனமான பகுதிக்குள் நகர்வினை மேற்கொள்ளல் என்பது அவரின் தந்திரோபாய உத்தி.

எதிர்ப்பு இல்லாமல் நடந்து சென்றால், அகலக்கால் பரப்ப அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதென்று கருதலாம். இவைதான் இராணுவ மூலோபாயங்கள் எதிர்கொள்ளும் சில யதார்த்தங் கள். ஜெயசிக்குறுவின் “ஒட்டிசுட்டான்’ மன்னாரிற்கு எதுவென்று தெரியவில்லை. அதிகம் எழுதினால் அரசாங்கத்திற்குப் பிடிக்காது. சில புலம்பெயர் பத்திரிகைகளுக்கும் நெஞ்செரிவு வரும். களையெடுத்து, ஊடகத்துறையை சுத்தம் பண்ணப் புறப்பட்டு விடுவார்கள் சில “கிருஷ்ண’ துர்வாசகர்கள்.

இருப்பினும் புலம்பெயர் மக்கள் வாழும் நாடுகளில் இயக்கும் ஊடகங்கள் அனைத்தும், ஒருமித்த குரலில், அக்னிக் களத்துப் புதல்வர்களுக்கும், மரணத்தின் விளிம்பில் தவிக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் ஆதரவு தெரிவிப்பது ஆறுதலான விடயம். இன்னமும் வேர் அறவில்லை.

No comments: