Monday 18 August 2008

மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களைப் பகிரக்கூடிய தீர்வே முன்வைக்கப்படும்- திஸ்ஸ வித்தாரண

ஐக்கிய இலங்கைக்குள் மாகாணங்களுக்கு கூடியளவு அதிகாரங்களைப் பகிரக்கூடியவகையிலான இறுதித் தீர்வொன்றையே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்கும் என சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

சமஷ்டித் தீர்வொன்றை முன்வைப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அமைச்சர், மாகாணசபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்களைப் பகிரக்கூடிய தீர்வே முன்வைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

“கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் ஐக்கிய இலங்கைக்குள் கூடுதலான அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் கவனம் செலுத்தியிருந்தனர். வடஅயர்லாந்துப் பிரச்சினையை அதிகாரப் பகிர்வின்மூலம் தீர்ப்பதில் ஐக்கிய இராச்சியத்துக்கு ஏற்பட்ட அனுபவங்களை நாம் எமது வெளிநாட்டுப் பயணத்தின்போது அறிந்துகொண்டிருந்தோம். வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் எமக்குக் கிடைத்த அனுபவங்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனும் நாம் பகிர்ந்துகொண்டோம்” என அமைச்சர் தெரிவித்தார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழவிலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறியுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் தொடர்ந்தும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து விலகியே உள்ளன.

இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்வுக்குக் கொண்டுவருவதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஒரு பயனுள்ள அமைப்பு என்ற நிலைப்பாட்டையே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுள்ளது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு சில மாற்றங்கள் செய்யவேண்டி இருப்பதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.சொக்சி தெரிவித்துள்ளார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளுக்குத் தடையாக சில காரணிகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முதலாவதாக, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தமிழ் கட்சிகள் பங்கெடுக்கவில்லை. இரண்டாவதாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் பங்காளிகளும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பொதுவான இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டும். ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகள் ஒவ்வொன்றும் வௌ;வேறான தீர்வுயோசனைகளை முன்வைத்தால் அது இறுதி முடிவொன்றுக்குச் செல்வதற்குத் தடையாக இருக்கும்” என சொக்சி கூறியுள்ளார்.

அதேநேரம், மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தாம் பங்கேற்க முடியாது என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

No comments: