வடபகுதியில் உணவுப் பொருட்களுக்கோ, அத்தியாவசியப் பொருட்களுக்கோ எந்தவிதமான தட்டுப்பாடும் கிடையாதெனத்தெரிவித்த இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச உள்நாட்டு ஊடகங்கள் சிலவற்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மரங்களுக்கடியில் வசிப்பதாகக்கூறிய செய்தியில் உண்மை எதுவும் கிடையாதெனவும் கூறினார்.
அதேசமயம் வட பகுதிக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ஒன்றரை மாதங்களுக்குப் போதுமான தொகை கையிருப்பில் இருப்பதாகவும் வடக்கு மீட்கப்பட்டதும் முழுமையான இயல்பு நிலையை உடனடியாக கொண்டுவர முடியுமெனவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ன தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மாலை இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்படி தகவல்கள் வெளியிடப்பட்டன.
அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
கடந்த வாரத்தில் ஒரு சில வெளிநாட்டு ஊடகங்களிலும் உள்நாட்டு ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருந்த செய்திகள் எம்மை வியப்படையச் செய்தன.
உடனடியாகவே நாம் கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்களை கொழும்புக்கு வரவழைத்து கலந்துரையாடினோம். அவர்கள் தெரிவித்த தகவல்கள் மூலம் அந்த ஊடகங்கள் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது உறுதி செய்யப்பட்டன.
கிளிநொச்சியில் அகதிகளாக வந்த மக்கள் மரங்களுக்கடியில் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை எனவும் அந்த ஊடகங்கள் தெரிவித்திருந்தன. சில ஊடகங்கள் அரசாங்கத்தை அபகீர்த்திக்குள்ளாக்கவும் எவ்வாறாயினும் யுத்தத்தை நிறுத்துவதற்கான தந்திரோபாயமாகவும் இதனை முன்னெடுப்பதாகவே நாம் கருதுகின்றோம் எனத்தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment