Friday, 15 August 2008

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது பற்றி அரசாங்கம் ஆராய்வு

வன்னிப் பிராந்திய மக்கள் எதிர்நோக்கியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக மனிதநேய உதவிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

வன்னிப் பிராந்திய மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் நிவாரண உதவிகளை வழங்கி வருவதாகக் கூறப்படுகின்றபோதும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக உடனடியாக ஆராய்ந்து அறிவிக்குமாறு அந்தப் பகுதிகளைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களிடம் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும், பசில் ராஜபக்ஷவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைய மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும், எதிர்வரும் வாரங்களில் அவர்களுக்குத் தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்திக்கொடுக்கவிருப்பதாகவும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்தும் இடப்பெயர்வுகள் அதிகரித்தால் அவர்களைத் தங்கவைப்பதற்கான திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டும் எனவும் இரண்டு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும், மனிதநேய உதவிகளின் ஆலோசனைக் குழுவிடம் அறிவித்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் மரங்களில் கீழ் தங்கியிருக்கிறார்கள் என வெளியான தவல்களை அப்பகுதியைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள் மறுத்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்குப் போதுமானளவு உணவுப் பொருள்களே இருப்பில் இருப்பதாக அரசாங்க அதிபர்கள் சுட்டிக்காட்டியிருப்பதுடன், தேசநிர்மாண மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் உலக உணவுத் திட்டத்திட்டம் ஆகியன இணைந்து ஒரு மாதத்துக்கான நிவாரண உணவுப் பொருள்களை கையிருப்பில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

எனினும், கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 8 மில்லியன் ரூபாய்களையும், முல்லைத்தீவு மாவட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 8 மில்லியன் ரூபாய்களையும் ஏற்கனவே தாம் ஒதுக்கியிருப்பதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு, மனிதநேய உதவிகளின் ஆலோசனைக் குழுவிடம் அறிவித்தது.

இதற்கும் மேலதிகமாக உடுதுணிகள், சமையலறை சாதனங்கள், நீர்த்தாங்கிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய இரண்டு லொறி பொருள்கள் எதிர்வரும் வாரம் வன்னிக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும், இடம்பெயர்ந்த மக்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் விரைவில் அனுப்பிவைக்கப்படும் எனவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருள்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் ஒப்புதல் கிடைத்தவுடன் உரிய இடங்களுக்கு அனுப்பிவைக்க பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தயாராகவிருப்பதாக சுகாதார அமைச்சு மனிதநேய உதவிகளின் ஆலோசனைக் குழுவுக்கு அறிவித்தது.

இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அரசாங்க அதிபர்களுக்கு உறுதிமொழி வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: