Wednesday 20 August 2008

கடற்படையால் இழுத்துச் செல்லப்பட்ட கணவர் வெள்ளைவான் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்--ஒரு அதிர்ச்சி ரிப்போட்

கொழும்பு புதுச்செட்டித்தெரு 70/27ஆம் இலக்கத்தில் வசித்து வந்த யாழ்.நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராஜா பாலகுமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு கடற்படையினரால் இழுத்துச் செல்லப்பட்டு பின் இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் சென்ற தமிழ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார் என அவரது மனைவியான ரோகினி பாலகுமார் முறைப்பாடு செய்துள்ளார்.



வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த முறைப்பாட்டில் கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வீட்டுச் சோதனைக்காக பிரவேசித்த கடற்படைச் சிப்பாய்கள் தனது கணவரை தாக்கி இழுத்துச்சென்று இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் வந்திருந்த தமிழ்க் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.



அவர்களுடன் காவற்துறைக் கான்ஸ்டபிள் ஒருவர் இருந்தார் எனவும் ரோகினி தெரிவித்தார். ஏற்கனவே இதே விலாசத்திலிருந்த மார்க்கண்டு வடிவானந்தன் கடந்த 2006ஆம் ஆண்டு 24ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.



இவரை விடுவிப்பதற்கு நிறுவன உரிமையாளர் 35 லட்சம் பணம் கப்பமாகச் செலுத்தியபோதும் அவர் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என்றும், உரிமையாளர் தற்போது தமிழ் நாட்டில் தங்கியிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பிட்ட தமிழ்க்குழு பாலகுமாரை முன்னர் ஒருமுறை எச்சரித்துச் சென்றது எனவும், அதன் பிறகே கடற்படையினரின் உதவியுடன் தமிழ்க் குழுவால் தனது கணவர் கடத்தப்பட்டுள்ளார் எனவும் ரோகினி தெரிவித்தார்.


இதேவேளை, கடந்த 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை வத்தளை, ஹூணுப்பிட்டிய, சிறிஜயந்தி மாவத்தையில் வசிக்கும் கிறீஸ்தோதிரம் பிரான்சிஸ் சேர்ச்சில் என்ற 49 வயதுடைய தமிழர், இரவு 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்துத் தாக்குதலுக்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டு பின்னர் கடத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.



இவர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அதேவேளை இவர் வெளிநாட்டில் தொழில் புரிந்துகொண்டிருந்தபோது 1997இல் ஏற்பட்ட ஒரு வாகன விபத்தில் தனது ஒரு காலை இழந்தவர் ஆவார்.


இச்சம்பவம் தொடர்பாக சேர்ச்சிலின் மனைவி மக்கள் கண்காணிப்புக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன்,


இச்சம்பவம் தொடர்பாக கிரிபத்கொட காவற்துறை நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு குறித்த மேல் நடவடிக்கைகளுக்காக மக்கள் கண்காணிப்புக்குழுவின் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனக் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

No comments: