விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் க.பொ.த. (உயர்தரப்) பரீட்சை எழுதும் மாணவர்கள், விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் ஆட்லறி செல் தாக்குதல் நடைபெறும்போது
பரீட்சை மண்டபங்களை விட்டுப் பாதுகாப்புத் தேடி ஓடுவதும் நீண்ட நேரத்தின் பின் திரும்பி வந்து பரீட்சை எழுதுவதுமானதொரு நிலைமையேற்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 762 மாணவர்கள் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாக இருந்த போதிலும் மூன்றிலொரு பகுதி மாணவர்கள் போர் மற்றும் இடப் பெயர்வு காரணமாகப் பரீட்சைக்குத் தோற்றவில்லை.
துணுக்காய், மல்லாவிப் பிரதேசங்களில் நிலவுகின்ற போர்ச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி நாளாந்தம் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு நாளைக்கு ஒரு இடம் என அவர்கள் இடத்திற்கு இடம் சென்று கொண்டிருக்கின்றார்கள். இதனால் மாணவர்களும் ஓரிடத்திலிருந்து பாடசாலைக்குச் சென்று கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கென துணுக்காய் கல்வி வலயத்தில் 54 பாடசாலைகளும், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 53 பாடசாலைகளும் இருக்கின்றன.
ஆயினும் துணுக்காய் வலயத்தைச் சேர்ந்த 37 பாடசாலைகள் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்திருக்கின்றன. கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கான நிலையங்கள் கூட வேறிடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
இடம்பெயர்ந்த பாடசாலைகளின் முக்கிய ஆவணங்களை மாத்திரம் அந்தப் பாடசாலைகளின் அதிபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள்.
ஏனைய பொருட்கள் தளபாடங்கள், பாடசாலை உபகரணங்கள் அனைத்தையும் அந்தந்த இடத்திலேயே விட்டுவிட்டு வர நேர்ந்துள்ளதாக அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகியது. அன்றைய தினம் பிற்பகல் மாணவர்கள் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த போது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல்கள் காரணமாக மாணவர்கள் அச்சமடைந்து பரீட்சை மண்டபங்களை விட்டுப் பாதுகாப்புத் தேடி ஓடி, சுமார் ஒரு மணித்தியாலயத்திற்குப் பின்னர் திரும்பி வந்து எழுத வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இதனால் வன்னிப்பகுதியில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அச்சத்திற்கு மத்தியிலேயே பரீட்சை எழுத வேண்டியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment