Tuesday, 19 August 2008

13 காரணங்களால் ஐக்கிய தேசியக் கட்சி மாகாணசபைத் தேர்தல்களில் தோல்வியடையும்- டலஸ் அழகப்பெரும

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் 13 காரணங்களால் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடையும் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், இரு மாகாணசபைகளுக்கும் நிறுத்தப்பட்டிருக்கும் முதலமைச்சர் வேட்பாளர்கள் கொழும்பிலிருந்து கொண்டுசெல்லப்பட்டவர்கள் என்பதால் அவர்களை ஏற்றுக்கொள்ள அப்பகுதி மக்கள் தயாராகவில்லையென இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மந்தப் போக்கிலான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள், அக்கட்சியின் 42 பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமை, அக்கட்சியின் தலைமைத்துவத்துக்குக் காணப்படும் எதிர்ப்பு, கட்சிக்குள் ஒற்றுமையின்மை உட்பட 13 காரணங்களால் எதிர்க்கட்சி மாகாணசபைத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவும் என அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டு வருடங்கள் ஆட்சியிலிருந்த ரணில் விக்ரமசிங்க இந்த மாகாணங்களில் எந்த அபிவிருத்தியையும் முன்னெடுக்கவில்லையெனவும், அவர்கள் நகர மக்களை மையமாகக் கொண்டே அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றபோதும், கிராமப் புறங்களில் தமது அரசாங்கமே அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் பிராந்தியத் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள்கின்றமை, ஸ்திரமில்லாத தேர்தல் உறுதிமொழிகள், மதத் தலைவர்களின் ஆதரவு எதிர்க்கட்சிக்கு இன்மை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சிகளே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளமை போன்றவையும் ஏனைய காரணங்களாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல் பிரசாரங்கள் நாளை நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்க அறிவித்துள்ளார்.

No comments: