வன்னியில் இடம்பெறும் மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கான பாதைகளைத் திறப்பது தொடர்பாக இராணுவத்தினர், அரசாங்க அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜகத் ஜயசூரிய, மோதல்கள் இடம்பெறும் பகுதிகளைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும், அந்தப் பேச்சுவார்த்தைக்கு அமைய மக்கள் வெளியேறுவதற்கான புதிய பாதைகளைத் திறப்பதற்கு இராணுவம் தீர்மானித்திருப்பதாகவும் மேஜர் ஜென்ரல் ஜகத் ஜயசூரிய அறிவித்துள்ளார்.
எனினும், மக்கள் வெளியேறுவதற்கு எந்தப் பாதையைத் திறப்பது என்பது பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லையெனவும், மன்னார்-பூநகரி வீதியில் ஒரு பகுதியில் பாதையைத் திறப்பதற்கு இராணுவத்தினர் ஆலோசித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் எதிர்நோக்கும் உணவு மற்றும் தங்குமிடப் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்க அதிபர்கள், இராணுவக் கட்டளைத் தளபதியிடம் சுட்டிக்காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
“இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நாங்கள் தயாராகவுள்ளோம். இதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியைப் பெற்றுக்கொள்வோம்” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment