Tuesday 19 August 2008

வன்னிப் பகுதி மக்களைப் பாதுகாக்குமாறு கோரி யாழ் பல்கலைக்கழகத்தில் மௌனப் பிரார்த்தனை

வன்னிப் பகுதியில் இடம்பெறும் மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் துயர்துடைப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டுமெனக்கோரி யாழ் பல்கலைக்கழகத்தின் மௌனப் பிரார்த்தனையொன்று நடத்தப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் அனைவரும் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு பல்கலைக்கழக மண்டபத்தில் ஒன்றுகூடி சுமார் 15 நிமிடநேரம் மௌனமான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

வன்னியில் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்திருக்கும் மக்களுக்கான உதவிகளை வழங்க சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களும் முன்வரவேண்டுமெனக் கோரியே இந்த மௌனப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

வன்னி பெருநிலப்பரப்பைக் கைப்பற்றும் நோக்கோடு இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் மோதல்கள் காரணமாக போர் நடவடிக்கைகளுடன் தொடர்பல்லாதவர்கள் பாதிக்கப்படுவது வேதனைக்குரியது எனவும், நிச்சயமற்ற இருப்பு நிலையோடும் மிரட்சியும் அச்சமும் கலந்த வாழ்வோடும் வறுமையோடும் போராடும் மக்களின் துயரினைக் போக்குவது அவசியமானது எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“யாழ் குடாநாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட இடம்பெயர்வின்போது எம்மைத் தாங்கிய உறவுகள் இன்று மருத்துவ, இருப்பிட, உணவுத் தேவைகள் என்பல தேவைகளுக்காக ஏங்கி நிற்கின்றனர். அவர்கள் அனைவரதும் சகல தேவைகளையும் பூர்த்தி செய்வது இயலாது எனினும், அரசு தனது நலன்சார் திட்டங்களையும் அனர்த்த நிவாரண உதவிகளையும் பாரபட்சமின்றி வழங்கும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் முகவர்கள் அமைப்புக்களையும், வேறு தொண்டர் நிறுவனங்களையும் தமது மனிதாபிமானப் பணிகளுக்கு அனுமதிப்பதுடன், பொது மக்களைப் பாதிக்காத வகையில் இரண்டு தரப்பினரும் போர் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் முதன்முறையாக அப்பகுதி மக்களைப் பாதுகாக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் மௌனப் பிரார்த்தனை நடத்தப்பட்டுள்ள இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: