யாழ் குடாநாட்டிலுள்ள மின்மாற்றிகளுக்கு விசேட பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளனர். வீதிகளால் செல்லும் பொதுமக்களைக் கொண்டே இந்தப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுவதாக யாழ் பிராந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக யாழ் குடாநாட்டிலுள்ள மின்மாற்றிகள் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சாவகச்சேரி, மட்டுவில், கரவெட்டி ஆகிய பகுதிகளில் மின்மாற்றிகள் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
கொக்குவில் பகுதியில் மின்மாற்றியொன்று இனந்தெரியாத நபர்களால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. இது திருடர்களின் கைவரிசையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு அதிகரித்திருக்கும் மின்மாற்றிகளைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவற்றுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்த இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், மின்மாற்றிகள் அமைந்திருக்கும் பகுதிகளில் இரண்டு இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
அதேநேரம், மின்மாற்றிகளைச் சுற்றி இராணுவத்தினரால் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், வீதிகளால் செல்லும் பொதுமக்களைக் கொண்டே இந்த வேலிகள் அமைக்கப்படுவதுடன், வேலிகளுக்கான மரங்கள் யாருமற்ற காணிகளிலிருந்து வெட்டப்படுவதாகவும் யாழ் குடாநாட்டு மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இவ்வாறு சிறுப்பிட்டி பகுதியில் மின்மாற்றியைச் சுற்றி வேலி அமைத்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். உயர் மின்சாரத்தை வழங்கும் மின்மாற்றியை நிறுத்தாமல் பாதுகாப்பு வேலி அமைக்க முற்பட்டவர்கள் மீதே மின்சாரம் தாக்கியதாகவும், இந்தச் சம்பவத்தில் 10 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையின் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக யாழ் வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.
வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே யாழ் குடாநாட்டில் இவ்வாறு மின்மாற்றிகளைச் சேதப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment