வடக்கில் உரிமைக்காகப் போராடும் தமிழ் இளைஞர்களையும் தெற்கில் வேலை வாய்ப்பின்மை, வறுமை என்பவற்றை எதிர்த்துப் போராடும் இளைஞர்களையும் இராணுவபலத்தின் ஊடாக அழித்தொழிக்கும் இரண்டு வகையான யுத்தங்களையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இன்றைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என இடதுசாரிமுன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண சபை தேர்தலில் கேகாலை மாவட்ட தலைமை வேட்பாளர் பிறேம்குலதுங்கவை ஆதரித்து எட்டியாந்தோட்டை சந்தை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று இந்த அரசாங்கம் இரண்டு முனைகளில் யுத்தத்தை நடத்துகின்றது. ஒரு புறம் வடபகுதியில் தமது நிலத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் இளைஞர்களை இராணுவத்தின் மூலம் அழிக்க முயல்கின்றது. மறுபக்கத்தில் வாழ்க்கைச் செலவு உயர்வு,
வேலையின்மை போன்றவற்றிற்கு எதிராகப் போராடும் தென் இலங்கை இளைஞர்களை அவசர காலச் சட்டத்தின் துணையுடன் ஒடுக்க முயல்கிறது. இத்தகைய சூழ்நிலையில் வடக்கில் தமது உரிமைக்காக போராடும் இளைஞர்களுக்காகவும் தெற்கில் பொருளாதார பிரச்சினை, வேலைவாய்ப்பிற்காக போராடும் இளைஞர்களுக்காகவும் குரல் கொடுப்பது தமது கடமையாகும்.
ஜே.வி.பி. அவசர காலச் சட்டத்திற்கு ஆதரவளித்து விட்டு இளைஞர்களின் போராட்டத்தை ஆதரிப்பதாக கூறுவது ஒரு ஏமாற்று நாடகமாகும்.
கடந்த ஜூலை 10 ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடக்கி வைத்த ஜே.வி.பி. அதை இடைநடுவில் கைவிட்டது என்பதே உண்மை நிலையாகும். ஆனால், தாங்கள் அந்த போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்ததாகவும், இந்தப் போராட்டத்துக்கு மலையக தோட்டத் தொழிலாளர் மற்றும் வடக்கு, கிழக்கு தொழிலாளர்கள் முழு ஆதரவை தெரிவித்து இருந்தனர் எனவும் கூறினார்.
இன்றும் ஜே.வி.பி. எல்லா தேசிய சக்திகளையும் இணைத்து போராட்டம் நடத்த வக்கற்றே நிற்கிறது. பல்வேறு நிலைகளில் இந்த அரசாங்கத்தின் பொய் வேஷம் கலைந்து வருகிறது. இந்த நாட்டு மக்கள் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை அப்புறப்படுத்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment