Monday 18 August 2008

ஆயுத தளபாடங்கள் கப்பல் கப்பலாகப் பாகிஸ்தானிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை: எதிர்வரும் மாதங்களில் அனுப்புவதற்கு உறுதிமொழி

திர்வரும் மாதங்களில் 10 நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இலங்கைப் படைகளுக்குத் தேவையான ஆயுத தளபாடங்களைத் தவறாது அனுப்பி வைப்பதற்கு இலங்கைக்கு உறுதியளித்திருக்கின்றது பாகிஸ்தான். கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இவ்வாறு நேற்றுத் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

அந்த வார இதழ் மேலும் தெரிவித்திருக்கும் சில தகவல்கள் வருமாறு:-

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்குகின்றது. இராணுவ நடவடிக்கைக்கு அவசியமான பொருள்களுடன் கப்பல்கள் கொழும்பிற்கும் கராச்சிக்கும் இடையில் அடிக்கடி பயணிக்கின்றன.

பாகிஸ்தான் தனது ஆயுதத் தளபாடத் தொழிற்சாலைகளிலிருந்தும் தனது இராணுவத்தின் சேமிப்புக் களஞ்சியங்களிலிருந்தும் இலங்கைக்கு அவசியமான ஆயுதத் தளபாடங்களை வழங்குகின்றது.

மேலும் இலங்கையுடனான தனது உறவின் ஆழத்தைப் புலப்படுத்துவதற்காக எதிர்வரும் மாதங்களில் இராணுவ நடவடிக்கைகளுக்கு அவசியமான பொருள்களுடன் 10 நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இலங்கைக்கு அனுப்பி வைக்க இஸ்லாமாபாத் உறுதியளித்துள்ளது.

இவ்வாறான உறுதிமொழியும் வலுவான ஆதரவுமே இவ்வருட இறுதிக்குள் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவோம் என அரசு அறிவிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

இலங்கை இராணுவத் தளபதிக்கும் பாகிஸ்தானின் முப்படைத் தளபதி அஸ்வக் பேர்வெஸ் கயானிக்கும் இடையில் தனிப்பட்ட நட்புறவு காணப்படுகின்றது. இதன் காரணமாக இலங்கை இராணுவத்திற்கு உடனடியாக விநியோகம் தேவைப்பட்ட வேளை அவர் அவற்றை வழங்க முன்வந்துள்ளார்.

இலங்கைக்கு அவசரமாகத் தேவைப்பட்ட இராணுவத் தளபாடங்களை உற்பத்திசெய்து வழங்குவதற்குச் சிலகாலம் பிடிக்கும் என்பதால் அதுவரை காத்திருக்காது உடனடியாக அவற்றை விநியோகிக்கும் நோக்கில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எழக்கூடிய பாதிப்பையும் புறமொதுக்கி, அதன் சேமிப்புக் களஞ்சியங்களிலிருந்து அவற்றை எடுத்து விநியோகிக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். என்றும் அந்த ஆங்கில நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.

No comments: