விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் வன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களைத் தொடர்ந்து கடந்த 8ஆம் திகதியிலிருந்து தபால் விநியோகத்தை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்தியிருப்பதாக பிராந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னிப் பகுதிக்கான தொலைத்தொடர்புகளை ஏற்கனவே துண்டித்திருந்த அரசாங்கம் தற்பொழுது தபால் விநியோகத்தையும் இடைநிறுத்தியிருப்பதாகவும், இதனால் அங்குள்ள மக்களுடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்க மற்றும் தனியார் தபால் விநியோகங்கள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்ட தபால் பொதிகள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 தபால் நிலையங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. எனினும், அவை தற்பொழுது செயலிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
வன்னிப் பகுதிக்கான தொலைபேசி இணைப்புக்கள் யாவும் துண்டிக்கப்பட்டிருப்பதால் மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலும் தமது நிர்வாகப் பணிகளை முன்னெடுத்துச்செல்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் அலுவலகம் குறைப்பட்டிருப்பதாக தமிழ்நெட் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்திருக்கும் இலட்சக்கணக்கானவர்களுக்கு வழங்கப் போதியளவு உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் இல்லாமை, இவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பாக உரிய தரப்புடன் தொடர்புகொள்ளமுடியாதிருப்பதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றில் திரவப்பணத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், வங்கிகளிலிருந்து 5 இலட்சம் ரூபாவிலிருந்து 1 இலட்சம் ரூபா வரையிலான பணத் தொகைகளே மீளப்பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவதாகவும் தமிழ்நெட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளேமோர் தாக்குதல்கள் இடம்பெறுவதால் வவுனியாவிலிருந்து கிளிநொச்சிக்குப் பணத்தை எடுத்துச் செல்வதற்கு அதிகாரங்கள் பின்னடிப்பதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment