Wednesday, 26 March 2008

திபெத். பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் ஒலிம்பிக்யை புறக்கணிப்போம்

திபெத் பிரச்சினைக்கு தீர்வு காண தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா மறுத்தால், சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்போம் எனறு பிரான்சு அதிபர் சர்கோசி எச்சரித்தார்.

100 பேருக்கு மேல் பலி

சீனாவில் பலாத்காரமாக இணைக்கப்பட்ட திபெத் பகுதிக்கு விடுதலை கோரி திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை சீனா இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இதில் 100 பேருக்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக திபெத்திய தலைவர் தலாய்லாமா குற்றஞ்சாட்டி உள்ளார். இதற்கு உலகநாடுகள் கண்டனம் தெரிவித்தன. திபெத்துக்குள் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் நுழைவதற்கு சீனா தடை விதித்துள்ளது.

திபெத் தலைநகர் லாசாவில் போராட்டத்தை ராணுவத்தின் துணை கொண்டு ஒடுக்கிய போதிலும் இந்த போராட்டம் சீனாவின் அண்டை மாநிலங்களில் சீனா எதிர்ப்பு போராட்டம் பரவியது.

புறக்கணிப்போம்

திபெத் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு திபெத்திய தலைவர் தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தையை சீனா தொடங்கவேண்டும். அப்படி செய்யாவிட்டால் வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி நடக்கும் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவை நாங்கள் புறக்கணிப்போம் என்று பிரஞ்சு அதிபர் சர்கோசி அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பொறுப்பு பிரான்சு வசம் விரைவில் வர இருக்கிறது. அதனால் அவரது புறக்கணிப்பு அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமெரிக்கா எதிர்ப்பு

இதற்கிடையில் ஒலிம்பிக்போட்டி தொடக்கவிழாவை புறக்கணிப்பதை ஏற்க முடியாது என்று கூறி அமெரிக்கா மறுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி கூறுகையில், ஒலிம்பிக் போட்டி விளையாட்டு தொடர்பானது. இதில் அரசியலை கலக்கக்கூடாது.எனவே, ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பதை நான் ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

சீனா உலக நாடுகளுக்கு விடுத்து உள்ள வேண்டுகோளில், திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு எந்த விதமான ஆதரவும் கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டு உள்ளது.

பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம்


திபெத்தில் ஏற்பட்ட கலவரம் தலாய்லாமா கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சதிச்செயல் ஆகும் என்று சீனா கூறிஉள்ளது. இது தொடர்பாக சீன அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், தலாய்லாமா பிரிவினைவாத கோரிக்கையை கைவிடும்வரை அவருடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தமாட்டோம் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,சீனாவின் நிலைப்பாட்டுக்கு 110 நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
video news:

No comments: