வடபகுதியில் செயற்பட்டுவரும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்தே இந்த அதிருப்தி வெளியிடப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மனிதநேய உதவிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து, வடக்கில் இதுவரை காலமும் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்திருப்பதாக அந்த ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோர்வே மக்கள் அமைப்பின் வாகனம் விடுதலைப் புலிகளால் களவாடப்பட்டமை தொடர்பாக இராணுவத்தினர் அறிவிக்கும்வரை, அந்த அரசசார்பற்ற நிறுவனத்துக்குத் தெரியாது என அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரியவருகிறது.
அரசசார்பற்ற நிறுவனங்களின் அசையும், அசையாச் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கம் பெற்றுக்கொண்டிருப்பதாகவும், அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை ஆராய்ந்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பால் களவாடப்பட்டமை குறித்து சர்வதேச சமூகம் கண்டனங்களை வெளியிடாமை குறித்தும் அரசாங்கத் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டிருப்பதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மனிதநேய உதவிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய இணைப்பதிகாரி நெய்ல் புனே உள்ளிட்ட பல்வேறு அரசாசர்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment