Saturday 23 August 2008

ஜாதிக ஹெல உறுமயவின் குற்றச்சாட்டை மறுத்தார் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் பலர் கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாக ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த குற்றச்சாட்டை கிழக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி.என்.பத்மநாதன் மறுத்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மாணவர் அமைப்புக்களின் செயற்பாடுகளில் பங்கெடுக்காத சிரேஷ்ட மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும் துணைவேந்தர் கூறினார்.

“உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக சிங்கள மாணவர்கள் எவரும் ஒருபோதும் எம்மிடம் முறைப்பாடு செய்யவில்லை” என கலாநிதி பத்மநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் பயிலும் சிங்கள மாணவர்கள், அங்குள்ள தமிழ் மாணவர்களால் மோசமாக நடத்தப்படுவதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பகிடிவதைக்கு உட்படுத்தப்படும் சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர், கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குற்றஞ்சாட்டினார்.

சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கல்வி பயில்வதற்கு அனுமதித்திருக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டைப் பாராட்டியிருந்த தேரர், எனினும், அந்தப் பகுதிகளில் காணப்படும் பாதுகாப்புச் சூழ்நிலைகளால் சிங்கள மாணவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறினார்.

இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் குற்றஞ்சாட்டிய அன்று இரவே சிங்கள மாணவர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கான மூலகாரணி எதுவென்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லையென கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒருவரும், இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், ஒரு சிற்றூழியரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தப் படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், சிங்கள மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: