Thursday 21 August 2008

பருவப் பெயர்ச்சி மழையால் வடக்கை நோக்கிய இராணுவ முன்நகர்வு தடைப்படும் சாத்தியம்- அரசியல் ஆய்வாளர்

வடக்கைக் கைப்பற்றும் நோக்கில் இலங்கை அரசாங்கப் படைகள் முன்னெடுத்திருக்கும் இராணுவ முன்நகர்வுகள் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆரம்பமாகும் பருவப்பெயர்ச்சி மழையால் தடைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர், முன்னாள் கேணல் சுசந்த செனவிரட்ன ஏ.பி.செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது முன்னெடுத்திருக்கும் இராணுவ முன்நகர்வானது கிழக்கைப் போன்று இலகுவானதாக அமைந்திருக்காதெனவும், கூடுதலான நிலக்கண்ணிவெடிகள் புதைத்து வைத்திருக்கக் கூடும் என்பதால் சிக்கல் நிறைந்த முன்நகர்வாக அமையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அண்மைய மோதல்களில் விடுதலைப் புலிகள் உடனடியாக பின்வாங்கிச் செல்கின்றமை, இராணுவத்தினரைக் கவரும் நிகழ்ச்சியாக அமைந்திருக்கலாம் என ஏ.பி.செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கும் செனவிரட்ன, காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் விடுதலைப் புலிகள் இன்னமும் தம்வசம் ஆட்லறி மற்றும் கனரக ஆயுதங்களை வைத்திருப்பதால், கடுமையான பதில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இந்த மௌனம் படையினருக்கு நல்லதாக அமையாது” என செனவிரட்ன கூறியுள்ளார்.

அண்மைய இராணுவ முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளைப் பலவீனமடையச் செய்துள்ளபோதும், இனப்பிரச்சினை மோதல்கள் மூலம் தீர்க்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

“உடனடியாகவோ அல்லது ஆறுதலாகவோ பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றுக்கு நாங்கள் செல்லவேண்டியே இருக்கும்” என அரசியல் ஆய்வாளர், முன்னாள் கேணல் சுசந்த செனவிரட்ன ஏ.பி.செய்திச் சேவைக்கு மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் வடமேல் பகுதியில் எட்டு மைல் விவசாய நிலங்களை அண்மித்திருப்பதால் அவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ முன்நகர்வுகளை மெதுவாக்கியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்திருப்பதாக ஏ.பி.செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிய இராணுவ முன்நகர்வை மேற்கொள்வதற்கு இராணுவத்தினர் இரவுவேளைகளில் போராடவேண்டி இருப்பதாகவும், இரவு வேளைகளிலேயே விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளைக் கைப்பற்றி அவற்றை ஒழிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரிகேடியர் கூறியுள்ளார்.

No comments: