இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டமூலம் தீர்வாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தம்மைச் சந்தித்தபோது 13வது திருத்தச்சட்டமூலத்தை அமுல்படுத்துவது பற்றிக் கலந்துரையாடவில்லையெனவும், எனினும், 13வது திருத்தச்சட்டமூலத்துக்கும் மேலதிகமான தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கவேண்டும் எனவே அவர் கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்ததாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.
தமிழர்களின் பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டமூலம் ஒரு தீர்வாக அமையாது என்ற நிலைப்பாட்டிலேயே இந்தியா உள்ளது என்பதை இது தெளிவுபடுத்தியிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் பிரத்தியேக செவ்வியில் சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
13வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என 1987ஆம் ஆண்டே தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும், அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தெளிவாகக் கூறியிருந்ததது எனக் குறிப்பிட்ட சம்பந்தன், இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன், 13வது திருத்தச்சட்டமூலத்தைக் குழப்பக்கூடாது எனக் கூறினார். முதன்முதலில் தமிழ் பேசும் சிறுபான்மைத் தமிழர்களுக்கான உரிமையை வழங்கும் ஒப்பந்தமாக இலங்கை-இந்திய ஒப்பந்தமே அமைந்திருந்தது என்றார் அவர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரியங்களைக் கொண்ட தமிழ் பேசும் மக்களுக்கான மாகாணங்கள் என்பதையே இலங்கை இந்திய ஒப்பந்தம் எடுத்துக் கூறியிருந்தது எனச் சுட்டிக்காட்டிய இரா.சமப்ந்தன், எனினும், 13வது திருத்தச்சட்டமூலத்தையும், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையும் குழப்பிக்கொள்ளக் கூடாது எனக் கூறினார்.
மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் உதவிகளை வழங்க வேண்டும்
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் வழங்கவேண்டும் என இரா.சம்பந்தன் அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
விமானப்படையினரின் வான் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் போன்றவற்றால் வன்னியில் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும், இவர்களுக்கான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்ந்தும் வழங்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உண்மையில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களை இவ்வாறு நடத்தாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment