Friday 22 August 2008

துணுக்காய், உயிலங்குளம் பகுதிகளை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் மற்றும் உயிலங்குளம் பகுதிகளை அரசாங்கப் படைகள் மீட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தினரின் 57வது படைப்பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தப் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு மிகவும் முக்கிய பகுதியாக விளங்கிய துணுக்காயை நோக்கி நேற்று முதல் இராணுவத்தினர் முன்நகர்வுகளை ஆரம்பித்திருந்ததாக அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளான்குளம்- மாங்குளம் வீதியின் மையப் பகுதியில் துணுக்காய் நகர் அமைந்திருப்பதுடன், துணுக்காயிலிருந்து வடக்கில் 5 கிலோமீற்றர் தொலைவில் உயிலம்குளம் அமைந்துள்ளது.

அண்மைய வெற்றிகள் மூலம் விடுதலைப் புலிகளின் கோட்டையெனக் கருதப்படும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகின்றமை தெளிவாகிறது என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.

இதேவேளை, துணுக்காய் மற்றும் உயிலங்குளம் பகுதிகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டமை குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.

எனினும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு விடுதலைப் புலிகள் பயிற்சிகளை வழங்கிவருவதாக தமிழ் இணையத்தளங்கள் பல செய்தி வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: