Sunday, 30 March 2008

ஈராக்கில் தொடரும் மோதல்களில் 130 பேர் பலி பாக்தாத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்(வீடியோ இணைப்பு)

ஈராக் பாதுகாப்புப் படையினருக்கும் ஸியா ஆயுதக் குழுக்களுக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், தலைநகர் பாக்தாத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள இவ் ஊரடங்கு உத்தரவு வியாழக்கிழமையிலிருந்து நாளை மாலை 5 மணிவரை அமுலில் இருக்குமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் தென்பகுதியிலுள்ள பஸ்ரா நகரில் ஆரம்பித்த மோதல்களில் இதுவரை 130 பேர் பலியாகியுள்ளதுடன், இம் மோதல்கள் பாக்தாத்திற்கும் பரவியுள்ளன. ஸியா மதகுரு மொஹ்டாடா சத்ரின் தலைமையில் இயங்கும் மெஹ்தி இராணுவக் குழுவுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் பஸ்ராவில் கடும் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், வன்முறைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்நெருக்கடி நிலைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கு சத்ர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈராக்கில் நிலவும் இரத்தக் களறி நிலமைக்கு அமைதி முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அமைதி வழியில் தீர்வைக் காண்பதற்குமே தாம் விரும்புவதாக சத்ரின் உதவியாளரால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போராளிகளுக்கெதிரான நடவடிக்கைகளை தேவையான அளவு காலத்திற்கும் தொடரப் போவதாக அந்நாட்டுப் பிரதமர் நூரி மாலிக் உறுதியெடுத்துள்ளார்.

தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதற்கு ஒரு முடிவு காணப்படும் வரை எமது நடவடிக்கைகள் தொடரும். பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லையென மாலிக் தெரிவித்துள்ளார்.

பஸ்ரா நகர் நடவடிக்கைகள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்திவரும் மாலிக், சுமார் 30,000 இராணுவத்தினரையும் பொலிஸாரையும் நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, மக்கள் செறிந்து வாழும் சில பகுதிகளை மெசந்தி இராணுவக் குழுக்கள் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன.

இந்நிலையில் பஸ்ரா வன்முறைகளை பிரதமர் மாலிக் கையாளும் விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி புஷ் மாலிக்கிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாக்தாத்திலுள்ள அதிகூடிய பாதுகாப்பு வலயமான கீறின் பீஸின் மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களினால் அதிகளவான அமெரிக்கர்கள் காயமடைந்துள்ளனர்.

நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் வரை அப்பகுதியிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பஸ்ரா நகரிலுள்ள ஈராக்கின் இரு பிரதான எண்ணெய் விநியோகக் குழாய்கள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளமையால் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.

பஸ்ரா நகரில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களின் அளவு வரவர அதிகரித்து வருவதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.


No comments: