Friday 22 August 2008

இராணுவத்தினர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஒளிப்பதிவு செய்து வெளியிடுமாறு மேர்வின் அறிவுரை

இலங்கை இராணுவத்தினர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஒளிப்பதிவு செய்து வெளியிடுமாறு அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சிரச ஊடகவியலாளர்களை தாக்கி அவர்களிடம் இருந்து ஒளிப்பதிவுக் கருவிகளைப் பறித்தமை தொடர்பில் நீதிமன்றதினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேர்வின் சில்வா சட்டத்தரணி மூலம் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


அவர் நீதிமன்றத்திற்குள் பிரவேசிப்பதை ஒளிப்பதிவுசெய்த ஊடகவியலாளர்களிடமே அமைச்சர் மேர்வின் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா படையினர் தமிழர்களைத் தாக்குவதாகக் கூறியுள்ளமை தொடர்பாக அரசாங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கேட்டபோது,

படையினர் எந்த இனத்திற்கு எதிராகவும் தாக்குதல்களை நடத்தவில்லை, பயங்கரவாதிகளுக்கு எதிராகவே தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கு அனைவரது ஆசிர்வாதமும் அவசியம் என கூறியுள்ளார்.


அமைச்சர் மேர்வின் கூறிய கருத்து தொடர்பில் தன்னால் எதனையும் தெரிவிக்க முடியாது எனவும் தான் அதனை அறிந்திருக்கவில்லை என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் வடக்கில் தமிழர்களை தாக்குகின்றனர் என்று கூறுவது, படையினர் இனப்படுகொலை புரிகின்றனர் எனப் பொருள்படுகிறது.

மேர்வின் சில்வா அரசாங்கத்தின் அமைச்சர் என்பதால், அரசாங்கத்தின் கொள்கை இதுவோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments: