Monday 18 August 2008

2008ஆம் ஆண்டிற்கான தமிழீழ கிண்ணத்தை பிரித்தானியா சுவீகரித்தது

சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழீழ கிண்ணத்திற்கான அனைத்துலக ரீதியான விளையாட்டுப் போட்டியில், தமிழீழ சுழல் கிண்ணத்தினை பிரித்தானியா பெற்றுள்ளது.

நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) மின்னொளியில் நடைபெற்ற விறுவிறுப்பான உதைபந்தாட்ட இறுதிச்சுற்றில் நெதர்லாந்து, பிரித்தானியா அணிகள் மோதின.

குறிக்கப்பட்ட நேரத்தில் எந்தவொரு அணியும் புள்ளி பெறாத நிலையில், தண்ட உதை மூலம் பிரித்தானிய அணி வெற்றி பெற்றது.

உதைபந்தாட்டம் மட்டுமன்றி, துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், பெண்களிற்கான உதைபந்தாட்டம், பெண்களிற்கான கரப்பந்தாட்டம், பார்வையாளர்களுக்கான குண்டு எறிதல், ஈட்டி எறிதல், குறிபார்த்துச் சுடுதல், சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் என பல போட்டிகள் இடம்பெற்றன.

சுவிஸ் தமிழர் இல்லத்தினால் அனைத்துலக ரீதியாக நடத்தப்பட்ட இந்த தமிழீழ கிண்ணத்திற்கான உதைபந்தாட்டம், மற்றும் ஏனைய போட்டிகள் மாபெரும் விளையாட்டு விழாவாக கடந்த இரண்டு தினங்களும் இடம்பெற்றன.

சுவிற்சர்லாந்தில் இருந்து மட்டுமன்றி பிரித்தானியா, நெதர்லாந்து, டென்மார்க், பிரான்ஸ் என ஏனைய பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அணிகள் போட்டிகளில் கலந்து கொண்டிருந்தன.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற 2008ஆம் ஆண்டிற்கான இந்த மாபெரும் விளையாட்டு விழாவை ஐரோப்பிய தொலைக்காட்சி இரண்டு நாட்களும் முழுமையாக ஒளிப்பதிவு செய்திருந்தது.

அதுமட்டுமன்றி, பார்வையாளர்களாகவும், போட்டியாளர்களாகவும் கலந்துகொண்டிருந்த மக்கள் மத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஐரோப்பிய தொலைக்காட்சி நடத்தியிருந்தது.



















No comments: