விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் செயற்பட்டுவரும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது உபகரணங்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவருவதற்கு இணங்கியிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
விடுதலைப் புலிகளின் கைகளுக்கு அந்த உபகரணங்கள் செல்வதைத் தடுப்பதற்கே அவர்கள் இதற்கு இணங்கியிருப்பதாக அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“அரசசார்பற்ற நிறுவனங்களின் உபகரணங்களை விடுதலைப் புலிகள் பெற்று அவற்றை இராணுவத்தினருக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாக அரசாங்கம் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. அவ்வாறு அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு தமது உபகரணங்களைக் கொண்டுவராத அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது” என அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மனிதநேய உதவிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனமான நோர்வே மக்கள் அமைப்புக்குச் சொந்தமான வாகனங்களை விடுதலைப் புலிகள் எடுத்துக்கொண்டமைபோன்று எதிர்காலத்தில் எந்தச் சம்பவங்களும் இடம்பெறாமல் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அந்த ஊடகத்துக்குத் தெரிவித்தார்.
அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களும் தமது உபகரணங்கள் மற்றும் அசையும் சொத்துக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவருவதற்கு இந்தக் கூட்டத்தில் இணங்கப்பட்டது என அமைச்சர் கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்களால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இலட்சக் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கான மனிதநேயப் பணிகள் அவசியமாகியுள்ள நிலையில், அரசசார்பற்ற நிறுவனங்களின் உபகரணங்களை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment