Saturday 23 February 2008

வேலைக்கு செல்லும் தம்பதிகள் வாழ்க்கையில் திருப்தி : *கருத்து வேறுபாடு சகஜம்* என்கிறது சர்வே

கணவன் மற்றும் மனைவி என இரண்டு தரப்பினரும் வேலைக்கு செல்லும், குடும்பங்கள், பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே உள்ளன, என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. கணவன் மற்றும் மனைவி என இரு தரப்பினரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில், கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன. இது, விவாகரத்துக்கு வழி வகுக்கிறது என்ற கருத்து பரவலாக இருக்கிறது. இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்ய, “டீம்லீஸ் சர்வீசஸ்’ என்ற நிறுவனம் முடிவு செய்தது. உலகளவில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும், “சினோவட்’ என்ற நிறுவனத்திடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டது. டில்லி, மும்பை, பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் நகரங்களில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக இருக்கும் தம்பதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வில் கிடைத்த தகவல் வருமாறு: ஆடம்பர வாழ்க்கை தேவையில்லை: கணவன் மற்றும் மனைவி வேலைக்கு செல்லும் குடும்பங்களில், பெரும்பான்மையானவை மகிழ்ச்சியுடனே உள்ளன. இந்த திருப்தி அளவு இந்தியாவில் மிக அதிக பட்சமாக 87 சதவீதம் உள்ளது. தம்பதிகளில் 34 சதவீதம் பேர், கருத்து வேறுபாடுகள் ஏற்படும், விவாகரத்து வரை நிலைமை செல்லும் என மாற்று கருத்தும் தெரிவித்துள்ளனர். குடும்பத்துக்கு போதிய நேரம் ஒதுக்க முடியாதது, பணியிடங்களுக்கு செல்ல நீண்ட நேரம் பயணம் செய்வது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன, என 63 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இரட்டை சம்பளம் உள்ள குடும்பங்களில் கருத்து வேறுபாடு சகஜம், என்பதை டில்லியை சேர்ந்த 56 சதவீத தம்பதிகள் மறுத்துள்ளனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தம்பதிகளில் 52 சதவீதம் பேர், “வாய்ப்பு கிடைத்தால், ஒருவர் சம்பளத்தில் குடும்பம் நடத்த தயார்; ஆடம்பர வாழ்க்கை தேவையில்லை. ஆனால், திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர். 48 சதவீதம் பேர், இரண்டு பேரும் வேலைக்கு செல்ல வேண்டும்; ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

“வார இறுதி பெற்றோர்’ : டில்லி (66 சதவீதம்) மற்றும் பூனே (66 சதவீதம்) நகரங்களில் வசிக்கும் தம்பதிகள் ஆடம்பர வாழ்க்கை மீது விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐதராபாத், பெங்களூரு மற்றும் மும்பையை சேர்ந்த தம்பதிகள், ஒருவர் சம்பளத்தில் குடும்பத்தை நடத்த தயார் என கூறியுள்ளனர். குறிப்பாக, ஐதராபாத்தைச் சேர்ந்த 95 சதவீத தம்பதிகளிடம் இந்த போக்கு காணப்படுகிறது.

குழந்தையை பார்த்துக் கொள்வது உட்பட வீட்டு வேலைகளை கணவர் பகிர்ந்து கொள்வது அதிகரித்துள்ளது. இருந்தாலும், வேலைக்கு செல்லும் தம்பதிகள், குழந்தைகளைப் பொறுத்தவரை “வார இறுதி பெற்றோர்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

54 சதவீத தம்பதிகள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்ற ஏக்கம், புனே, ஐதராபாத் மற்றும் டில்லி தம்பதிகளிடம் உள்ளது. குழந்தை பராமரிப்பு உட்பட குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள், இரட்டை சம்பளம் என்ற விஷயத்தால் மறைந்து போய் விடுகின்றன.

குழந்தை பேறுக்கு பிறகு பணியில் சேரும் போது ஏற்படும் பிரச்னைகள், பதவி உயர்வுடன் கூடிய மாறுதலுடன், பிற நகரங்களுக்கு கணவர் செல்லும் போது உடன் செல்ல முடியாதது போன்றவை வேலைக்கு செல்லும் பெண்களை பெரிதும் பாதிக்கும் விஷயங்களாக உள்ளன.

Thank you:nitharsanam

No comments: