Tuesday, 19 August 2008

கச்சதீவில் கால் பதித்த போது தேசம் ஒன்றை வெற்றி கொண்ட மகிழ்ச்சி – புஸ்கின் குமார்

இந்தியாவில் இருந்து வெளிவரும் பிரபல தமிழ் சஞ்சிகையான குமுதம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் புஸ்கின் ராஜ்குமார் மீனவர்களுடன் இணைந்து கச்சதீவுக்கு சென்றுள்ளார்.

இந்த விஜயம் தொடர்பான தகவல்களை அவர் நாளை (20) வெளிவரவுள்ள குமுதம் சஞ்சிகையில் விபரித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் இருந்து இந்திய மீனவர்களுடன் படகில் அவர் கச்சதீவுக்கு சென்றதாகவும் இந்த பயணத்திற்கு சுமார் 2 மணிநேரம் சென்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் கச்சதீவுக் கரையில் கால் பதித்த போது, தேசம் ஒன்றை மீண்டும் வெற்றிகொண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது எனத் தெரிவித்த அவர் தன்னுடன் சென்ற மீனவர்களுக்கு மீன்பிடி அடையாள அட்டை இருப்பதனால் அவர்கள் கச்சதீவு அருகில் சென்று மீண்டும் இந்திய எல்லைக்கு வர உரிமை உள்ளது.


எனினும் தான் அங்கு செல்வது ஆபத்தானது என ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். தாம் மீனவர்களைப் போல் உடைகளை அணிந்து கொண்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய கடலோர பாதுகாப்புப் படையின் படகுகள் எல்லா இடங்களிலும் தமக்கு தென்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


1974 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 1976ஆம் ஆண்டு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட சர்வதேச கடல் எல்லை தொடர்பான உடன்படிக்கையின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என உத்தியோபூர்வமாக ஏற்றுக்கொண்டது.


இதனடிப்படையில் குமுதம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் இலங்கையின் பகுதி ஒன்றுக்குள் பிரவேசிக்க இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. குமுதம் ஊடகவியலாளர்;

கச்சதீவுக்கு செல்ல வீசா அனுமதியை பெற்றிருக்கவில்லை என சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் ஹம்சா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


பாக்கு நீரிணைப் பகுதி இலங்கை அரசினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கைப் படகுகள் செல்வதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமுதம் இதழின் ஊடகவியலாளர் இலங்கையின் சட்டத்தை மீறியுள்ளதுடன் அதன் ஆசிரியர் அதற்கு அனுசரணை வழங்கியுள்ளார்.


இந்தியா, இலங்கை தொடர்பில் அழுத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுவதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

No comments: