Friday 22 August 2008

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேற்றம்: மாணவன் கொலையின் எதிரொலி

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகபீட இறுதியாண்டைச் சேர்ந்த மாணவன் பஸன் சமரசிங்க(22) இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்குப் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து சிங்கள மாணவர்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டதாக கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்றிரவு 8.45 மணியளவில் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள், சிறியரக கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அந்த மணவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கிழக்குப் பல்லைகலைக்கழகத்தின் விடுதிகளில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் அவர்களின் பாதுகாப்புக்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகத்தின் விரிவுரை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லையெனவும் கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார். எனினும், இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லையென அவர் கூறினார்.

நேற்றைய சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர் பஸன் சமரசிங்கவின் சடலம் பிரேதப் பிரசோதனைக்காக மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர் குருநாகல், பொத்துஹர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

‘கிழக்குப் பல்கலைக்கழகம் மரணவீடு’ என முன்பே அச்சம் வெளியிட்டிருந்த தாயார்

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பெரும்பான்மை இன மாணவர் ஒருவரை அனுமதித்துவிட்டுத் திரும்பியிருந்த அவரின் தாயார், மரணவீட்டில் தனது பிள்ளையை விட்டுவந்ததைப் போன்றிருப்பதாக அண்மையில் பி.பி.சி.க்கு கூறியிருந்தார்.

இவ்வாறு அவர் கூறி, ஒரு மாத காலத்துக்குள்ளேயே கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மை இன மாணவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

“எனது பிள்ளையை மரண வீடொன்றில் விட்டுவிட்டு வந்ததாகவே நான் நினைக்கிறேன். இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டு எனது பிள்ளையைப் படிப்பித்தது இவ்வாறானதொரு இடத்தில், பெரும் அச்சத்துக்கு மத்தியில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு அல்ல” என கிழக்குப் பல்பலைக்கழக மருத்துவ பீடத்தில் தனது மகனை அனுமதிக்கச் சென்றிருந்த அந்தத் தாயார் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தனது கவலையைத் தெரியப்படுத்தியிருந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து அவர்களது பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இதுதவிரவும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய கடிதமொன்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அண்மையில் அனுப்பிவைத்திருந்தனர்.

ஜாதிக ஹெல உறுமய

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் பயிலும் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தொல்லைக்களுக்கு உள்ளாவதாக ஜாதிக ஹெல உறுமய நேற்று வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தது.

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் சிங்கள மாணவர்கள் மாத்திரமே இவ்வாறான பிரச்சினைக்கு முகம்கொடுப்பதாகவும், அங்கிருக்கும் தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

அந்தப் பல்கலைக்கழகங்களிலுள்ள சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தாக்கப்படுவதாகவும், அவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட மாணவர்களை ஜாதிக ஹெல உறுமய அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மாணவர்கள்

எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் எந்த இனத்தைச் சேர்ந்த மாணவரும் அனுமதிக்கப்படலாம் என அரசாங்கத் தரப்பில் நியாயம் கூறப்படுகின்றபோதும், தற்போது வடக்கு, கிழக்கில் நிலவும் சூழ்நிலையில், சிங்கள மாணவர்களை அங்கு அனுமதிப்பதானது தமது பல்கலைக்கழகங்களை ஆக்கிரமிக்கும் அரசாங்கத்தின் திட்டமாக இருக்கலாமென தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: