கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையில் குறைந்து கூடும் நிலைமை காணப்பட்டாலும் இதுவரை காணாமல் போனவர்கள் குறித்து அரசாங்கமே பதில்கூறவேண்டும் என மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
“கடந்த வாரங்களில் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறைவாகக் கிடைத்துள்ளது என்பதற்காக கடத்தல்கள் குறைவடைந்து விட்டதாகக் கூறிவிட முடியாது. நேற்றுக் கூட இரண்டு கடத்தல் சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்திருக்கின்றன” என மனோ கணேசன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
“கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை கூடிக் குறைந்தாலும், இதுவரை கடத்தப்பட்டவர்கள் குறித்து யார் பதிலளிப்பது” என அவர் கேள்வியெழுப்பினார்.
இந்த வருடத்தில் இதுவரை 104 பேர் காணாமல் போயிருப்பதாக மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் சுமார் 200 பேர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லையெனவும் மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
“கடத்தல் சம்பவங்கள் குறைந்துவிட்டன, பிரச்சினை தீர்ந்துவிட்டது எனக் கூறி அரசாங்கம் தப்பிக்கொள்ள முடியாது. காணாமல் போனவர்கள் குறித்து அரசாங்கமே பதில் சொல்லவேண்டும்” என மனோ கணேசன் கூறினார்.
கடத்தல் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன என்பதை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனக் குறிப்பிட்ட மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பட்டாளர், அண்மைய பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக கடத்தல்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் இதனைவிட கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக கடத்தல் சம்பவங்கள் குறைவடைந்து சென்றிருப்பதாகத் தெரிவித்திருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் ரஞ்சித் குணசேகர, பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கைகளாலேயே கடத்தல் சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment