Sunday 17 August 2008

வவுனியா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவை உடனடியாக இராணுவத்திடம் ஒப்படைக்குமாறு பணிப்பாளருக்கு அரசு அவசர உத்தரவு

வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை உடனடியாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்குமாறு வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அரசால் நேற்று சனிக்கிழமை அவசர பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு இன்று முதல் படையினருக்கான சிகிச்சைப் பிரிவாக மாற்றப்படுவதுடன் படையினர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு இன்று முதல் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படவுள்ளது. பொது மக்களுக்கான சிகிச்சைகள் புதிய கட்டிடத்திலுள்ள வெளிநோயாளர் பிரிவிலேயே இன்று முதல் நடைபெறும்.

வன்னியில் நடைபெற்றுவரும் கடும் மோதல்களில் பெருமளவு படையினர் காயமடைந்து வருவதால் வவுனியா இராணுவ வைத்தியசாலையிலும் அநுராதபுரம் ஆஸ்பத்திரியிலும் பாரிய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் வவுனியா ஆஸ்பத்திரியின் தற்போதைய வெளிநோயாளர் பிரிவு உடனடியாக "வார்ட்" டாக மாற்றப்பட்டு காயமடைந்த படையினர் தங்கிச்சி கிச்சை பெறும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்படவுள்ளது.

இதற்குரிய அவசர உத்தரவு நேற்று அரசிடமிருந்து வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருக்குக் கிடைத்துள்ளதுடன் பொது மக்களுக்கான புதிய வெளிநோயாளர் பிரிவை இன்று காலை புதிய கட்டிடத்தில் திறக்கும் விதத்திலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழைய வெளிநோயாளர் பிரிவில் சகல வசதிகளும் செய்யப்பட்டு அங்கு யுத்த முனையில் காயமடையும் படையினருக்கான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளன.

No comments: