Saturday 29 March 2008

தண்ணீர் இல்லாததால் பெண் தர மறுப்பு; ஆண்கள் தவியாய் தவிப்பு! கிராமத்தில் “டும் டும்’ நடந்து 15 ஆண்டாகிறது

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 15 ஆண்டாக குடிநீர் இல்லாததால்,பெண் தர மற்ற கிராமத்தினர் மறுத்து வருகின்றனர். இதனால், 25 வயது முதல், 40 வயதுள்ள ஆண்கள், பிரம்மச்சாரியாக “விரக்தி’யில் உள்ளனர். குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு அருகே உள்ளது சாய்லா கிராமம். இந்த கிராமத்தில் 15 ஆண்டாக குடிநீர்ப் பிரச்னை தீராமல் உள்ளது. 5 கி.மீ., தூரம் சென்று தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும். இதனால், பக்கத்தில் உள்ள 75 கிராமங்களில் உள்ள குடும்பத்தினர், இந்த கிராமத்தினருக்கு பெண் தர மறுத்து வருகின்றனர். இதனால்,15 ஆண்டாக, இந்த கிராமத்தில் திருமணங் களே நடக்கவில்லை. 25 வயது முதல், 40 வயதுள்ள ஆண்கள், நூற்றுக்கணக்கான பேர் திருமணம் செய்ய வழியில்லாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வருகின்றனர். கிராமத்தில், பிராமணர், படேல், ஜெயின் இனத்தை சேர்ந்த மக்கள் குடியிருக்கின்றனர். குடிநீர்ப் பற்றாக்குறை தலைவிரித்தாடியதை அடுத்து, கிராமத்தை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்தது. கிராமத்தில் ஜனத்தொகை 16 ஆயிரமாக இருந்தது, இப்போது 10 ஆயிரமாக குறைந்துவிட்டது. கிராமத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதும், வசதி படைத்தவர்கள் வெளியேறி விட்டனர். குடிநீர் இல்லாத கிராமத்தில் இருந்து வெளியேறி, வேறு கிராமத்தில் குடியேறினால், பெண் கொடுப்பதாக சொன்னதால், பிள்ளையை பெற்றவர்கள் வெளியேறி வருகின்றனர். ஆனால், கூலித்தொழில் செய்யும் குடும்பத்தினரால் வெளியேற முடியவில்லை; இதுகுறித்து பாதிக்கப் பட்ட ஆண்கள் கூறுகையில், “நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டோம். ஆனால், அரசு அதிகாரிகள் எட்டிக்கூட பார்ப்பதில்லை. குடிநீர் பிரச்னையால், எங்களின் வாழ்க்கையே பறிபோய் விட்டது’ என்று புலம்பினர்.

உள்ளூர் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். “நான் எதிர்க்கட்சியை சேர்ந்தவன் என்பதால் இந்த பிரச்னையை சட்டசபையில் எழுப்பலாமே தவிர, என்னால் வேறு எதையும் செய்ய முடியாது’ என்றார். நர்மதா அணை திட்டம் நிறைவேறும் போது, சியாலா கிராமத்தின் குடிநீர் பிரச்னை தீர்ந்து விடும் என்று அரசு கூறியுள்ளது. அதனால், இன்னும் இரண்டாண்டு வரை இந்த கிராமத்து இளைஞர்களுக்கு திருமணம் நடப்பது கேள்விக்குறி தான்.

No comments: