மடு தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா இம்முறை நடைபெறாத போதும், திருவிழாவையொட்டி நடைபெற்ற திருப்பலிப் பூசை மற்றும் திருச் சொரூப ஆராதனை வழிபாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த தமிழ் கத்தோலிக்கர்கள் படையினரால் அனுமதிக்கப்படவில்லை.
சிங்கள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை மூன்று அமைச்சர்களும் சுமார் 500 சிங்கள கத்தோலிக்கர்களும் தென்பகுதியிலிருந்து மடுவுக்கு படையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
மதவாச்சி ஊடாக மட்டுமே சிங்கள பக்தர்கள் மடுவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்ததால் மன்னார் மற்றும் வவுனியாவிலிருந்து பல தமிழ் கத்தோலிக்கர்கள் மதவாச்சிக்கு சென்றிருந்தனர். எனினும், தமிழர்கள் எவரும் மடுவுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதேநேரம், மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு விரும்புவதாக வவுனியா இராணுவ முகாமுடன் தொடர்பு கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட எம்.பி. சிவநாதன் கிசோர் கேட்டபோது, மதவாச்சிக்கு வந்தால் பொலிஸ் பாதுகாப்புடன் அங்கு அழைத்துச் செல்ல முடியுமெனத் தெரிவித்தனர்.
பொலிஸாரின் பாதுகாப்பின்றி தானாகச் செல்ல வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டுமென சிவநாதன் கிசோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment