தேசிய அடையாள அட்டை மற்றும் சிறிலங்கா காவல்துறை பதிவு பத்திரம் எதுவும் இல்லாமல் கொழும்பு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணனை வெள்ளை வான் குழுவினர் கடத்தவில்லை
என்றால் அதற்கு அவர் தனது குலதெய்வம் சிவபெருமானுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று மேல் மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணன் சார்க் மாநாட்டு மண்டபத்திலிருந்து தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு கொழும்பு கொம்பனி வீதியால் நடந்து சென்றுள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விடயத்தில் இடம்பெற்றுள்ள ஓட்டை குறித்து நாம் கருத்து சொல்லவிரும்பவில்லை. ஏனெனில், அது தீவிரமான விடயம்.
ஆனால், அவர் வெள்ளை வான் கடத்தல் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க கூடிய சூழ்நிலை அங்கு நிலவியிருக்கிறது.
ஏனெனில், நாராயணன் நடந்து சென்ற கொம்பனி வீதி பல வெள்ளை வான் கடத்தல்கள் நடைபெற்ற இடம். அத்துடன், அவருக்கு சிங்களம் பேச தெரியாது. கொஞசம் கறுப்பு நிறம் வேறு. அவரிடம் சிறிலங்கா தேசிய அடையாள அட்டையோ காவல்துறையில் பதிவு செய்த பத்திரமோ இல்லை.
இப்படியான அடையாளங்களுடன் கொழும்பில் நடமாடும் எந்த தமிழரும் விசாரணை எதுவுமின்றி வெள்ளை வானில் கடத்தப்பட்டுவிடுவார்கள். இதுதான் இங்குள்ள நிலமை.
No comments:
Post a Comment