Wednesday 20 August 2008

விடுவிக்கப்பட்ட பகுதிகளில் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும்- பிரதிப் பொலிஸ்மா அதிபர்

அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட விடத்தல் தீவு உட்பட ஏனைய பகுதிகளில் விரைவில் புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிதாக அமைக்கப்படவிருக்கும் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுவதற்குப் பொலிஸார் முன்வந்திருப்பதுடன், அவ்வாறு அமைக்கப்படும் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறியுள்ளார்.

மடு பகுதியில் புதிய பொலிஸ் நிலையமொன்றை கடந்த சனிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட மன்னார் மற்றும் வடக்கின் ஏனைய பகுதிகளில் பகுதியில் வீதிகள் மற்றும் பாலங்களை அமைப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கூறியிருந்தார்.

அங்கிருக்கும் மக்களுக்கான அனைத்து அடிப்படை உட்கட்டுமான வசதிகளைப் பூர்த்திசெய்து கொடுப்பதற்கு தமது அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்திருப்பதாகவும், வடபகுதியைச் சேர்ந்த மக்கள் இதுவரை கண்டிராத சீரான வீதிகளை இனிவருங்காலங்களில் காண்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், பாலங்கள் மற்றும் வீதிகளை அமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாகத் தெரியவருகிறது. பாலங்களை அமைப்பதில் தேர்ச்சிபெற்ற பொறியியலாளர்களை கூடியளவு சம்பளம் கொடுத்து பணிக்கு வருமாறு அரசாங்கம் அழைத்திருப்பதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, யாழ் குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வயல்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் கட்டளைக்கு அமைய உயர்பாதுகாப்பு வலயப் பகுதியான அரியாலையில் விவசாயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயம் அமைந்திருக்கும் அரியாலையில் கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியிலிருந்து அரியாலை புகையிரதப் பாதைக்கு இடைப்பட்ட 103 ஏக்கர் வயல் நிலங்களில் விவசாயம் செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதற்கமைய 512வது படைப்பிரிவினால் வழங்கப்படும் விசேட அடையாள அட்டைகளுடன் விவசாயிகள் விவசாயம் செய்ய அனுமதிக்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.

No comments: